ராமானுஜர் – நம்பிக்கையும் வரலாறும்

(இது நான் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் ராமானுஜர் நாடகத்திற்கு எழுதிய முன்னுரை. கிளாசிக் வரிசையில் காலச்சுவடு வெளியீடாக இந்த ஆண்டு (2023) வெளிவந்திருக்கிறது.)

நான் இந்திரா பார்த்தசாரதி அவர்களை என் தந்தையைப் போல மதிக்கிறேன். என் தந்தையிடம் எத்துணை மரியாதையும் அன்பும் வைத்திருந்தேனோ அதே மரியாதையையும் அன்பையும் இபா அவர்கள் மீது வைத்திருக்கிறேன். 1999 ஆண்டின் சரஸ்வதி சன்மான் விருது அவருடைய ‘ராமானுஜர்’ நாடகத்திற்கு கிடைத்த செய்தி தெரிந்ததும் நான் அடைந்த மகிழ்ச்சி அளவற்றது. அவர் கூடவே இருந்து விருது பெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது என் மனதில் இன்னும் பசுமையாக இருக்கிறது. அவர் என்னை ராமானுஜர் நாடகத்தின் இப்பதிப்பிற்கு முன்னுரை எழுதுமாறு பணித்தது அவர் என் மீது வைத்திருக்கும் அன்பின் அடையாளம் என்று கருதுகிறேன். நான் மேம்போக்காக ராமனுஜரைப் பற்றி எழுத மாட்டேன் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.

தமிழக மக்களிடம் மிகுந்த மதிப்புப் பெற்றிருக்கும் துறவி ராமானுஜர் என்றால் மிகையாகாது. எல்லா சமூகத்தினரும் அவரை மிகவும் உயர்வாக மதிக்கின்றனர். இந்தியா முழுவதும் வைணவம் பரவுவதற்கு அவர் போட்ட அடித்தளம்தான் காரணம் என்று வரலாறு சொல்கிறது. ஆனால் தமிழ் மக்களிடம் அவர் மாபெரும் சீர்திருத்தவாதியாக, புரட்சியாளராக அறியப்படுகிறார். அவரைப் பற்றிய திரைப்படம் 1938லேயே எடுக்கப்பட்டு விட்டது. அவர்  வாழ்க்கை பற்றிய தொலைக் காட்சித் தொடர்கள் வந்து விட்டன. திரு கருணாநிதி அவர்கள் கடைசியாக எழுதியது ராமானுஜர் தொடர்தான். ஆனாலும் அவரைப் பற்றி காய்தல் உவத்தல் இல்லாமல் வரலாற்றின் அடிப்படையில் இன்றுவரை எந்தப் புத்தகமும் வரவில்லை. அவருடைய புகழ் பாடும் புத்தகங்களே வந்திருக்கின்றன. அவர் நிச்சயம்  கிடைத்த புகழுக்குத் தகுதி உடையவர்தான். அதை வரலாற்றின் அடிப்படையில் நிறுவினால் நன்றாக இருக்கும்.

ராமனுஜர் யார்?

பல ஆண்டுகளாக இந்தக் கேள்வி கேட்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பொதுமக்களிடையே பரவலாக அறியப்பட்ட ராமானுஜர் இந்தியாவின் தலைசிறந்த சீர்திருத்தவாதி. சாதி வேற்றுமை பார்க்கக் கூடாது என்று மறுபடியும் மறுபடியும் சொன்னவர்.  நாராயண மந்திரத்தை மக்கள் அனைவருக்கும் திருகோஷ்டியூர் கோவில் கோபுரத்தின் மீது ஏறி ‘ நான் நரகம் சென்றாலும் பரவாயில்லை, மக்கள் உய்ய வேண்டும்; என்ற பேருள்ளத்தோடு’ மக்களுக்குத் தெரிவித்தவர். பெரிய தொண்டர் குலத்தை இந்தியா முழுவதும் உருவாக்கியவர். பிராமணர் அல்லாதவர்களை குருவாகவும் சீடர்களாகவும் ஏற்றுக் கொண்டவர். திருவரங்கம் கோவிலிலும் திருப்பதி கோவிலிலும் பல மாற்றங்களைச் செய்து ஒழுங்கு படுத்தியவர். சோழ மன்னனால் துன்புறுத்தப்பட்டு ஹொய்சாள (கர்நாடகா) தேசத்திற்கு சென்றவர். அங்கு ஆண்ட விஷ்ணுவர்த்தன மன்ன்னை ஜைன சமயத்திலிருந்து வைணவத்திற்கு மாற்றியவர். எல்லோரும் கோவிலுக்குச் செல்லலாம் என்பதை திருக்குலத்தார் என்று அழைக்கப்படும் தாழ்த்தப்பட்டவர்களை மேல்கோட்டை கோவிலுக்குள் செல்ல அனுமதி பெற்றதின் மூலம் உலகிற்கே தெரிவித்தவர். தில்லி சென்று அங்கு இருந்த மேல் கோட்டை உற்சவ மூர்த்தியான சம்பத்குமாரனை (செல்லப் பிள்ளை) மீட்டு வந்தவர். 

எல்லாவற்றிற்கும் மேலாக, அவருக்கு ஆழ்வார்கள் அருளிச் செய்த நாலயிரத் திவ்யப் பிரபந்தத்தின் மீது மிகுந்த ஈடுபாடு. அவற்றை – குறிப்பாக நம்மாழ்வாரின் திருவாய் மொழியை – தமிழ் வேதம் என்று ஏற்றுக் கொண்டவர். அவற்றை மக்களிடையே பரப்பியவர். திருவாய்மொழிக்கு விரிவுரை (வியாக்கியானம்) எழுத தன் மருமகனான திருக்குருகைப் பிரான் பிள்ளான் என்றவரைப் பணித்தவர். ஆண்டாளின் திருப்பாவையைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தவர்.

பொதுமக்களுக்கு ராமனுஜரின் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தைப் பற்றியோ அதற்கும் சங்கரரின் அத்வைத சித்தாந்தத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் பற்றியோ எந்தக் கவலையும் கிடையாது. அவர் வடமொழியில் என்ன எழுதியிருக்கிறார் என்பது தெரியாது. அவர் மக்கள் துறவியாகத்தான் பார்க்கப்படுகிறார். மக்களுக்கு இறைவனை அணுக்கமாகச் செய்வதற்கு அயராமல் உழைத்த மாபெரும் மனிதராகத்தான் பார்க்கப்படுகிறார்.

வரலாறு என்ன சொல்கிறது?

ராமனுஜரின் வாழ்க்கை பற்றிய இக்கதைகள் எல்லாம் குருபரம்பரைப் பிரபாவத்திலும் ( வடகலைக்கும் தென்கலைக்கும் தனித்தனியாக இருக்கின்றன) கோவிலொழுகு என்ற ஸ்ரீரங்கம் கோவிலைப் பற்றிய நூலிலும் மிகவும் பின்னால் எழுதப்பட்ட ராமானுஜ சரிதம் போன்ற புத்தகங்களிலும் கிடைக்கின்றன.

இவற்றின் வரலாற்றுத்தன்மை கேள்விக்குரியன.

உதாரணமாக ராமனுஜர் 120 வயது வாழ்ந்தார் என்று சொல்வதே ஒரு வைணவ வழக்கு  என்றுதான் தோன்றுகிறது. ராமானுஜருக்கு முந்தையவர்களான வைணவ ஆசாரியர்களான நாதமுனிகளும் ஆளவந்தாரும் 125 வயதிற்கு மேல் வாழ்ந்தவர்கள். ராமனுஜரின் சீடரான கூரத்தாழ்வாரும் 123 வயது வாழ்ந்தார் என்று குருபரம்பரை சொல்கிறது. இதே போல எம்பார், நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, பிள்ளை லோகாச்சாரியார், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் மற்றும் வேதாந்த தேசிகர் போன்றவர்கள் நூறாண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவர்கள் என்று வைணவர்கள் கருதுகிறார்கள்.

ராமானுஜருடைய காலம் 1017-1137 என்று சொல்லப்படுகிறது. அதாவது முதலாம் ராஜேந்திர சோழன் (1014-1044) காலத்தில் பிறந்து இரண்டாம் குலோத்துங்கன் காலம் (1133-1150) வரை வாழ்ந்திருக்க வேண்டும். அவரைத் துன்புறுத்தி சோழ நாட்டை விட்டு வெளியேறச் செய்தவன் முதல் குலோத்துங்கனாக (1070-1122) இருக்க வாய்ப்பு இல்லை. ஏனென்றால் திரு நாகசுவாமி தன்னுடைய Ramanuja – Myth and Reality புத்தகத்தில் சொல்வது போல ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அவன் செய்த திருப்பணிகள் ஏராளம். கோவிலில் இருக்கும் 105 கல்வெட்டுகளில் 65 ஒன்றாம் குலோத்துங்கனுடையதுதான் என்கிறார் அவர். இரண்டாம் குலோத்துங்கன் பதவி ஏற்கும் போது ராமனுஜருக்கு வயது 116 ஆக இருக்க வேண்டும். எனவே அவன் காலத்திலும் அவர் துன்புறுத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை.  அதே போல ஹொய்சள மன்னனாகிய விஷ்ணுவர்த்தனனுக்கு (1108-1152) எந்தச் சமணப் பெயரும் அவன் அரசாண்ட காலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. சிறந்த அறிஞரான கார்மன் தன் Theology of Ramanuja புத்தகத்தில் தெளிவாகக் கூறுகிறார்: Most of the kings of that era were not religious fanatics. Their personal religious preferences did not prevent them from supporting religious institutions of Saivas, Vaishnavas and often also of Buddhists and Jains. Since Vishnruvardhana seems to have this Vaishnava name from the beginning of his reign, it is not clear his favor to Ramanuja can be considered a conversion nor do we have a record of his withdrawal of support to the Jain monks from a neutral source but it is clear that Jains declined in influence in this region from about this time and the Sri Vaishanvas were henceforth firmly established.

ஆனாலும் விஷ்ணுவர்த்தனின் மனைவி சாந்தலா ஜைனராக இருந்திருக்கிறார். பல ஜைனக் கோவில்களைக் கட்டியிருக்கிறார்.

இரண்டாம் குலோத்துங்கன் தில்லை கோவிந்தராஜரை கடலில் எறிந்தவனாக அறியப்படுகிறான். எனவே இவன் காலத்தில் வைணவர்கள் துன்புறுத்தப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது. அப்போது பல வைணவர்கள் விஷ்ணுவர்த்தனன் ஆண்டு கொண்டிருந்த ஹொய்சாள தேசத்திற்குச் சென்றிருக்கலாம். அந்த சம்பவத்தை ராமானுஜர் மீது ஏற்றிச் சொன்னால் வைணவர்கள் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் அனுபவித்த கொடுமைகளை மக்கள் மறக்க மாட்டார்கள் என்று இக்கதைகளை எழுதியவர்கள் நினைத்திருக்கலாம்.

ராமானுஜர் தில்லி சென்றோ அல்லது வடநாட்டிற்குச் சென்றோ ‘செல்லப்பிள்ளை’ சிலையை மீட்டிருக்க வாய்ப்பே இல்லை. தில்லியில் இஸ்லாமிய அரசு நிறுவப்பட்டது முகம்மது கோரிக்கும் பிருதிவிராஜனுக்கும் 1192 நடந்த போருக்குப் பின்னால்தான். 1206ல்தான் கோரியின் அடிமையான குத்புதீன் ஐபக் தில்லியில் ஆட்சியை அமைத்தார்  – ராமனுஜரின் மறைவிற்கு சுமார் 70 ஆண்டுகளுக்குப் பின்பு. கோரியின் வெற்றிக்கு முன்னால் நடந்த படையெடுப்புகளின் விளைவாக இந்தியாவில் எங்கும்  இஸ்லாமிய அரசு அமைந்ததாகத் தெரியவில்லை சிந்த் பகுதியில் இஸ்லாமியர் இருந்தார்கள். ஆனால் அவர்கள் யாரும் தெற்கே படையெடுத்து வந்ததாகத் தெரியவில்லை. ராமானுஜரும் ராஜஸ்தான் பாலைவனத்தைத் தாண்டி அங்கு சென்றிருக்க முடியும் என்று தோன்றவில்லை.

இதே போன்ற ஐயங்களை ராமானுஜர் வாழ்க்கையில் நடந்ததாகக் கூறப்படும் எல்லாச் சம்பவங்களைப் பற்றியும் எழுப்ப முடியும்.

ராமானுஜர் எழுதியவை

விசிஷ்டாத்வைதம் என்றால் என்ன?

உயிருள்ளவையும் உயிரில்லாதவையும் இறைவனுக்கு உடல்கள். அவை உண்மையானவை. காட்சிப்பிழையல்ல. இறைவன் ஒருவனே. எல்லாவற்றிலும் நீக்கமற இருப்பவன். நம்முள் இருந்தாலும் அவன் தனியானவன். மேன்மையனாவன். அவன் மாசற்ற, அளவிறந்த கல்யாண குணங்களைக் கொண்டவன். அவனுடைய அடியை அடைந்து அவனைப் பற்றி சிந்தித்து அவனுக்குச் சேவை செய்து கொண்டிருப்பதே நம்முடைய இலக்கு.

விசிஷ்டாத்வைதத்தைக் குறித்து ராமானுஜர் தமிழில் ஏதும் எழுதியதாகத் தெரியவில்லை. வேறு எதைக் குறித்தும் அவர் தமிழில் எழுதியதாகத் தெரியவில்லை. குறிப்பாக அவர் யாருடைய காலடிகள் என்று வைணவர்களால் கருதப்படுகிறாரோ, அந்த நம்மாழ்வாரை பற்றி ஒரு வரி கூட தமிழிலோ அல்லது வடமொழியிலோ எழுதியதாகத் தெரியவில்லை.

வடமொழியில் ஒன்பது படைப்புகளைச் செய்திருக்கிறார். அவை:

  1. வேதார்த்த சங்க்ரகம்:. அவர் எழுதிய முதல் நூல் என அறியப்படுகிறது. வேதங்கள் சொல்பவை விசிஷ்டாத்வைத தத்துவம்தான் என்பதை நிறுவுகிறது.
  2. ஸ்ரீபாஷ்யம் என்று அழைக்கப்படும் பிரம்மசூத்திர பாஷ்யம்: இது  பாதராயணரின் பிரம்ம சூத்திரத்திற்கு விளக்கவுரை. விசிஷ்டாத்வைத சார்பாக எழுதப்பட்டது. சங்கரர் உட்பட மற்றையவர்கள் எழுதிய உரைகளை விமரிசிப்பது. ராமனுஜருக்குப் பெரும் புகழைத் தந்த படைப்பு.
  3. வேதாந்த தீபம்: பிரம்ம சூத்திரங்களுக்கு சுருக்கமான விளக்கம்
  4. வேதாந்த சாரம்: பிரம்ம சூத்திரங்களுக்கு இன்னும் சுருக்கமான விளக்கம்.
  5. பகவத்கீதா பாஷ்யம்: இது கீதைக்கு விளக்கவுரை. விசிஷ்டாத்வைத சார்பாக எழுதப்பட்டது. அவருடைய குருவான யாமுனாச்சாரியாரின் (ஆளவந்தார்) கீதார்த்த சங்க்ரகத்தை அடித்தளமாகக் கொண்டு எழுதப்பட்டது.
  6. சரணாகதி கத்யம்: . ராமானுஜர் ஒருபுறத்திலும் திருமகளும் நாராயணனும் மறுபுறத்திலும் இருந்து நடத்தும் உரையாடல் போல அமைக்கப்பட்டிருப்பது. இறைவனின் அடி பணிவதே ஒரே வழி என்பதைச் சொல்வது.
  7. ஸ்ரீரங்க கத்யம்: இது அரங்கனின் தாள்களில் பணிந்து தன்னை அவருடைய நிரந்தர வேலைக்காரனாக (நித்ய கிங்கரன்) ஏற்றுக் கொள்ள வேண்டுவது
  8. வைகுண்ட கத்யம்: வைகுண்டம் எவ்வாறு இருக்கும் என்பதை விளக்குவது. இறைவனிடம் முழுவதும் சரணடைந்தவன், அவன் அருளைப் பெற்றவன் சேரும் இடம்.
  9. நித்யக்ரந்தம்: தினமும் இறைவனை வழிபடுவதற்கான வழிமுறைகளை விளக்குவது.

இவற்றில் முக்கியமானவை ஸ்ரீ பாஷ்யமும் பகவதகீதை பாஷ்யமும்.

பிரம்ம சூத்திரத்தில் சுலோகங்கள் 1.3.34-38 சூத்திரர்கள் வேதம் படிக்க்க் கூடாது என்று சொல்கின்றன. அதனால் அவர்கள் பிரம்மவித்யையை பெற முடியாது என்கின்றன. பிரம்மவித்யையைப் பெற முடியாவிட்டால் பிரம்மத்தை அறிந்து கொள்ள முடியாது. பிரம்மத்தை அறிந்து கொள்வதே வாழ்க்கையின் குறிக்கோள்.  சங்கரர் தன் பாஷ்யத்தில் பல மேற்கோள்கள் காட்டி ஏன் கடைநிலை வர்ணத்தவர் வேதம் படிக்க்க் கூடாது என்று சொல்கிறார். ராமானுஜர் இந்த இடத்தில் சங்கரரோடு ஒத்துப் போகிறார். ஒருபடி மேலே போய் இவ்வாறு சொல்கிறார்: We must here point out that the non-qualification of Sûdras for the cognition of Brahman can in no way be asserted by those who hold that a Brahman consisting of pure non-differenced intelligence constitutes the sole reality; that everything else is false; that all bondage is unreal.” (page: 343,Thibaut’s translation of Ramanuja Bhashya) அதாவது அத்வைதிகள் பிரம்மத்தைத் தவிர் மீதி எல்லாம் பொய் என்று சொல்வதால் அவரகள் கடைநிலை வர்ணத்தவரும் வேதங்களைப் படிக்கக் கூடாது என்று சொல்வதற்கு அருகதை அற்றவர்கள் என்கிறார்! விசிஷ்டாத்வைதிகள் மட்டுமே அவ்வாறு சொல்ல முடியும் என்ற பொருளில் கூறுகிறார்.

ஆனால் அவருடைய கீதா பாஷ்யத்தில் அத்தியாயம் 9:32 சுலோகத்திற்குப் விளக்கம் சொல்லும் போது, பெண்களும், வைசியர்களும், கடைநிலை வர்ணத்தவரு பாவம் செய்த வயிறுகளில் பிறந்தவர்களும் என்னிடம் சரண் அடைந்தால் உச்ச நிலையை அடையலாம் என்று பொருள் கொள்கிறார்.

எனவே அவர் பிரம்ம சூத்திர பாஷ்யம் எழுதும் போது வேதங்களை கடைநிலை வர்ணத்தவர் படிக்கக் கூடாது என்று சொன்னாலும் அவர்கள் கண்ணனைச் சரணடைந்தால் நிச்சயம் பிரம்மத்தை அறிந்து மோட்சநிலையை அடையலாம் என்பதை ஒப்புக் கொள்கிறார் என்றுதான் நாம் பொருள் கொள்ள முடியும். அதனால்தான் கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர், எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே’ என்று சொன்ன நம்மாழ்வாரின் காலடியாக தன்னைக் கருதி எல்லா வைணவர்களையும் நம்மாழ்வாரைப் படிக்கச் சொன்னார்.

உண்மையான ராமனுஜர்

ராமனுஜர் வடமொழியில் ஏன் தமிழ் ஆழ்வார்களைப் பற்றிப் பேசவில்லை என்பதற்கு வசுதா நாராயணன் தன்னுடைய The Tamil Veda – Pillan’s interpretation of Tiruvoimoli என்ற புத்தகத்தில் மிகச் சரியாக விளக்கம் அளிக்கிறார். ராமானுஜருடைய குருவான யாமுனாச்சாரியாரின் ஸ்தோத்திர ரத்தினமும் கூரத்தாழ்வானின் ஸ்தவங்களும் பராசர பட்டரின் ரங்கராஜ ஸ்தவமும் ஆழ்வார்கள் பாடல்களை ஒத்து இருப்பதைச் சொல்கிறார். ராமானுஜரின் கத்யத்ரய்த்திலும் ஆழ்வார்கள் பாடல்களின் சாயல் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

ராமானுஜர் வடமொழியில் தமிழின் பேச்சையே எடுக்காததற்கு ஒரே காரணம் அன்றைய பிராமணர்கள் தமிழில் கூறப்பட்டதை பிரமாணமாக (சான்றாக) ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். 

ஆடிய மாட்டை ஆடிக் கறக்க வேண்டும் பாடிய பாட்டைப் பாடிக் கறக்க வேண்டும் என்ற கொள்கையை ராமானுஜர் கடைபிடித்தார். இன்னொன்றும் சொல்லவேண்டும் அவருடைய பாஷ்யங்கள் தமிழ்நாட்டில் படிப்பவர்களுக்கு மட்டும் எழுதப்பட்டதல்ல. ராமானுஜரின் செல்வாக்கு இந்தியா முழுவதும் பரவியதன் காரணமே அவர் இந்தியாவின் மற்றைய மொழிகளைப் பேசுபவர்களைக் கருத்தில் கொண்டு அவர்கள் ஏற்றுக் கொள்ளும் பிரமாணங்களை மட்டும் எடுத்துக் கொண்டு தன் வாதங்களை முன் வைத்ததால்தான். அதனால்தான் அவர் நம்மாழ்வாரைப் பற்றிச் சொல்லவில்லை என்பது தெளிவு.

அவர் தமிழில் எழுதாததன் காரணம் அதைச் செய்ய பலர் இருக்கிறார்கள், அவர்கள் தன்னை விடச் சிறப்பாகச் செய்வார்கள் என்ற எண்ணத்தில் இருக்கலாம்.

ராமானுஜரின் சீர்திருத்தக் கருத்துகள்

ராமானுஜரின் வடமொழிப் படைப்புகள் தத்துவத்தையும் இறை பக்தியியையும் அடிப்படையாகக் கொண்டவை. அவற்றைப் படிப்பவர்கள் வடமொழியில் பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம். அவர்கள் ராமானுஜரைத் தேடி வருவது சீர்திருத்தத்திற்காக அல்ல. தத்துவத்தையும் பக்தியையும் சரணாகதியையும் குறித்து அவர் சொல்வதை அறிந்து கொள்வதற்காக. ஆனால் தென் நாட்டில் அவர் செய்ய நினைத்தது இன்னொன்று. ஆழ்வார்கள் சொல்லியப்படி மிகப்பெரிய வைணவத் தொண்டக்குலம் ஒன்றை உருவாக்கவே அவர் நினைத்தார். அதற்கு வடமொழி தேவையில்லை. தமிழிலேயே அமிழ்தினும் இனிய பாடல்களை ஆழ்வார்கள் பாடியிருப்பதை அவர் அறிந்திருந்தார். எனவே அவர்கள் சொன்னதைப் பரப்புவதற்காக ஒரு தனிக்குழு தேவை என்பதை உணர்ந்து தன் மருமகனை நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு வியாக்கியானம் எழுதச் சொன்னார். பின்னால்  அவரைப் பின்பற்றி பலர் வியாக்கியானங்களை எழுதுவார்கள் என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும்.

ஆனாலும் கத்யங்களில் கூட அவர் நம்மாழ்வார் பெயரை ஏன் சொல்லவில்லை என்பது புரியாத புதிர். மற்றைய ஆசாரியர்கள் ஸ்தோத்திரங்களில் (துதி பாடல்கள்) நம்மாழ்வாரை துதிக்கிறார்கள். ராமானுஜரின் குருவான ஆளவந்தார் தன் ஸ்தோத்திர ரத்னத்தில் நான் என் தலையை நம்மாழ்வார் காலடியில் வைத்து வணங்குகிறேன் என்கிறார்.

ராமானுஜரைக் குறித்த குருபரம்பரைக் கதைகள் மிகைப்படுத்தப்பட்டவை என்பதில் எந்த ஐயமும் இருக்க முடியாது. ஆனால் அவற்றில் மையங்களில் உண்மை நிச்சயம் இருந்திருக்க வேண்டும். வடமொழியைத் தூக்கிப் பிடிக்கக் கூடிய பிராமணச் சடங்குகளை எந்தச் சமரசம் இன்றி பின்பற்றக் கூடிய பிராமணர்கள் ராமனுஜர் காலத்திலிருந்து இன்று வரை இருந்திருக்கிறார்கள். அவர்களில் யாரும் இக்கதைகள் கட்டுக்கதைகள், ராமானுஜர் இவ்வாறு சொல்லியிருக்கவோ, செய்திருக்கவோ முடியாது என்று சொல்லவில்லை – அவர்கள் தினசரி வாழ்க்கையில் எடுக்கும் நிலைப்பாடுகளுக்கு நேர் எதிராக ராமானுஜர் எடுத்த நிலைப்பாடுகள் இருக்கின்றன என்பதை அறிந்திருந்தால் கூட. ராமானுஜர் போன்ற மாமனிதர் சொல்லியிருக்காவிட்டால் சுயசாதிப் பெருமிதம் கொண்ட பிராமணர்கள் நம்மாழ்வாரையே ஏற்றுக் கொண்டிருப்பார்களா என்பது ஐயமே. ராமானுஜரின் ஆணையில்லாமல் நம்மாழ்வாரைச் சடாரியாக ஏற்று தலைமேல் கொள்வார்களா என்பதும் ஐயமே.

மேலும் ராமானுஜர் பற்றிய கதைகளை மிகச் சமீப காலம் வரை சொல்லிக் கொண்டிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வைணவப் பிராமணர்கள். அவர்களுக்கு தங்கள் மீது கடுமையான விமரிசனங்களை வைக்கும் கதைகளைச் சொல்ல வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. அவர்கள் அவற்றை மறைக்காமல் சொல்லிக் கொண்டிருந்ததின் காரணம் அவை ராமனுஜர் வாழ்வில் உண்மையாக நடந்தவை என்று நம்பியதால்தான். காலம் காலமாகச் சொல்லப்படும் இக்கதைகளை எளிதாக ஒதுக்கித்தள்ளி விட முடியாது. இவை ராமானுஜர் மறைந்து சில  பத்தாண்டுகளுக்குள்ளாகவே சொல்லப்பட்டு வரும் கதைகள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

 தென்னிந்தியா முழுவதும் ராமானுஜரை ஏற்றுக் கொண்ட பிராமணர்கள் அல்லாத பல வைணவர்கள் இருக்கிறார்கள். தலித்துகளிலிருந்து உயர்சாதிகள் வரை. இவ்வாறு ஏற்றுக் கொண்டது. இன்று நேற்றல்ல, பல நூற்றாண்டுகளுக்கு முன்னால். வைணவக் கோவில்களில் நடைபெறும் சடங்குகளும் இதே போன்று பல நூற்றாண்டுகளாக நடந்தேறி வருகின்றன. இதே போல சங்கரரை ஏற்றுக் கொண்டவர்கள் அதிகம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  ராமானுஜர் சீர்திருத்த முயற்சிகளைச் செய்தார் என்பதை நிச்சயம் ஏற்றுக் கொள்ள இதை விட அதிகச் சான்றுகள் தேவையில்லை.

ஆனால் இன்னொன்றும் சொல்லியாக வேண்டும்.

ராமனுஜர் சாதியற்ற சமுதாயம் வேண்டும் என்று நினைத்ததாக எந்த ஆதாரமும் இல்லை. சாதிகளுக்குள் ஏற்ற தாழ்வு இருக்கக் கூடாது என்று நிச்சயம் நினைத்தார் என்பதற்கு குருபரம்பரைக் கதைகள் சான்று.  அகமணமுறையை (endogamy) எதிர்த்து அவர் பேசவில்லை. குருபரம்பரைக் கதைகளும் பேசவில்லை.

 குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ்இழிந்து எத்தனை
நலந்தான் இலாதசண் டாளசண்டாளர்கள் ஆகிலும்
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள்என்றுஉள்
கலந்தார் அடியார் தம்மடியார் எம் அடிகளே.

என்று பாடும் நம்மாழ்வாரும் சாதிகள்தாம் குலங்களைத் தாங்குகின்றன என்று சொல்கிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதற்கு ஈடு அனுலோம பிரதிலோம திருமணங்களால் சண்டாளர்கள் ஆகியிருப்பவர்கள் என்ற பொருளையும் சொல்கிறது. சாதியற்ற சமுதாயம் என்ற கருத்து வலுபெற்றதே இருபதாம் நூற்றாண்டில்தான் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

இபாவின் ராமானுஜர்

என்னைப் போலவே இபாவும் ஷேக்ஸ்பியரை ஆராதிப்பவர்.  அவர் பல ஷேக்ஸ்பியர் நாடகங்களைத் தமிழ் வடிவமாக்கியவர். நாங்கள் பல தடவைகள் ஷேக்ஸ்பியரின் மேதைமையைப் பற்றிப் பேசியிருக்கிறோம். இதுதான் எனக்கும் அவருக்கும் உள்ள ஒற்றுமை.  நான் ஒரு ரசிகன் மட்டுமே. மிகவும் சாதாரணமான ரசிகன். இ.பாவைப் பொறுத்தவரை அவர் சுதந்திர இந்தியாவின் மதிக்கத்தக்க நாடகப் படைப்பாளர்களில் ஒருவர். விஜய் தெண்டுல்கர், கிரீஷ் கர்னாட், மோகன் ராகேஷ், பாதல் சர்கார்,  கே என் பணிக்கர் போன்று இந்தியா முழுவதும் நல்ல நாடகங்களை விரும்புபவர்களால் மதிக்கப்படுபவர். இதனால அவருடைய படைப்பைப் பற்றி எழுதுவதற்கு சிறிது தயக்கமாக இருக்கிறது. ஆனாலும் நான் அவருக்காக எழுதவில்லை, அவர் நாடகத்தைப் படிப்பவர்களுக்காக எழுதுகிறேன் என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டு இதை எழுதத் துவங்குகிறேன்.

நல்ல நாடகம் என்றால் என்ன?

சமஸ்கிருத்த்தின் மிகப் பெரிய நாடக ஆசிரியர்களான காளிதாசன், பாசன், சூத்ரகன், பவபூதி போன்றவர்களின் நாடகங்களைப் படிக்கும் போது நமக்கு உடனே தென்படுவது அவற்றில் நாயகர்கள் நம்மைப் போல சாதாரண மனிதர்கள் அல்ல என்பதுதான். சூத்ரகனின் மிருச்சகடிகத்தின் கதாநாயகனான சாருதத்தன் கூட நாடகத்தின் இறுதியில் குசாவதியின் மன்னனாக அறிவிக்கப்படுகிறான். மேலும் நம்மையும் மீறி இவர்கள் உலகம் வேறானாது என்ற எண்ணம் இந்நாடகங்களைப் படிக்கும் போது நம்மைச் சூழ்ந்து கொள்கிறது. ஆனாலும் இவை நம்மை ஈர்க்கின்றன. கதே சாகுந்தலத்தைக் குறித்துச் சொல்வதைப் போல வானத்தையும் பூமியையும் நம்மிடையே வசப்பட வைக்கின்றன. வசந்தத்தின் பூக்களையும், கோடையின் பழங்களையும் ஒன்று சேர்த்து நமக்கு அளிக்கின்றன. இதனால் அவற்றில் இருக்கும் மிகையையும், அளவிற்கு அதிகமான இனிப்பையும், இயற்கையை மீறிய நடப்புகளையும் நாம் மறந்து போகிறோம். ஆனால் அவற்றைப் போன்று இன்று யாராலும் நாடகங்களை எழுத முடியாது.

இவர் நம்மைப் பற்றிதான் பேசுகிறாரோ என்று நம்மை முதலில் நினைக்க வைத்தவர் ஷேக்ஸ்பியர். ஹெரால்ட் ப்ளூம் தன்னுடைய The Invention of the Human புத்தகத்தில் சொல்கிறார்: Yet I hardly see how one can begin to consider Shakespeare without finding some way to account for his pervasive presence in the most unlikely contexts: here, there and everywhere at once. அதாவது மனித மனங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் அவர் சென்றிருக்கிறார் என்பது அவரைப் படிப்பவர்களுக்குத் தெரியும் என்கிறார். “He is a system of Northern Lights, an aurora borealis, visible where most of us will never go. யாரும் அதிகம் செல்லாத இடங்களில் கூட அவர் பளீரிடுகிறார் என்கிறார் ப்ளூம்.

இவருக்கு நேர் மாறானவர் செகாவ். அதிர்வுகள் அதிகம் இல்லாத நாடகங்கள் அவருடையவை. அவருடைய பாத்திரங்களில் அனேகமாக அனைவருமே வெளிச்சத்தின் வட்டத்திற்குள் வர விரும்பாதவர்கள். “அவருடைய நாயகர்கள் இருக்கையில் இருந்து எழுந்து ஓய்வறைக்குச் செல்கிறார்கள் திரும்பி வந்து  இருக்கையில் அமர்ந்து கொள்கிறார்கள் என்று டால்ஸ்டாய் சொல்கிறார். ஆனால் செகாவின் நாடகங்கள் நம் வாழ்க்கை கதாநாயகர்கள் வாழ்க்கைகளைப் போலத் திருப்பங்கள் நிறைந்து அல்ல என்பதை மிகவும் திறமையாக, ஆர்ப்பாட்டம் இல்லாமல் நமக்கு நினைவுபடுத்துகின்றன. Far from implying any view of life grandiose in the tragic manner, or ultimately harmonious in the spirit of comedy, Chekov continuously suggests the opposite: human existence is more pointless, more frustrating, less heroic, less satisfying than members of his audience may privately conceive. என்று செகாவின் நாடகங்களைப் பதிப்பித்த ரொனால்ட் ஹிங்க்லி சொல்கிறார்.

என்னைப் பொறுத்தவரை உலகின் எல்லா நவீன நாடகப் படைப்பாளர்களும் ஷேக்ஸ்பியருக்கும் செகாவிற்கும் இடையிலேயேதான் இயங்குவார்கள்.

இந்த வெளிச்சத்தில் இபாவின் ராமானுஜர் நாடகத்தை அணுகுவோம்.

ராமானுஜர் ஒரு வரலாற்று நாயகன் போல ஔரங்கசீப்பும் ஒரு வரலாற்று நாயகன். இபா ஔரங்கசீப் நாடகத்தையும் எழுதியிருக்கிறார். இபாவின் ஔரங்கசீப் இறை நம்பிக்கை உள்ளவன். ஆனால் தான் யார் என்பதைக் குறித்துத் தெளிவில்லாதவன். எண்பது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த பிறகும் அவனுக்கு இந்தத் தெளிவு கை கூடி வருவதில்லை. நாடகத்தின்  இறுதியில் சொல்கிறான்: வெறும்கையோடு வந்தேன். போகும் போது ஒரு பாவ மூட்டையைச் சுமந்து போகிறேன். என் கையிலுள்ள ரத்தக்கறையைக் கழுவ ஜமுனா நதி முழுவதும் போதாது… நான் மதவெறியனா? பாசத்திற்கு ஏங்கிய அனாதையா? எனக்கு ஒன்றும் புரியவில்லை.. என்னை  இவ்வளவு கொலைகளைச் செய்யத் தூண்டியது எது? காரணத்தை ஆராய்வது என் பொறுப்பல்ல. சரித்திரம்தான் சொல்ல வேண்டும்.”

இவனுக்கு நேர் மாறாக இபாவின் ராமானுஜர் தெளிவின் இலக்கணம். தன் பிறவியின் இலட்சியம் என்ன என்பதைத் தெளிவாக அறிந்தவர். அதை நோக்கிச் சென்று முழு வெற்றியை அடைந்தவர். தன் குருநாதரின் மூன்று நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றியவர். அவர் சொல்கிறார்: “வைணவன் இறப்பதில்லை. அவனுக்கு முதலேது, முடிவேது? கடவுள் அருளிலிருந்தால் கண்ணுக்குத் தெரிவன யாவும் வைகுண்டம். இறைவன் சாத்தியப்பாடுகளின் எல்லை நிலம். அவ்வெல்லையை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம். பயணம் முடிவதில்லை.’

 இருவரும் வரலாற்றை அறிந்தவர்கள். அது மனிதவாழ்க்கை இருக்கும் வரை தொடரும் என்பதைத் தெரிந்தவர்கள் என்பதை இபா மிகவும் தெளிவாகச் சொல்கிறார். ஆனால் ஔரங்கசீப்பிற்குக் கொடுத்திருக்கும் பரிமாணங்களை இபாவால் ராமானுஜருக்குக் கொடுக்க முடியாது. கொடுக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய நிலைப்பாடும். ராமானுஜரை கட்டுடைக்கிறேன் என்று கிளம்புவது தடித்தனமானது என்றுதான் நான் சொல்வேன். ராமானுஜர் பல கோடிக்கணக்கான மக்களால் மதிக்கக் கூடிய மாமனிதர்களில் ஒருவர். ஏசு கிறிஸ்துவிற்கும் நபிகள் நாயகத்திற்கும் ஈடானவர். ‘தேவு மற்ற்றியேன்’ என்று அவருடைய பல சீடர்களால் இன்று வரை தெய்வமாகக் கொண்டாடப்படுபவர். எனவே அவரைப் பற்றி நாடகம் எழுத வேண்டுமானால் மிகவும் கவனமாகத்தான் எழுத வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் இபா இந்நாடகத்தை எழுதியிருக்க வேண்டும். அவரால் அதிகம் கற்பனையும் செய்ய முடியாது. ஏனென்றால் ராமானுஜரைப் பற்றிக் கணக்கற்ற கதைகள் குருபரம்பரையிலும் மற்றைய நூல்களிலும் வியாக்கியான்ங்களிலும் இருக்கின்றன. அவற்றிற்கு மாறாக எதையும் நுழைத்தால் ராமானுஜர் என்று வைணவர்களால் கருதப்படும் ஆளுமைக்கு பெருத்த அவமானம் செய்த்தாக ஆகும்.

இபா இத்தனை நெருக்கடிகளையும் கருத்தில் வைத்து கொண்டுதான். நாடகத்தை எழுதியிருக்கிறார். வைணவ மரபு சொல்லும் கதைகளில் பலவற்றை – பாத்திரங்களின் முரண்கள் வெளிப்படுபவற்றை – தவறாமல் நாடகத்தில் சேர்த்திருக்கிறார். ஆனாலும்  Jesus Christ, Superstar எழுதிய Tim Rice சொன்னது போல  “It happens that we don’t see Christ as God but simply the right man at the right time at the right place.” என்ற மாதிரித்தான் இபாவும் ராமானுஜரைப் பார்த்திருக்க வேண்டும். எனவேதான் ராமனுஜர் பாத்திரத்தில் அதிக முரண்களைப் பார்க்க முடிவதில்லை.

 நாடகத்தில் செகாவ் தருணம் என்று நான் கருதுவது தஞ்சம்மாவிற்கும் ராமானுஜருக்கும் இடையே நடக்கும் உரையாடல்தான். தஞ்சம்மாள் நம்மைப் போன்றவர். அவருக்கு வாழ்க்கை இயல்பாகச் செல்ல வேண்டும், சுற்றுவட்டத்தோடு ஒத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருப்பது இயற்கையானது. அது மிகத் தெளிவாக “தீட்டுப் பார்ப்பது தப்பா?” என்று அவர் கேட்பதில் வெளிப்படுகிறது. ஆனால் ராமானுஜரோ சூப்பர்ஸ்டார். நம் பாதை வேறு என்று எளிதாகச் சொல்லி விட முடிகிறது. தஞ்சம்மாள் “என்ன இது?  நான் தப்பு..” என்று சொல்கிறார். இது அவர் மனம் அடைந்திருக்கும் தடுமாற்றத்தை ஓரிரு வரிகளில் மிக அழகாகப் பிடிக்கிறது.

இபாவே சொல்கிறார்: “அன்று முதல் இன்று வரை என்றும் வரலாற்று நாயகர்களின் சரித்திர முக்கியத்துவத்தை உறுதி செய்யும் துலாக்கோல் மனிதாபிமானந்தான். மனிதாபிமானத்தை தவிர வேறு சிறந்த சமயம் இல்லை.”

உண்மைதான். மனிதாபிமானத்தின் இலக்கணங்களில் ஒருவர் ராமானுஜர். அவருடைய வாழ்க்கையை நாடக வடிவில் படிக்க விரும்புவர்களுக்கு இபாவின் ராமானுஜர் நாடகத்தை விட சிறந்தது இல்லை. பார்க்க விரும்புபவர்களுக்கும்தான். 

3 thoughts on “ராமானுஜர் – நம்பிக்கையும் வரலாறும்”

  1. ராமானுஜர் நம்மாழ்வாரை அங்கீகரித்துப் போற்றியதிலலை என்றுதொனிக்கும்படி கிருஷ்ணன் எழுதியதும் ஏற்புடையதல்ல.
    திருவரங்கத்தமுதனாரின் ராமானுஜ நூற்றந்தாதியின் முதல்பாடலிலேயே அவர் உடையவரை ‘மாறன் அடிபணிந்து உய்ந்தவன்’என்று கூறுகிறார். அதுஒன்றே போதும். மாறனும்(நம்மாழ்வார்) உடையவரும் வைணவத்தின் இரு கண்கள் எனலாம்.

    இது எனது தந்தையின் கருத்து. அவருக்காக நான் பதிகிறேன்

    Like

  2. You may find this essay about the historicity of Ramanuja’s clash with Kulotunga interesting.

    http://www.sishri.org/ramanuja.html

    It is written by epigrapher Sri.S.Ramachandran

    He attempts to transcend the traditional hagiographies and attempts to corroborate the storyline.

    He argues that the clash with Kulothunga was not sharply religious, but more likely a clash between the Chola regnal authority and the rise of a Ramanuja as an alternate power center at SriRangam.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s