பெரியாரியர்களை நாசிகள் என்று நான் சொல்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாம். ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் விஜயசங்கர் ராமச்சந்திரன் கூறியிருக்கிறார்.
எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது!
திராவிட இயக்கத்தினர் ஹிட்லர் வழியைத்தான் பின்பற்றுகிறார்கள் என்று நான் சொல்லவில்லை. அண்ணாதுரை சொல்லியிருக்கிறார்:
“செல்வம் அவர்களிடம். வறுமை ஜெர்மானியரிடம். ஆதிக்கம் அவர்களிடம். அடிமைத்தனம் ஜெர்மானியரிடம். ஆனந்தம் அவர்களிடம். சோர்வு ஜெர்மானியரிடம்.
ஆகவே நான் யூதர்களை வெறுத்தேன். எனக்கு அதிகாரம் வந்தால் என் முதல் வேலை யூதர்கள் ஆதிக்கத்தை ஒழிப்பதேயாகும் என இட்லர் தனது சுயசரிதையில் எழுதினார். எழுதியபடி செய்தும் முடித்தார். எந்த நாட்டிலும் எந்தக் காலத்திலும் ஏதாவது ஒரு வகுப்பு சமூகத்தின் ஜீவநாடிகளைப் பிடித்துக் கொண்டு ஆதிகத்தை வளர்த்துக் கொண்டு மற்றைய வகுப்பினர அடிமைப்படுத்தி சமூகத்திலே பிரிவுகளை வளர்த்து வருகிறதோ, அந்த வகுப்பின் ஆதிகத்தை ஒழிக்க மற்றைய வகுப்பினர் ஒன்று கூடி புரட்சி செய்வது சரித்திரம் சாற்றும் உண்மை.”
இது அண்ணா 29.8.1937ல் எழுதியது. ஹிட்லரின் அப்பட்டமான இனவெறி உலகிற்குத் தெரிந்த பிறகு எழுதியது. மிகத் தெளிவாக அண்ணா சொல்கிறார். யூதர்களுக்கு நேர்ந்ததே பிராமணர்களுக்கும் நேரும் என்று. எங்களுக்கு ஆசான் ஹிட்லர்தான் என்று. அழித்தொழிப்பைப் பற்றி அன்று அவருக்குத் தெரியாது. அழித்தொழிப்பு அடுத்த அடி.
நாங்கள் பிராமணியத்தை எதிர்க்கிறோம் பிராமணர்களை அல்ல என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் துவங்கியவுடன் சொல்ல ஆரம்பித்தார். அது என்ன ஈயம் என்று திராவிடர் கழகத்தினர் எள்ளி நகையாடினார்கள். அதைக் குறித்து அண்ணா எழுதியது இது:
மிகப் பிரமாதமாக தி. க. சேனாதிபதி இன்று பேசுவது பார்ப்பனர்களை நாங்கள் ஒழித்துக்கட்ட, நாட்டை விட்டு விரட்டப் போர்த் திட்டம் வகுத்து விட்டோம், இவர்களோ, “ஈயம்’ பேசுகிறார்கள் – ஓட்டப்பட வேண்டியது, ஒழிக்கப்பட வேண்டியது பார்ப்பனர்கள் – பார்ப்பனீயம் என்று பேசுவது, கோழைத்தனம், பார்ப்பனர்கள் – கள் ! அதுதான் எமக்குப் போர்த் திட்டம் – பார்ப்பனீயம் – ஈயம் அல்ல! என்று பேசுகிறார்.
“ஈயம்’ ஒழிக்கப்பட்டால் போதும் என்பது கோழைத்தனம், துரோகம், காட்டிக் கொடுக்கும் கயமைத்தனம், இனத்துரோகம் என்றெல்லாம் குத்துகிறார்.
நாம், பார்ப்பனீயம் ஒழிக்கப்பட்டால் போதும் என்று கூறுவது பற்றி, பார்ப்பனர்களையே ஒழிக்க “ஜல்லடம்’ கட்டிக் கொண்டுள்ளவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? ஒழித்துக் கட்டுவதுதானே, யார் குறுக்கே படுத்துக்கொண்டு தடுக்கிறார்கள்? தடுத்தால் மட்டும் இவர்களுடைய படைபலம் கொண்டு, கண்ட துண்டமாக்கி விட்டு, மேலால் வெற்றிக் கொடி பிடித்துக் கொண்டு செல்லலாமே! ஏன் தயக்கம்? எது தடுக்கிறது? பலம் இல்லையா? அல்லது காலம் சரியில்லையா?”
பெரியார் பிராமணன் ஒழிய வேண்டும் என்றுதான் சொன்னார். ஒரு தடவை அல்ல. பல தடவைகள் சொன்னார். பார்ப்பனியம் என்ற சொல்லையே அவர் அதிகம் பயன்படுத்தியதில்லை
திராவிடச் சண்டியர்கள் பலர் சொல்கிறார்கள்: பிராமணர்களை உயிரோடு விட்டு விட்டோம் என்பதற்காக பிராமணர்கள் வாயைப் பொத்திக் கொண்டு இவர்களிடம் நன்றியோடு இருக்க வேண்டுமாம்.
விஜயசங்கரும் இதையேதான் சொல்கிறார். இவர் கம்யூனிஸ்டு சண்டியர். இதுதான் வித்தியாசம். பெரியாரியர்கள் நாசிகளாக இருந்தால் பலர் பூண்டோடு அழிக்கப் பட்டிருப்பார்கள் என்று சொல்கிறார். அதாவது பிராமணர்கள் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் பிராமணப் பெண்கள் வயிற்றில் வளரும் கருக்கள் எல்லாம் அழித்தொழிக்கப் பட்டிருக்கும் என்கிறார். அப்படி நடக்கவில்லையே என்ற வருத்தம் அவர் எழுத்தில் தெரிகிறது.
நாசி இனவெறிவாதம் அழித்தொழிப்புக்கு கொண்டு செல்வது வரலாற்றினால் நிர்ணயிக்கப் படுகிறது. நாசிகள் கூட பதவிக்கு வந்தவுடன் அழித்தொழிப்பைத் துவங்கவில்லை. 1941ல்தான் துவங்கினார்கள். 1942ல் நடந்த் வான்ஸி மாநாட்டிற்குப் பின்புதான் அது பூதாகாரமாக உருவெடுத்தது.
பிராமணர்கள் இன்று உயிரோடு இருப்பதற்குக் காரணம் மிகப் பெரும்பான்மையான பிராமணர் அல்லாத தமிழ் மக்கள். அவர்களுக்கும் தமிழ்ப் பிராமணர்களுக்கும் எந்த விரோதமும் இல்லை. இன்னொரு காரணம் இந்திய அரசு. இந்தியாவில் இன்னும் மக்கள் ஆட்சிதான் நடக்கிறது.
பெரியாரியர்கள் வன்முறையை விரும்பாதவர்கள் என்று நானே பலமுறை எழுதியிருக்கிறேன். ஆனால் நாளை எப்படியிருக்கும் என்று சொல்ல முடியாது. இவ்வாறு இனவெறிக்கு இரை போட்டுக் கொண்டிருந்தால், குறிப்பிட்ட சாதியினரைத் தாக்கி கொண்டிருந்தால் இனவெறி வன்முறை வெடிக்கும் அபாயம் அதிகரித்துக் கொண்டே போகும்.
உண்மையாகவே அவ்வாறு நேரும்போது எதனால் நிகழ்ந்தது என்பதைப் பற்றி அறிவுப்பூர்வமான கட்டுரைகளை ஃப்ரண்ட்லைன் பெரியாரிய நாசிகளிடமிருந்து வாங்கிப் பதிப்பிக்கவும் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.