முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
இது திரு தொ. பரமசிவன் எழுதிய ‘அழகர் கோவில்’ புத்தகத்தைப் பற்றிய முழு விமரிசனம் அல்ல. தமிழில் வந்த புத்தகங்களில் முக்கியமான ஒன்று அது என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. கடுமையான உழைப்பின் விளைவு அது. பல தரவுகளோடு எழுதப்பட்டிருக்கிறது.
என் எதிர்வினை அவருடைய புத்தகத்தில் ஒரு சிறிய பகுதியைப் பற்றியது. அழகர் கோவில் பௌத்த வழிபாட்டுத்தலமாக இருந்தது என்பதற்கு அவர் சொல்லும் ஆதாரங்கள் வலுவற்றவை என்பதை நிறுவுவதே இப்பதிவு.
தொ.ப. கொடுத்திருக்கும் சான்றுகளை ஆராய்வதற்கு முன்னால் அழகர் கோவிலைப் பற்றிய சில இலக்கியச் சான்றுகளைப் பார்ப்போம்.
பரிபாடல் திருமாலிருஞ்சோலை மலையைப் பற்றிப் பேசுகிறது.
மலையை அது எவ்வாறு அறிமுகம் செய்கிறது என்பதைப் பார்ப்போம்.
உலகில் நம் அறிவுக்கு எட்டாத, தம் நிலையிலிருந்து பெயராத, புகழ் பெற்ற பல மலைகள் இருக்கின்றன. அவற்றில் மக்களின் பசித்துன்பத்தை நீக்கி பயன் தருபவை சில. அவற்றிலும், தெய்வங்கள் தாமாகவே விரும்புபவை மிகச் சில. அவற்றிலும் மிகச் சிறந்தது கடலும் தீயும் இணைந்தது போல, சொல்லும் பொருளும் போல, மாயோனும் பலராமனும் சேர்ந்து எழுந்தருளியிருக்கும் மலை மாலிருங்குன்றம்.
சிறந்தது கல் அறை கடலும் கானலும் போலவும்
புல்லிய சொல்லும் பொருளும் போலவும்
எல்லாம் வேறு வேறு உருவின் ஒரு தொழில் இருவர்த
தாங்கும் நீள் நிலை ஓங்கு இருங்குன்றம்
எனவே பரிபாடல் திருமாலிருங்குன்றம் மிகப்பழமை வாய்ந்தது. இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட்து என்று தெளிவாகக் கூறுகிறது.
பரிபாடலின் காலம் பொ.யு. இரண்டாம் நூற்றாண்டு என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். பொ.யு ஐந்தாம் நூற்றாண்டு என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். இரண்டாம் நூற்றாண்டு என்று வைத்துக் கொண்டால் அதற்கு முன்னாலேயே இது புத்தர் கோவிலாக இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்ததற்காக எந்தச் சான்றும் இல்லை.
சங்க இலக்கியத்தில் மதுரைக் காஞ்சி புத்தர் பள்ளியைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
பூவினம் கையினர் தொழுவனர் பழிச்சிச்
சிறந்து புறங்காக்குங் கடவுட் பள்ளியும்
மாங்குடி மருதனார் சிவனுக்கும், மாயோன், முருகன் ஆகிய தெய்வங்களுக்கும் வழிபாடு நடத்தப்படும் மாலையில் ஒலிக்கும் இசைக் கருவிகள் பற்றிக் குறிப்பிடுகிறார். பின்னால் மதுரை மாநகரத்திலுள்ள பிற சமயங்களைப் பற்றிப் பேசும் போது பௌத்தப் பள்ளியைப் பற்றியும் குறிப்பிடுகிறார். அவருடைய மதுரை மத நல்லிணக்க மதுரை.
பரிபாடல் ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று வைத்துக் கொண்டால் அது களப்பிரர் காலம். களப்பிரர்கள் புத்தமத்தை ஆதரித்தவர்கள் அவர்கள் ஆண்ட காலத்தில் புத்தர் கோவிலை திருமால் கோவிலாக மாற்றுவது என்பது நினைக்கக் கூட முடியாது.
எனவே திருமாலிருஞ்சோலையில் மாற்றம் நடைபெற்றிருந்தால் அது பொது நூற்றாண்டிற்கு முன்போ அல்லது அது தொடங்கும் சமயத்திலோ இருந்திருக்க வேண்டும். அதாவது ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன்பு. இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே விஷ்ணுவிற்கு பல கோவில்கள் இருந்ததாகச் சான்றுகள் இல்லை. எனவே அக்கால கட்ட்த்தில் இது போன்ற மாற்றங்கள் நடந்திருக்கும் சாத்தியக்கூறுகள் அனேகமாக இல்லவே இல்லை என்று கூறி விடலாம்.
இன்னொன்று.
மாற்றம் நடந்திருந்தால் அது தமிழகதின் பொற்காலம் என்று அறியப்படும் சங்ககாலத்தில் நடந்திருக்க வேண்டும். ஆனால் சங்க காலத்தில் மதப்பூசல்கள் நடந்ததற்கு எந்தச் சான்றுகளும் இல்லை. மாறாக மதுரைக் காஞ்சி காலத்திலிருந்து மணிமேகலை சிலப்பதிகாரம் காலம் வரை எல்லா மதங்களும் தமிழகத்தில் பூசல்கள் இன்றி இயங்கிக் கொண்டிருந்தன என்பதை இலக்கிய அகச்சான்றுகள் அறிவிக்கின்றன.
இனி சிலப்பதிகாரம் மாலிருஞ்சோலையை எவ்வாறு பாடுகிறது என்பதைப் பார்ப்போம். காடுகாண் காதையில் மாங்காட்டு மறையோன் குன்றமே திருமாலுடையது என்றுதான் சொல்கிறான்.
மற்றவை நினையாது மலைமிசை நின்றோன்
பொன் தாமரைத் தாள் உள்ளம் பொருந்துமின்.
அவன் தாள் பணிந்தால் பிறவித் துன்பத்திலிருந்து விடுபெறலாம் என்கிறான்.
உள்ளம் பொருந்துவிர் ஆயின், மற்று அவன்
புள் அணி நீள் கொடி புணர்நிலை தோன்றும்;
தோன்றியபின் அவன் துணை மலர்த் தாள் இணை
ஏன்று துயர் கெடுக்கும் இன்பம் எய்தி.
புத்தரைப் பற்றிய பேச்சே இல்லை.
எனவே திருமாலிருஞ்சோலை மலையில் புத்தர் கோவில் இருந்ததாக சங்க இலக்கியத்திலும் சிலப்பதிகாரத்திலும் சான்றுகள் இல்லை. மாறாக அவ்விடம் மிகவும் பழைமையான திருமால் வழிபாட்டுத்தலம் என்றுதான் அவை சொல்கின்றன. . புத்தரின் தடம் கூட அங்கு இருந்த்தாக்க் கூறவில்லை. அங்கு மட்டுமல்ல. தமிழ்நாடு முழுவதும் இதே கதைதான்.
ஆராய்ச்சியாளரான Anne Monius சொல்கிறார்: The archaeological and art-historical records are fragmentary, raising perhaps more questions than the evidence itself will ever be able to answer.”
புகழ்பெற்ற ஆராய்ச்சியாளரான சம்பகலக்ஷ்மி இன்னும் தெளிவாகச் சொல்கிறார்.:
In the Tamil context, Buddhist influence was confined mainly to the coastal towns where Buddhism was not the only or the dominant creed and where merchants were active. In the centres of the Inland trade routes, Buddhism was prevalent but Jainism enjoyed greater influence and prestige. The rest of the Tamilakam with its uneven socio-economic zones had not yet come out of their tribal and folk traditions of worship and cult practices…
சிலப்பதிகாரத்தில் திருமாலிருஞ்சோலையைக் குறிப்பிடும் மாங்காட்டு மறையோன் அங்கு இருக்கும் புண்ணிய சரவணம், பவகாரிணி, இட்டசித்தி என்ற பொய்கைகளைப் பற்றியும், வரோத்தமை என்ற சிறுதெய்வத்தைப் பற்றியும் குறிப்பிடுகிறான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எனவே திருமாலிருஞ்சோலை புத்தர் வழிப்பாட்டுத்தலமாக இருந்தது என்பதை நிலைநாட்ட வேண்டும் என்றால் மிகவும் வலுவான சான்றுகள் வேண்டும்.
தொ.பவின் சான்றுகள் மெலிதினும் மெலிதானவை.
அவை என்ன என்று பார்ப்போம்.
- ஆராமம்: ‘கோவிலுக்கு அடுத்த குளம் ஆராமத்துக் குளம் என்று அழைக்கப்படுகிறது. ஆராமம் என்பது பாலிச் சொல். புத்தமத்த்தோடு தொடர்புடையது. எனவே கோவிலும் புத்தர் கோவிலாக இருந்திருக்க வேண்டும். ஆராம்ம் என்றால் தோட்டம். “ஆராமம் சூழ்ந்த அரங்கம்” என்று திருமங்கை மன்ன்ன் பாடியிருக்கிறார். இதற்கு மற்றைய கோவில்களால் சூழப்பட்ட அரங்கம் என்று பொருள்’ என்று தொ.ப. சொல்கிறார்.
முதலில் ஆராமம் என்ற சொல் வடமொழிச் சொல். தோட்டம் என்ற பொருளில் மகாபாரதம், ராமாயணம் மனுஸ்மிருதி, யாக்யவல்கிய ஸ்மிருதி, மிருச்சகடிகம் போன்ற நூல்களில் பயன்படுத்தப்படுகிறது. எனவே அது புத்தமதத்திற்கு மட்டும் சொந்தமான சொல் அன்று. இரண்டாவதாக சிறியதிருமடலுக்கு வியாக்கியானம் எழுதிய பெரியவாச்சான் பிள்ளை ஆராமம் என்ற சொல்லிற்கு தோட்டம் என்றுதான் பொருள் கொள்கிறார். ஆனால் திருவரங்கம்தான் இறைவன் எப்போதும் வசிக்கும் தலம் என்றும் மற்றைய திவ்யதேசங்கள் இளைப்பாறும் தோட்டங்கள் போன்றவை என்கிறார்.
(ஆராமம் சூழ்ந்த அரங்கம்) .தோட்டங்களால் சூழப்பெற்ற அரங்கம்; இங்கு *ஆராமம்”” [தோட்டம்-நந்தவனம்] என்றது மற்றைத்திவ்ய தேசங்களை; மற்றைத் திவ்யதேசங்களால் சூழப்பெற்ற அரங்கம் என்றபடி. ஸ்ரீரங்கஸார்வபெளமனுக்குத் திருவரங்கம் அடியாரை அளிப்பதற்குரிய நித்யபவாஸத்தானமாகவும், மற்றைத் திருப்பதிகள் ஆங்காங்கு வேட்டைக்குச் செல்லும்போது பகலிலே தங்கும் தோட்டங்களாயிருப்பதாகவும் ஆழ்வார்களின்..திருவுள்ளம். – இது புத்தூர் சுவாமி- பெரியாவாச்சான் பிள்ளையின் மணிப்பிரவாள மொழியின் தமிழாக்கம்)
எனவே ஆராமத்துக் குளம் என்றால் தோட்டத்தில் இருக்கும் குளம் என்றுதான் பொருள். இதற்கும் பௌத்தத்திற்கும் முடிச்சுப் போடுவது வேடிக்கைதான்.
2. தல விருட்சம்: அழகர் குறவஞ்சி திரேதா யுகத்தில் இக்கோவிலில் தல விருட்சம் போதி மரமாக இருந்த்து என்று சொல்கிறதாம். (கலியுகத்தில் அல்ல!) அதனால் கோவில் புத்தருடையதாம். அழகர் குறவஞ்சி 19ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. அதே போல விருஷபாத்ரி மகாத்மியம் என்ற வடமொழி தலபுராணத்திலும் இந்த்த் தகவல் இருக்கிறது என்று தொ.ப சொல்கிறார். விருஷ்பாத்ரி மகாத்மியம் ஆக்னேய புராணத்தை மேற்கோள் காட்டுகிறது. இந்தப் புராணமும் 19ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது! தலபுராணம் என்பதே மிகவும் பிந்தையது என்பது நமக்கு நன்றாகத் தெரியும். அதில் சொல்வதை ஆதாரமாக எடுத்துக் கொள்வதற்கு மிகவும் தைரியம் வேண்டும். மேலும் போதி மரம் புத்தருக்கு மொத்த குத்தகை அளிக்கப்படவில்லை. அரச மரம் புத்தருக்கு முன்னாலேயே இந்தியா முழுவதும் பரவலாக இருந்த்து. ‘அச்வத்தா சர்வ விருக்ஷாணாம்’ (மரங்களில் நான் அரச மரமாக இருக்கிறேன்) என்று கீதையில் கிருஷ்ணன் சொல்கிறான். எனவே அரசமரம் விஷ்ணு கோவிலுக்கு தல விருட்சமாக இருப்பது அதிசயம் அல்ல.
3. நரசிம்மர் சிலை கோவிலில் இருப்பது: அழகர் கோவிலில் நரசிம்மர் இருப்பது பிறமத எதிர்ப்பாம். அதாவது அரக்கர்களை விஷ்ணூ கொல்வது என்பதை ‘தமிழர்கள், சூத்திரர்கள், ஆதிவாசிகள், சமணர்கள், பௌத்தர்கள்’ என்று இவர்கள் வசதிக்கு தகுந்தது போல மாற்றிக் கொள்ளலாம்!. நரசிம்மர் விஷ்ணு கோவிலில் இருந்தால் அக்கோவில் முன்னால் புத்தர் கோவிலாக இருந்திருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வருவது கேலிக்கூத்து. இதுதான் தமிழ் அறிஞர்களின் ஆராய்ச்சி லட்சணம்.
4. புறமதத்தவர் யார்?:
“புந்தியில் சமணர் புத்தர் என்றிவர்கள்
ஒத்தன பேசவும் உவந்திட்டு
எந்தை பெம்மானார் இமையவர் தலைவர்
எண்ணி முன் இடம் கொண்ட கோவில்” என்று திருமங்கை ஆழ்வார் பாடுகின்றதால் வைணவம் எதிர்க்கும் சமயங்கள் சமணம் பௌத்தம் என்று கொள்ளலாமாம். அதனால் இந்தக் கோவில் முன்னால் பௌத்தக் கோவிலாக இருந்திருக்க வேண்டுமாம். இது எந்த விதமான வாதம் என்று தெரியவில்லை. அதாவது திருமங்கை மன்னனுக்கு அவருக்கு 800 ஆண்டுகளுக்கு முன்னால் இது பௌத்தர் கோவிலாக இருந்த்து என்பது தெரிந்து அதை மறைமுகமாக பாடலில் சொல்லியிருக்கிறார். தொ.ப இருபதாம் நூற்றாண்டில் அதைக் கண்டுபிடித்து விட்டார்!
5. பிரயோகச் சக்கரம்: இக்கோவில் விஷ்ணு கையில் பிரயோகச் சக்கரம் (எதிரிகள் மீது செலுத்துவதற்காக) வைத்திருப்பதால் இக்கோவில் முன்னால் புத்தர் கோவிலாக இருந்திருக்க வேண்டும் என்று சொல்கிறார் தொ.ப. இது போன்ற ஆராய்ச்சிக்கு பதில் சொல்வதே வீண் வேலை என்று தோன்றுகிறது. பல கோவில்களில் விஷ்ணு பிரயோக சக்கரத்தை வைத்திருக்கிறார். அதனால் அவை அனைத்தும் மற்றைய மதத்தினர் கோவில்கள் என்று சொல்லி விடலாமா? பல்லவர் விஷ்ணு வடிவங்கள் பல பிரயோகச் சக்கரம் கொண்டவை. அவை அனைத்தும் புத்தமத எதிர்ப்பு வடிவங்கள் என்று சொல்லி விடலாமா? பிரயோகச் சக்கரம் வைணவர்களைக் காப்பதற்கு என்று வைணவர்கள் கருதுகிறார்கள்.
6. நங்கள் குன்றம்: நம்மாழ்வார் இக்குன்றத்தை “நங்கள் குன்றம்” என்று அழைக்கிறார். அது சிந்திக்கத்தக்கது என்று தொ.ப எழுதுகிறார். கவிஞன் ஒரு சொல்லைப் பயன்படுத்துவதற்குப் பல காரணங்கள் இருக்கக் கூடும். ‘எங்கள் குன்றம்’ என்று அவர் அழைப்பதால் முன்னால் அது வேறொருவர் குன்றமாக இருந்த்து என்று சொல்ல முடியுமா? நம்மாழ்வார் என்று அவர் அழைக்கப்படுவதால் அவர் முன்னால் பௌத்தராக இருந்திருக்க வேண்டும் என்று தொ.ப சொல்லாமல் விட்டதற்கு நன்றி.
7. வட்ட வடிவமான கருவறை: இங்கு கருவறை வட்ட வடிவமாக அமைந்திருப்பதால் அது புத்தர் கோவிலாக இருந்திருக்க கூடும் என்கிறார். புத்த சைத்தியங்களைச் சுற்றி இது போன்ற வட்ட வடிவமான திருசுற்று உண்டு என்று புத்தர்களில் கலையைப் பற்றி எழுதிய பர்கீஸ் கூறுகிறார் என்றும் தொ.ப சொல்கிறார். முதலில் சைத்யா என்றால் எவ்வாறு இருக்கும் என்று என்சைக்ளோபீடியா பிரித்தானிகா சொல்வதைப் படிப்போம்: From the 2nd century BC to the 8th century AD, caityas were carved directly into the rock bluffs of the Western Ghāts in a style that clearly alludes to wooden prototypes. For example, “beams” were carved into the roofs of the caves. These permanent caityas characteristically consist of a central rectangular nave separated from aisles at either side by two rows of pillars that support the roof. Often, small meditation rooms line the periphery of the space, and a semicircular apse stands at one end of the room. Frequently, this apse holds a stūpa, a domed enclosure that protects sacred objects and that serves as a focus of Buddhist cultic worship.
எனவே சைத்யங்கள் அனேகமாக வட்ட வடிவமாக இருப்பதில்லை. அதன் சுற்றுப் பிரகாரங்களும் வட்ட வடிவமாக இருக்க வாய்ப்பில்லை. எனக்குத் தெரிந்து ஆந்திராவில் இருக்கும் குண்டுபள்ளி சைத்யம் வட்ட வடிவமாக இருக்கிறது. உலகப் புகழ் பெற்ற கர்லா, பாஜா, அஜந்தா, எல்லோரா சைத்யங்கள் வட்ட வடிவில் இல்லை.
இனி பர்கீஸ் உண்மையில் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.
Chjaityas (PAli, Chetiya. Like Sttipa, the word Chaitya is applied to a monument or cenotaph, and in a secondary sense to a temple or shrine containing Chaitya or Dhatugarbha. ‘Chattyas or Da gabas are an essential feature of temples or chapels constructed for purposes of worship, there being a passage round the Chaitya for circumambulation (pradakshinaya) and from these such temples have received their appellation.
எனவே பர்கீஸ் வட்ட வடிவமாகத்தான் திருச்சுற்று இருக்கும் என்று சொல்லவில்லை. நம் கோவில் பிரதட்சணம் போன்ற சுற்றைத்தான் அவர் சொல்கிறார். அது வட்ட வடிவமாக இருக்க எந்தக் கட்டாயமும் இல்லை.
முடிவாக, நான் இந்து மதம் புத்த மதத்திலிருந்து எதையும் எடுத்துக் கொள்ளவில்லை என்று சொல்லவில்லை. இந்திய மதங்கள் அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்தும் எதிர்த்தும் வளர்ந்திருக்கின்றன. பரவியிருக்கின்றன. ஒரு மதத்தின் கோவிலை மற்றைய மதம் கையகப்படுத்தியிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இந்து மதம் பரவலாக இருப்பதால் அது புத்தக் கோவில்களையும் சமணக் கோவில்களயும் தனதாக்கிக் கொண்டிருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதை வைத்துக் கொண்டு பார்த்த கோவில்கள் எல்லாம் மாற்றப்பட்டவை என்று சொல்வது அறிவுப்பூர்வமான ஆராய்ச்சி ஆகாது. உங்கள் அரசியலுக்கு ஆராய்ச்சி வளைந்துக் கொடுக்கும் என்று எதிர்பார்ப்பது தடித்தனம்..