நாடாளுமன்ற நாடகங்கள்

நாடகம் காட்டியே ஐம்பது வருடங்கள் காலம் தள்ளியவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினர். இப்போது நாடாளுமன்றத்தில் நடந்தேறியிருப்பதும் அப்பட்டமான நாடகம்தான். தமிழ் ஊடகங்களில் இதைப்பற்றி விவாதங்கள் நடக்கும் என்பது உறுதி. நாங்கள் தனித்துவம் படைத்தவர்கள் என்று தங்களைத் தாங்களே திமுகவினர் விதந்தோதிக் கொள்வார்கள் என்பதும் உறுதி. நாடாளுமன்றத்தில் பெரியார் வாழ்க, கலைஞர் வாழ்க, தளபதி வாழ்க, தமிழ் வாழ்க, பெரியாரியம் வாழ்க எம்ஜியார் வாழ்க, ஜெயலலிதா வாழ்க போன்ற பல கோஷங்கள். இவர்களில் யாரும் தமிழ்மக்கள் வாழ்க என்று கோஷமிடவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். இவர்களில் யாருக்கும் தமிழ்மக்கள் மீது கரிசனம் கிடையாது. நாடகம் காட்டுவதில்தான் முனைப்பு. நாடாளுமன்றக் காண்டீன் வாழ்க என்று யாரும் கோஷமிடவில்லை என்று அறிகிறேன். சிறிது ஆறுதலாக இருக்கிறது.

வாழ்க பெரியார், வாழ்க பெரியாரியம் என்று நாடாளுமன்றத்தில் சொல்வது தவறில்லை என்றால் ஜெய் ஸ்ரீராம் என்றும் வாழ்க சாவர்க்கர், வாழ்க கோட்சே என்றும் அங்கு சொல்வதில் எந்தத் தவறும் இல்லை. கோட்சே காந்தியைக் கொன்றவர் என்றால் பெரியார் காந்தி படத்தை எரித்தவர். காந்தி ஒழிய வேண்டும் என்று உரக்கச் சொன்னவர். இந்திய ஒருமைப்பாட்டிற்கு மிகப் பெரிய எதிரி பெரியார். சாவர்க்கர் மதச்சார்பற்ற இந்தியாவிற்கு எதிரி. இருவரும் இன்றைய இந்தியாவின் எதிரிகள். பெரியாரின் படு கேவலமான நாசி இனவெறிவாதத்திற்கும் இந்துத்துவத்திற்கும் வித்தியாசம் இல்லை.

திராவிட முன்னேற்றக்கழக உறுப்பினர்கள் எதுவும் உருப்படியாகத் தமிழ்மக்களுக்குச் செய்யப்போவதில்லை. கூச்சல் போடுவார்கள். வெளிநடப்புச் செய்வார்கள். படம் காட்டியே பிழைப்பு நடத்தியவர்கள். தமிழ் வாழ்க என்று பாராளுமன்றத்தில் சொல்லி ஆகப்போவது ஒன்றும் இல்லை. தமிழை முதலில் தமிழகத்தில் வாழவைக்க வேண்டும். கருணாநிதியின் குப்பை இலக்கியத்தையும் மூன்றாம்தரத் திரைப்படங்களையும் மக்களிடையே பரப்பியதைத் தவிர திமுக தமிழுக்காக ஏதும் சொல்லிக் கொள்ளும்படிச் செய்தத்தில்லை என்பது தமிழ்மக்கள் அறிந்த உண்மை. தமிழ் இவர்கள் கூச்சல் போடாவிட்டாலும் வாழும். இன்னும் ஆரோக்கியமாக வாழும்.
காங்கிரஸ் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பின்னால் சவலைக் குழந்தை போல விரலைச் சூப்பிக் கொண்டு நடந்தால், இப்போது கிடைக்கும் ஓட்டுகள் கூட கட்சிக்குத் தமிழகத்தில் கிடைக்காது.

1 thought on “நாடாளுமன்ற நாடகங்கள்”

  1. ஜெய் சிறீ இராம் என்ற அறைகூவலுக்கு பதிலாகத்தான் வாழ்க பெரியார் என்றும் வாழ்க தமிழகம் என்றும் வாழ்த்தொலிகள் எழுந்தன.

    முன்னதைப் பின் நடந்ததாகவும் பின்னதை முன் நடந்ததாகவும் சொல்வதற்குப்பெயர்தான் திரிபு வேலை.

    சரி , தமிழகம் வாழ்க எனில் தமிழர்களும் வாழ்க என்றுதானே பொருளென்பது புரியாமற் போனதும் , ஜெய் சிறீ இராம் என்பதற்கு பதிலாக இந்திய மக்கள் வாழ்க என்று ஏன் கோஷமிடவில்லை என்று கேட்காமற் போனதற்கும் உங்கள் மறதி மட்டுமே காரணம் என்று எனது முழு அப்பாவித்தனத்தையும் திரட்டி நம்ப முயல்கின்றேன்.

    Like

Leave a comment