ஆண்டாளின் திருப்பாவையில் பால் பெருகி ஓடுகின்றது. ஆனால் அவர் ஒருவர்தான் தமிழ்க் கவிஞர்களில் தமிழ் நாட்டின் பால்வளத்தைப் பேசினார் என்பது இல்லை. கம்பன் நாட்டுப் படலத்தில் ஆண்டாளை ஒத்து ‘ஈர நீர் படிந்து இன்னிலத்தே சில/கார்கள் என்ன வரும் கரு மேதிகள்/ஊரில் நின்ற கன்று உள்ளிட மென் முலை/தாரை கொள்ள தழைப்பன சாலியே’ என்று கன்றுகளை நினைத்து எருமைகள் பால் சொரிவதால் செந்நெற் பயிர்கள் தழைக்கின்றன என்று பாடுகிறார். அவரைப் போன்று திரிகூட ராசப்பக் கவிராயர் சூழ மேதி இலங்குந் துறையிற் சொரியும் பாலைப் பருகிய வாளை/கூழை வாசப் பலாவினிற் பாயக் கொழும்ப லாக்கனி/வாழையிற் சாயவாழை சாய்ந்தொரு/ தாழையில் தாக்கவருவிருந்துக் குபசரிப் பார்போல்/தாழை சோறிட வாழை குருத்திடும்சந்திர சூடர்தென் ஆரிய நாடே’ என்று குற்றாலத்தின் பால் வளத்தைப் பாடுகிறார். இவர்கள் இருவருக்கும் ஆண்டாளின் பாடல்தான் உந்துதலைக் கொடுத்திருக்கும் என்று நம்மால் ஊகிக்க முடியும்.
ஆண்டாள் முழுக்க முழுக்க ஆயர்களின் கவிஞர். முப்பது திருப்பாவைப் பாடல்களில் நெல்லைப்பற்றிய செய்தி ஒரே பாடலில்தான் வருகிறது. ஓங்கு பெருஞ்செந்நெல் என்று ஒரு கவிதையில் கூறியிருக்கிறாரே தவிர தமிழகத்தின் வயல் வளத்தைப் பற்றி திருப்பாவையில் அவர் பேசவில்லை. நான் ஆயர்குலப்பெண். என் குலப்பெருமையையும் வளத்தையும் மட்டும்தான் பேசுவேன் என்பதில் அவர் உறுதியாக இருந்திருக்கிறார்.
இனி பாடல்.
கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்!
மற்ற கவிஞர்களின் எருமைகள் வீட்டை விட்டு வெகுதூரத்தில் இருக்கின்றன. ஆண்டாளின் பாடலில் கன்றை விட்டு சிறிது நேரம் கூடப் பிரிய விரும்பாத எருமை தன் கொட்டிலை விட்டு நீங்கிய உடனேயே பால் சொரிய ஆரம்பித்து விட்டது. ஒரு எருமை சொரிந்த பாலிலேயே வீட்டு வாசல் சேறாகி விட்டது என்று சொல்லும் போது எங்கள் குலத்தின் வளத்தைப் பாரீர் என்று ஆண்டாள் நமக்கு அழைப்பு விடுகிறார்.
இப்பாடலைப் பற்றி பி.ஸ்ரீ எழுதும்போது, ‘தலையில் பனிவெள்ளமிட, கீழே பால் வெள்ளமிட, உள்ளத்தில் காதல் வெள்ளமிடத் தெப்பம் பற்றுவாரைப் போல இவளுடைய தலைவாயிற் மேற்கட்டையைப் பற்றி நின்று அவளைக் கூப்பிடுவது போல் ஓரு உணர்ச்சிச் சித்திரம் உருவாகிறது,’ என்கிறார்.
‘நற்செல்வன் தங்காய்’ என்று ஆண்டாள் பாடும் இந்நற்செல்வன் யார்? உரையாசிரியர்கள் ராமனை விட்டுப் பிரியாத இளையபெருமாளாகிய இலக்குவனைப் போல் கண்ணனை விட்டுப் பிரியாத ஒருவன் என்று சொல்கிறார்கள். அவன் கண்ணன் சேவையில் பால் கறக்க மறந்து விட்டதால் எருமை முலை கடுத்து, கன்றை நினைத்துக் குமுறிப் பால் சொரிகின்றன. முகில் மழையைச் சொரிய நினைத்தால் அதற்குக் கடலுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். ஆனால் முகில் போன்ற எருமைகளுக்கு அக்கட்டாயம் இல்லை. கன்றுகளைப் பற்றிய நினைவே அதற்கு ஊற்றாக ஆகிறது. கேட்காமலே சொரிகிறது. ‘அர்ஜுனன் கேட்டா கண்ணன் கீதையைப் பெருக வைத்தான்?’ என்கிறார்கள் உரையாசிரியர்கள். இறைவன் என்றும் நம் நினைவோடுதான் இருப்பான் என்றும் பொருள் கொள்ளலாம்.
‘தண்ணீரைப் போல இருக்கிற சக்ரவர்த்தித் திருமகனுக்கும் சினம் உண்டோ? என்ற கேள்விக்கு உரையாசிரியர்கள் பதில் தருகிறார்கள். ‘அவன் மீது அம்பு பட்ட போது சினப்படவில்லை. ஆனால் சிறிய திருவடியான அனுமன் மீது அம்புபட்ட போது சினப்பட்டான்,’ என்று சொல்கிறார்கள். அவன் மனத்திற்கு இனியவன். எதிரியான இராவணன் கூட ‘நாசம் வந்துற்றபோதும் நல்லதோர் பகையைப் பெற்றேன்’ என்று நினைக்கவில்லையா? ஆனால் பெண்ணாய் இருக்கும் ஆண்டாளுக்கு அவன் ஏகபத்த்தினி விரதன் என்பதால் மனத்திற்கு இனியவன். கண்ணனைப் போல பல பெண்களைத் தேடி அலையாதவன். ‘வேம்பேயாக வளர்த்தாள்’ என்று ஆண்டாளே நாச்சியார் திருமொழியில் சொல்லியபடி இவனுடைய செய்கைகள் பல சமயங்களில் வேப்பங்காயாக இருக்கின்றன, அப்படி யசோதை வளர்த்திருக்கிறாள். ஆனால் அவன் மன்னுபுகழ் கோசலை மணிவயிறு வாய்த்தவன். அவனை அவள் ஒழுங்காக வளர்த்திருப்பதால் அவன் மனத்திற்கு இனியவன்.
‘அனைத்தில்லத்தாரும் அறிந்தார்’ என்பதற்கு இருவகையாகப் பொருள் கொள்ளலாம் என்று அண்ணங்கராச்சாரியார் சொல்கிறார். ‘கண்ணனின் பெருமையை அனைத்து ஆச்சியரும் அறிய வேண்டுமென்று நீ நினைத்தபடியே அறிந்து உன் வாயிலில் காத்துக் கிடக்கிறார்கள். நீ உறக்கத்தில் இருக்கலாமா’என்று பொருள் கொள்ளலாம். அல்லது ‘நாங்கள் எல்லோரும் இங்கு வந்து நின்று கூப்பிடுகிறோம், நீ உன் மதிப்பை எல்லோரும் உணர வேண்டும் என்று நினைத்து பேசாமல் இருக்கிறாய். ஊருக்கெல்லாம் உன் பெருமை தெரிந்து விட்டது. இன்னும் என்ன உறக்கம்’ என்றும் கொள்ளலாம்.
திருப்பாவையின் மிகச் சிறந்த பாடல்களில் இது ஒன்று.
இங்கு உரையாசிரியர்கள் சொன்ன ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். தென்னிலங்கையை ‘ ‘பறைச்சேரி’ என்பாரைப் போல அத்திக்குங் காணவேண்டாயிதேயிருக்கிறபடி’ என்று நாலாயிரப்படி குறிப்பிடுகிறது.மற்ற உரையாசிரியர்களும் பறைச்சேரி என்று இலங்கையைக் குறிப்பிடுகிறார்கள். ஆண்டாளின் கவிதையில் வெறுப்பு என்பதே கிடையாது. ஆனால் இங்கு உரையாசிரியர்கள் ஒருபுறம் இறைவன் எல்லோருக்கும் இனியவன் என்று சொல்லிக் கொண்டு மறுபுறம் பறைச்சேரி போன்று பிராட்டியைப் பிரித்த படுகொலைக்காரன் இருக்கும் இடம் இலங்கை என்று சொல்வது சாதி வெறி என்பது ஒட்டிக் கொண்டால் எளிதில் விலகாது என்பதைத்தான் காட்டுகிறது.