நான்காம் திருமொழி -2

அற்றவன் மருதம் முறிய நடை
கற்றவன் கஞ்சனை வஞ்சனையினால்
செற்றவன் திகழும் மதுரைப் பதி
கொற்றவன் வரில் கூடிடு கூடலே!

கூடலே! எனக்காகவே பிறந்தவன் அவன். அவன் தவழ்ந்து தளர் நடை பயிலும் போது இரு மரங்களுக்கிடையே சென்று அம்மரங்களின் வடிவாக வந்த, கம்சனால் அனுப்பப்பட்ட அரக்கர்களை அழித்தவன். மாமன் கம்சனின் வஞ்சனையை வஞ்சனையாலேயே அழித்தவன். சுடர் விடும் வடமதுரை நகரத்தின் அரசன். அந்தக் கண்ணன் என்னிடம் வர வேண்டும் என்று நினைத்தால் அதை நடத்திக்கொடு.

இங்கு மரத்தில் இருந்தவர் நாரதரால் சாபமிடப்பட்ட குபேரனின் மைந்தர்கள் என்றும் சொல்லப்படுகிறது. தன்னைக் கொல்ல நினைத்து விழாவிற்கு அழைத்த கம்சனைக் கண்ணன் அவன் மஞ்சத்தில் ஏறி அவனைக் கீழே தள்ளிக் கொல்கிறான் என்று பாகவத புராணம் சொல்கிறது. கம்சன் அதை எதிர்பார்த்திருக்க மாட்டான். வஞ்சத்திற்கு எதிர் வஞ்சம்.

அன்று இன்னாதன செய் சிசுபாலனும்
நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும்
வென்றி வேல் விறல் கஞ்சனும் வீழ முன்
கொன்றவன் வரில் கூடிடு கூடலே!

கூடலே! அன்றொரு நாள் தீச்செயல்களைச் செய்வதையே வாடிக்கையாகக் கொண்டிருந்த சிசுபாலனையும், குழந்தை கண்ணன் தவழ்ந்து சென்று கொண்டிருந்த வழியில் நின்று கொண்டிருந்த நெடிய இரண்டு மருதமரங்களையும் ஏழு எருதுகளையும் கொக்கு வடிவில் வந்த பகாசுரனையும் வென்றவன் அவன். வெற்றியைத் தவிர வேறு எதையும் அறியாத வேல் மற்றும் வெல்ல முடியாப் பலத்தையும் கொண்ட கம்சனை தரையில் வீழ்த்திக் கொன்றவன் அவன். அந்தக் கண்ணன் என்னிடம் வர வேண்டும் என்று நினைத்தால் அதை நீ நடத்திக் கொடு.

இதில் கண்ணன் நப்பின்னையை அடைவதற்காக ஏழு எருதுகளை அடக்கிய கதையைப் பற்றிக் குறிப்பு இருக்கிறது ஏறு தழுவதல் என்பது தமிழர் மரபு. எனவே கண்ணனை இங்கு ஆண்டாள் தமிழனாகவே பார்க்கிறார். (அரிஷ்டாசுரன் என்ற அரக்கன் எருது வடிவில் வந்து கண்ணனைக் கொல்லப் பார்த்தான். அவனைக் கண்ணன் கொம்பை ஒடித்துக் கொல்லும் கதையைச் சொல்வதாகவும் கொள்ளலாம்). நப்பின்னையை அடைவதற்காக ஏழு எருதுகளை அடக்கினான். ஆனால் அவன் செய்த எல்லா சாகசங்களும் என்னை அடைவதற்காக. நான் அவன் மீது காமுறுவதற்காக என்று ஆண்டாள் நினைக்கிறார்.

ஆவல் அன்புடையார் தம் மனத்தன்றி
மேவலன் விரை சூழ் துவராபதிக்
காவலன் கன்று மேய்த்து விளையாடும்
கோவலன் வரில் கூடிடு கூடலே!

கூடலே! அவனை அடைய வேண்டும் என்ற ஆவலையும் அவன் மீது மாறாத அன்பையும் கொண்டவர்கள் மனங்களில் அன்றி வேறு எங்கும் உறைய விரும்பாதவன் அவன். மணம் சூழ்ந்த துவாரகையின் காவலனும் கன்றுகளை மேய்த்து விளையாடும் கோவலனும் அவன். அந்தக் கண்ணன் என்னிடம் வர நினைத்தால் அதை நீ நடத்திக்கொடு.

எல்லோருக்கும் எளியவனாக இருக்க கூடிய, யார் நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் அவன் நினைத்து விட்டால் வரக்கூடிய இறைவன் அவன் மீது ஆவலும் அன்பும் கொண்டவர்கள் உள்ளங்களில் மட்டும்தான் உறைவானா? இல்லை. ஆனால் அவற்றில் உறைவதுதான் அவனுக்கு அதிக விருப்பமாக இருக்கும் என்று ஆண்டாள் நினைக்கிறாள். என் தந்தை பெரியாழ்வார். நான் ஆழ்வார்கள் அனைவருக்கும் புதல்வி. எங்கள் கூட்டத்தை விட இறைவனிடம் ஆவலும் அன்பும் கொண்டவர்கள் யார்? எனவே அவன் இன்று என் உள்ளத்தில் வந்து இருக்கத்தான் விரும்புவான். காவலன் என்றால் உலகைக் காப்பவனான விஷ்ணுவின் அவதாரம். கோவலன் என்றால் உலகையே ஆளும் திறனுடைய மல்லாண்ட திண்தோள் மணிவண்ணன்.

கொண்ட கோலக் குறள் உருவாய்ச் சென்று
பண்டு மாவலி தன் பெரு வேள்வியில்
அண்டமும் நிலனும் அடி ஒன்றினால்
கொண்டவன் வரில் கூடிடு கூடலே!

கூடலே! பண்டைய காலத்தில் பொம்மைக்கு அலங்கரித்தது போல் அழகிய் ஆபரணங்களை அணிந்து கொண்டு வாமனனாக மஹாபலி சக்கரவர்த்தியின் யாகசாலைக்கு சென்று ஒரே அடியினால் மண்ணையும் விண்ணையும் அளந்த தனதாக்கிக் கொண்ட பெருமான் அவன் அந்தக் கண்ணன் என்னிடம் வர நினைப்பான் என்றால் அதை நீ நடத்திக்கொடு.

உலகை அளந்தது போல் அவன் திருவடியால் எல்லோடும் தீண்டப்படும் பேறு பெற்றார்கள் என்பதை ஆண்டாள் சொல்கிறார். என்னைப் பார்க்க அவன் நிச்சயம் தனியாக வருவான்.

பழகு நான்மறையின் பொருளாய் மதம்
ஒழுகு வாரணம் உய்ய அளித்த எம்
அழகனார் அணி ஆய்ச்சியர் சிந்தையுள்
குழகனார் வரில் கூடிடு கூடலே!

கூடலே! வேதம் நான்கிலும் மெய்ப்பொருளாக நிற்பவன் அவன். மதநீர் ஒழுக நின்ற கஜேந்திரனை குரலைக் கேட்டு ஓடி வந்து அதற்கு உய்வளித்தவன் அவன். எங்கள் உள்ளத்தை கவர்ந்த அழகன். , அழகிய ஆய்க் குலப் பெண்கள் எண்ணங்களில் குடிகொண்டிருக்கும் இளைஞன் அவன். அந்தக் கண்ணன் என்னிடம் வர நினைப்பான் என்றால் அதை நீ நடத்திக்கொடு.

குழகன் என்றால் பிறருக்கு இணங்குபவன் என்றும் பொருள் கொள்ளலாம். எளிதாகப் பழகக் கூடியவன். சௌலப்யன்.

ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை
நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்
கூடலைக் குழற்கோதை முன் கூறிய
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே

அவனோடு ஊடல் செய்தல். அவன் அருகில் சென்று அவன் செய்த குற்றங்களை உணர வைத்தல், உணர்ந்த பின் அவனோடு சேர்ந்தல் ஆகிய செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நீடித்த நிறைபுகழ் அடையப் பெற்ற ஆய்ச்சியர் கூடலிழைத்தனர். அதைப் பற்றி ,அழகிய கூந்தலை உடைய ஆண்டாள் இந்தப் பத்து பாசுரங்களையும் பாடினாள் அவற்றைச் சொல்லும் திறன் படைத்தவர்களுக்கு பாவத்தின் நிழல் கூடப் படாது. அவர்கள் என்றும் எம்பெருமானின் திருவடிகளில் பிறப்பற்று இருப்பார்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s