குன்றின் மேல் விளக்கு – சில அடிப்படை கேள்விகளும் பதில்களும்

தீபங்களை மலைகள் மீது  ஏற்றுதல் பழந்தமிழர் வழக்கமா? கார்த்திகை மாதம் விளக்குகளை ஏற்றுதலும் வழக்கமா?

நிச்சயமாக வழக்கம்தான்.  குன்றிலிட்ட விளக்கு என்பது தமிழனுக்கு பிடித்த உவமை. பழமொழி நானூறு “ ஒன்றாய் விடினும்  உயர்ந்தார்ப் படுங்குற்றம்
குன்றின்மேல் இட்ட விளக்கு” என்று சொல்கிறது. உயர்ந்தோர் ஒரு குற்றம் செய்தாலும் அது குன்றின் மேல் இட்ட விளக்கைப் போலத் தனித்துத் தெரியும் என்று பொருள். களவழி நாற்பது “கார்த்திகைச் சாற்றில் கழி விளக்கு போன்றனவே” என்கிறது. சம்பந்தர், “கார்த்திகை விளக்கீடு காணாது போதியோ” என்கிறார். “குன்றிற் கார்த்திகை விளக்கிட்டன்ன” என்பது சீவக சிந்தாமணி. எனவே கார்த்திகைத் திருநாள் அன்று உயரமான இடங்களில் விளக்கிடுவது என்பது காலந்தொட்டு இருந்து வருகிறது.

முருகன் இருக்கும் மலைகளில்?

கார்த்திகை மாதம் ஊரெல்லாம் விளக்கிடும் போது குன்று தோறாடும் முருகன் கோவிலில் தீபம் ஏற்றாமல் இருப்பது என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. ஏற்றும் முறை வேண்டுமானால் ஊர் வழக்கத்தைச் சார்ந்து இருக்கலாம். மேலாக முருகன் அக்னி புத்திரன். கார்த்திகைப் பெண்டிரால் வளர்க்கப்பட்டவன். கார்த்திகை மாதம் அவனுக்கு அணுக்கமானது. அருணகிரிநாதர் அவனைக் கிரிராஜன் – மலைகளின் அரசன் என்கிறார். தீபமங்கள ஜோதி என்கிறார். விளக்கின் மங்களகரமான ஒளியே அவன்தான் என்கிறார். இதே பொருள் கொண்ட வடமொழி சுலோகம் ஒன்று கூட இருக்கிறது. எனவே முருகன் இருக்கும் கோவில்களில் தீபங்கள் ஏற்றுவதை தமிழர்கள் காலம் காலமாகச் செய்து வந்திருக்க வேண்டும்.

திருப்பரங்குன்றத்தில் எங்கே தீபம் ஏற்றப்பட்டது?

ஆவண அடிப்படையில் 1981ல் தமிழகத் தொல்லியற்துறை புத்தகம் (ஆசிரியர் செ. போசு) இவ்வாறு சொல்கிறது:

மலையடிவாரத்தில் இருந்து மலைக்குச்சென்றால் பாதி வழியில் ‘தீபத்தூண்’ ஒன்று இருப்பதைக் காணலாம். இந்தத் தூண் நாயக்கர் காலத்தது. நாயக்கர் காலத்துக் கல்வெட்டும் தூணிலேயே எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டுக்கு மேல் அனுமன் ஒரு கையை ஓங்கிக்கொண்டு முகத்தை இடதுபக்கம் திருப்பிக் கொண்டிருப்பதாகச் சிற்பமும் உள்ளது. இத்தீபத்தூண் ஆண்டவனுடைய தலையின் உச்சியில் நாட்டப்பட்டிருப்பதாகவும், இதில் புண்ணியவான்கள் அனைவரும் விளக்கேற்றலாம் என்றும் அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. எனவே கல் தூணில் விளக்கு ஏற்றுவது குறைந்தது நானூறு ஆண்டுகளாவது நடைபெற்றிருக்க வேண்டும்.

மற்றொரு தூண்?

சர்ச்சைக்கு உள்ளான தீபத்தூண் இன்னும் சிறிது உயரத்தில் இருக்கிறது. மலையில் இருக்கும் சிக்கந்தர் தர்காவிற்கு அருகே, கீழே.

இதில் தீபம் ஏற்றப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா?

இல்லை என்பதுதான் உண்மை. இது உண்மையில் விளக்கு ஏற்றப் பயன்படுத்தப்பட்டதா, அல்லது இருநூறு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற பெரும் நில அளவையின் மீது நிறுவப்பட்ட தூணா என்ற சர்ச்சை நடக்கிறது.  சர்ச்சை தேவையில்லாத ஒன்று. இது தேவையில்லாத ஒன்று. அந்தத் தூண் விளக்கு ஏற்றப்படுவதற்காக நிறுவப்பட்டது என்று வைத்துக் கொண்டாலும் அங்கே விளக்கு ஏற்றப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதுதான் உண்மை. மலை உச்சியில் விளக்கு ஏற்ற முயற்சிகள் நடந்தன என்பது உண்மை. ஆனால் இந்தத் தூணைப் பற்றி பேச்சு ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை.

இந்தத்தூண் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் இருக்கிறதா?

ஆமாம். கோவிலுக்குச் சொந்தமான நிலத்தின்தான் இருக்கிறது. மதுரை ஆட்சியர் தரப்பில் உச்சநீதி மன்றத்தில் வாதிட்ட திரு சங்கரநாராயணன் தெளிவாக கோவிலுக்குச் சொந்தமான நிலம்தான் என்று சொன்னார். 1926ல் லண்டன் பிரிவி கவுன்சில் நில உரிமையை கீழ்க்கண்டவாறு வரையறுத்தது.

  1. மலை முழுவதுமே கோவில் தேவஸ்தானத்திற்குச் சொந்தமானது. மலைப்பகுதியின் பொதுவான உரிமை கோவிலுக்கே உரியது.
  2. தர்க்காவிற்குச் சொந்தமான பகுதிகள் இவை மட்டுமே: மலையின் உச்சியில் அமைந்துள்ள சிக்கந்தர் பாதுஷா தர்க்கா கட்டிடம். அதைச் சுற்றியுள்ள சிறிய முற்றம். கொடிமரம் அமைந்துள்ள இடம். அதற்கு அருகிலுள்ள சில சமாதிப்பகுதிகள். நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள குறிப்பிட்ட தர்க்கா பயன்பாட்டு நிலம். பாதை உரிமை.
  3. இவற்றைத் தவிர மலையின் எஞ்சிய பகுதிகள் அனைத்தும் கோவில் தேவஸதானத்திற்குச் சொந்தமானவை.

எனவே சர்ச்சைக்குரிய தூண் இருக்கும் இடம் நிச்சயம் கோவிலுக்குச் சொந்தமானதுதான்.

கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் இருக்கும் தூணில் விளக்கு ஏற்ற பக்தர்களுக்கு உரிமை இல்லையா?

  • உரிமை இருக்கலாம். உரிமை இருக்கிறது என்று நீதிமன்றங்களும் சொல்லலாம். நானும் இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். ஆனால் ‘சீண்டுதல்” என்று ஒன்று இருக்கிறது. இங்கே விளக்கு ஏற்றுவது இஸ்லாமியர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்ற நோக்கத்தோடு இதைச் செய்வதில் எனக்கு ஒப்புதல் இல்லை. அதே சமயம் வருடத்திற்கு ஒருநாள் அங்கே விளக்கு ஏற்றுவதனால் இஸ்லாமியர்களின் எந்த ஊறும்நிகழ்ந்து விடாது. தமிழ்நாடு முழுவதும் பல மசூதிகள் தர்காக்கள், வழிபடப்படும் புதையிடங்கள் இந்துக்கள் வழிப்பாட்டுத்தலங்களுக்கு அருகே இருக்கின்றன. இரண்டு மதங்களும் தாங்கள் விரும்புபவற்றை அவ்விடங்களில்  செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். பல இடங்களில் இஸ்லாமியர் முன்வந்து இந்துக் கோவில்களின் சடங்குகளில் பங்கு கொள்கிறார்கள். நண்பர் ஒருவர் என்னிடம் ஸ்ரீமுஷ்ணம் கோவிலில் நடைபெறுவதை நினைவுபடுத்தினார். அங்கே வைகாசி மாதத்தில் நடைபெறும் புகழ்பெற்ற தேர்த்திருவிழாவின் போது, கோவில் தேரில் கட்டப்படும் புனிதக் கொடி அப்பகுதி இஸ்லாமியர்களால் வழங்கப்படுகிறது.  திருவிழா காலங்களில் உற்சவர் பூவராக சுவாமி ஊர்வலமாக வரும்போது, இஸ்லாமியர்கள் சுவாமிக்குப் பிரசாதம் மற்றும் காணிக்கைகளைச் செலுத்துகின்றனர். பதிலுக்கு கோவிலிலிருந்து வழங்கப்படும் மாலை மற்றும் பிரசாதங்களைப் பெற்றுச் சென்று, தங்களது பள்ளிவாசல்களில் வைத்து இறைவனுக்கு நன்றி செலுத்தும் வழக்கம் இன்றும் தொடர்கிறது. 

இந்தப் பிரச்சினையை இருதரப்பினரும் பேசித் தீர்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால் இப்போது பூதாகாரமாக ஆகி விட்டது. இரு தரப்பினரும் தீவிரமான நிலைப்பாடுகளை எடுத்திருக்கின்றனர். அரசியல் கட்சிகள் பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கினால் தங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். உச்சநீதி மன்றம் என்ன முடிவு செய்தாலும் அது இறுதி முடிவாக இருக்காது என்பதுதான் தற்போதைய நிலைமை. வருந்தத்தக்க நிலைமை.

Leave a Reply