ஐஐடி சென்னையும் அண்ணா பல்கலைக் கழகமும்

இது தமிழர்கள் அனைவருக்கும் தெரிய வேண்டிய புள்ளி விவரம். நமக்குப் பெருமை தரக் கூடியது. என் நண்பர் பேராசிரியர் சி.என். கிருஷ்ணன் தொகுத்தது. பேராசிரியர் சி என். கிருஷ்ணன் ஐஐடி சென்னை மற்றும் ஐஐடி கான்பூரில் படித்தவர். 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியராக இருப்பவர்.

சென்னை ஐஐடி செலவு /ஆசிரியர் எண்ணிக்கை: வருடத்திற்கு ஒரு கோடி ரூபாய்.
அண்ணா பல்கலைக் கழகம் செலவு/ஆசிரியர் எண்ணிக்கை: 38 லட்சம் ரூபாய்
சென்னை ஐஐடி செலவு/மாணவர் எண்ணிக்கை: 7.5 லட்சம் ரூபாய்
அண்ணா பல்கலைக்கழகம்: செலவு/மாணவர் எண்ணிக்கை: 1.5 லட்சம் ரூபாய்

வேலை கிடைக்கும் மாணவர்களில் 50% மேல் கிடைக்கும் சம்பளம்:
ஐஐடி: 10 லட்சம் ரூபாய்
அண்ணா பல்கலைக் கழகம்: 4.5 லட்சம் ரூபாய்.

இதில் கவனிக்க வேண்டியது ஐஐடி மாணவனுக்கு அண்ணா பல்கலைகழக மாணவனை விட ஐந்து மடங்கு அதிகம் செலவாகிறது. ஆனால் சம்பளமோ இரண்டு மடங்கிற்கு சற்று மேல்தான் கிடைக்கிறது.

நிதியுதவியோடு செய்யும் ஆராய்ச்சியிலும் கலந்தாலோசிப்பதிலும் கிடைக்கும் வருமானம் சுமார் 8% ஐஐடியின் மொத்த செலவை ஈடு செய்கிறது என்றால், அண்ணா பல்கலைக் கழகத்தில் அதே வருமானம் 6% செலவை ஈடு செய்கிறது.

எனவே செலவிடும் பணத்தைக் கருத்தில் வைத்துப் பார்த்தால் அண்ணா பல்கலைக் கழகம் ஐஐடிக்கு எந்த விதத்திலும் குறைந்தது அல்ல என்பது தெளிவாகிறது. ஐஐடியில் செலவாவது போல இங்கும் செலவழித்தால் அது ஐஐடியை தூக்கி அடிக்க வாய்ப்பு இருக்கிறது.

நாங்கள் பல ஆண்டுகளாக மாநிலப் பலகலைக் கழகங்களில் ஆராய்ச்சிக்கு அதிகம் செலவழிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். மத்திய அரசிடம் பல முறைகள் காவடி எடுத்தும் அதிகப் பலன் ஏதும் இல்லை. அவர்கள் கண்ணுக்கு ஐஐடிகளும் மற்றைய ‘பெரிய’ நிறுவனங்களுதாம் தெரிகிறது. மாநில அரசிற்கு ஆராய்ச்சி மீது அதிக அக்கறையில்லை. தமிழ்நாடு போன்ற முன்னேறிய மாநிலங்களில் கூட நிலைமை சரியில்லை.

Leave a comment