பைம்பொழில் வாழ் குயில்காள்! மயில்காள்! ஒண் கருவிளைகாள்!
வம்பக் களங்கனிகாள்! வண்ணப் பூவை நறுமலர்காள்!
ஐம்பெரும் பாதகர்காள்! அணி மாலிருஞ்சோலை நின்ற
எம்பெருமானுடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே?
செழிப்பான சோலையில் வாழ்கின்ற குயில்களே! மயில்களே! அழகிய கருவிளைப் பூக்களே! புதிய களாப்பழங்களே! அழகிய நிறத்தையும் மணத்தையும் உடைய காயாம்பூக்களே! ஐந்து பெரும் பாதகர்களே! உங்களுக்கு அழகிய திருமாலிருஞ்சோலையில் இருக்கும் பெருமானுடைய மேனி நிறம் எதற்கு?
முதற்பாட்டில் ஆண்டாளுக்கு பார்க்கும் இடம் எல்லாம் சிவப்பாகத் தெரிந்தது. இப்போது கண்ட இடங்களில் எல்லாம் கரிய நிறம் தெரிகிறது. பச்சையும் தெரிகிறது. மயில் கருப்பும் பச்சையும் கலந்ததுதானே! சிறிது சிவப்பும் தெரிகிறது. பாடல்கள் முழுவதும் வண்ணக் குவியல்கள்தாம். கவிதை வண்ணத்தட்டு. A poetic palette.
“ப்ரம்மஹத்தி, ஸுராபானம் என்ற கள்குடி, ஸ்வர்ணஸ்தேயம் என்பதான பொன்னைத் திருடுவது, குரு தல்ப கமனம் என்பதாக குரு பத்னியிடம் தப்பான உறவு கொள்வது – ஆகிய இந்த நாலு பெருங் குற்றங்களும், இந்தக் குற்றங்களில் ஒன்றைச் செய்தவனோடு நெருங்கிய தொடர்புகொண்டிருப்பதான ஐந்தாவது குற்றமும் சேர்ந்து ‘பஞ்ச மஹா பாதகம்’ எனப்படும். ‘ப்ரஹ்மஹத்தி’ என்பதாக ப்ராம்மணனைக் கொல்வது மட்டுமே இங்கே சொல்லப்பட்டாலும், எந்தக் கொலையுமே ஒரு மஹாபாதகமாகத்தான் கருதப்பட்டு அதைச் செய்தவனை ஸமூஹம் ஒதுக்கிவைத்தது” என்று தெய்வத்தின் குரல் புத்தகத்தில் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் கூறுகிறார். இக்குற்றங்களைச் செய்தவர்களுக்கு ஒப்பானவர்கள் நீங்கள் என்று ஆண்டாள் பறவைகளையும் பூக்களையும் பழத்தையும் குற்றம் சாட்டுகிறார்! அவை செய்த ஒரே குற்றம் அவர்கள் நிறம் கண்ணனின் நிறத்தை ஒத்து இருப்பதுதான்.
நீங்கள் என்னுடன் கூட்டுச் சேர வேண்டும். ஏனென்றால் என்னைப் போலவே நீங்களும் அவனுக்கு அடிமைகள் (சேஷர்கள்). ‘நாம் எல்லோரும் ஒரே கட்சியில் இருக்க வேண்டாமா. தொழிலாளர்கள் சிலர் முதலாளிகள் கட்சியில் சேருவது போலவல்லவா இருக்கிறது’ என்று புத்தூர் சுவாமி சொல்கிறார். Betrayal of the working class is similar to the five great sins!
களாக்காய்/பழம் -Capparis carandas . இது பச்சையும் சிவப்பும் கலந்தது. கண்ணனைப் போலவே. ‘பச்சைமா மலை போல் மேனி. பவழவாய் கமலச்செங்கண் – தொண்டரடிப்பொடி ஆழ்வார் வாக்கு.
பூவைப்பூ – காயாம் பூவிற்கு இன்னொரு பெயர்.
துங்க மலர்ப் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற
செங்கட் கருமுகிலின் திரு உருப் போல் மலர் மேல்
தொங்கிய வண்டினங்காள்! தொகு பூஞ்சுனைகாள்! சுனையில்
தங்கு செந்தாமரைகாள்! எனக்கு ஓர் சரண் சாற்றுமினே
மலர்களுடைய உயரிய சோலைகள் சூழ்ந்த திருமாலிருஞ்சோலையில் நிற்கும் தாமரை போன்ற சிவந்த கண்களையும் கரிய மேகம் போல வண்ணமும் வடிவழகையுமுடைய கண்ணனின் வண்ணத்தில் இருக்கும் வண்டுக் கூட்டங்களே! மலர்கள் மீது தொங்கிக் கொண்டிருப்பவைகளே! அடுத்து அடுத்து இருக்கின்ற அழகிய சுனைகளே! அச்சுனைகளில் உள்ள செந்தாமரை மலர்களே! எனக்கு ஓர் அடைக்கலம் சொல்லுங்கள்.
இங்கு ஆண்டாள் வண்டுகளின் நிறத்தையே குறிப்பிடுகிறார் என்று விளக்கமளிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் மலர்கள் பல வண்ணங்களில் இருக்கும்.
அங்கே நிற்பது ‘நெருப்பில் கால் பொருந்துமாப்போலே இருக்கிறதிறே இவளுக்கு’ என்று வியாக்கியானம் சொல்கிறது. அதாவது திருமாலிருஞ்சோலையில் நிற்பதே நெருப்பில் கால் வைத்தது போல இருக்கிறதாம். உடனே சென்று கண்ணனிடம் சேர வேண்டும் என்ற தணியாத ஆசை.
அவரைத் துன்புறுத்தும் மலர்களிடமும் சுனைகளிடமும் நான் எங்கு அடைக்கலம் அடைவது என்று கேட்பது பீஷ்மரிடமும் துரோணரிடம் அவர்களிடமே சென்று உங்களைக் கொல்லும் வழியைச் சொல்லுங்கள் என்று கேட்டது போல இருக்கிறதாம்.
நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
ஏறு திரு உடையான் இன்று வந்து இவை கொள்ளுங்கொலோ?
மணம் கமழும் பொழில்கள் சூழ்ந்த திருமாலிருஞ்சோலை நம்பிக்கு நான் நூறு அண்டாக்களில் வெண்ணெயை வாயினால் சொல்லி மனதினால் படைத்தேன் . அதே போன்று நூறு அண்டாக்களில் அக்கார அடிசிலும் வாயினால் சொல்லி மனதினால் படைத்தேன். இவை இரண்டையும் குறையாது நித்தமும் பெருகிக் கொண்டிருக்கும் செல்வத்தை உடைய ( அழகு மங்காமல் ஏறி கொண்டே இருக்கும் திருமகளை மார்பில் உடைய) கண்ணன் இன்று வந்து ஏற்றுக் கொள்வானா?
கண்ணனுக்கும் வெண்ணெயின் மீது தணியாத ஆசை. ‘நூறு அண்டாக்களில் படைக்கிறேன். இன்று தனியாக வந்திருக்கிறேன். அதனால் வாயினால் சொல்லி உளமாறப் படைக்கிறேன். என்னை நீ ஏற்றுக்கொள். ஆய்ச்சியாகவே மாறி தினமும் வெண்ணெய் தருவேன். திருப்பாவையில் சொன்னது போல “மூட நெய் பெய்து முழங்கை வழி வார’ அக்கார அடிசில் செய்து தருவேன்’ என்கிறார்.
கண்ணன் சாப்பாட்டு ராமன். இதை அடுத்த பாட்டு விளக்குகிறது.
ராமானுஜர் இப்பாட்டைப் படித்ததும் ஆண்டாள் சொன்னதைச் செய்ய முடியவில்லையே என்ற வருத்தமாம். அவரே திருமாலிருஞ்சோலைக்குச் சென்று நூறு அண்டாக்களில் வெண்ணெயும் நூறு அண்டாக்களில் அக்கார அடிசிலையும் செய்து அழகருக்குப் படைத்தாராம். உடனே வில்லிபுத்தூர் சென்று ஆண்டாள் சன்னிதிக்கு சென்று அவரை வணங்கினாராம். ஆண்டாள் மனித உருவில் வந்து ‘நம் அண்ணரே’ என்று ராமானுஜரைத் தழுவிக் கொண்டாராம். ‘பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே’ என்று இன்று வரை தினமும் வைணவர்கள் ஆண்டாளைப் போற்றி வணங்குகிறார்கள். ஆண்டாளை உடையவருக்குத் தங்கையாகவே கருதுகிறார்கள்.
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான்
ஒன்று நூறாயிரமாக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன்
தென்றல் மணம் கமழும் திருமாலிருஞ்சோலை தன்னுள்
நின்ற பிரான் அடியேன் மனத்தே வந்து நேர் படிலே
தென்றலின் மணம் கமழும் திருமாலிருஞ்சோலையில் இருக்கும் பெருமான் நான் தந்த நூறு அண்டா வெண்ணெயையும், நூறு அண்டா அக்கார அடிசிலையும் இன்று வந்து (இன்று வந்து என்பதை இன்று உவந்து என்று கூடப் பொருள் கொள்ளலாம்) ஏற்றுக் கொண்டு திரும்பிச் செல்லாமல் என் உள்ளத்தில் புகுந்தால், நூறு அண்டா என்ன, நூறாயிரம் அண்டாக்களில் படையல் அளிப்பேன். மற்றைய சேவைகளையும் செய்வேன்.
நூறாயிரமா?
அவன் உலகம் உண்ட பெருவாயன். அவனுக்கு எதுவும் பெரிதல்ல.
“அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய் அளறும் அடங்கப்-
பொட்டத் துற்றி மாரிப் பகை புணர்த்த பொரு மா கடல்வண்ணன் பொறுத்த மலை
வட்டத் தடங்கண் மட மான் கன்றினை வலைவாய்ப் பற்றிக் கொண்டு குறமகளிர்–
கொட்டைத் தலைப் பால் கொடுத்து வளர்க்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே. “
இது ஆண்டாளின் தந்தை பெரியாழ்வார் வாக்கு. கண்ணன் இந்திரனுக்குப் படைக்கப்பட்ட சோற்று மலையையும் தயிர்க் குளத்தையும், நெய் மடுவையும் உண்டு கோவர்த்தன கிரியை எடுத்தவன். அவனுக்கு நூறாயிரம் அண்டா பெரிதல்ல.
காலை எழுந்திருந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ?
சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான்
ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை உரைக்கின்றதே
கரிய குருவிக் கூட்டங்கள் காலையில் கூவுகின்றன. அவை திருமால் வருகிறான் என்று சொல்லி மருள் பண்ணில் பாடுகின்றனவா? திருமாலிருஞ்சோலைக்குத் தலைவன், துவாரகையின் அரசன் மற்றும் ஆலிலையில் துயின்ற பிரான் – என்ற் பல பெயர்களைக் கொண்ட அவன் வரவைக் குறித்துக் கூவுகின்றனவா? இது உண்மையா, கனவா?
கனவும் நனவும் கலந்த உலகத்தில் ஆண்டாள் இருக்கிறார். குயிலோசை இவள் மனதில் கண்ணனைக் குறித்து இருக்கும் தணியாத ஆசையின் குரலை ஒத்திருக்கிறது. ஆண்டாள் பிறந்த ஊரில் அறிவு அதிகம் இல்லாத பறவைகளும் கண்ணனின் பெயரைப் பாடும் என்கிறார்கள் உரையாசிரியர்கள்.
மருள் என்பதை ‘மருள் இந்தளம்’ என்ற பண் என்கிறார் பெரியவாச்சான் பிள்ளை. மருள் என்பது கோகிலானந்தி ராகம் – இது ரிஷபம் இல்லாத ( ‘ரி’ இல்லாத) சண்முகப்பிரியா என்று சொல்லப்படுகிறது. இந்தளம் என்பது மாயா மாளவ கௌளை.
கோங்கலரும் பொழில் மாலிருஞ்சோலையில் கொன்றைகள் மேல்
தூங்கு பொன் மாலைகளோடு உடனாய் நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும்
சார்ங்கவில் நாண் ஒலியும் தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ
கோங்கு மரங்கள் பூத்திருக்கும் பொழில்களை உடைய திருமாலிருஞ்சோலையில் கொன்றை மரங்களில் தூங்குகின்ற பொன் நிறமான சரக்கொன்றை மலர்களைப் போல நானும் தூங்குகின்றேன். அழகு மிக்க அவன் முகத்தின் உதடுகளில் வைத்து ஊதப்படும் சங்கின் ஒலியும், சார்ங்கம் என்னும் வில்லின் நாணோசையும் என் காதில் எப்போது கேட்கும்?
தமிழ்க் கவிதைகளில் அழகின் உச்சியில் இருக்கும் கவிதைகளில் இதுவும் ஒன்று.
“தூங்குகின்ற பொன் மாலைகள்”! சரச்கொன்றை மலர் அடுக்குகளை மரத்தில் பார்த்தவர்களுக்கு ஆண்டாளின் இந்த உருவகம் எவ்வளவு பொருத்தமானது என்பது தெரியும்.
இப்பாடலைப் படிக்கும் போதெல்லாம் என் தந்தையின் நினைவு வருகிறது. அவர் ஆண்டாள் ஏன் சரக்கொன்றை போலத் தூங்குகிறேன் என்று சொன்னார் என்பதற்கு அளித்த விளக்கம் என்னை அன்று மயிர்க் கூச்செரிய வைத்தது.
சரக்கொன்றை சிவனுக்கு உகந்த மலர். அதனால் திருமாலிருஞ்சோலையில் இருக்கும் வைணவர்கள் அதன் பக்கத்தில் போக மாட்டார்கள். சிவ பக்தர்கள் திருமாலிருஞ்சோலைக்கு வர மாட்டார்கள். அதனால் சரக்கொன்றை பறிக்கப்படாமலே தூங்குகிறது.
‘நான் இறைவனையே கணவனாக வரித்து விட்டேன் என்பது ஊர் முழுவதும் தெரியும். அதனால் எந்த மனிதனும் என் பக்கம் வரமாட்டான். நான் மனிதகுலத்தில் பிறந்து விட்டாய் என்பதனாலேயே நீ என் அருகில் வர மறுக்கிறாய். நானும் தூங்கிக் கொண்டிருக்கிறேன்’ என்று ஆண்டாள் சொல்கிறார்
தூங்கிக் கொண்டிருக்கிறாரா? அவருக்கு ஏது தூக்கம்? இங்கு தூக்கம் என்பது செயலற்றுக் காத்திருப்பதைக் குறிக்கிறது. அவன் வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவனுடன் இருப்பவை செய்யும் ஒலிகளைக் கேட்டாலே போதும் என்கிறார் ஆண்டாள்.
சந்தொடு காரகிலும் சுமந்து தடங்கள் பொருது
வந்திழியும் சிலம்பாறுடை மாலிருஞ்சோலை நின்ற
சுந்தரனை சுரும்பார் குழல் கோதை தொகுத்துரைத்த
செந்தமிழ் பத்தும் வல்லார் திருமால் அடி சேர்வர்களே
சந்தனக் கட்டைகளையும் கரிய அகில் கட்டைகளையும் அடித்துக்கொண்டு கரைகளை மீறிப் பெருகுகின்ற சிலம்பாறு ஓடும் திருமாலிருஞ்சோலையில் உறையும் அழகனை வண்டுகள் மொய்க்கும் பூக்கள் சூடிய கூந்தலை உடைய ஆண்டாள் செந்தமிழில் பாடிய இப்பத்துப் பாசுரங்களையும் படித்து அறியும் திறமை படைத்தவர்கள் திருமாலின் அடிகளை நிச்சயம் அடைவார்கள்.