காலை நேரத்தை ஆண்டாளைப் போல பாடல்களினால் போற்றிய தமிழ்க் கவிஞர்கள் மிகச் சிலரே. திருப்பள்ளியெழுச்சி பாடிய தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் மாணிக்கவாசகரும் உடனே நினைவிற்கு வருவார்கள். ஆனால் அவர்கள் பாடல்களில் அதிகாலையோடு இரண்டறக் கலந்த நெருக்கம் வெளிப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் அவர்கள் காலை ஆண்களின் காலை. பெண்கள் அதிகம் தென்படாத காலை. ஆனால் ஆண்டாளின் காலை பெண்களின் காலை. இளம்பெண்களின் காலை. ‘விருத்தைகள்’ (வயது முதிர்ந்த பெண்கள்) எழுந்து அவர்களை தடை செய்ய முற்படும் முன்னர் கண்ணனை அடைய அவசரப்படும் பெண்களின் காலை.
East is red என்ற குரல் சென்ற நூற்றாண்டின் அறுபதுகளின் எழுந்தது. கிழக்கில் புரட்சிக் கனல் கொழுந்து விட்டு எரியும் என்று அன்றைய இளைஞர்களில் பலர் நம்பினார்கள். இங்கு ‘ஆண்டாள் கிழக்கு வெளுத்தது’ என்கிறார். வெண்மை என்றால் சாத்வீகம். சத்வகுணம் ஓங்குகிறது என்பதற்கு அறிகுறி. ‘அசேதனத்திற்கும் சைதன்யமுண்டாம்படி ஸத்த்தோத்தரமான காலமாயிற்று’ என்று வியாக்கியானம் செய்கிறது. உயிரில்லாதவற்றிற்கும் உயிர் அளிக்கும் காலை. ‘காந்தி வருகிறார் என்று ஆண்டாள் சொல்கிறாரோ?’ என்று என் தந்தையிடம் கேட்டேன். நான் கேலியாகக் கேட்கிறேன் என்று அவருக்குத் தெரிந்திருந்தது. ‘மறுபடியும் இருள் சூழும் என்று ஆண்டாளுக்குத் தெரியாதா? ஆனால் மறுபடியும் காலை வரும் என்பதும் அவளுக்குத் தெரியும். நாங்கள் காலைக்குக் காத்திருப்பவர்கள். உங்களைப் போன்றவர்கள் இருளுக்குக் காத்திருப்பவர்கள்’, என்றார் அவர்.
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான்போ கின்றாரைப் போகாமல்காத்துஉன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
‘ ‘மேட்டிள மேதிகள் தளை விடும் ஆயர்கள்’ என்று இவருடைய தமப்பன்மார்களில் ஒருவர்- தொண்டரடிப்பொடி ஆழ்வார் – பெரிய பெருமாளை எழுப்பினார். இவருடைய தோழிகள் இவரை எழுப்புக்கிறார்கள். இதுதான் ஆழ்வார்களுக்கும் ஆண்டாளுக்கு இடையே உள்ள வேறுபாடு (வாசி) என்கிறார்கள் உரையாசிரியர்கள். தமப்பன் என்றால் தகப்பன். ஆழ்வார்கள் அனைவருக்கும் புதல்வி ஆண்டாள்.
“சிறு வீடு” என்றால் வீட்டின் முன்னால் இருக்கும் தோட்டம் என்றோ புல் முளைத்திருக்கும் இடம் என்றோ பொருள் கொள்ளலாம். எருமைகளை காலையில் பனிப்புல் மேய விட்டு ஆயர்கள் பால கறப்பார்களாம். பெரியாழ்வார் மகளாய் அக்னிஹோத்திர ஹோமங்களுக்கு உள்ள வேறுபாடுகளை ஆராயாமல் எருமைப் பெரு வீடு சிறு வீடு என்று ஆராயும் ஆய்ச்சியாகவே ஆண்டாள் ஆகி விட்டாளாம்.
‘ஐந்துலட்சம் குடி என்று சொல்லப்படும் ஆய்ச்சியர்கள் பலர் கண்ணனைக் காணச் சென்று விட்டார்கள். நாங்கள் சிலரே உனக்காக காத்திருக்கிறோம், எழுந்திரு’ என்று சொல்லும் தோழியர் ‘பாவாய்’ என்கிறார்கள். ‘ ‘முலை எழுந்தார்படி மோவாயெழுந்தார்க்குத் தெரியாதிறே’ என்பது பட்டர் வாக்கு. அதாவது தாடி வளர்ந்திருப்பவனுக்கும் மார்பகங்கள் வளர்ந்திருக்கும் பெண்ணின் துன்பம் தெரியாது என்றால் சரியென்று சொல்லலாம். ஆனால் நீ பெண்தானே ஆணில்லையே. பெண்படும் பாடு உனக்குத் தெரியாதா?’ என்பது பாவாய் என்ற சொல்லுக்கு உட்பொருள்.
கோதுகலம் என்றால் கண்ணணால் கொண்டாடப் படுபவள் என்று பொருள் கொள்ளலாம். அவன் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறான், நீ இங்கு தூங்கிக் கொண்டிருக்கிறாய் என்று தோழிகள் சொல்கிறார்கள். அவன் சாதரணமானவன் அல்ல. தேவர்களுக்கும் தேவன். இவ்வதாரத்தில் கேசியையும் மல்லர்களையும் வென்றவன்.
‘ஆ ஆ என்று ஆராய்ந்து’ என்ற சொற்றொடர் வைணவ சித்தாந்தத்தின் அடித்தளம். நமக்கு அருள் புரிவது அவன் கடமை. நாம் இருக்கும் இடத்திற்கு வந்து அவன் அருள் செய்ய வேண்டும். ‘நம் சொரூபத்தை குலைத்துக் கொண்டு’ (அண்ணங்கராச்சாரியார்) நாம் அவரிடம் சென்று சேவித்தால். ‘ஐயோ, நம் காரியத்தை நாம் செய்யத் தவறினோமே! இவர்களை இதுவரை கவனிக்காமல் அலைய விட்டு விட்டோமே!’ என்று நினைத்து நமக்கு அருள் புரிவான்.
‘ஆ ஆ என்று ஆராய்ந்து என்றும் எல்லோருக்கும் அருள் புரிபவன் இறைவன்‘ என்று ஆண்டாள் திண்ணமாகச் சொல்கிறார். நாம் அவனிடம் செல்லாவிட்டாலும் அது நடக்கும் என்றும் எடுத்துக் கொள்ளலாம். இறையருள் உலகில் இருக்கும் மனிதர், மிருகம்,
புல், கல் போன்ற அனைத்திற்கும் உறுதி.