தமிழகத்தில் திராவிடத்தின் சார்பில் எழுதும் பல பேராசிரியர்கள் சோம்பேறிகள், முட்டாள்கள் அல்லது விலை போனவர்கள் என்று நான் ஏன் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறேன்?
ஒரு முழுச் சோம்பேறிப் பேராசிரியர் வள்ளுவரைத் திராவிடத்தாரகை என்ற அளவில் பேசியிருக்கிறார். அதானால்தான் பெரியார் அவரை ஓரளவு ஏற்றுக் கொண்டாராம். பெரியார் அதிகம் படிக்காதவர். அதுவும் தமிழ் இலக்கியத்தை முழுவதும் வெறுத்தவர். அவர் ஏற்றுக் கொண்டதால் அது திருவள்ளுவருக்குப் பெருமை என்று பெரியார் திடலில் கூலி வேலை பார்க்கும் அடியாட்கள்தாம் சொல்ல முடியும். இதைப் பேராசிரியர் சொல்கிறார் என்பது வெட்கக்கேடு.
தமிழர் கடந்த ஈராயிரம் ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான நூற்களை எழுதியிருக்கிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை அவர்களால் எழுதப்பட்ட முக்கியமான நூல்கள் அனைத்தும் ஏதாவது ஒரு சமய நோக்கில் எழுதப்பட்டவை. சங்க இலக்கியங்கள் கூட கடவுள்களைப் பற்றிப் பேசுகின்றன.
திருவள்ளுவர் இந்தியாவில் பிறந்த சமயங்களில் ஒன்றைச் சார்ந்தவர் என்பது திருக்குறளைத் சில தடவைகள் படித்தாலே புரிந்து விடும்.
திருவள்ளுவர் சமணராக இருந்திருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. ஆனால்
சமணர்களைச் சமத்துவச் சான்றோர்களாகப் பார்ப்பது முழு முட்டாள்தனம். ஊழை நம்பும் யாரும் சமத்துவத்தை நம்ப மாட்டார்கள். இதற்கு சமணநூல்களில் தடுக்கி விழுந்தால் சான்றுகள் கிடைக்கின்றன.
சிந்தாமணியில் மரம் நல்லதுதான் குலம் நல்லதல்ல என்று திருத்தக்க தேவர் சொல்கிறார். “சீர்சால் கணிகை சிறுவன்போல் சிறப்பின்றம்ம இதுவென்றான்” என்கிறார்.
காந்தர்வதத்தையார் இலம்பகம்
நீர் நின்று இளகிற்று இது வேண்டா நீரின் வந்தது இதுபோக
வார் நின்று இளகும் முலையினாய் வாள் புண் உற்றது இது நடக்க
ஓரும் உரும் ஏறு இது உண்டது ஒழிக ஒண் பொன் உகு கொடியே
சீர்சால் கணிகை சிறுவன் போல் சிறப்பு இன்று அம்ம இது என்றான் (
வீணைக்காக மரத்தை தேர்ந்தெடுக்கும் போது சீவகன் சில மரங்களை குற்றமுள்ளவை என்று ஒதுக்குகிறான்.
இந்த மரம் நீரிலேயே இருந்தது. இது தண்ணீரில் வந்த மரம். இது வாளால் அடிபட்டது . இது இடியுண்டது என்று சொல்லி விட்டு இது சிறப்பான கணிகையின் (விலைமகளிரின்) மகனைப் போல சிறப்பற்றது என்கிறான். அதாவது அது நல்லது போலத் தோன்றினாலும் தூய்மையான பிறப்பை உடையதல்ல என்கிறான்!
இது பதுமையார் இலம்பகம்
அந்தணன் நாறும் ஆன் பால் அவியினை அலர்ந்த காலை
நந்தியா வட்டம் நாறு நகை முடி அரசன் ஆயின்
தந்தியாம் உரைப்பின் தாழைத் தடமலர் வணிகன் நாறும்
பந்தியாப் பழுப்பு நாறின் சூத்திரன் பாலது என்றான்
பாம்பின் கடிவாயில் பசும்பால் மணம் இருந்தால் கடித்த பாம்பு அந்தணப்பாம்பு. நந்தியாவட்டை மலர் மணம் இருந்தால் அரசசாதிப் பாம்பு. தாழம்பூ மணம் இருந்தால் வைசியப் பாம்பு. பழுப்பு (கஸ்தூரி) மணம் இருந்தால் சூத்திரப் பாம்பு! பாம்பிற்கும் வர்ணம் பார்த்தவர்கள் சமணர்கள்.
இது பழமொழி நானூறு. முன்றுறை அரையனார் என்ற சமணப் புலவர் எழுதியது.
உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப – நரைமுடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை
கல்லாமல் பாகம் படும்.
சோழனுக்கு நீதி வழங்குவதில் தேர்ச்சியில்லை என்றாலும் அவனால் ஒழுங்காக நீதி வழங்க முடிந்தது, ஏனென்றால் அவனுக்கு தன் குலத்தின் திறன் படிக்காமலேயே வந்து விடும் என்கிறார் புலவர்.
நாலடியார் குலத்தின் பெருமையைப் பேசுவது இப்படி:
செந்நெல்லா லாய செழுமு ளை மற்றுமச்
செந்நெல்லே யாகி விளைதலால் – அந்நெல்
வயனிறையக் காய்க்கும் வளவயலூர!
மகனறிவு தந்தை அறிவு —
சிவப்பு நெல்லுக்குச் சிவப்பு நெல்தான் பிறக்கும் என்று தெளிவாகச் சொல்கிறது.
திருவள்ளுவர் ‘நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மையறிவே மிகும்’ என்று சொல்கிறார். இதற்குப் பரிமேலழகர் எழுதிய உரை:
நுண்ணிய நூல் பல கற்பினும் – பேதைப்படுக்கும் ஊழுடையான் ஒருவன் நுண்ணிய பொருள்களை உணர்த்தும் நூல் பலவற்றையும் கற்றானாயினும், மற்றும் தன் உண்மை அறிவே மிகும் – அவனுக்குப் பின்னும் தன் ஊழான் ஆகிய பேதைமை உணர்வே மேற்படும். (பொருளின் உண்மை நூலின்மேல் ஏற்றப்பட்டது. மேற்படுதல் – கல்வியறிவைப் பின் இரங்குவதற்கு ஆக்கிச் செயலுக்குத் தான் முற்படுதல். ‘காதன் மிக்குழிக் கற்றவும் கைகொடா, ஆதல் கண்ணகத்தஞ்சனம் போலுமால்’ (சீவக.கனக. 76) என்பதும் அது. செயற்கையானாய அறிவையும் கீழ்ப்படுத்தும் என்பதாம்.). கண்ணுக்கிட்ட மை கண்ணுக்குப் பயன் தராது. அதே போல கல்வி பயன் தருவது ஊழைப் பொறுத்திருக்கிறது.
இது போன்று பல மேற்கோட்களைக் காட்டலாம்.
எனவே பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறளுக்கு பரிமேலழகர் சரியாகத்தான் உரை எழுதியிருக்கிறார் என்று தோன்றுகிறது:
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் – எல்லா மக்களுயிர்க்கும் பொதுவாகிய பிறப்பியல்பு ஒக்குமே யெனினும்; சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான் – பெருமை சிறுமை எனப்பட்ட சிறப்பியல்புகள் ஒவ்வா அவை செய்யும் தொழில்களது வேறுபாட்டான். (வேறுபாடு – நல்லனவும், தீயனவும், இரண்டுமாயினவும், இரண்டுமல்லவாயினவுமாய அளவறிந்த பாகுபாடுகள். வினைவயத்தாற் பஞ்சபூத பரிணாமமாகிய யாக்கையைப் பொருந்தி நின்று அதன் பயன் அனுபவித்தல் எல்லா வருணத்தார்க்கும் ஒத்தலின் ‘பிறப்பு ஒக்கும்’ என்றும், பெருமை சிறுமைகட்குக் கட்டளைக் கல்லாகிய தொழிற்பாகுபாடுகள் வருணந்தோறும் யாக்கைதோறும் வேறுபடுதலின், ‘சிறப்பு ஒவ்வா’ என்றும் கூறினார்.
இப்பாடலுக்கு மணக்குடவர் எழுதியிருக்கும் உரை: எல்லா வுயிர்க்கும் பிறப்பால் ஒரு வேறுபாடில்லை. ஆயினும் தான்செய் தொழிலினது ஏற்றச் சுருக்கத்தினாலே பெருமை ஒவ்வாது. எனவே, இது பெருமையாவது குலத்தினால் அறியப்படா தென்பதூஉம் அதற்குக் காரணமும் கூறிற்று. இதுவும் ஊழை வலியுறுத்துவதுதாகத்தான் இருக்கிறது.
குலங்கள் இருக்கின்றன, குலவொழுக்கங்கள் இருக்கின்றன என்பதையும் அவர் சொல்கிறார். “நலத்திற்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்திற்கண் ஐயப்படும்” என்று சொல்லும் அவர் குலங்களுக்கு என்று சில ஒழுக்கங்கள் இருக்கின்றன என்பதை நம்புகிறார் என்பது தெளிவு. இதையேதான்
திருவள்ளுவர் பிராமணர்களைப் பற்றிப் பேசும் போது பிறப்பொழுக்கம் என்று ஒன்று இருக்கிறது என்பதைத் கூறுகிறார். “மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்” என்று அவர் சொல்லும் போது இங்கு ஒழுக்கம் என்பது பிராமணர் தங்கள் தொழில செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளைச் சொல்கிறது. பிராமணர்களுக்கு நெறிமுறைகள் இருந்ததைப் போல மற்ற வர்ணங்களுக்கும் நெறிமுறைகள் இருந்தன என்பது சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது.
வள்ளுவர் காலத்தைக் கடந்து சிந்தித்தாலும் அவர் தான் வாழ்ந்த காலத்தின் குழந்தை. அதன் தளைகளை ஓரளவுதான் அவரால் மீறியிருக்க முடியும்.