கீழடி – என் எட்டு கேள்விகளும் தமிழக அரசின் பதிலும்

காலச்சுவடு நவம்பர் இதழில் திரு சிவானந்தம் மற்றும் திரு சுந்தர் கணேசன் எழுதிய “கீழடி: தென்னிந்திய தொல்லியல் வரலாற்றில் ஒரு ஒளிக்கீற்று” என்ற கட்டுரை வெளிவந்திருந்தது. இது அரசு தொல்லியல் துறை சார்பில் எழுதிய கட்டுரை என்பதும் தெளிவாக கட்டுரையின் உள்ளடக்கத்திலிருந்து தெரிந்தது.
கட்டுரை தொடர்பாக எனக்குச் சில கேள்விகள் இருந்தன. அவற்றை நான் காலச்சுவடு பத்திரிகைக்கு அனுப்பியிருந்தேன். இது என் கடிதம்:
எட்டு கேள்விகள்

அன்புள்ள கண்ணன், சுகுமாரன்,
இக்கேள்விகள் திரு சிவானந்தம் சுந்தர் கணேசன் கட்டுரை தொடர்பாக. தயது செய்து கேள்விகளை அவர்களுக்கு அனுப்பி பதில்களைப் பெறவும். விவாதம் தொடர அவை வழி செய்யும்.
1. உங்கள் கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டிருப்பது அனைத்துக் குழிகளிலும் வெளிப்பட்ட மண்ணடுக்குகள் கீழிருந்து மேல்வரை ஒரே மாதிரியான பண்பாட்டினைச் சார்ந்ததாக இருப்பது என்று. உடனே YP 7 குழியைக் குறிப்பிட்டு இதில் மூன்று பண்பாட்டுக் காலங்களைச் சேர்ந்த மண்ணடுக்குகள் காணப்படுகின்றன என்கிறீர்கள். எது உண்மை?
2. அரசு வெளியிட்ட புத்தகத்தில் குறிப்பிடப்ம்படுவது பண்பாட்டு காலங்கள் கிபி 12ம் நூற்றாண்டிலிருந்து கிமு ஆறாம் நூற்றாண்டு வரை. இதில் கடைசி அடுக்கின் பண்பாட்டுக்காலம் கிமு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கிமு மூன்றாம் நூற்றாண்டு வரை. ஆங்கில இதழான Frontline கட்டுரையில் நீங்கள் சொல்வது இது: There were three cultural layers found in this quadrant, the lowest layer being 353 cm to 200 cm below surface belonging to circa 580 BCE. அதாவது கடைசி அடுக்கில் கிடைத்த எல்லாப்பொருள்களும் ஏறத்தாழ (Circa) கிமு 580ம் ஆண்டில் கிடைத்தவை என்று சொல்கிறீர்கள். ஏறத்தாழ என்றால்? பத்து ஆண்டுகள்? ஒரு ஆண்டு? ஒரு மாதம்? இப்போது இக்கட்டுரையில் கீழடுக்கு (200 செமீயிலிருந்து 353 செமீ வரை) கிமு ஆறாம் நூற்றாண்டு என்று சொல்கிறீர்கள். ஒரே மாதத்திற்குள் மூன்றுவிதமான நிலைப்பாடுகளை எடுக்கக் காரணம் என்ன?

3. மூன்றாம் அடுக்கின் காலம் கிமு ஆறாம் நூற்றாண்டு என்று எவ்வாறு சொல்கிறீர்கள்? கரிப்பொருளின் காலத்தை வைத்துக் கொண்டா? அது எப்படிச் சொல்ல முடியும்? கிமு ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த வேறு என்ன பொருட்கள் (artefacts) கிடைத்திருக்கின்றன? அடுக்குகளின் காலம் மண் பொதிந்துள்ள தன்மை, மண் நிறம் அதன் இழைத்தன்மை தொல் பொருள்களின் தன்மை இவற்றை வைத்து கணிக்கப்பட்டது என்று சொல்கிறீர்கள். தொல் பொருள்களின் தன்மையை எதை வைத்துக் கணித்தீர்கள். மண்ணின் தன்மைகளை எவ்வாறு கணித்தீர்கள்? அகழ்வாய்வில் பங்குபெற்ற மண்ணியலாளர் யார்? அகழ்வாய்வு செய்யப்பட்ட பரப்பில் (எல்லாப்பருவங்களையும் சேர்த்து) மண்ணின் தன்மை வேறுபடுமா? இது பற்றிய மண்ணியல் அறிக்கை எங்கே?

4. கரிப்பொருள் கிடைத்த அதே மண்ணடுக்கில் தமிழ் பிராமி பொறித்த பானையோடுகள் கிடைத்தன என்று சொல்கிறீர்கள். கிடைத்தது அதே குழியிலா ? அல்லது வேறு குழியிலா? வேறுகுழியில் கிடைத்திருந்தால் கிடைத்த குழியின் தன்மையைப் பற்றி ஏன் எழுதவில்லை? கரிப்பொருள் கிடைத்த குழியில் கிடைத்த வேறு பொருட்கள் என்ன? அவை கிடைத்த ஆழங்கள் என்ன?

5. அரசு வெளியிட்ட புத்தகத்தில் YP7/4ன் முக்கியத்துவத்தைப் பற்றி ஒரு குறிப்பு கூடக் கிடையாது. அது ஏன்? இக்குழி முக்கியமானது என்று Frontline கட்டுரையில் சொல்லப்படுகிறது. இது பின்னால் தெரியவந்ததா?

6. தமிழ் பிராமி பொறித்த பானையோடுகள் A3/2 கிடைத்தனவா? கிடைத்திருக்கும் ஐம்பத்தாறு ஓடுகளில் எத்தனை A3/2 குழியிலிருந்து கிடைத்திருக்கின்றன?

7. திரு அமர்நாத் ராமகிருஷ்ணாவும் கரிப்பொருளின் காலகட்டத்தை பீடா பகுப்பாய்வு ஆய்வகம் மூலம் கணித்திருக்கிறார். அவருக்கும் 2.5 மீட்டர் ஆழம் மற்றும் 1.95 மீட்டர் ஆழத்தில் கரிப்பொருள்கள் கிடைத்திருக்கின்றன். இவற்றின் காலகட்டம் கிமு 200- கிமு 195. ஆனால் அவர் அதே தளத்தில் கிடைத்த பானையோடுகளின் காலம் பாறை அடுக்கியல், தொல் எழுத்தியல் முறைகளின் படி கிமு இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கிபி ஒன்றாம் நூற்றாண்டு என்று சொல்கிறார்.
தமிழக அகழ்வாய்வுத் துறை எந்த அடிப்படையில் கடைசி அடுக்கின் காலத்தைக் கணித்தது? அகழ்வாய்வுக் கொள்கைகளின் அடிப்படைகளில் ஒன்று அடுக்கின் வயது அதில் கிடைத்த ஆக இளைய பொருளின் வயதை விட மூத்ததாக இருக்க முடியாது என்பது – layers can be no older than the age of the most recent artefact discovered within them. நீங்கள் சொல்வது இதற்கு நேர்மாறாக இல்லையா? கரிப்பொருளின் வயதை மற்றவற்றிற்கும் அதுவும் 1.5 மீட்டர்களுக்கும் மேல் உயரத்தில் கிடைத்த பொருட்களின் மீது ஏற்றுவது எந்த அடிப்படையில்?

8.எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஐம்பத்தாறு பானையோடுகளும் எந்தெந்தக் குழிகளில் எந்தெந்த ஆழங்களில் கிடைத்தன என்பது பற்றிய தகவல் உங்களிடம் இருக்கும். அதை ஏன் வெளியிடக் கூடாது?

4 நவம்பர் 2019

அரசின் பதில்

நான் பதிலை ஆசிரியர்களிடமிருந்துதான் எதிர்ப்பார்த்தேன். தமிழக அரசின் தொல்லியல் துறையின் பதிலை எதிர்ப்பார்க்கவில்லை. இது காலச்சுவட்டிற்கு தொல்லியல் துறை அனுப்பியிருக்கும் பதில்:

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2017-2018 ஆம் ஆண்டு மேற்கொண்ட நான்காம் கட்ட அகழாய்வில் கிடைக்கப்பெற்ற தொல்பொருட்கள் அறிவியல் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப்பட்டு அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வமான முதற் அறிக்கை நூல் வடிவில் விரைவில் வெளியிடப்படும். இந்நூலின் தேவையான முழு விவரங்களும் இடம் பெற்றிருக்கும் என்பது தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

15 நவம்பர் 2019

அரசின் பதில் சொல்வது என்ன?

அரசின் பதில் நமக்குத் தெரிவிப்பவை இவை:

1. இதுவரை வந்த எதுவும் அதிகாரப்பூர்வமானது அல்ல. அரசு வெளியிட இருக்கும் நூலே அதிகாரப்பூர்வமானது.
2. நான் கேட்ட கேள்விகளுக்கு கட்டுரையின் ஆசிரியர்களிடம் சரியான பதில்கள் இல்லை.
3. இதுவரை நம்மிடம் கொடுக்கப்பட்ட தகவல்கள் சரியாக இல்லாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது. சரியான தகவல்களை அறிந்து கொள்ள நாம் அரசின் அதிகாரப்பூர்வமான நூலின் வெளியீட்டிற்காகக் காத்திருக்க வேண்டும்.

இரண்டு மாதங்களுக்கு முன்னால் அரசு மேள, தாள வாத்தியங்களோடு வெளியிட்ட நூல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது இப்போது தெளிவாக்த் தெரிகிறது. காரணம் அதில் உள்ள தவறுகள்.

இந்தப் பரிமாற்றம் இன்னொன்றையும் அறிவிக்கிறது. தமிழகத்தின் அரையாணா அறிஞர்களும் நாட்டார் உழக்கியல் நாயகர்களும் ஊடகச் சண்டியர்களும் எந்த நேர்மையும் இல்லாத பிறவிகள்; அடிப்படைக் கேள்விகளைக் கேட்கும் அறிவு கூட இல்லாத போலிகள். இவர்கள் படிக்கும் ஒரே அறிவியல் இதழ் வினவு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s