தமிழ், வடமொழிகள் மற்றும் கீழடி – ஆதாரங்களின் வெளிச்சத்தில்

காலச்சுவடு செப்டம்பர் 2019ல் வெளியான கட்டுரை.

ஹெரோடடஸ் வரலாற்றின் தந்தை என அறியப்படுபவர். பொது நூற்றாண்டு தொடங்குவதற்கு ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் (500 BCE) இருந்தவர். இவர் எழுதிய ‘வரலாறுகள்’ புத்தகம் மிகவும் புகழ் பெற்றது. எந்த இனம் பழைய இனம் என்பதை ஆராய்ச்சி செய்த எகிப்திய ஃபாரோ ஒருவரைப் பற்றிய செய்தியை இவர் இப்புத்தகத்தில் தருகிறார். இரண்டு பிறந்த குழந்தைகளை ஆடு மேய்ப்பவரிடம் கொடுத்து மொழிப் பரிச்சயமே இல்லாமல் ஃபாரோ வளர்க்கச் சொன்னார். அவர் ஒழுங்காக வளர்க்கிறாரா என்பதும் கண்காணிக்கப்பட்டது. இரண்டு வருடங்கள் கழித்து குழந்தைகள் ஒருநாள் ‘பெக்கோஸ்’ என்று சொல்லிக் கொண்டு ஓடி வந்தன. ஃபாரோ ‘பெக்கோஸ்’ என்ற சொல்லுக்கு ஃப்ரீஜியன் மொழியில் ரொட்டி என்று பொருள் என்பதை அறிந்தார். எனவே ஃப்ரீஜியன் இனம் எகிப்திய இனத்தை விட முந்தையது என்ற முடிவிற்கு வந்தார்.
இச்சோதனை அறிவுப்பூர்வமானது என்று சொன்னால் இன்று நம்ப முடியுமா? ஏன் நம்பக் கூடாது? முதலாவது, இது யாரோ சொன்ன கதை. இரண்டாவது, குழந்தைகள் சொன்னது ‘பெக்கோஸ்’தான் என்பதும் மேய்ப்பவர் சொல்லித்தான் தெரிகிறது. இது போன்ற ஆதாரங்களை வைத்துக் கொண்டு எந்த முடிவிற்கும் வர முடியாது என்றுதான் இன்றைய அறிவியலை அறிந்தவர்கள் சொல்வார்கள் ஆனால் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்குப் பின்னரும் ஹெரோடடஸ் பேசுவதைப் போல தமிழில் சில அறிஞர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். உணர்ச்சிக் கொந்தளிப்பில் தொலைக்காட்சிகளில் மொழிகளின் பழமையைப் பற்றி அவர்கள் உளறுவதைக் கேட்டால் தமிழ்நாட்டில் அறிவுப்பூர்வமான விவாதங்கள் நடைபெற என்றும்வாய்ப்பே இல்லை என்ற உணர்வுதான் மேலோங்குகிறது.
தமிழ் உலகிலேயே மிகப் பழமையான மொழியா? அல்லது சமஸ்கிருதம் என்று அறியப்படும் வடமொழி உலகிலேயே மிகப் பழமையான மொழியா? அல்லது பிராகிருதம் பழமையான மொழியா?
மொழி என்றால் என்ன?
நம் எல்லோருக்கும் எழுத்துக்கு முன் பேச்சு வந்து விட்டது என்பது தெரியும். எப்போது மனிதன் பேசத் தொடங்கினான்? சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கும் முன்னால் இருக்கலாம் என வல்லுனர்கள் கருதுகிறார்கள். மனித குலம் ஹோமோ சேபியன்ஸ் என்று அறியப்படும் நிலையை அடைய பல லட்சம் ஆண்டுகள் ஆயின என்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டால். ஒரு லட்சம் ஆண்டுகள் என்பது மிகவும் சமீபத்தியது. மனிதன் எழுதுவதற்கு முன்னால் வரையத் துவங்கி விட்டான். அவன் விட்டுச் சென்ற மகத்தான ஓவியங்களை – நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை – இன்றும் காணலாம். இதற்கு அடுத்தபடியாக அவன் தான் கொன்ற மிருகங்கள் எத்தனை என்பதற்குக் கணக்கு (மரத்திலோ அல்லது எலும்பிலோ செதுக்கி) வைத்துக் கொள்ளத் துவங்கினான். இம்முறை தோன்றி சுமார் முப்பதாயிரம் ஆண்டுகள் ஆகி விட்டன. அடுத்த வளர்ச்சியாக குறியீடுகள் பிறந்தன. களிமண் வடிவங்களால் அவன் குறியீடுகளைச் செய்யத் துவங்கினான். உதாரணமாக பந்து வடிவம் ஆட்டைக் குறிக்கலாம். மூன்று பந்துகள் மூன்று ஆடுகளைக் குறிக்கலாம். இவ்வாறு துவங்கித்தான் எழுத்திற்கும் பேச்சிற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு மொழிகள் வளர்ச்சியடைந்தன. அவை இருபரிமாணங்களில், சுவர் களிமண் சதுரம் போன்ற தளங்களில், எழுதப்படத் துவங்கின. தரப்படுத்தப்பட்ட எழுத்துக்கள் உருவாக பல நூறாண்டுகள் எடுத்திருக்க வேண்டும். உதாரணமாக நான் இங்கு ஆடு என்று தமிழில் எழுதினால் இதைப் படிக்கத் தெரிந்த எல்லோருக்கும் நான் குறிப்பிடுவது ஆடு என்று உடனே புரிந்து விடும். அதை மாடு என்று தவறாக யாரும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறு தரப்படுத்தப்பட்ட எழுத்துக்களைக் கூட்டாகச் சேர்த்து எழுதுவது பிறந்து அதிக ஆண்டுகள் ஆகி விடவில்லை. சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்தான் அவை பிறந்தன.
மிகச் சமீப காலம் வரை உலகில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள்தாம் அதிகம் இருந்தார்கள். எல்லா நாகரிகங்களிலும் எழுத்து என்பது சமூகத்தின் உயர்நிலையில் இருந்தவர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்தது. 1820ல் உலகில் 12% சதவீத மக்கள் மட்டுமே எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள். 15ம் நூற்றாண்டு பிரான்சில் 6% மக்கள் மட்டுமே எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள். இந்தியாவிலும் இதை விட அதிகமாக இருக்க வாய்ப்பே இல்லை. அச்சடித்த புத்தகங்கள் பரவலாக வந்தபிறகுதான் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் அதிகமானார்கள். இருநூறு ஆண்டுகளுக்கு முன்வரை குறைந்த பட்சம் 95% இந்தியர்களுக்கு எழுதப்படிக்கத் தெரியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சதவீதத்தினருக்கு எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால் அது ஆச்சரியம். தமிழகத்திலும் இதே நிலைமைதான் இருந்திருக்க வேண்டும். காதால் கேட்பதை மனதில் வாங்கி அதைத் திரும்பச் சொல்வதுதான் பலருக்குக் கல்வியாக இருந்திருக்க வேண்டும்.
ஒரு லட்சம் ஆண்டுகளுக்கும் முன்னால் பேசத் துவங்கிய நாம், எழுத்துக்களை கிட்டத்தட்ட முழுவதும் நமதாக்கிக் கொண்டது மிகச் சமீபத்தில்தான். உரசிக்கொள்ளும் தூரம்தான்.
உலகின் பழைய மொழிகள் யாவை?
தமிழ் முதல்முதலாக எப்போது பேசப்பட்டது என்பதற்கு நம்மிடம் எந்தத் தரவுகளும் இல்லை. நமக்குக் கிடைத்திருக்கும் தமிழின் எழுத்து வடிவங்கள் என்று அறியப்படுபவை சுமார் 2300 ஆண்டுகள் பழமையானவை. 2500 ஆண்டுகள் என்றும் சிலர் சொல்கிறார்கள். எகிப்து மொழி எழுத்துக்கள் கொண்ட கல்லறைகள் அந்நாட்டில் தடுக்கி விழுந்தால் கிடைக்கின்றன். இவை மிகப்பழமையானவை. பல இன்றைக்கு 4700 ஆண்டுகளுக்கு (2700 BCE) முந்தையவை. அதாவது தமிழுக்கு 2200 ஆண்டுகள் பழமையானவை. இந்த 2200 ஆண்டுகளில் உலகெங்கும் சுமார் இருபத்து ஐந்து மொழிகளில் எழுத்துக்கள் கிடைத்திருக்கின்றன. இவற்றில் நமக்குப் பரிச்சயமான பழைய மொழிகளான எகிப்து, சுமேரியன், சீனம், அராமிக், ஹீப்ரூ, ஃபோனிஷியன், ஹிட்டைட், அக்கேடியன், கிரேக்கம் போன்ற மொழிகள் அடங்கும். இவற்றில் எழுதப் பட்டிருப்பவற்றில் பல வரலாற்றுத் தகவல்களைத் தருபவை. அக்கேடியன் மொழியில் 3800 ஆண்டுகளுக்கு முன்னால் பதிக்கப்பட்ட ஹம்முராபியின் சட்டம் (code of Hammurabi) 282 சட்டங்களை எழுத்து வடிவில் தந்திருக்கிறது.
தமிழ் மொழி குமரிக்கண்டத்தில் செழித்து வளர்ந்து கொண்டிருந்த்து அதன் இலக்கியச் செல்வங்களைக் கடல் அழித்து விட்டது போன்ற கதைகளை யாரும் நம்ப மாட்டார்கள். இதே போன்ற கடலால் அழிக்கப்பட்ட கதைகள் உலகெங்கும் புழங்கி வருகின்றன. எந்த மொழிக்கும் இக்கதையைச் சொல்லி அதன் பழமையை நிறுவலாம்.
எனவே இன்று வரை கிடைத்திருக்கும் எழுதப்பட்ட மொழிகளைப் பற்றிய தரவுகளின் அடிப்படையில் தமிழ் உலகின் மூத்த மொழியில்லை என்று உறுதியாகக் கூற முடியும். முதல் இருபத்து ஐந்தில் கூட வருமா என்பது சந்தேகம்தான். தமிழ்மொழிதான் உலகில் முதலில் பேசப்பட்ட மொழி என்று சொல்லலாமா? சொல்லலாம். ஆனால் அது அறிவியல் பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படாது. நமக்குள்ளே சொல்லிக் கொள்ள வேண்டியதுதான்.
இதே போன்று சமஸ்கிருதமும் உலகின் பழமையான மொழி என்று சொல்ல முடியாது.
இந்தியாவில் பேசப்பட்ட மொழிகள் எவை?
மொழிகளைப் பற்றிப் பேசும் முன்னால் நாம் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். பண்டைய வரலாற்றைப் பொறுத்த அளவில் சான்றுகள் என்று நமக்கு அளிக்கப்படுபவற்றில் பல எதையும் ஆணித்தரமாக நிறுவ உதவுவதில்லை. வேறு ஏதும் கிடைக்காததால் இவற்றைக் கட்டி அழ வேண்டியிருக்கிறது. இவற்றைப் போன்ற சான்றுகளை அறிவியற் துறைகளில் தொட்டுக் கூடப் பார்க்க மாட்டார்கள். எனவே சான்றுகள் கிடைத்து விட்டன, தமிழ் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மொழி, சமஸ்கிருதம் உலகிலேயே மூத்த மொழி என்றெல்லாம் சொல்லிக் கொண்டு மேலும் கீழும் குதிப்பது நகைப்பிற்குரியது. பெரும்பாலான சான்றுகள் இப்படி நடந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கலாம் என்று சொல்வதற்கு உதவியாக இருக்கின்றனவே தவிர, இப்படித்தான் நடந்தது என்று அறுதியாக நிறுவுவதற்கு உதவுவதில்லை. உலகம் முழுவதும் இதே கதை என்றாலும் இந்தியாவில் பண்டையக்காலத்தைக் குறித்து கிடைக்கும் சான்றுகள், எல்லோராலும் ஏற்கத்தக்க சான்றுகள் மிகவும் குறைவு. இந்திய வரலாற்றில் குறிப்பாக கால ஆராய்ச்சியும், மொழி ஆராய்ச்சியும், யார் எங்கிருந்து எங்கு சென்றார்கள் என்பது பற்றிய ஆராய்ச்சியும் பெரும்பாலும் ஊகங்களில் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன. அவை துறை வல்லுனர்களால் ஒப்புக்கொள்ளக் கூடிய ஊகங்களாக இருக்கலாம், அல்லது ஆமைகளைத் தொடர்ந்து தமிழன் உலகம் முழுவதும் சென்றான் போன்ற ஊகங்களாக இருக்கலாம்.
அறிவியல் என்ன சொல்கிறது?
தொல் இந்தியர்கள் என்று அறியப்படுபவர்கள் சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்னால் இங்கு சேர்ந்தடைந்தவர்கள். ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பியவர்கள். நம் மரபணுக்களில் ஐம்பதிலிருந்து அறுபது சதவீதம் மரபணுக்கள் தொல் இந்தியர்களைச் சார்ந்தவை என்று சோதனைகள் சொல்கின்றன. நமது பழங்குடி மக்களிடமிருந்து, தாங்கள் மிகவும் சுத்தமான பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வரை இது பொருந்தும்.
அறிவியல் சான்றுகளைக் கொண்டு வல்லுனர்கள் செய்யும் ஊகங்கள் என்ன?
இந்தியாவிற்கு வடமேற்கிலிருந்து வந்தவர்கள் (குறிப்பாக ஸக்ரோசியர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் –இரான், தென்கிழக்கு துருக்கி பகுதிகளைச் சேர்ந்தவர்கள்) தொல் இந்தியர்களுடன் கலந்து ஹரப்பா நாகரிகத்தை அமைத்தார்கள். இவர்களே தெற்கே வந்து இங்குள்ள தொல் இந்தியர்களுடன் கலந்து இன்று தென்னகத்தில் பரவலாக இருக்கும் தொல் தென்னிந்தியர்களாக (Ancestral South Indian) உருவானார்கள். இதே போன்று வட இந்தியாவிலும் இங்கிருப்பவர்களும் இன்று காகேசியர்கள், ஐரோப்பியர்கள், மத்திய ஆசியர்கள் என்று அழைக்கப்படுப்வர்களும் கலந்ததால் தொல் வட இந்தியர்களாக (Ancestral North Indians) உருவானார்கள். (இந்தியாவின் உயர்சாதி என்று அறியப்படுவர்களிடம் தொல் வட இந்தியர்களின் மரபணுக் கூறுகள் அதிகம் இருக்கின்றன, மற்றவர்களிடம் தொல் தென்னிந்தியர்களின் கூறுகள் அதிகம் இருக்கின்றன என்பதும் அறிவியல் பூர்வமாகத் தெரியவருகிறது).
இந்தச் செய்தி முக்கியமான ஒன்றைச் சொல்கிறது. திராவிடர்கள் என்று நாம் இன்று சொல்லிக் கொள்ளும் தொல் தென்னிந்தியர்களும் வந்தேறிகள் பரம்பரைதான். இவர்கள் முன்னால் வந்தார்கள். தொல் வட இந்தியர்கள் பின்னால் வந்தார்கள். அவ்வளவுதான்.
தொல் இந்தியர்கள் இந்தியாவிலிருந்து மற்ற இடங்களுக்கு பரவியிருக்க முடியாதா?
முடியாது என்றுதான் அறிவியற் தரவுகள் சொல்கின்றன. தொல் இந்தியர்களின் மரபணுக் கூறுகள் இந்தியாவிற்கு வெளியே அனேகமாக இல்லை.
இனி மொழிகளுக்கு வருவோம்.
இந்தியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்கள் பேசும் மொழிகள் இந்தோ ஐரோப்பிய மொழிகளைச் சார்ந்தவை. சுமார் இருபது சதவீத்த்தினர் திராவிட மொழிகளைப் பேசுகின்றனர். திராவிட மொழிகள் தொல் திராவிட மொழியிலிருந்து பிறந்தவை.
தொல் திராவிட மொழி எங்கிருந்து வந்தது?
தெற்கே வந்த தொல் தென்னிந்தியர்கள் தங்களோடு மொழியையும் கொண்டு வந்திருக்கலாம். சில ஆராய்ச்சியாளர்கள் இம்மொழி ஸாக்ரோசியப் பகுதியிலிருந்து வந்த்து என்று கருதுகிறார்கள். தொல் ஸாக்ரோசிய மொழி தொல் எலாமைட் மொழியாவும் தொல் திராவிட மொழியாகவும் பிரிந்தன. இதில் எலாமைட் மொழியிலிருந்து ப்ராஹுய் வந்தது (தொல் திராவிடத்திலிருந்து அல்ல). தொல் திராவிட மொழி தொல் வட திராவிட மொழியாகவும் தொல் தீபகற்பத் திராவிடமொழியாகவும் பிரிந்தது. குருக் மொழியும் மால்டோ மொழியும் (மேற்கு வங்காளம், ஜார்கண்ட் மாநிலங்களில் பேசப்படுபவை) தொல் வட திராவிட மொழியிலிருந்து பிறந்தன. தமிழ் போன்ற மொழிகள் தொல் தீபகற்ப திராவிட மொழியிலிருந்து பிறந்தன.
தொல் ஸார்கோசிய மொழி
|
தொல் எலாமைட் – தொல் திராவிடம்
| |
ப்ராஹூய் வட திராவிடம் – தீபகற்ப திராவிடம்
| |
குருக் மற்றும் தமிழ், தெலுங்கு
மால்டோ மற்றைய மொழிகள்
தமிழனின் மூதாதையர்களும் வெளியிலிருந்து வந்தவர்கள், தமிழ்மொழியின் தாய்மொழியும் வெளியிலிருந்து வந்ததுதான் என்று இம்மொழியியல் வல்லுனர்கள் சொல்கிறார்கள்!
வேத சமஸ்கிருதமும் வெளியிலிருந்து வந்ததுதான். வேத சமஸ்கிருதத்திற்கும் மூலமொழி இந்தோ-இரானியன் மொழி. இது அவெஸ்தா மொழியாகவும் வேத சமஸ்கிருதமாகவும் பிரிந்த்து என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள். சொல்லப்போனால் தமிழ் வெளியிலிருந்து வந்தது என்பதற்குக் கிடைத்திருக்கும் சான்றுகளை விட, சமஸ்கிருதம் வெளியிலிருந்து வந்தது என்பதற்குக் கிடைத்திருக்கும் சான்றுகள் அதிகம்.
சிந்துச் சமவெளி நாகரிகத்தின் மொழி என்ன?
சிந்துச் சமவெளி நாகரிகம் அல்லது ஹரப்பா நாகரிகம் இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் 2600-1900 BCE காலகட்டத்தில் தழைத்திருந்தது என்று வரலாறு சொல்கிறது. இன்றுவரை சிந்துச் சமவெளி நாகரிகத்தின் எழுத்துகள் என்ன சொல்கின்றன என்பதை யாராலும் அறிய முடியவில்லை. அது எழுத்துக்களே இல்லை, வெறும் வடிவங்கள்தாம் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். எழுதப் படிக்கத் தெரியாத மக்களிடையேயும் பெரிய நாகரிகங்கள் வளர்ந்து செழிக்க வாய்ப்பு இருக்கின்றன என அவர்கள் கருதுகிறார்கள். தமிழ் மொழியின் வரலாற்றை எழுதிய டேவிட் ஷுல்மான் அது திராவிட மொழியாக இருக்க முடியாது என்று கருதுகிறார். ஆனால் பல ஆராய்ச்சியாளர்கள் அது திராவிட மொழிகளில் ஒன்றாக இருக்கலாம் என்று கருதுகிறார்கள். அவர்களில் திரு ஐராவதம் மகாதேவன் ஒருவர்.
மகாதேவன் சொல்கிறார்.
1. சிந்துச் சமவெளி நாகரிகம் நகரத்தைச் சார்ந்தது; வேதகால ஆரிய நாகரிகம் மேய்ப்பர்கள் உலகத்தைச் சார்ந்தது
2. குதிரைகளே இல்லாதது, சிந்துச் சமவெளி நாகரிகம், ஆனால் வேதங்கள் குதிரைகளைப் பற்றியும் தேர்களைப் பற்றியும் பேசுகின்றன.
3. சிந்துச் சமவெளி முத்திரைகளில் புலிகள் காணப்படுகின்றன. புலியைப் பற்றி எந்தப்பதிவும் ரிக்வேதத்தில் இல்லை.
இச்சான்றுகளால் சிந்துச் சமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் இல்லை என்று நிறுவலாம். ஆனால் அதன் மொழி திராவிட மொழி நிறுவ என்று அவர் கடைசிவரை முயன்றார். ஆனால் முடியவில்லை.
ராகிகடி (Rakhigarhi) என்ற இடத்தில் கிடைத்த ஹரப்பா காலத்திய எலும்புக்கூட்டின் மரபணுக் கூறுகள் ஸாக்ரோசிய விவசாயிகளுக்கும் ஹரப்பாவில் இருப்பவர்களும் இடையான கலப்பு என ஆராய்ச்சி நிறுவுகிறது என்று ‘பழங்காலத்திய இந்தியர்கள்’ புத்தகத்தில் டோனி ஜோசஃப் சொல்கிறார். ஊடகங்களும் உலகப்புகழ் பெற்ற ‘ஸயின்ஸ்’ (Science) பத்திரிகை ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிடப் போகிறது என்ற செய்தியை வெளியிட்டன. ஆனால் பல மாதங்கள் ஆகியும் கட்டுரை வெளிவந்ததாகத் தெரியவில்லை. இல்லை, எலும்புக்கூடு ஆரிய எலும்புக்கூடுதான் என்று சிலர் சொல்லிக்கொண்டு அலைகிறார்கள்.
இதுவரை கிடைத்த சான்றுகளின் மூலம் சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர்கள் தொடர்பு இல்லாதது என்றோ, திராவிட நாகரிகத்திற்கு முன்னோடி என்றோ நிச்சயமாகச் சொல்லி விடமுடியுமா? சொல்ல முடியாது. இன்னும் தரவுகள் வேண்டும். ஆனால் அவ்வாறு ஊகிக்க முடியும். இதே போன்று சிந்துச் சமவெளி நாகரிகத்தின் மொழி என்ன என்பதையும் ஊகம்தான் செய்ய முடியும். ஐராவதம் மகாதேவன் செய்தது போல. அது தொல் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம்.
ஆனால் ஒன்றை இங்கு சொல்லியாக வேண்டும். சிந்துச் சமவெளி மொழி என்று சொல்லப்படுவது திராவிட குடும்பத்தைச் சேர்ந்த மொழி என்பது நிறுவப்பட்டாலும், சமஸ்கிருதம் அடங்கிய இந்தோ-ஐரோப்பிய குடும்பத்தைச் சார்ந்த பல மொழிகள், இதே காலகட்டத்தில் புழங்கி வந்திருக்கின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஊகங்களுக்கு அதிக இடம் கொடுக்க வேண்டிய தேவையே இல்லாமல் ஹிட்டைட் மொழியைச் சேர்ந்த கல்வெட்டுகள் படிக்கப்பட்டு விட்டன. எனவே தொல் திராவிட மொழி பழைய மொழியா அல்லது தொல் இந்தோ-ஐரோப்பிய மொழி பழைய மொழியா என்ற கேள்விக்கு உறுதியாக விடை கிடைப்பது கடினம்.
சிலர் சிந்துச்சமவெளி நாகரிகம் தோன்றும் முன்பே தொல் திராவிடமொழி பேசுபவர்கள் தெற்கே வந்தடைந்து விட்டார்கள் என்று கருதுகிறார்கள். மேய்ப்பர்களாக வந்த அவர்கள் பின்னால் விவசாயம் செய்யத் துவங்கியிருக்கலாம். இன்று வரை, சிந்துச் சமவெளியிலிருந்து தென்கோடி வரை Savannah Zone என்று அழைக்கக் கூடிய மேய்ச்சல் நிலங்கள் தொடர்ச்சியாக இருக்கின்றன.
எது எப்படியிருந்தாலும் தெற்கே இருந்து வடக்கே மொழிகள் சென்றிருக்கலாம் என்பதற்குச் சான்றுகள் அதிகம் இல்லை. வடக்கே இருந்து மொழிகள் தெற்கே வந்தன என்பதற்குச் சான்றுகள் இருக்கின்றன. எனவே ஒருவகையில் பார்க்கப்போனால் தமிழும் வடமொழிதான்.
வேதகால மொழி
சிந்துச் சமவெளி நாகரிக கால எழுத்துக்கள் என்று அறியப்படுபவைகளுக்குப் பின் இந்தியாவில் எழுத்துகள் மௌரியரகள் காலம் வரை கிடைக்கவில்லை. இடைவெளி சுமார் 1500 வருடங்களுக்கும் மேல் இருக்கலாம். இந்தக் காலகட்டத்தில்தான் வேதங்கள் வந்தன, ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. வேதங்களில் மிகப்பழமையான ரிக்வேத்த்தின் காலம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்று வல்லுனர்கள் சொல்கிறார்கள். எழுதாக்கிளவியாக பல நூற்றாண்டுகள் இருந்த வேதங்களின் சமஸ்கிருதம் வரி வடிவத்தில் மிகவும் பின்னால் எழுதப்பட்டது. வேதம் எழுதப்பட்ட மிகப் பழைய ஏடுகள் இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கிடைத்திருக்கின்றன. ஆனால் வேதங்களையும் உபநிடதங்களையும் எதிர்த்துத் தோன்றிய மதங்களான பௌத்தமும், ஜைனமும் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முந்தையவை என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அசோகரின் கல்வெட்டுகள் 2300 ஆண்டுகளுக்கு முந்தையவை. அவை பிராமணர்களைப் பற்றிப் பேசுகின்றன. மதங்களைப் பற்றிப் பேசுகின்றன. “.
வேதங்கள் எழுதப்பட்டவை சமஸ்கிருதத்தில். வேதகால சமஸ்கிருத்த்திற்கும் பின்னால் வந்த சமஸ்கிருதத்திற்கும் (பாணினியின் அஷ்ட்த்யாயிக்குப் பிறகு) வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் பின்னால் வந்த சமஸ்கிருதம் வேதகால மொழியிலிருந்து முற்றிலும தொடர்பற்றது என்று தற்குறிகள் மட்டுமே சொல்வார்கள். இரண்டிற்கும் பிரிக்க முடியாத, நெருங்கிய தொடர்பு இருக்கிறது. சமஸ்கிருதம் இந்தியாவில் குறைந்தது 3500 ஆண்டுகள் புழங்கி வந்திருக்கிறது. பெரிடேல் கீத் சொல்வது போல புத்த ஜாதகக் கதைகள் பிராமண ஆசிரியர்கள் பிராமண, க்ஷத்திரிய, வைசிய வகுப்புகளுக்குக் கல்வி கற்றுக் கொடுப்பதைப் பற்றிப் பேசுகின்றன. ராமாயண மகாபாரதக் கதைகள் புத்தர் காலத்திலேயோ அதற்குச் சற்று முன்போ வாய்மொழியாகப் புழங்கத் துவங்கி விட்டன என்று பல வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். மக்கள் வாழ்வோடு பின்னிப் பிணைந்த இக்கதைகளுக்கும் சமஸ்கிருத்த்திற்கும் உள்ள தொடர்பை நாம் ஒதுக்கி விட முடியாது. சமஸ்கிருத்த்திற்கு குறைந்தது 3500 வருடங்களுக்கு முன்பிருந்தே இலக்கியம் இருந்திருக்கிறது. பின்னால் பௌத்தர்களும் ஜைனர்களும் கூட சமஸ்கிருத மொழியில் தங்கள் படைப்புகளை எழுதத் துவங்கினார்கள்
இனி பிராகிருதத்திற்கு வருவோம்.
பிராகிருத மொழி
பிராகிருதத்திற்கும் சமஸ்கிருதத்திற்கும் இடையிலேயும் பிரிக்க முடியாத தொடர்பு இருக்கிறது. சிலர் பிராமணர்கள் பயன்படுத்திய மொழியான சமஸ்கிருதத்திற்கு எதிராக ஜைனர்களும் பௌத்தர்களும் படைத்த மொழி என்று பிராகிருதத்தைக் கருதுகிறார்கள். சிலர் பிராகிருதம்தான் மக்கள் பேசும் மொழியாக இருந்தது, அதிலிருந்துதான் பின்னால் வந்த சமஸ்கிருதம் பிறந்திருக்க முடியும் என்கிறார்கள். ஆனால் யாரும் பிராகிருதத்திற்கும் சமஸ்கிருதத்திற்கும் உறவே கிடையாது என்று சொல்லவில்லை. பிராகிருதம், சமஸ்கிருதம் இரண்டும் வேத சமஸ்கிருதத்தின் வயிற்றில் பிறந்த குழந்தைகள் என்பதுதான் உண்மை. எழுதுவதற்கு இரு மொழிகளும் பல நூற்றாண்டுகளுக்குப் பயன்படுத்தப் பட்டன. நாட்டிய சாஸ்திரம் எழுதிய பரத முனிவர் மூன்று மொழிகளை அடையாளப்படுத்துகிறார்; சமஸ்கிருதம், பிராகிருதம் மற்றும் தேசபாஷா (பிராந்திய மொழி). தண்டியின் காவியதர்சம் எழுதும் முறைகளில் (koines) நான்கு பிரிவுகளை அடையாளம் காண்கிறது; சமஸ்கிருதம், பிராகிருதம், அபப்ரம்சம் மற்றும் எல்லாம் சேர்ந்த கலவை.
ஷெல்டன் போலாக் இன்னும் தெளிவாகச் சொல்கிறார்: எழுத்தறிவு வந்த நான்கு நூற்றாண்டுகளுக்கு, கல்வெட்டுகள் போன்றவை ஆவணங்களைப் பதிவு செய்வதற்காகவே பயன்படுத்தப்பட்டன. இலக்கியத்திற்காக அல்ல. அதனால் அவை சமஸ்கிருதத்தில் எழுதப்படமால் பிராகிருத்த்தில் எழுதப்பட்டன. அன்றையக் கலாச்சாரப் பழக்கம் அவ்வாறாக இருந்தது.
உதாரணமாக, இன்று கவிதையில் எழுதப்பட்ட ஒரு அரசு அறிவிப்பையோ அறிக்கையையோ காட்ட முடியுமா? வடமொழி அன்று இலக்கியத்திற்கு மட்டுமே சொந்தமான மொழியாக இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. பிராகிருதம் உரைநடைமொழி. பின்னால் இப்பழக்கம் மாறி சமஸ்கிருத்த்திலும் கல்வெட்டுகள் வரத் துவங்கின.
சமஸ்கிருத வரிவடிவம்
வேதங்கள் வாய்வழியாக வந்ததால் வேத சமஸ்கிருத மொழிக்கு இலக்கணம் கிடையாது என்று எடுத்துக் கொள்ள முடியாது. அப்படியிருந்திருந்தால் அது என்ன சொல்கிறது என்பதை இன்று யாராலும் புரிந்து கொள்ள முடியாது. வாய்மொழிக்கும் இலக்கணம் தேவை. வாய்மொழிக்கு ஒலியியல், மொழியியல், சொற்கள், பேசும் முறை, வழக்கு போன்றவை எவ்வளவு தேவையோ அவ்வளவு இலக்கணமும் தேவை. ஒரு குழந்தை மொழியைப் படிக்கத் தெரியாமலேயே அதைத் தெளிவாகப் பேசிப் புரிந்துக் கொள்வதன் காரணம் இதுதான்.
பாணினிக்கும் பின் வந்த சமஸ்கிருதம் எந்த வரிவடிவத்தில் எழுதப்பட்டது?
முதலில் கரோஷ்டியில் (வலது பக்கத்திலிருந்து இடதுபக்கம் எழுதப்பட்ட வடிவம்); பின்னால் பிராமியில். பிராமியில் எழுதப்பட்டபோது, அசோகன் பிராமி, குஷான பிராமி, மற்றும் குப்தா பிராமி என்ற மூன்று வரிவடிவங்களில் எழுதப்பட்டது. குப்தபிராமி, சப்தமாத்ரிகா என்ற வரிவடிவமாக மாறியது. அதிலிருந்து தற்போது இருக்கும் தேவநாகரி பிறந்தது.
35 லட்சத்திற்கு அதிகமான ஏடுகளும் பழைய காலத்து ஆவணங்களும் இன்று இந்தியாவில் பாதுகாக்கப்படுகின்றன. அவற்றில் மூன்றில் இரண்டு சமஸ்கிருதத்தில் இருக்கின்றன. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மிகப்பழைய ஏடுகள் இன்றைக்கு ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் முந்தையவை (கில்கிட் ஏடுகள்). சமஸ்கிருதம் பல இடங்களில் பல வரிவடிவங்களில் எழுதப்பட்ட காரணம், அது இந்தியா முழுவதும் பரவியிருந்ததால்தான். தென்னகத்தில் கிரந்தத்தில் எழுதப்பட்டதற்கும், வடநாட்டில் தேவநாகரியில் எழுதப்பட்டதற்கும், காஷ்மீரத்தில் சாரதாவில் எழுதப்பட்டதற்கும் காரணம் அந்தந்த பகுதியினர் எளிதாகப் படித்துப் புரிந்து கொள்வதற்காக.
தமிழ்க் கல்வெட்டுகள்
தமிழ்மொழிக்கு வரிவடிவம் எவ்வாறு வந்தது?
தமிழ் மொழியியல் வல்லுனரான ஐராவதம் மகாதேவன் அது பிராமியிலிருந்து பிறந்தது என்கிறார். (பிராமி எழுத்துக்களே இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்தவை என்று சிலர் சொல்கிறார்கள்). தமிழில் எழுதுவதற்கு வசதியாக அசோகர் காலத்திய பிராமியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அது தமிழ் பிராமி என்று (அல்லது தமிழி) என்று அழைக்கப்பட்டது. இதற்குப் பிறகு வட்டெழுத்து வந்தது. பின்னால் இப்போது நாம் எழுதும் வரிவடிவம் வந்தது.
பேராசிரியர் ராஜன் போன்றவர்கள் பொருந்தல், கொடுமணல் போன்ற இடங்களில் கிடைத்திருக்கும் பானையோடுகளில் எழுதப்பட்டிருக்கும் வடிவங்களின் அடிப்படையில் தமிழ் பிராமி அசோக காலத்திய பிராமிக்கு முந்தையது என்கிறார்கள். ஆனால் ஹாரி ஃபால்க் போன்ற இந்தியவியலாளர்கள் அதை வலுவாக மறுக்கிறார்கள்.
நமக்கு இதுவரையில் கிடைத்திருக்கும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளின் (பானைகளில் எழுதப்பட்டிருப்பவற்றைத் தவிர – பானைகளிலும் முழு வாக்கியங்கள் கிடைக்க வாய்ப்புகள் குறைவு) கால இடைவெளி சுமார் அறுநூறு ஆண்டுகள். – முதல் கல்வெட்டு –இன்றைக்கு சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன்னால் செதுக்கப்பட்டது. கடைசிக் கல்வெட்டு இன்றைக்கு 1600 ஆண்டுகளுக்கு முன்னால். இவற்றில் செதுக்கப்பட்டவை எல்லாவற்றையும் ஒரே பக்கத்தில் எழுதி விடலாம். அதாவது அறுநூறு வருடங்களில் எழுதப்பட்டவற்றை ஒரே பக்கத்தில் அடைத்து விடலாம். எல்லாம் ஓரிரண்டு வரிகள்தாம். இவற்றில் பெரும்பாலானவை பெயர்கள். பல பிராகிருதச் சொற்களும் காணப்படுகின்றன.
மாறாக அசோக காலத்திய பிராமி கல்வெட்டுகள் விரிவானவை. பெரிய தூண்களிலும் பாறைகளிலும் பதிவு செய்யப்பட்டவை. அவை நமக்கு வரலாற்றைத் தருகின்றன. அன்றைய சமூகத்தின் வாழ்க்கை முறையைத் தெரிவிக்கின்றன. அவை பண்டைய இந்தியா முழுவதும் பரவிக் கிடக்கின்றன. எனவே தமிழ் பிராமியிலிருந்துதான் அசோகன் பிராமி பிறந்தது என்று சொல்வதற்கு இப்போது கிடைத்திருக்கும் தரவுகள் போதாது. இன்னும் வலுவான தரவுகள் வேண்டும்.
மேலும் தமிழகத்தில் கிடைத்திருக்கும்‘முழுமையான’ கல்வெட்டுகள் பல்லவர்கள் காலத்தில் துவங்குகின்றன். துவக்க காலத்தில் அவை அனைத்தும் பிராகிருதத்தில் இருக்கின்றன. மிகவும் பின்னால்தான் தமிழ் வருகிறது. தமிழகத்தில் முழுமையாகத் தமிழில் கிடைத்திருக்கும் கல்வெட்டு பூலான்குறிச்சிக் கல்வெட்டு என்று சொல்ல்லாம். பொ. ஆ. ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டு.
ஆனால் இதற்கு முன்னாலேயே முழுமையான சமஸ்கிருதக் கல்வெட்டுக்கள் இந்தியா முழுவதும் கிடைக்கத் துவங்கி விட்டன. பொ. ஆ இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிர்னார் கல்வெட்டு ஓர் உதாரணம்..
கீழடி
தாங்கள் மிகப்பெரிய நாகரிகத்தின் வாயிலில் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்த பின்பும், மொகஞ்சதாரோவில் அகழ்வாராய்ச்சி செய்த மார்ஷல் முதன்முதலாக பொதுமக்களிடம் அதைப் பற்றி அறிவிக்கும் போது சொன்னது இது: அகழ்வாராய்ச்சிக்காரர்களுக்கு… மிகப்பெரிய, மறக்கப் பட்ட நாகரிகத்தை கண்டுபிடிக்கும் வாய்ப்பு எளிதில் கிடைப்பதில்லை. ஆனால் இப்போது எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று தோன்றுகிறது. இப்படித்தான் உண்மையான அகழ்வாராய்ச்சியாளர்கள் பேசுவார்கள். புதைந்து போய்விட்ட நாகரிகத்தின் சுவடுகள் அவ்வளவு எளிதாகக் கிடைத்து விடாது.
உலகத்தின் பெருநதிக் கரைகளில் பண்டையக்கால நாகரிகங்கள் அமைந்திருந்தன என்பது நமக்குத் தெரிந்ததே . யூஃப்ரடிஸ்-டைக்ரிஸ் நதிகள், நைல் நதி, சிந்து நதி, மஞ்சள் நதி யாங்ஸே போன்ற நதிகள் மற்றும் அவற்றின் கிளை நதிகள் நனைக்கும் பகுதிகளில் நாகரிகங்கள் பல நூற்றாண்டு காலங்களாக செழித்து வளர்ந்திருக்கின்றன.
இவை ஏன் பெருநதிக்கரைகளிலேயே அமைந்திருந்தன?
இவற்றிற்குத் தேவையானவை விளைச்சல் நிலங்கள் மற்றும் பெருநகரங்கள். கூடவே இவற்றை உருவாக்குவதற்கான தொழில் நுட்பமும் தேவை. இந்நாகரிகங்கள் தொடர்ந்து வளரத் தேவையானவை: மக்கள் திரள், அவர்கள் சேர்ந்து வாழவகை செய்யும் சமுதாய அமைப்பு மற்றும் பண்டங்களைப் பரிவர்த்தனை செய்து கொள்ள வகை செய்யும் வணிக அமைப்பு. மேலும் தேவையானவை வளர்ச்சி பெற்ற எழுத்து முறை, கணிதம், பருவநிலைகளைக் கணிக்கக் கூடிய வானவியல் திறமை, நாட்காட்டிகளை அமைக்கக் கூடிய திறமை, தண்ணீர் வசதி, மக்கள் கூடும் பொதுக் கட்டிடங்கள், விரைவாகப் பயணம் செய்யக்கூடிய சாதனங்கள், தெருக்கள் போன்றவை. இவற்றில் பெரும்பாலானவை இருந்தாலும் விவசாயத்திலும் வணிகத்திலும் தொடர்ந்து உபரி வருமானம் கிடைத்தால் மட்டுமே நாகரிகம் பல நூற்றாண்டுகள் செயற்பட முடியும். மேலே சொல்லப்பட்ட. பெருநதிகளும் அவற்றின் கிளைகளும் நனைக்கும் பகுதிகள் பரந்து பட்டவை. அதனால்தான் இந்நாகரிகங்களுக்கு உபரி வருமானம் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருந்தன.. சிறுநதிக்கரைகளில் இது போன்ற நாகரிகம் அமைந்து பன்னூறாண்டுகள் தொடர்வது அரிதினும் அரிதானது.
.
கீழடி வைகை நதியோரத்தில் இருக்கிறது. வைகை நதி நனைக்கும் பகுதிகளின் பரப்பளவு, 7000 சதுர கிலோமீட்டர்கள். சிந்து நதி நனைக்கும் பகுதிகளின் பரப்பளவு 1,165,000 சதுர கிலோமீட்டர்கள். சிந்து நதி வற்றாத நதி. வைகை வானம் பார்த்த நதி. எனவே வைகைக்கரையில் நாகரிகம் ஒன்று பிறந்து அது பல நூற்றாண்டு தொடர்ந்து நீடித்திருந்த வாய்ப்புகள் மிகக் குறைவு. மேலும் கீழடியில் இதுவரை தோண்டப்பட்டிருக்கும் நிலப்பரப்பளவு மிகவும் குறைவானது. கிடைத்திருப்பவையும் மிகவும் அதிகமானவை என்று சொல்ல முடியாது. இதுவரை கிடைத்திருப்பற்றை வைத்துக் கொண்டு எந்த அகழ்வாராய்ச்சியாளரும் அறுதியான முடிவிற்கு வர முடியாது – நகரம் ஒன்று தமிழகத்தில் சுமார் 2200 ஆண்டுகளுக்கும் முன்னால் இருந்திருக்கக் கூடியதற்கான தடயங்கள் சில கிடைத்திருக்கின்றன என்பதைத் தவிர. ஆனால் நம் ஊடகங்கள் அலறத் துவங்கி விட்டன. இந்து Keezhadi excavation leads to ancient civilization on the banks of Vaigai என்ற தலைப்பில் செய்தியை வெளியிட்டது. அரைகுறை அரசியல்வாதிகளும் எழுத்தாளர்களும் ஏதோ தமிழகத்தின் வரலாற்றில் புதிய திருப்பம் நிகழ்ந்து விட்டது என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழனுக்குத்தான் சிந்துச்சமவெளி நாகரிகம் சொந்தம், அதன் தொடர்ச்சிதான் கீழடி என்றும் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மை என்ன?
சிந்துச் சமவெளி நாகரிகத்திற்கு கீழடிக்கும் இடையே குறைந்த்து 1800 ஆண்டுகள் இடைவெளியிருக்கின்றன. சிந்துச் சமவெளி நாகரிகம் வெங்கலக் காலத்தைச் சார்ந்த்து. கீழடி இரும்பு யுகத்தைச் சார்ந்தது. சிந்துச் சமவெளிக்கும் தமிழகத்திற்கும் இடையே பெரிய நிலப்பரப்பு இருக்கிறது. அங்கிருந்து இங்கு ஆகாயத்தில் பறந்து வந்து குதித்து விட முடியாது. தமிழகத்தில் கிடைத்தது போல, இடைப்பட்ட நிலப்பரப்புகளிலும் தோண்டினால் அடையாளங்கள் கிடைக்கலாம் – சிந்துச்சமவெளியிலிருந்து மக்கள் தமிழகத்திற்கு வந்தடைந்திருந்தால். மேலும் முன் சொன்னது போல நிலத்திலிருந்து உபரி வருமானம் கிடைத்து அதன் மூலம் பெரிய நகரங்களையும் பெரிய நாகரிகத்தையும் நிறுவுவதற்கு முக்கியமாகத் தேவையான இரண்டு. ஒன்று பெரிய மக்கள் தொகை. இரண்டாவது நிலம். சங்ககாலத் தமிழகத்தில் விவசாயம் பெருமளவில் நடந்திருக்க வாய்ப்பு இல்லை. காவிரி, வைகை, தாமிரபரணி நதிகளின் ஓரப்பகுதிகளைத் தவிர மற்றைய இடங்களில் காடுகள்தாம் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. மக்கள் தொகையும் அதிகம் இருந்திருக்க முடியாது. நெல் பயிரிட்டு பலன் காண்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். அதற்கு பெருத்த மக்கள் தொகை அவசியம். எனவே இவற்றிலிருந்து உபரி வருமானம் அதிகம் கிடைத்திருக்க முடியாது.

காட்டைத் திருத்திக் கழனியாக்கும் வேலை பெருமளவிற்கு நடந்தது பல்லவர், சோழர் காலத்தில் தான். கரஷிமா பெரிய ஏரிகளை அமைப்பதற்குத் தேவையாக இருந்த தொழில் நுட்பம் பல்லவர் காலத்திற்கு பிறகே வந்தது என்கிறார். மதகு போன்ற சொற்கள் கல்வெட்டுகளில் இடம் பெற்றது இந்தக் கால கட்டத்தில்தான் என்றும் அவர் சொல்கிறார். வியாபரம் சங்ககாலத்தில் நடந்தது என்றாலும், வியாபாரத்தையும் விவசாயத்தையும் சொந்தக்காரக் குழுக்களே நடத்தின, பெரிய அளவில் இரண்டும் வர்க்க அடிப்படையில் நடக்கத் துவங்கியது சங்ககாலத்திற்கு பின்புதான் என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள். எனவே வியாபாரத்திலிருந்தும் பெரிய உபரி வருமானம் கிடைத்திருக்க வாய்ப்பில்லை.
நமக்கு எழும் கேள்வி கீழடி தமிழர்களின் பெருமையை அறிவிக்கிறதா, இல்லையா என்பதாகத்தான் இருக்க வேண்டும். நிச்சயம் அது தமிழர்களின் பெருமையை அறிவிக்கிறது. குறைந்த இயற்கை வளங்களை வைத்துக் கொண்டு, தளராமல் கடுமையாக உழைத்து முன்னேறிய தமிழர்களின் அடையாளம் அது. அங்கு உலகையோ, இந்தியாவையோ உலுக்கும் அடையாளங்கள் ஏதும் கிடைக்கத் தேவையில்லை. நமது முன்னோர்கள் எப்படி வாழ்ந்தனர் என்பதை நமக்குக் காட்டுவதால் அது நமக்கும் இந்தியாவிற்கும் மிக முக்கியமானது. எனவே கீழடியை அணுகும் போது அது நமது என்ற உணர்வோடு நிச்சயம் அணுக வேண்டும். ஆனால் அது நமது என்பதாலேயே அதற்கு ஈடு இணை ஏதும் வேறு எங்கும் இல்லை என்ற கட்டாயம் இல்லை. அதைச் சிந்துச் சமவெளி நாகரிகத்தோடு உடனடியாகக் கோர்த்து விட அரசியல் கட்டாயங்களைத் தவிர எந்தக் கட்டாயமும் இல்லை.
முடிவாக…
தமிழ் ஐயாயிரம் ஆண்டுகள் பழமையானதா? தமிழ் பத்தாயிரம் ஆண்டுகள் பழமையானதாகக் கூட இருக்கலாம். ஆனால் நமக்கு இதுவரை அதற்குச் சான்றுகள் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. தமிழின் பழமையைப் பின்னுக்குத் தள்ளி இன்றுவரை தரப்பட்டிருக்கும் சான்றுகள் முகநூலிலும், வாட்ஸப்பிலும், குறுங்குழுக்களிலும், அறிவு சார்ந்த எதனுடனும் சிறிது கூடத் தொடர்பே இல்லாத ஊடகங்களிலும், சில பல்கலைக்கழங்களில் பேராசிரியர்கள் என்று சொல்லிக் கொண்டு அலைபவர்கள் மத்தியிலும், அரசியல் வட்டங்களிலும் செல்லுபடியாகும். ஆனால் உண்மையான அறிஞர்கள் நிச்சயம் புறந்தள்ளி விடுவார்கள்.
சமஸ்கிருதத்தைத் தூக்கிப் பிடித்து தேவபாஷை, அபௌருஷேயம் (மனிதர்களால் செய்யப்படாதது) என்று சொல்பவர்களுக்கும் இதே செய்திதான். .
தமிழிலேயே மிகப்பழமையான நூல் தொல்காப்பியம் என்று கூறப்படுகிறது. இல்லை என்பதற்கு பல சான்றுகள் இருக்கின்றன. பெரும்பாலான அறிஞர்கள் அதை பொ.ஆ ஐந்தாம் நூற்றாண்டிற்கும் பின்னால் தள்ளுகிறார்கள். அதை மிகப் பழைய நூலென்றே வைத்துக் கொண்வோம். அதுவும் வடசொற்களைக் குறிப்பிடுகிறது. “வடசொற் கிளவி, வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா குமே” என்கிறது. வடசொல் என்பது, சமஸ்கிருதம், பிராகிருதம், பாலி ஆகிய மொழிகளின் சொற்களைக் குறிக்கும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். தொல்காப்பியரே ‘ஐந்திரம் நிறைந்தவர்’ என்று அழைக்கப்படுகிறார். ஐந்திர வியாகரணம் சமஸ்கிருத இலக்கண வகைகளில் ஒன்று. தொல்காப்பியம் பிராமணர்களின் வாழ்க்கை முறை பற்றிப் பேசுகிறது. ‘அறுவகைப் பட்ட பார்ப்பனப்பக்கம்’ என்கிறது. வேதங்களை ஓதுதல், ஓதுவித்தல், வேட்டல் (யாகங்களைச் செய்தல்) வேட்டுவித்தல், ஈதல், ஏற்றல் என்பவை அறுவகை என அறியப்படுகின்றன. இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகள் பழமையான சங்க இலக்கியத்திலும் வேதங்களைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன. “ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை நான்மறை முதல்வர்” என்பது ஓர் உதாரணம். மிகப் பழமையான கல்வெட்டுகளிலும் வடமொழிகள் இயல்பாகக் கையாளப்படுகின்றன. பூலான்குறிச்சிக் கல்வெட்டும் – முழுமையாகத் தமிழில் கிடைத்த முதற் கல்வெட்டு – தேவகுலத்தையும், தாபதப்பள்ளியையும் (தவம் செய்பவர்கள் இருக்கும் இடம்) பிரம்மச்சாரிகளையும் குறிப்பிடுகிறது.
தமிழுக்கும் வடமொழிகளுக்கும் இடையே உள்ள உறவு தமிழ் வரலாறு எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது. உண்மைகளின் வெளிச்சத்தில் இம்மொழிகளைப் பார்த்தால் அவற்றின் இணக்கம் நமக்குத் தெளிவாகத் தெரியும். முரண்களும் இருந்தன. இவை இருந்ததால்தான் தமிழ் மொழி வளர்ந்து ஓங்க முடிந்தது. சமஸ்கிருதம் பேச்சு மொழியல்ல என்று சொல்வதும், சங்கத் தமிழ்மொழி பேச்சு மொழியல்ல என்று சொல்வதும் ஒன்றுதான். தற்காலத்தமிழோடு சங்கத்தமிழ் எவ்வாறு பிரியாமல் இணைந்திருக்கிறதோ, அதே போன்று சமஸ்கிருதமும் இந்தியாவின் மொழிகளோடு பிரியாமல் இணைந்திருக்கிறது.
“எவன் தன் மதத்தைப் பற்றி, அதன் மீது கொண்டிருக்கும் அதீதமான பற்றினால், மிகவும் உயர்வாகப் பேசுகிறானா, மற்ற மதங்களை இழிவு செய்கிறானோ.. அவன் தன் மதத்திற்குத் தீங்கே இழைக்கிறான்” என்று அசோகரின் கிர்னார் கல்வெட்டுச் சொல்கிறது.
மதங்களுக்குச் சொல்வது மொழிகளுக்கும் பொருந்தும்.
பி ஏ கிருஷ்ணன்

Bibliography
A little Book of Language, David Crystal, 2010
Indian Epigraphy, Richard Salomon, 1998
A History of Ancient and Medeival India, Upinder Singh 2017,
A concise History of South India, Noburu Karashima, 2014
Early Indians, Tony Joseph, 2018
Rice in Dravidian (paper), Franklin Southworth, 2011
Owner’ graffiti on Pottery from Tissamah, Harry Falk, 2010
Indus Valley Fantasies: Political Mythologies, Academic Careerism, and the Poverty of Indus Studies Steve Farmer and Michael Witzel, 2010
Edicts of King Ashoka: Ven S Dhammika, 1993
history of Sanskrit A Berriedale Keith, 1928

The language of Gods in the world of men, Sheldon Pollock, 2006
Tamil, A biography, David Shulman
Early Tamil Epigraphy, I Mahadevan, 2003
Speaking of Sanskrit, Bibek Debroy, 2016
Critical role of oral language in Reading – Elizabeth Brooke, 2018
Mirror of Tamil and Sanskrit, R Nagaswamy, 2012
Situating the beginning of early historic times in Tamil Nadu: some issues and reflections, K. Rajan, 2008

2 thoughts on “தமிழ், வடமொழிகள் மற்றும் கீழடி – ஆதாரங்களின் வெளிச்சத்தில்”

  1. சிந்து சமவெளி நாகரிகம் என்பது ஒரே நாகரிகம் அல்ல. பல குழுக்கள் இருந்திருக்க வேண்டும் அவற்றுக்குள் பூசலும் இருந்திருக்கலாம். பின்னர் அந்த நாகரிகம் அழிந்த போது ஒரு குழுவினர் கிழக்கு நோக்கி நகர்ந்து வேத நாகரிகமாகவும் மேற்கு நோக்கி நகர்ந்தவர்கள் இரானிய அவெஸ்த நாகரிகமாகவும் மாறியிருக்க வாய்ப்பிருக்கிறது. இந்த சிந்து நாகரிகத்தின் இன்னொரு பகுதியினர் தெற்கு நோக்கியும் நகர்ந்திருக்கக் கூடும்.

    Like

  2. terrific article but a couple of points, the dna results of rakigarhi are out which concludes there is no significant changes in its dna and the current poulace of south asia and the sanauli excavations in gangetic plains discovered bronze age chariots which refutes the iron age chariots of ait/amt theorists. iron forge dated 1900bce found in uttar pradesh tells us that iron was invented at the same date or earlier than any mesapatomian culture which takes back rig veda to a considerable time in the past. vedas didn’t speak about tigers because the place which was populated during that time was north and north west india which was devoid of tigers

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s