அமர்நாத் எழுதிய கீழடி அறிக்கை என்ன சொல்கிறது?

தேனீக்கூடு!

நான் கீழடியைப் பற்றி எழுதியிருப்பவையும் பேசியிருப்பவையும் தேனீக்கூட்டைக் கலைத்து விட்டன. பல தேனீகள் என்னையும் என்னை ஆதரிப்பவர்களையும் கொட்டுவதற்குப் பறந்து கொண்டிருக்கின்றன. ஆனால் என் கேள்விகளுக்கு யாரும் பதில் தரவில்லை -கீழடியின் முதல் இரண்டு கட்டங்களையும் ஆராய்ந்த திரு அமர்நாத் உட்பட. நான் சொல்லாதவற்றை நான் சொன்னதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மாறாக நான் அவர்கள் நான் சொன்னதாகச் சொல்லுபவை நான் சொன்னவற்றிற்கு நேர் எதிரானவை!

எலும்புக் கூடுகள்!

நான் கீழடியில் எலும்புக் கூடுகள் கிடைக்கவில்லை என்று சொன்னேனாம். நான் சொன்னது இது: மிருகங்களில் எலும்புகள் கிடைத்திருக்கின்றன. மனிதன் தொடர்ந்து வாழ்ந்திருக்கும் தடயங்கள் கிடைக்கவில்லை. வீடுகள் இல்லை. தெருக்கள் இல்லை. இடம் பானை வனையும் இடமாக இருந்திருக்கலாம். ஆனால் அது ஆறாம் நூறாண்டு BCEல் இயங்கி கொண்டிருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் நகர, நதி நாகரிகத்தைச் சேர்ந்தது கீழடி என்று சொல்ல இன்னும் ஆதாரங்கள் தேவை.” கீழடி – சில முக்கியமான கேள்விகள்.

கரிமப்பகுப்பாய்வு – கார்பன் டேடிங்

நான் கார்பன் டேட்டிங்கை நம்ப முடியாது என்று சொன்னேனாம். மாறாக நான் அதை விடக் காலத்தை துல்லியமாகக் கணிப்பது இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆனால் கூடவே இதையும் சொல்லியிருக்கிறேன்: பல தளங்களில் கிடைத்த கரித்துண்டுகளை கரிமப்பகுப்பாய்வு செய்து அதில் ஒன்றின் வயது 580 BCE என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் . இவ்வயது ஆராய்ச்சி செய்யப்பட்ட கரித்துண்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது மரம் கரியாக மாறியது 580 BCE என்பதை மட்டும்தான் அது சொல்கிறது. சுற்றியுள்ள எந்தப் பொருட்கள் மீதும் அதை ஏற்ற முடியாது. இந்தத் தகவலை வைத்துக் கொண்டு அருகே கிடைத்த பானைத் துண்டுகளின் வயதும் அதுதான் என்று சொல்ல முடியாது.” கீழடி – சில முக்கியமான கேள்விகள்.
எந்த அகழ்வாய்வுப் பாடபுத்தகமும் கரித்துண்டின் வயதுதான் சுற்றியுள்ள பொருட்களின் வயது என்று சொல்லாது. இது முக்கியமானது. இதை அமர்நாத் உட்பட எல்லோரும் மறைக்கிறார்கள். கரித்துண்டின் வயது அதைச் சுற்றியிருக்கும் பொருட்களின் வயதைக் கணிக்க உதவியாக இருக்கும் என்பது வேறு. அதை நிச்சயம் செய்ய முடியும். நான்காம் கட்ட அகழ்வாய்வாளர்கள் தோண்டியதை மூன்று அடுக்குகளாகப் பிரித்துக் கொண்டார்கள். முதல் அடுக்கு காலத்தில் மிகப் பிந்தைய அடுக்கு. அதன் பண்பாட்டுக் காலம் கி.பி. நான்காம்-ஐந்தாம் நூற்றாண்டிகளிலிருந்து கி.பி. 11-12 நூற்றாண்டுகள் வரை. அதற்கு அடுத்த நடு அடுக்கின் பண்பாட்டுக் காலம் கி.மு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி நான்காம் -ஐந்தாம் நூற்றாண்டுகள் வரை. கடைசி அடுக்குத்தான் மிகப் புராதன அடுக்கு. அதன் பண்பாட்டுக்காலம் கி.மு ஆறாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. மூன்றாம் நூற்றாண்டு வரை. எனவே கீழடியில் கிடைத்திருக்கும் பொருட்களின் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 12ம் நூற்றாண்டு வரை இருக்கலாம். கால இடைவெளி 1800 ஆண்டுகள்! கரித்துண்டு கடைசி அடுக்கில் கிடைத்திருந்தாலும் அதே தளத்தில் கிடைத்திருக்கும் பானை ஓடுகளின் காலம் மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று சொல்லலாமே ஒழிய ஆறாம் நூற்றாண்டு என்று அடித்து விட முடியாது. ஆனால் இதை ஆய்வாளர்களும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் பானைத் துண்டுகள் கரித்துண்டு கிடைத்த தளத்திற்கு மேற்தளத்தில்தான் கிடைத்திருக்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே அதன் காலம் மூன்றாம் நூற்றாண்டிற்கும் பின்னால்தான் இருக்க முடியும். ஏன் அவ்வாறு சொல்கிறேன்? நான் சொல்லவில்லை. அமர்நாத் ராமகிருஷ்ணா தன்னுடைய அறிக்கையில் சொல்கிறார்.

அமர்நாத் ராமகிருஷ்ணாவின் அறிக்கை

அமர்நாத் ராமகிருஷ்ணாவும் இன்னும் சிலரும் ஓரு ஆய்வுக் கட்டுரை எழுதியிருக்கிறார்கள். அக்டோபர் 2018ல் வெளியானது. இந்தத் தளத்தில் கிடைக்கிறது.

Click to access 2.pdf

இதில் அவர் தோண்டிய தளங்களை மூன்றாகப் பிரிக்க்கிறார்.
முதல் காலம் : இரும்பு காலம் ( கிமு முன்னூறிற்கு முன்பு)
இரண்டாம் காலம்: வரலாறு தொடங்கும் காலம் (கிமு முன்னூறிலிருந்து கிபி முன்னூறு வரை)
மூன்றாம் காலம்: பிந்தைய வரலாற்றுக் காலம் ( கிபி முன்னூறிற்குப் பிறகு)
இந்தப் பிரிவுகள் தற்காலிகமானவை, பின்னால் கிடைக்கும் சான்றுகளை வைத்துக் கொண்டு அறிவியல் ஆய்விற்கு உட்படுத்த வேண்டியவை என்றும் சொல்கிறார்.
இவரும் கரித்துண்டுகளை கரிமப்பகுப்பாய்விற்கு உட்படுத்தி ( 2.5 மீட்டர் ஆழம் மற்றும் 1.95 மீட்டர்கள் ஆழம்) அதன் காலம் கிமு 200லிருந்து கிமு 195 என்று அறிகிறார்.

தமிழ் பிராமி எழுத்துக்கள் பதித்த ஓடுகள் – அவை அமர்நாத்தினால் எவ்வாறு காலப்படுத்தப்படுகின்றன?

அமர்நாத் நடத்திய அகழ்வுகளிலும் 70 தமிழ் பிராமி எழுத்து பதித்த ஓடுகள் கிடைத்துள்ளன. இது அவர் கூறுவது: About 70 Brahmi inscribed shreds were collected from two field seasons. All the inscribed shreds came from Locality II coeval with the structural activities of Layer 2.. The nature of these writing on the pottery was primarily aimed to register names of individuals probably its owner’s. The inscribed shreds revealed an array of pure Tamil, pure Prakrit and Prakrit converted to Tamil language having names such as ‘athan’, ‘tisan, ‘uthiran’… அவர் கிடைத்த ஆழங்களையும் குறிப்பிடுகிறார்: ஒரு மீட்டர் ஆழத்தில் சேந்தன் அவதி என்ற பெயர் பொறித்த பானை கிடைத்திருக்கிறது. 1.1 மீட்டர் ஆழத்தில் ‘மாடச்சிமே’ என்ற பெயர் பொறித்த ஓடு கிடைத்திருக்கிரது. 1.6 மீட்டர், 2.16 மீட்டர் ஆழங்களிலும் அத்தகைய ஓடுகள் கிடைத்திருக்கின்றன.

இவற்றின் காலத்தை அமர்நாத் எப்படிக் கணிக்கிறார்?

கரிமப்பகுப்பாய்வில் கிடைத்த காலம் கிமு 200-195 என்று பார்த்தோம். ஆனால் அந்தக் காலத்தை இவற்றின் மீது திணிக்கவில்லை. மாறாக அவர் சொல்வது இது: “on the basis of stratigraphy and palaeographical grounds, these inscribe shreds may be dated to 2nd Century BCE – 1st Century CE.

பாறை அடுக்கியல், தொல் எழுத்தியல் முறைகளின் படி பானை ஓடுகளின் காலம் கிமு இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கிபி ஒன்றாம் நூற்றாண்டு என்று சொல்கிறார்.

நில அடுக்குகளின் காலத்தைக் கணிப்பது எப்படி?

கரிமப் பகுப்பாய்வு சொல்லும் காலம் பகுப்பாய்வு செய்யப்பட்ட பொருளின் காலம். அதன் காலத்தை முழு நில அடுக்கிற்கு ஏற்ற முடியாது. அதற்கு பல அறிவியல் வழி முறைகள் இருக்கின்றன. அதைச் செய்ய வேண்டியது புவியியல் வல்லுனர்கள். இதோ ஒரு வல்லுனர் சொல்வதைக் கேளுங்கள் (திரு மு ராம் குமார்): பாறையின் வயது என்பது ஒரு ஆவரேஜ் வயது தான். அல்லாது, தனிப்பட்ட துகள்களின் வயதையும் நிர்ணயிக்கலாம். அந்த வயது, அந்த துகளின் வயதே அன்றி, அந்த பாறை அடுக்கின் உண்மை வயதின் ஒரு பகுதியே அன்றி, அந்த பாறையின் துல்லியமான வயது அல்ல.

பாறையில் இருக்கும் துகள்களுக்குச் சொல்வது நில அடுக்குகளின் கிடைக்கும் பொருட்களுக்கும் பொருந்தும். அதனால்தான் திரு அமர்நாத் கரித்துண்டின் காலத்தை பானை ஓடுகள் மீது ஏற்றவில்லை.

ஏன் தர்க்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும்?

தர்க்கப் பூர்வமாகச் சிந்திக்கும் யாரும் கரிமப்பகுப்பாய்வு தனிப்பட்ட பொருளுக்கு என்றும் நில அடுக்கின் இருக்கும் பொருட்களின் வயதை அதைக் கொண்டு அளவிட முடியாது என்ற முடிவிற்கு வந்து விடுவார்கள். அதற்கு வேறு வழிமுறைகள் தேவை. பானை ஓடுகளைப் பொறுத்தவரை அதன் மொழியை வைத்து அதன் வயதை துல்லியமாக அளவிட முடியாது என்றாலும் குத்துமதிப்பாக அளவிடலாம். அதைத்தான் திரு அமர்நாத் செய்திருக்கிறார்.

இப்போது சில கேள்விகளைக் கேட்டு பதிலையும் தேடுவோம்.

நான்காம் கட்டத்தின் எதன் காலம் கணிக்கப்பட்டிருக்கிறது? – கரித்துண்டின் காலம்.

பானைத்துண்டுகள் கிடைத்த பகுதியின் ஆழங்கள் நான்காம் கட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றனவா? – இல்லை. ஆனால் திரு அமர்நாத்திற்கு கிடைத்தது போல நான்காம் கட்ட ஆய்விலும் அவை ஒரு மீட்டரிலிருந்து இரண்டு மீட்டர் ஆழங்களில் கிடைத்திருக்க வாய்ப்பு இருக்கின்றது. எனவே அதன் காலம் அமர்நாத் குறிப்பிட்டது போல

கரித்துண்டு இருந்த தளத்திலேயே கிடைத்திருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும் அதன் வயதை பானை ஓடுகள் மீது ஏற்ற முடியுமா? – கண்டிப்பாக முடியாது. அப்படிச் செய்வது அறிவியலுக்கும் தர்க்கப்பூர்வமான சிந்தனைக்கும் அகழ்வாயியலுக்கும் செய்யும் துரோகம். அதிகப்பட்சமாக அதன் காலத்தை கிமு ஆறாம் நூற்றாண்டிற்கும் மூன்றாம் நூற்றாண்டிற்கும் இடையே இருக்கலாம் என்று சொல்லலாம். அதுவும் திரு அமர்நாத் சொன்னது போல தற்காலிகக் கணிப்புதான். அறிவியல் தரவுகள் வேண்டும் என்றும் சொல்லியிருக்க வேண்டும்.

முதல் இரண்டு கட்டங்களில் கடைப்பிடித்த வழிமுறையை நான்காம் கட்டத்திலும் கடைபிடிக்க வேண்டுமா, வேண்டாமா? – நிச்சயம் வேண்டும். ஆனால் திரு அமர்நாத் அவ்வாறு நினைக்கவில்லை என்பது துரதிருஷ்டவசமானது. கரித்துண்டின் வயதை பானை ஓடுகளில் மேல் ஏற்றும் செயலை அவர் கண்டிக்காதது, அது ஒரு தேர்ந்த அகழ்வாராய்ச்சியாளருக்குப் பெருமை சேர்க்காது.

இக்கட்டுரையின் ஆங்கில வடிவம் தெ ஃபெடரல் இணைய இதழில் வெளிவந்துள்ளது.

Click to access 2.pdf

Leave a comment