(சிறுவர்களுக்காக எழுதப்பட்டது. தினமலர் வெளியிடும் ‘பட்டம்’ இதழில் 4 நவம்பர் 2019ல் வந்தது)
நம் எல்லோருக்கும் பூமிக்கு அடியில் என்ன புதைந்து கிடைக்கிறது என்பதை அறிய நிச்சயம் ஆர்வம் இருக்கும். மர்மக்கதைகள் படிப்பவர்களுக்கு எலும்புக் கூடுகள் கிடைக்கலாம் என்று தோன்றும். சிலருக்கு புதையல் கிடைக்கும் என்ற ஆசை இருக்கும்.
நீங்களும் தோண்டிப் பார்க்கலாம். நண்பர்கள் சிலரைச் சேர்த்துக் கொண்டு தோண்டிப் பார்க்கலாம். தோண்டும் போது என்ன கிடைக்கும் என்பதைச் சொல்ல முடியாது.
நான் சிறுவனாக இருக்கும் போது என் வீட்டின் பின்புறம் இருந்த தோட்டத்தில் நான் தோண்டிப் பார்த்திருக்கிறேன். எனக்கு George VI King Emperor என்று பொறிக்கப்பட்ட ஓர் அணா நாணயம் கிடைத்தது. ஓர் அணா என்பது ஒரு ரூபாயில் பதினாறில் ஒரு பங்கு. 1938ம் ஆண்டு நாணயம். என்னிடம் பல வருடங்கள் இருந்தது.
1946ல் ராஜஸ்தானில் பரத்பூருக்கு அருகில் ஒரு சிறிய கிராமத்தில் தோண்டிக் கொண்டிருந்த சில சிறுவர்களுக்கு செப்புப்பானை ஒன்று கிடைத்தது. பானை முழுவதும் தங்க நாணயங்கள்! இரண்டாயிரம் தங்க நாணயங்கள்! எல்லாம் குப்தர்கள் காலத்தியவை. இன்றிலிருந்து 1500 ஆண்டுகளுக்கு முந்தையவை. நாணயங்களை ஆராய்ந்ததன் மூலம் குப்தர்கள் காலத்து வரலாற்றைப் பற்றிய பல முக்கியமான தகவல்கள் கிடைத்தன.
நம் மூதாதையர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை அறிவதற்காகவும் தோண்டுவது உண்டு. இதைத்தான் நாம் அகழ்வாராய்ச்சி என்று அழைக்கிறோம்.
அகழ்வாராய்ச்சியில் தேர்ச்சி பெற்றவர்கள் என்னைப் போன்றோ அல்லது ராஜஸ்தான் சிறுவர்களைப் போன்றோ, கிடைத்த இடத்தில் தோண்டிப் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு எந்த இடத்தில் தோண்டினால் பழைய காலத்துப் பொருட்கள் கிடைக்கும் என்பது பற்றிய புரிதல் இருக்கும். பல புத்தகங்களை ஆழ்ந்து படித்ததால் ஏற்படும் புரிதல். அப்படிப்பட்ட இடங்களைத் தேர்வு செய்து தோண்டுவார்கள். மிக நிதானமாகத் தோண்டி கிடைத்தப் பொருட்களை – அவை சிறிய பொருள்களாக இருந்தாலும் – கவனமாகச் சேகரித்து ஆராய்ச்சி செய்வார்கள். ஆராய்ச்சியின் மூலம் பல தகவல்கள், இதுவரை தெரிந்திராத தகவல்கள் கிடைக்கும். அல்லது தெரிந்த தகவல்களுக்கு ஆதாரங்கள் கிடைக்கும்.
உதாரணமாக கீழடியை எடுத்துக் கொள்வோம். உங்களுக்குக் கீழடி அகழ்வாய்வைப் பற்றித் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நம் முன்னோர்கள் சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் எவ்வாறு வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்பதைப் பற்றி தகவல்கள் திரட்ட அங்கு அகழ்வாராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. கிடைத்தெல்லாம் கவனமாகப் பாதுகாக்கப்படுகின்றன. சீப்புகள், நகைகள், தாயக்கட்டைகள், கிணறுகள், சுடுமண் சிற்பங்கள் போன்ற பல பொருட்கள் கிடைத்திருக்கின்றன. பானைத்துண்டுகளும் கிடைத்திருக்கின்றன.
கீழடியில் கிடைத்த பானைத் துண்டுகள் மிக முக்கியமானவை.
பல துண்டுகளில் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்கும் பானைத் துண்டுகள் இந்தியாவிலேயே அதிகம் தமிழ்நாட்டில்தான் கிடைத்திருக்கின்றன. இவற்றை ஆராய்ந்து இந்தியாவில் முதல் முதலாக எங்கு எழுத்துகள் பிறநதன என்பதைக் கண்டு பிடிக்க பல வல்லுனர்கள் முயன்று கொண்டிருக்கிறார்கள்
எழுத்து என்றால் நாம் இப்போது எழுதும் தமிழ் எழுத்து அல்ல. பழங்காலத் தமிழ் எழுத்து. அதன் பெயர் தமிழ் பிராமி அல்லது தமிழி. இதில் ‘அ’ என்பது ஆங்கில எழுத்தான K ஐ திருப்பி போட்டது போல இருக்கும். ‘இ’ என்பது ‘ஃ’ஐ பக்கவாட்டில் திருப்பியது போல இருக்கும். ‘உ’ என்பது ஆங்கில எழுத்தான L போன்று இருக்கும். தமிழி எழுத்துகள் முழுவதையும் அறிந்து கொள்ள வேண்டுமானல் உங்கள் தமிழ் ஆசிரியரை அல்லது வரலாற்று ஆசிரியரை அணுகுங்கள். அவர் நிச்சயம் உதவி செய்வார். உங்கள் பெயரை தமிழியில் எழுதிப் பழகுங்கள். உங்கள் தாத்தாவிற்கும் தாத்தாவிற்கும் தாத்தாவிற்கும், பல தாத்தாக்களுக்கும் தாத்தா இதே போன்றுதான் எழுதிப் பழகியிருப்பார்!
பி ஏ கிருஷ்ணன்