கீழடி – சில முக்கியமான கேள்விகள்

தமிழில் ஒரு கதை உண்டு. அரசகுமாரியின் ஒரு தலைமயிர் இழையை வைத்துக் கொண்டு அரசகுமாரன் ஒருவன் அவர் படத்தை தத்ரூபமாக வரைந்தான் என்று. இன்று கீழடி அந்த அரசகுமாரியின் நிலையில் இருக்கிறது. 2500 ஆண்டுகளுக்கு முன்னால் அது எப்படியிருந்தது என்பதை தற்காலத் தமிழ் அரசகுமாரர்கள் – வரலாற்றோடோ, அகழ்வாராய்ச்சியோடோ எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள்- வரையத் தொடங்கியிருக்கிறார்கள். எந்த லட்சணத்தில் அவை இருக்கின்றன என்பதைச் சொல்லவே வேண்டாம்.
தனது தரப்பிலிருந்து கீழடியை பற்றி தமிழக அரசு ஒரு புத்தகத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டிருக்கிறது. அதில் இருக்கும் ஆதாரங்களை எடுத்துக் கொண்டு இக்கட்டுரையை எழுதுகிறேன்.

கீழடி தனித்தன்மை வாய்ந்ததா?

தமிழ் திராவிட, அரைகுறை மார்க்சிய வெறியர்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்; ஆனால் கீழடி சிந்துச் சமவெளி நாகரிக காலத்திலிருந்து தொடர்ந்து வரும் இந்திய நாகரிகப் பெரும்பரப்பில் ஒரு சிறிய பகுதி. தமிழ் நாட்டிற்கு வடக்கிலிருந்து குடியேறுதல் 1500 BCEயில் இருந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் இங்குள்ளவர்களோடு கலந்து படைத்தவைகளில் வடக்கு-தெற்கு கலவை நிச்சயம் இருக்கும். கீழடியில் கிடைத்திருக்கும் கறுப்பு சிவப்பு பானை, சிந்துச் சமவெளியிலும் கங்கை மற்றும் வட இந்தியப் பிரதேசத்திலும் கிடைத்திருப்பது தற்செயலல்ல. கண்ணாடி மணிகளும் பல இடங்களில் கிடைத்திருக்கின்றன. தமிழகத்தில் இடுகாடு அல்லாத இடம் ஒன்றில் முக்கியமான பொருட்கள் கிடைத்திருப்பது கூட இது முதல் முறை அல்ல. காவிரிப்பூம் பட்டினம், அரிக்கமேடு போன்ற இடங்களிலும் கிடைத்திருக்கின்றன. இந்தியாவிலும் இது போன்று பல இடங்கள் இருக்கின்றன. கீழடி தனித்தன்மை வாய்ந்தது அல்ல.

கீழடி நகர, நதி நாகரிகத்தைச் சேர்ந்ததா?

இதைப் பற்றி நான் முன்பே எழுதியிருக்கிறேன். கிடைத்திருக்கும் ஆதாரங்கள் போதாது. மிருகங்களில் எலும்புகள் கிடைத்திருக்கின்றன. மனிதன் தொடர்ந்து வாழ்ந்திருக்கும் தடயங்கள் கிடைக்கவில்லை. வீடுகள் இல்லை. தெருக்கள் இல்லை. இடம் பானை வனையும் இடமாக இருந்திருக்கலாம். ஆனால் அது ஆறாம் நூறாண்டு BCEல் இயங்கி கொண்டிருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் நகர, நதி நாகரிகத்தைச் சேர்ந்தது கீழடி என்று சொல்ல இன்னும் ஆதாரங்கள் தேவை.

கரிமப்பகுப்பாய்வு – என்ன சொல்கிறது?

இதற்கு முன் கீழடியில் அகழ்வு எவ்வாறு நிகழ்ந்தது என்பதைப் பற்றிய புரிதல் இருக்க வேண்டும். தோண்டியதை மூன்று அடுக்குகளாகப் பிரித்துக் கொண்டார்கள். முதல் அடுக்கு காலத்தில் மிகப் பிந்தைய அடுக்கு. அதன் பண்பாட்டுக் காலம் கி.பி. நான்காம்-ஐந்தாம் நூற்றாண்டிகளிலிருந்து கி.பி. 11-12 நூற்றாண்டுகள் வரை. அதற்கு அடுத்த நடு அடுக்கின் பண்பாட்டுக் காலம் கி.மு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி நான்காம் -ஐந்தாம் நூற்றாண்டுகள் வரை. கடைசி அடுக்குத்தான் மிகப் புராதன அடுக்கு. அதன் பண்பாட்டுக்காலம் கி.மு ஆறாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. மூன்றாம் நூற்றாண்டு வரை. எனவே கீழடியில் கிடைத்திருக்கும் பொருட்களின் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 12ம் நூற்றாண்டு வரை இருக்கலாம். கால இடைவெளி 1800 ஆண்டுகள். இதை நான் சொல்லவில்லை. அகழ்வாராய்ச்சியாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
இப்போது கரிமப் பகுப்பாய்விற்கு வருவோம்.
பல தளங்களில் கிடைத்த கரித்துண்டுகளை கரிமப்பகுப்பாய்வு செய்து அதில் ஒன்றின் வயது 580 BCE என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் . இவ்வயது ஆராய்ச்சி செய்யப்பட்ட கரித்துண்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது மரம் கரியாக மாறியது 580 BCE என்பதை மட்டும்தான் அது சொல்கிறது. சுற்றியுள்ள எந்தப் பொருட்கள் மீதும் அதை ஏற்ற முடியாது. இந்தத் தகவலை வைத்துக் கொண்டு அருகே கிடைத்த பானைத் துண்டுகளின் வயதும் அதுதான் என்று சொல்ல முடியாது. மேலும் பானையின் வயதும் பானைக்கீறல்களின் வயதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. பானைகளை பல ஆண்டுகள் பத்திரமாகப் பாதுகாக்க முடியும். அதுவும் சடங்குகளுக்காக ஒதுக்கப்பட்ட பானைகளாக இருந்தால்.

பிராமி பானைத்துண்டுகளின் காலம் என்ன?

பதினொன்று இடங்களில் அகழ்வாய்வுக் குழிகள் வெட்டப்பட்டன. அதில் A3/2 குழியில் மேல்பகுதி பானை ஓடுகளால் நிரப்பப்பட்டிருந்தன. வண்டி வண்டியாக எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது என்று ஆங்கிலக்குறிப்பு சொல்கிறது. தளம் மேலும் கீழுமாக மாறி விட்டது என்றும் சொல்கிறது. எனவே கீழடியில் கிடைக்கும் பானைத் துண்டுகளின் காலத்தை மதிப்பிடுவது கடினம். பிராமி எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகள் எந்த அடுக்கில் கிடைத்தன என்பதைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. அவை கடைசி அடுக்கில் கிடைத்திருந்தாலும் அதன் கால கட்டம் பொது ஆண்டுக்கு முன் ஆறாம் நூற்றாண்டு என்று சொல்ல முடியாது. அதிக பட்சமாக அதன் காலம் கிமு ஆறாம் நூற்றாண்டிலிருந்து கிமு மூன்றாம் நூற்றாண்டு வரை என்று சொல்லலாம். அப்படிச் சொல்வது கூடக் கடினம்.

சிந்துச் சமவெளி நாகரிகத்திற்கும் கீழடிக்கும் தொடர்பு இருக்கிறதா?

சிந்துச் சமவெளி நாகரிகத்திற்கு பின்வந்த எந்த இந்தியக்கலாச்சாரங்களுக்கும் அதோடு ஒரு இழையால் இணைக்கப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. இதனால் கீழடி சிந்துச் சமவெளி நாகரிகத்தோடு நேரடியாக இணைந்திருக்கிறது என்ற பொருள் அல்ல. அங்கிருந்தவர்கள் இங்கு நேரடியாக வந்து குதிக்கவில்லை. கீழடியில் கிடைக்கும் பானைக் கீறல்களை சிந்துச் சமவெளி நாகரிகத்தில் கிடைத்திருக்கும் குறியீடுகளோடு ஒப்பிடுவது பரிதாபகரமானது. அறிவிற்குப் புறம்பானது.

திட்டம் என்ன?

திட்டம் தெளிவானது. தமிழ் பிராமி அசோகன் பிராமிக்கும் முன்னால் என்று நிரூபிக்க வேண்டும். கரித்துண்டுகளின் காலத்தை பானையோடுகளின் காலத்தோடு இணைத்து, இரண்டும் ஒன்று என்று சொன்னால் தமிழுக்கு வரிவடிவம் அசோகன் பிராமி வருவதற்கு முன்னால் என்று நிறுவ முடியும். எனக்கும் அப்படி நிறுவ முடிந்தால் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் அது அறிவியல் பூர்வமாக இருக்க வேண்டும். இப்போது நடப்பது முற்றிலும் அறமில்லாத, அறிவியலுக்குப் புறம்பான செயல் என்றுதான் சொல்ல முடியும்.
தமிழ் பிராமி ஆறாம் நூற்றாண்டில் வந்தது என்றே வைத்துக் கொள்வோம். இதன் பொருள் தமிழில் எழுத்து முறை குறைந்தது ஆயிரம் ஆண்டுகள் வளர்ச்சியடையாமல் தேக்கத்தில் இருந்தது என்றுதான் பொருள். தமிழில் முழுமையான கல்வெட்டு பொது ஆண்டு நான்காம் நூற்றாண்டில்தான் கிடைக்கிறது. பானையில் கிடைப்பவையும் கல்வெட்டுகளில் கிடைப்பவையும் வெறும் பெயர்களும் – பாதி பிராகிருதப் பெயர்கள் – யார் யாருக்குக் கொடை செய்தார்கள் என்பவை மட்டும்தான். பல பிழைகள் மிகுந்தவை. மாறாக அசோகனின் கல்வெட்டுகள் விரிவான உலகைப் பற்றி அழகிய, மேம்பட்ட மொழியில் பேசுகின்றன். மொழியின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டால் அசோகன் பிராமி மொழிக்கும் பானைக்கீறல்களில் கிடைத்திருக்கும் மொழிக்கு மலைக்கும் மடுவிற்கும் இடையே உள்ள வித்தியாசம். தமிழன் ஆயிரம் ஆண்டுகள் சரியாக எழுத முடியாமல் இருந்தான், எழுதியதையே திரும்பத் திரும்ப எழுதிக் கொண்டிருந்தான் என்று சொல்பவர்கள்தாம் பானைக்கீறல்களின் வயதை வலிந்து பின் தள்ளுவார்கள். இன்னொன்றும் சொல்ல வேண்டும். இதே காலகட்டத்தில் சங்கப் பாடல்கள் வந்து விட்டன. அதன் அழகும், நுட்பமும் உலகறிந்தது. தமிழன் கவிதை மொழியில் உச்சத்தை அடைந்து விட்ட அதே காலகட்டத்தில் சரியாக எழுத முடியாமல் ஆயிரம் ஆண்டுகள் தடுமாறிக் கொண்டிருந்தான் என்று சொல்வது சரியாக இருக்குமா?
எனவே இவ்வாதாரத்தை வைத்துக் கொண்டு தமிழ் மொழி வரலாற்றைக் கட்டமைப்பது காற்றில் கயிறு திரிக்கும் வேலை. அறிவியல் அணுகுமுறை அல்ல.

கீழடி நம்பிக்கையில்லாத சமூகத்தைச் சார்ந்ததா?

அன்றைய சமூகத்தில் நம்பிக்கை என்பது பிரிக்க முடியாத அங்கம். மேலும் சங்க இலக்கியத்தில் இந்துக்கடவுளர் பேசப்படுகிறார்கள். அதற்குப் பிற்காலத்தை இந்துக் கடவுளர்கள் முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் கீழடியில் 1800 வருடக் கலாச்சாரத் தொடர்ச்சி இருக்கிறது என்று சொல்லிவிட்டு, மறுபக்கம் கீழடி நம்பிக்கை இல்லாத சமூகத்தைச் சார்ந்தது என்று சொல்வது அறிவுள்ள செயலாகாது.

முடிவாக…

1. கீழடி நகர நாகரிகம் அல்லது நதிக்கரை நாகரிகம் என்பதை நிறுவ இன்னும் வலுத்த ஆதாரங்கள் தேவை.
2. கீழடியில் கிடைத்த எல்லாப் பொருட்களும் 2500 ஆண்டுகளுக்கு முந்தையது என்று ஆராய்ச்சி சொல்லவில்லை. அவற்றில் பல இன்றைக்கு 800 ஆண்டுகளுக்கு முந்தையவை.
2. கரிமப்பகுப்பாய்வில் கிடைத்த காலம் கரித்துண்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். கீழடியில் கிடைத்த மற்ற பொருட்களுக்குப் பொருந்தாது.
3. கரித்துண்டுகளில் காலத்தை பானைத்துண்டுகள் மேல் ஏற்றுவது அறமாகாது. அதிகபட்சமாக பானைத்துண்டுகளின் காலம் கிமு ஆறாம் நூற்றாண்டிலிருந்து கிமு மூன்றாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று ஊகம் செய்யலாம். அதையும் பானைத்துண்டுகள் கரித்துண்டுகளுக்கு மிக அருகாமையில் அதே தளத்தில் கிடைத்திருந்தால் மட்டுமே சொல்ல முடியும்.
4. சிந்துசமவெளி நாகரிகத்தையும் கீழடியையும் நேரடியாக இணைப்பது அறிவார்ந்த செயலாகாது.
4. கீழடி நம்பிக்கை இல்லாத சமூகத்தைச் சார்ந்தது என்று சொல்வது நகைப்பிற்குரியது.

நான் மிகவும் பெருமை மிக்க தமிழன். தமிழின் தொன்மை அறிவியல்பூர்வமாக நிறுவப்பட்டால் அதிகம் மகிழ்ச்சி அடைவது நானாகத்தான் இருப்பேன். ஆனால் அரசியல் காரணங்களுக்காக அகழ்வாராய்ச்சியையும் மொழியாராய்ச்சியையும் பயன்படுத்துவது தமிழை இழிவு செய்வது என்று நான் திடமாக நம்புகிறேன்.

ஆங்கிலத்தில் படிக்க விரும்பினால்:
https://thefederal.com/the-eighth-column/2019/09/24/keeladi-excavation-raises-more-questions-than-answers/

4 thoughts on “கீழடி – சில முக்கியமான கேள்விகள்”

  1. 1.தமிழன் ஆயிரம் ஆண்டுகள் சரியாக எழுத முடியாமல் இருந்தான், எழுதியதையே திரும்பத் திரும்ப எழுதிக் கொண்டிருந்தான் என்று சொல்பவர்கள்தாம் பானைக்கீறல்களின் வயதை வலிந்து பின் தள்ளுவார்கள். இன்னொன்றும் சொல்ல வேண்டும்.
    2.இதே காலகட்டத்தில் சங்கப் பாடல்கள் வந்து விட்டன. அதன் அழகும், நுட்பமும் உலகறிந்தது. தமிழன் கவிதை மொழியில் உச்சத்தை அடைந்து விட்ட அதே காலகட்டத்தில் சரியாக எழுத முடியாமல் ஆயிரம் ஆண்டுகள் தடுமாறிக் கொண்டிருந்தான் என்று சொல்வது சரியாக இருக்குமா?

    I didn’t understand the relation between these two points. Taking from second 2.para if Sangam literature and songs came during this period then the roots should be even more older right. So saying this if the history is moved backward that makes sense right ? So pin thallugirargal meaning moving from 3rd to 6th century bc right. ?
    Please explain sir ?

    Like

    1. You don’t get it, don’t you? The epigraphic evidence suggests that Tamil Brahmi did not advance beyond a few names and verbs. The total output for 1200 years is just two pages. So on the one hand you say that he was advanced enough to write splendid poetry. On the other hand he is so backward that he was not able to improve his script for 1200 hours while in northern India the brahmi touched grand heights.

      Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s