எட்டாம் திருமொழி – 2

மின்னாகத்து எழுகின்ற மேகங்காள்! வேங்கடத்துத்
தன்னாகத் திருமங்கை தங்கிய சீர் மார்வர்க்கு
என்னாகத்து இளங்கொங்கை விரும்பித் தாம் நாள் தோறும்
பொன்னாகம் புல்குதற்கு என் புரிவுடைமை செப்புமினே

மின்னல்களை தேகங்களில் கொண்டு வலம் வருகின்ற மேகங்களே! என் தேகம் கொண்டிருக்கிருக்கும் இள மார்பகங்கள் தன் தேகத்தில் திருமகளைக் கொண்டிருக்கும் அந்த அழகிய மார்பனை விரும்பி அணைக்கவேண்டும் என்று தினமும் எனக்கு ஆசை இருப்பதை. வேங்கடத்தின் உறையும் கரும்பொன் போன்ற தேகம் உடையவனான இறைவனுக்குச் சொல்லுங்கள்.

ஆண்டாளின் மிக, மிக அழகிய பாடல்களில் ஒன்று.

மேகங்களுக்கு உயிரளிப்பதை பல கவிஞர்கள் செய்திருக்கிறார்கள். ஷெல்லியும் அவர்களில் ஒருவர். மேகமிருந்தால் மின்னலும் இருக்கும்.

அவருடைய ‘The Cloud’.

Lightning my pilot sits;

In a cavern under is fettered the thunder,

It struggles and howls at fits;

Over earth and ocean, with gentle motion,

This pilot is guiding me,

Lured by the love of the genii that move

In the depths of the purple sea;

இக்கவிதையில் மின்னல் மேகத்தின் வழிகாட்டி மட்டுமன்று. கடலில் ஒளிந்திருக்கும் தன் காதலியைத் தேடி அலையும் காதலன்.

மேகங்களில் மின்னல்கள் பொதிந்திருக்கின்றன என்று சொல்வது நம் கவிதை மரபு. மேகங்களின் வண்ணம் இறைவனின் வண்ணம். ‘நீலமுண்ட மின்னென்ன மேனிப் பெருமான்’ என்று நம்மாழ்வாரின் திருவிருத்தம் சொல்கிறது. இம்மரபை கையில் எடுத்துக் கொண்டு பிரமிக்க வைக்கும் கவிதை ஒன்றைப் படைக்கிறாள் ஆண்டாள்.

நான்கு ஆகங்கள். தேகங்கள். உடல்கள்.

மின்னாகம் மேகங்களின் தேகம். தன்னாகமும் பொன்னாகமும் இறைவனின் தேகம். என்னாகம் என்பது ஆண்டாளின் தேகம். என்னாகமும் அவனாகமும் சேர எனக்கு வெளிச்சத்தைக் காட்டுங்கள், அதை உடலில் மறைத்துக் கொண்டு திரிவதில் என்ன பயன் என்கிறார் ஆண்டாள்.

அவன் மார்பிலேயே திருமகள் இருக்கிறார் இருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். அவருக்கும் என் இளமார்பகங்கள் அவன் மார்பை அழுத்தித் தழுவுவது விருப்பமாக இருக்கும். இளமையின் சூட்டை அவரும் விரும்புவார்.

‘நாள் தோறும்’ என்பதை ‘அவனை என்றும் ஒரு நாள் கூடத் தவறாமல் அணைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது’ எனப் பொருள்படுத்தலாம். அல்லது ‘அவனை அணைத்துக் கொள்ள வேண்டும் என்று தினமும் ஆசைப்படுகிறேன்’ என்றும் பொருள்படுத்தலாம்.

நாகம் என்றால் வானம் என்றும் ஒரு பொருள் உண்டு. ‘மின்னல்கள் தோன்றும் ஆகாயத்தில் இருக்கும் மேகங்களே’ என்றும் நாம் எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறு செய்தால் கவிதையின் மின்னும் அழகு ஒளியிழந்து விடுகிறது என்று எனக்குத் தோன்றுகிறது.

பெரியவாச்சான் பிள்ளை சொல்கிறார்: ‘சொற்கேளாப் ப்ரஜைகளைப் போலேயாய்த்து முலைகளின்படி’ அதாவது ‘நான் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் என் இளமுலைகளைக் கட்டுப்படுத்த முடியாது. அவை தாய் சொல்லைக் கேட்காத சிறு பிள்ளைகளைப் போன்றவை’ என்கிறாராம் ஆண்டாள்.

வான் கொண்டு கிளர்ந்து எழுந்த மாமுகில்காள்! வேங்கடத்துத்
தேன் கொண்ட மலர் சிதறத் திரண்டேறிப் பொழிவீர்காள்!
ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை உடல் இடந்தான்
தான் கொண்ட சரிவளைகள் தருமாகில் சாற்றூமினே

வானையே தங்களதாக்கிக் கொண்டு வீறு பெற்றெழும் மேகங்களே! வேங்கடத்தில் தேன் கொண்டு பூக்கள் சிதறிப் போக, திரண்டு, அடர்ந்து பொழியுங்கள்! சதைக் துண்டுகள் இடுக்குகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் கூர்மையான நகங்களாலே இரணியனின் உடலைப் பிளந்தெறிந்த அந்தச் சிங்கத்திற்கு (யசோதையின் இளஞ்சிங்கம்) என்னிடத்திலிருந்து எடுத்துக்கொண்ட கைவளைகளைத் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் என் நிலைமையை அவனுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

மேகங்கள் தூய்மையான பூக்களைக் சிதறச் செய்வது போல கண்ணன தன்னை அணைத்து தன் துயரைச் சிதறச் செய்ய வேண்டும் என்று ஆண்டாள் சொல்கிறான். இங்கு புத்தம் புதிய இளம் பெண் ஒருவர் புலால் நாற்றம் அடிக்கும் சிங்கப்பிரானின் நகங்கள் தன்னையும் கீற வேண்டும் என விரும்புகிறார் என்பது தெளிவு. “தேன்மயங்கு பாலினும் இனிய அவர்காட் உவலைக் கூவல் கீழ மானுண்டு எஞ்சிய கலுழி நீரே” என்ற ஐங்குறுநூற்றுப் பாடலின் தலைவி ‘எனக்கு தேன் கலந்த பாலை விட அவர் இருக்கும் ஊரின் மிருகங்கள் கலக்கிய அழுக்குத் தண்ணீர்தான் பிடித்திருக்கிறது’ என்று சொல்வதை ஆண்டாளின் கூற்று ஒத்திருக்கிறது.

உரையாசிரியர்கள் வேறு விதமாகப் பொருள் கொள்கிறார்கள்: பூக்களைப் போன்ற அழகிய படைப்புகளைச் சிதறச் செய்து என்ன பயன்? எனக்கு தூது போனால் பயனுண்டு என்று அவர் மேகங்களைக் கேட்கிறாராம். இரணியனைக் கொன்ற சிங்கப் பிரான் போல வர வேண்டாம் என் நிலைமையைப் புரிந்து கொள்ளும் நாயகனாக வந்து என் கைவளைகளைத் திருப்பிக் கொடுத்து என்னைக் கூடச் சொல்லுங்கள் என்கிறாராம்.

சலங்கொண்டு கிளர்ந்து எழுந்த தண் முகில்காள்! மாவலியை
நிலங்கொண்டான் வேங்கடத்தே நிரந்தேறிப் பொழிவீர்காள்!
உலங்குண்ட விளங்கனி போல் உள் மெலியப் புகுந்து என்னை
நலங்கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே

தண்மையான நீரைக் (கடலில் இருந்து) கொண்டு ஆகாசத்தில் பொழிவேன் என்ற வீரியத்தோடு நிற்கின்ற மேகங்களே! மகாபலியிடமிருந்து பூமியைப் பெற்றுக்கொண்டவன் உறையும் வேங்கடத்தில் பரவி, உயர்ந்து பொழியுங்கள். நான் பூச்சி அரித்த விளாம்பழம்போல் உள்ளுக்குள் மெலிந்து கொண்டிருக்கின்றேன். இதற்கு காரணம் என் உள்ளே புகுந்து என்னைக் கூடி பின்னால் தவிக்க வைத்துச் சென்ற நாராயணன். எனக்கு துயர் தரும் பிரிவு நோயின் தாக்கத்தை அவனுக்கு அறிவியுங்கள்.

உலங்கு என்றால் கொசு. பெரிய கொசு. ‘கலுழனுலங்கின் மேல் உருத்தென்ன’ என்பது கம்பனின் வாக்கு. அதாவது கருடனை ஒரு கொசுவைக் கொல்ல அனுப்பலாமா? இந்த வானரத்தைக் கொல்ல பெரிய வீரர்களின் தேவையில்லை எங்களை அனுப்புங்கள்’ என்று ஐந்து போர்த்தலைவர்கள் ராவணனிடம் சொல்கிறார்கள். இங்கு உலங்கு என்றால் பூச்சி என்று பொருள் கொள்ளலாம். விளாம்பழம் என்பது ஆண்டாளின் இள மார்பகங்களையும் குறிக்கலாம். அவை செல்லரித்துப் போகும் அபாயம் இருக்கிறது என்று சொல்கிறார் என்றும் பொருள் கொள்ளலாம்.

சென்ற பாடலில் தன்னைத் தூய்மையாகவும் அவனை புலால் நாற்றம் வீசுபவனாகவும் அறிவித்தவர் இப்பாடலில் நான் செல்லரித்துப் போனவள், அவன் நலங்கள் அனைத்தையும் பறித்துக் கொண்ட தூயவனாக இருக்கிறான் என்று சொல்கிறார்.

சங்கமா கடல் கடைந்தான் தண் முகில்காள்! வேங்கடத்துச்
செங்கண்மால் சேவடிக் கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்து ஒரு நாள்
தங்குமேல் என் ஆவி தங்கும் என்று உரையீரே

சங்குகளைக் கொண்ட கடலைக் கடைந்த பெருமானின் வேங்கடத்தின் மேல் இருக்கும் மேகங்களே! சிவந்த கண்களை உடைய கண்ணனின் சிவந்த அடிகளில் வீழ்ந்து நான் செய்யும் விண்ணப்பம் இது: எனது மார்பகங்கள் மீது இருக்கும் குங்குமக் குழம்பு நன்றாக அழிந்துபோகும் வண்ணம் ஒரே ஒரு நாள் அவன் என்னுள் புகுந்து வந்து என்னைக் கூடினால் என் உயிர் என்னுடன் தங்கும். (வரவில்லையென்றால் உயிர் இருக்காது)” இதை அவனிடம் சொல்லுங்கள்!

சென்ற பாட்டில் செல்லரித்துப் போன தேகம் என்று சொன்னவவர் இன்று குங்குமம் பூசிய என் மார்பங்கள் அவன் இறுக்கித் தழுவுவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறன என்கிறார்!

ஒரு நாள் தங்கினால் போதுமா?

போதாது என்கிறார்கள் உரையாசிரியர்கள்.

‘போகத்திற்குப் போராது. ப்ராணரக்ஷணத்திற்குப் போரும்’ – பெரியவாச்சான் பிள்ளை வாக்கு. அதாவது ஒரு நாள் வந்தால் அவள் உயிர் மிஞ்சும். ஆனால் அவளுடைய ஆசை இறப்பில்லாதது. மறுநாள் பிரிந்தால் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விடும்.

கார் காலத்து எழுகின்ற கார் முகில்காள்! வேங்கடத்துப்
போர் காலத்து எழுந்தருளிப் பொருதவனார் பேர் சொல்லி
நீர் காலத்து எருக்கில் அம் பழவிலை போல் வீழ்வேனை
வார் காலத்து ஒரு நாள் தம் வாசகம் தந்தருளாரே

மழைக்காலத்தில் வேங்கடத்தில் எழுகின்ற கரிய மேகங்களே! போர் செய்ய வேண்டிய காலத்தில் போர் செய்து வென்றவனின் பெயர்களைச் சொல்லி மழைக்காலத்தில் அழகிய எருக்கம் இலைகள் இற்று விழுவதுபோல் விழுகிற எனக்கு நீண்டு முடிவே இல்லாமல் செல்லப் போகும் என் வருங்காலத்தில் ஒரு நாளாவது தன் ஒரு சொல்லையாவது அருளுவானா என்று கேளுங்கள்.

வார்காலம் என்பதை நீண்டு செல்லும் காலம் என்று உரையாசிரியர்கள் பொருள் கொள்கிறார்கள். அதுதான் சரி என்று தோன்றுகிறது. “வார்தல் போதல் ஒழுகல் மூன்றும், நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள” – தொல்காப்பியம்.

என்றும் அவனோடு இருக்க வேண்டும் என்று சொன்னவர், ஒரு நாளாவது வரச்சொல்லுங்கள் என்ற நிலைக்கு வந்து அதனினுமிருந்து இறங்கி ஒரு வார்த்தையாவது சொல்லச் சொல்லுங்கள் என்கிறார்.

தன்னை எருக்கிலையாக உருவகித்துக் கொள்கிறார். அதவாது கோடையில் வாடி உலர்ந்து இருக்கும் அது மழைத்துளிகள் பட்டால் இற்று விழுந்து விடுமாம். Calotropis Gigantea என்னும் எருக்கம் செடி எப்போதும் பச்சையாக இருக்கக் கூடியது. அதுவே வாட வேண்டும் என்றால் கோடையின் காய்தல் மிகவும் உக்கிரமாக இருக்க வேண்டும். பிரிவின் உக்கிரத்தைப் போல. இவர் பழுத்த இலையல்ல. பச்சையாகவே உதிரப்போகும் இலை.

மத யானை போல் எழுந்த மாமுகில்காள்! வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள்! பாம்பணையான் வார்த்தை என்னே!
கதி என்றும் தான் ஆவான் கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே

மதயானைகளைப் போலப் பிளிறிக் கொண்டு எழுந்த பெருமேகங்களே! வேங்கடத்தையே இருப்பிடமாகக் கொண்டவர்களே! அப்ப்பாம்பின் மேல் படுத்திருப்பவன் என்ன சொன்னான்?இப்படியே அவன் என்னிடம் பாராமுகமாக இருந்தான் என்றால் இவ்வையகத்தில் உள்ளவர்கள் ‘காத்தல் கடவுள் என்ற பெயரை உடைய அவன் தன் உண்மையான சுபாவத்தை மறந்து ஒரு கொடி போன்ற பெண்ணை (எந்த இரக்கமும் இன்றி) கொன்றான்’ என்று பழிப்பார்கள்.

மதயானைகளைப் போல முழக்கமிட்டுத் திரிந்து கொண்டிருந்த மேகங்கள் வேங்கடத்தைப் பார்த்தவுடன் வைகுண்டத்தில் நித்தியசூரிகள் செய்வதைப் போல வேங்கடவனுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று தங்கி விட்ட்டனவாம்.

தன்னைக் கொடி என்று ஆண்டாள் சொல்லிக் கொள்கிறாள். ஒரு கொடியை மரத்தில் படர விடாமல் தரையில் விட்டால் அது எத்தகைய கொடிய செயலோ அதே போன்றது பெருமரமாகிய இறைவன் மீது படர வேண்டிய அவரை மனிதன் என்னும் கட்டாம்தரையில் படரவிடுவது.

நாகத்தின் அணையானை நன்னுதலாள் நயந்துரை செய்
மேகத்தை வேங்கடக்கோன் விடு தூதில் விண்ணப்பம்
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை தமிழ்
ஆகத்து வைத்துரைப்பார் அவரடியார் ஆகுவரே

பாம்புப் படுக்கையில் துயில் கொள்ளும் வேங்கடவன் மீது காதல் கொண்டு என்றும் இறைவனுக்குத் தொண்டு செய்யும் இன்பத்தை அனுபவிக்கும் வில்லிபுத்தூர் பட்டர் பிரானின் புதல்வியான, அழகிய நெற்றியை உடைய ஆண்டாள் மேகங்களை அவனிடம் தூது விடுவதையும் அவனிடம் வேண்டுகோள்களை வைப்பதையும் குறித்து எழுதியுள்ள பாடல்களை தங்கள் மனங்களில் இருத்திக் கொள்பவர்கள் இறைவனுக்கு என்னென்றும் தொண்டு செய்யும் இன்பத்தைப் பெறுவார்கள்.

இங்கு ஆகம் என்பது அகம். மனம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s