ஆண்டாள் ஓர் ஆழ்வாரா?
ஆண்டாளை ஆழ்வார்கள் பட்டியலில் சேர்ப்பாரும் இருக்கின்றனர்; சேர்க்காதவரும் இருக்கின்றனர். நம்மாழ்வார் ஆழ்வார்களின் முதல்வராகவும் (குலபதி) ஆண்டாள் தாயாராகவும் வைணவர்களால் மதிக்கப்படுகிறார்கள். ஆண்டாள் பூமாதேவியாகவே கருதப்படுவதால் அவர் ஆழ்வார்களுக்கும் மேலான இடத்தில்தான் இருக்கிறார் என்று சொல்பவரும் உளர். ஆண்டாளையே மையமாக வைத்துப் பாடல்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. உதாரணமாக ஆழ்வார்திருநகரியிலிருந்து வெளி வந்த கோதை நாச்சியார் தாலாட்டு ஆண்டாளை
‘எந்தைதந்தை என்று இயம்பும் பெரியாழ்வார்க்கு
மைந்தர் விடாய் தீர்த்த மாதே நீ தாலேலோ
பொய்கை முதலாழ்வார்க்கும் பூமகளாய் வந்துதித்த
மைவிழி சோதி மரகதமே தாலேலோ
என்று புகழ்கிறது.
திருப்பாவை உறக்கத்திலிருந்து எழுப்பும் பாடல்கள் என்றால் இவை ஆண்டாளை மீண்டும் உறங்கச் சொல்லும் பாடல்கள்!
அர்ச்சனா வெங்கடேசன் தன்னுடைய The Secret Garland என்ற புத்தகத்தில் (திருப்பாவை நாச்சியார் திருமொழி ஆங்கில மொழிபெயர்ப்பு) ஸ்ரீரங்கம் அத்யயன உத்சவத்தில் ஆயிரம் கால் மண்டபத்தில் பெருமாளையும் தாயார்களையும் எழுந்தருளப் பண்ணிய பிறகு, ஆழ்வார்களும் சம்பிராதாய முறைப்படி அங்கு கொண்டுவரப்படுகிறார்கள் – ஆண்டாள் நாச்சியாரைத் தவிர – என்று கூறுகிறார். ஆனால் திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் பாடப்படுகிறது என்பதையும் சொல்கிறார்.
இனி பாடல்.
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!
இவள் வீட்டு வாசலில் நின்று கொண்டு புழக்கடையில் உள்ள சிறிய குளத்தை தோழியரால் எவ்வாறு பார்க்க முடிகின்றது? தினமும் நடப்பதைக் கருத்தில் கொண்டுதான் கூறியிருக்க வேண்டும். இது தாமரை மலரும் நேரம். ஆம்பல் இதழ்களை மூடும் நேரம். கதிரவனின் வெப்பத்தை மலர்களே உணரத் துவங்கி விட்டன. நாங்களும் உணர்கிறோம். உள்ளே இருப்பதால உனக்குச் சுடவில்லை என்கிறார்கள்.
செங்கல் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர் யார்? இவர்கள் பற்கள் பளீரிடுகின்றன. உடுப்பு காவி நிறம். இவர்கள் சிவபக்தர்கள் என்று ஒரு விளக்கம் இருக்கிறது. சைவர்களைக் கேலி செய்யும் வாய்ப்பாக இச்சொற்றொடரை வியாக்கியானம் பயன்படுத்திக் கொள்கிறது. சோம்பேறிகளான சிவபக்தர்களுக்குக் கூட இது காலை என்ற உணர்வு வந்து விட்டது என்று தோழியர் சொல்கிறார்களாம். ‘அளற்றுப் பொடியில் புடவைப் புரட்டி, இராவெல்லாம் வெற்றிலை தின்று கிடந்து, ப்ரம்ஹ்மசரியமும் விரக்தியுந்தோற்ற பல்லை விளக்கி ஸபையார், பெரியவர்கள் கோமுற்றவர்கள் தண்டம் கொள்வார் என்று தபோவேஷத்தையுடைய சிவத்வஜருங்கூடப் பயப்பட்டுணர்ந்து தங்கள் தேவதைகளை ஆராதிக்கும் காலமாப்த்து’ என்று ஆறாயிரப்படி சொல்கிறது. அளறு என்றால் காவிக்கல். இன்னொரு பாடம் அவர்கள் வைஷ்ணவ சந்யாசிகள்தாம் என்கிறது. சத்வநிஷ்டர்களான (வைஷ்ணவ) சந்யாசிகளைத்தான் சொல்கிறது என்று திருமலை நம்பி சொல்கிறார் என்றும் ஆறாயிரப்படி விவரிக்கிறது. அண்ணங்கராச்சாரியர் “வம்பற்ற அத்தவர்” என்று ஒரு பாடம் இருக்கிறது என்கிறார். அதாவது சம்சார வம்புகளை அற்ற தவத்தவர் என்ற பொருள்படும்படி. ‘சங்கிடுவான்’ என்றால் சங்கை ஊத என்றும் குச்சியிட (திறவுகோல் கொண்டு) கோவிலைத் திறக்க என்றும் பொருள் கொள்ளலாம்.
‘உங்கள்’, ‘தங்கள்’களுக்குப் பின்னால் ‘எங்கள்’ வருகிறது. ‘எங்களை நீ வந்து எழுப்புவேன் என்று வாய் பேசினாயே. இப்போது இப்படி உறங்குகிறாய். வெட்கமாக இல்லையா?’ என்கிறார்கள். ‘நாவுடையாய்’ என்பதற்கு ‘நீ வாய் ஓயாமல் கண்ணனைப் பற்றிப் பேசுவாய். அதற்காகக் காத்திருக்கிறோம். தாமதம் செய்யாதே’ என்று பொருள் கொள்ளலாம். அண்ணங்கராச்சாரியர் இங்கு கம்பனை மேற்கோள் காட்டி இராமன் அனுமனை ‘சொல்லின் செல்வன்’ என்று புகழ்ந்ததைக் கூறுகிறார்.
‘சங்கொடு சக்கரம் ஏந்திய தடக்கையன்’ என்பதற்கு திருமாலே கண்ணனாக வந்திருக்கிறான் என்று பொருள் கொள்ளலாம். அல்லது சங்கு சக்கர ரேகைகள் கொண்ட தடக்கைகளை உடையவன் என்று பொருள் கொள்ளலாம் பெரியாழ்வார் ‘நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலங்கள் வந்து காணீரே’ என்று கண்ணனின் குழந்தைப் பருவத்தைப் பாடுகிறார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். வியாக்கியானமும் இப்பாடலை மேற்கோள் காட்டுகிறது. திருவாழியும் பாஞ்சஜன்யமும் தந்த ஸ்பரிசத்தால் வந்த வளர்த்தியையுடைய திருக்கைகள் உடையவன் என்று அது சொல்கிறது.