அறிவியல் என்றால் என்ன?

அறிவியல் என்பது 17ம் நூற்றாண்டில் தோன்றியது அல்ல.

மனிதன்  தான் நினைத்ததை, உணர்ந்ததை சுவரில் வரைய செதுக்க என்று தொடங்கினானோ அன்றே அறிவியல் பிறந்து விட்டது. நோய்களைக் குணப்படுத்தும் முறைகளையும், இயற்கையின் மாறுபாடுகளையும், வானத்தின் இருக்கும் கோள்களின் பாதைகளை அளவிடுவதையும் நமது முன்னோர்கள் காலம் காலமாக  கொண்டிருக்கிறார்கள். இவை அனைத்தும் அறிவியல் சார்ந்ததுதான்.

ஆனால் கலீலியோவிற்குப் பின் 17ம் நூற்றாண்டில் உருப் பெற்ற தற்கால அறிவியல்  தனக்கென்று சில வரைமுறைகளைக் கொன்டிருக்கிறது. அவற்றை வைத்துத்தான் நமது அணுகுமுறை அறிவியல் பூர்வமானதா இல்லையா என்பதைக் கணக்கிட முடியும்.

அவ்வரைமுறைகள் என்ன?

1.   அறிவியல் என்பது அனுபவப் பூர்வமானது (empirical) விருப்பு வெறுப்பு இல்லாதது

அறிவியல் பார்க்கக்கூடிய, கணிக்கக் கூடிய, அளக்கக் கூடிய உலகத்தை, உலகங்களைப் பற்றித்தான் பேசும். அது அளவிட முடியாதவற்றைப் பற்றிப் பேசாது. ஆன்மாவைப் பற்றியோ, கடவுளைப் பற்றியோ பேசாது.

 அது அறிவியற் பூர்வமான கேள்விகளைக் கேட்கும்.

 எத்தகைய கேள்விகள் அறிவியற்பூர்வமானவை?

கேள்விகள் நம்மால் அளக்கக்கூடியவற்றைப் பற்றித்தான் இருக்க வேண்டும்.  அவை முன்முடிவுகளுக்கோ அல்லது கேள்வி கேட்பவர்களுக்கும் பதில் சொல்பவர்களுக்கும் இருக்கும் விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்கும் கேள்விகளாக இருக்கக் கூடாது. உதாரணமாக  கமலஹாசனின் அரசியல் நுழைவு தமிழகத்திற்கு நன்மை பயக்குமா பயக்காதா என்ற கேள்வி சுவராசியமானது. ஆனால் அறிவியலோடு எந்தத் தொடர்பும் இல்லாதது. பித்தம் வாதம் கபம் என்ற பிரிவுகள் அறிவியல் பூர்வமானவையா என்ற கேள்வி அறிவியற் பூர்வமானது. நாம் அவற்றை விருப்பு வெறுப்பன்றி புள்ளியியல் முறைப்படி கணித்து ஒரு முடிவிற்கு வர முடியும்.

2.   அறிவியல் என்பது முறையாகத் திட்டமிட்டுச் செயற்படுவது. அது தெளிவாகச் சொல்ல வந்தவற்றை குழப்பமின்றிச் சொல்லும்.

 முடிவுகள் எவ்வாறு அடையப்பட்டன என்பதை அறிவியல் தெளிவாகச் சொல்லும். சோதனைச் சாலையில் ஒரே சூழ்நிலையில் ஒரே முறையில் செய்யும் சோதனைக்கு  எனக்கு என்ன முடிவு வந்ததோ அதே முடிவுதான் உங்களுக்கும் வரும். அறிவியல் இருபொருள்படும்படி என்றும் பேசாது. அவர் சொன்னது இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம் என்று நாம் நினைத்தால் ஒன்று அவர் சொன்னது  அறிவியற் பூர்வமாக இருக்காது அல்லது நமக்கு அறிவியல் அறிவு போதாது. 

3.   அறிவியல் தர்க்கப் பூர்வமானது.

கிடைத்த தகவல்களை வைத்துக் கொன்டு தர்க்கப்பூர்வமான கருத்துகளை அடைய அறிவியல் எப்போதும் முற்படுகின்றது. அடைந்த கருத்துகளை முன்பே அறிந்த கருத்துகளோடு இணைக்கிறது. அப்படி இணைப்பது அறிவியல் வரைமுறைகளோடு, கட்டுப்பாடுகளோடு பொருந்தி இருக்க வேண்டும். இந்தத் தொடர் சங்கிலியைத் தொற்றிக் கொண்டுதான் அறிவியல் அறிஞர்கள் அடுத்த நிலைக்குச் செல்கிறார்கள். முடிவே இல்லாத சங்கிலி இது.

4.   அறிவியல் விளக்கம் அளிக்கும். அதனாலேயே அது பின்னால் என்ன நடக்கக்கூடும் என்பதைப் பற்றி கிட்டத்தட்ட துல்லியமாக அனுமானம் செய்கிறது.

அறிவியல் எல்லாவற்றிற்கும் விளக்கம் அளிக்க முயற்சி செய்யும்.

 ஒரு நிகழ்வு நடந்தால் அது நடப்பதற்குக் காரணம் என்ன, மறுபடியும் நடக்குமா, நடந்தால் மாற்றம் ஏதும் இன்றி நடக்குமா போன்றவற்றை அறிவியல் எப்போதும் தேடிக் கொண்டிருக்கும். அதனாலேயே அது கொள்கைகளையும் விதிகளையும் தேடி அலைகிறது. நடப்பதை மாற்ற முடியுமா, மாற்ற என்ன செய்ய வேண்டும். மாற்றினால் விதிகளும் மாறுமா என்பவற்றைப் பற்றி எல்லாம் அது தொடர்ந்து சிந்தனை செய்து கொண்டிருக்கும். அறிவியல் ஜோசியம் சொல்லாது. இது நடக்கும், நடக்காமல் இருப்பதற்கான வாய்ப்புகள் இவை என்பதை அது துல்லியமாகச் சொல்ல எப்போதும் முயற்சி செய்யும்

5.   அறிவியல் தன்னைத்தானே மிகக் கடுமையாக விமரிசனம் செய்து கொள்ளும். சோதனைகளைப் பொறுத்தே அதன் முடிவுகள் அமையும்.

அறிவியலின் அடிப்படை நேர்மை. தனது தவறை ஒப்புக்கொள்ளாத யாரும் அறிவியல் அறிஞனாக இருக்க முடியாது. எதையும் சந்தேகப்பட்டுச் சோதனைக்கு உள்ளாக்குவதே அறிவியல். ஒரு கருத்து அறிவியலாளனுக்குத் தோன்றினால், அவன் அதற்குச் சாதகமான சான்றுகளைத் தேடுவதற்கு முன்னால்  எதிரான சான்றுகளைத்தான் தேடுவான்.

6.   அறிவியல் மக்களுக்குச் சொந்தம்.

அறிவியல் வழிமுறைகள், சோதனைகள், முடிவுகள், விவாதங்கள் போன்றவை எல்லோருக்கும் சொந்தமானவை. 

அறிவியல்வாதி மந்திரவாதி அல்ல.

 

 

இவை அறிவியலுக்கு மட்டும் அல்ல, மற்றைய துறைகளுக்கும் ஏறத்தாழப் பொருந்தும். குறிப்பாக, புள்ளியியல், மருத்துவம், விவசாயம், பொருளாதாரம், வரலாறு, அகழ்வாராய்ச்சி, கால ஆராய்ச்சி போன்றவற்றிற்கும் பொருந்தும்.

( லாரன்ஸ் குஸ்நார் என்ற மானுடவியல் அறிஞர் கூறியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டது)

1 thought on “அறிவியல் என்றால் என்ன?”

  1. ஏனோ அறிவியல் மக்களுக்கு சொந்தம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காப்புரிமை, அறிவியலில் தொடங்கி சகலத்தையும் மெல்ல மெல்ல ஆரம்பித்தது. அறிவியலும் அது விளைவிக்கும் பொருட்களும், பொருள் உடையவனிடம் மட்டும் அடைக்கலமாவது என்பது எங்கள் அபிப்பிராயம்.
    நன்றி.

    Like

Leave a comment