ஆண்டாளின் நாச்சியார் திருமொழியும் தனித்துவம் கொண்டது – திருப்பாவையைப் போலவே. பதினான்கு பத்துகள். 143 பாடல்கள். வைணவப் பெரியவர்கள் ஆண்டாள் திருப்பாவையில் விட்ட இடத்திலிருந்து துவங்குகிறார் என்கிறார்கள். ஆனால் நாம் இங்கு காணும் ஆண்டாள் வேறொரு ஆண்டாள். குழந்தைப் பருவத்திலிருந்து இளம் பெண்ணாக மாறியவர். திருப்பாவையில் அவளுக்கு தோழியர்கள் தேவையாக இருந்தார்கள். ஆனால் இப்போது அந்தத் தேவை அதிகம் இல்லை. தன்னைப் பெரும்பாலும் தனியளாகவே உணர்கிறார். கூடலை விரும்பும் பெண்ணாக. மார்பகங்கள் பெருத்து விட்டன என்பதை அறிவிக்கத் தயங்கவில்லை. ஆனாலும் அவள் பாடுவது இறைவனைத் தேடும் எல்லோருக்காகவும். இதுதான் தமிழ் மரபு. ஆண்டாளுக்கு முன் தோன்றிய காரைக்கால் அம்மையார் தன் அற்புதத் திருவந்தாதியில் சொல்வதைக் கேளுங்கள்:
யானே தவமுடையேன் என்நெஞ்சே நன்னெஞ்சம்
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் – யானேயக்
கைம்மா உரிபோர்த்த கண்ணுதலாண் வெண்ணீற்ற
சிவனை அடைந்ததால் நான் மட்டும் தவமுடேயேன் ஆனேன், என் நெஞ்சு மட்டும் நன்னெஞ்சு, எனக்கு மட்டும் பிறப்பிலிருந்து விடுதலை கிடைத்தது என்று பொருள் கொள்ளக் கூடாது. இங்கு யானேயில் வரும் ஏகாரம் நிச்சயத்தைக் குறிக்கிறது. அம்மையார் தான் மட்டும் தனி என்ற எண்ணத்தோடு பாடவில்லை. சிவபெருமானுக்கு ஆளாகி அகந்தை முழுவதும் அகன்ற பின்னர் பாடுகிறார். நான் மட்டும் தனியல்ல, எண்ணற்ற சிவபக்தர்கள் என்னைப் போன்று இருக்கிறார்கள் என்ற பொருள் பாடலில் மறைந்து நிற்கிறது.
பின்னால் அவரே பாடுகிறார்:
காண்பார்க்கும் காணலாம் தன்மையனே கைதொழுது
காண்பார்க்கும் காணலாம் காதலால் – காண்பார்க்குச்
சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக்கு
ஆதியாய் நின்ற அரன்
காதலோடு காண்பவர்களுக்கெலாம் சோதியாய் மனதில் தோன்றும் எளியவன் என்று அவரே கூறுகிறார்.
அத்தகைய எளியவன் சில தருணங்களில் அரியவனாகவும் மாறுகிறான். இங்கு ஆண்டாளுக்கு அரியவன். திருப்பாவையின் ‘சிற்றம் சிறுகாலே’ பாடலில் ‘இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம்” என்று பல பிறவிகள் பிறந்து உனக்குத் தொண்டு செய்வேன் என்று சொன்னவர் இங்கு உன்னோடு இரண்டறக் கலக்க வேண்டும் என்கிறார்.
அண்ணங்கராச்சாரியர் – நாயக: என்ற வடசொல் நாயன் என்று தமிழில் மறுவி அதற்குப் பெண்பாலாக நாய்ச்சியார் -நாச்சியார் என்று மாறியது என்கிறார். ஆய்ச்சி ஆச்சியாகவும் பேய்ச்சி பேச்சியாகவும் மாறியது போல. அவர் ஏற்கனவே நாயகிதான். வைணவ மரபின்படி அவர் பூமித்தாயின் அம்சம். தாய் எப்போது தகப்பனிடமிருந்து பிரிந்தாள்? ஸ்ரீதேவி பிரிந்து சீதையாக, சிறைகாக்கும் செல்வியாக ராமனையே நினைத்துக் கொண்டு காலம் தள்ளவில்லையா? அதே பிரிவின் வலியைத் தானும் உணர வேண்டும் என்று இந்தத் தாயும் நினைத்திருக்கலாம். குருபரம்பரைக் கதைகளின்படி ஆண்டாள் அரங்கனின் கர்ப்பக்கிருகத்தில் நுழைந்து பள்ளிகொண்ட பெருமாளைத் தழுவி மறைந்தவர். பிரிவு என்பதை பூமித்தாயார் உணர்ந்து எழுதியிருப்பதுதான் நாச்சியார் திருமொழி என்றும் பக்தர்கள் கருதுகிறார்கள்.
காலத்தையே தன்னுள் இருத்திக் கொண்ட உலக நாயகிக்கு பிரிவு ஒரு பொருட்டாகுமா?
சங்க இலக்கியத்தின் தலைவிக்கு ஒரு இரவே பெரிதாகத் தோன்றுகிறது. “எல்லை கழிய, முல்லை மலர, கதிர்சினம் தணிந்த கையறுமாலை உயிர்வரம்பாக நீந்தினோம் ஆயின் எவன்கொல் தோழி, கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே” என்று குறுந்தொகை கூறுகிறது. ஆண்டாள் திருப்பாவையில் ‘எத்தனேயேனும் பிரிவாற்றகில்லையால்’ என்கிறாள். அதாவது நப்பின்னையால் ஒரு நொடி கூட கண்ணனைப் பிரிந்திருக்க முடியாதாம். நாச்சியார் திருமொழியின் ஆண்டாளுக்கும் அதே நிலைமைதான்.
பாடல்களுக்குள் செல்லும் முன்னால் சிலவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இறைவனைக் கணவனாக வரித்துக் கொள்வதைத்தான் பக்தர்களும் பக்தைகளும் காலம் காலமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். கிறித்துவ மதத்திலும் கன்யாஸ்திரீகளாக மாறுபவர்கள் கிறிஸ்துவின் மணமகள்களாக அறிவிக்கப்படுகிறார்கள் (Brides of Christ). புனிதபால் தன் கடிதம் ஒன்றில் கிறித்துவ மத அமைப்பே(Church) கிறிஸ்துவை மணம் புரிந்ததாகக் கருதபபட வேண்டும் என்கிறார். எனக்கு தெரிந்து இறைவனைப் பெண்ணாக நினைத்து அவளை அடைய வேண்டும் என்று யாரும் கருதியதாகத் தெரியவில்லை. பணிந்து போவது, எதிர்வினை செய்யாதது போன்றவை பெண்மைக்கு அடையாளங்களாகக் கருதுவதால் எல்லோரும் பெண்ணாகத்தான் ஆண்டவனை அணுகுகிறார்கள்.
ஆனால் பெண்ணாகப் பிறந்த கவிஞர்களும் தங்கள் வெளிப்படையான பெண் அடையாளங்களைத் துறந்து விட்டுதான் இறைவனை அணுகுகிறார்கள். ஆடையே வேண்டாம் என்று அலைந்த மகாதேவி அக்கா கூட தன் கவிதைகளில் ஆண்டாளைப் போல தன் இளைமையைப் பற்றிக் கூறியதாகத் தெரியவில்லை. ஆண்டாள் ஒருத்திதான் தன் பெண்மையை இவ்வளவு அழகாக, எந்த ஒளிவும் மறைவும் இன்றிப் பறை சாற்றுகிறார். லஜ்ஜை – வெட்கம் – என்பது மிகைப்படுத்தப்பட்டது என்பதை எந்தத் தயக்கமும் இன்றி அறிவிக்கிறார்.
ஆண்டாளின் நாச்சியார் திருமொழி ஒரு சமயப்பாடற் கொத்தாக, பிரபந்தத்திற்குள் ஏற்றுக் கொள்ளப்பட்டது வியப்புதான்.
நாம் வைணவப் பெரியவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் கவனிப்போம். ஆண்டாளின் அற்புத கவிதைகளையும் அனுபவிப்போம்.
‘