திரு மகுடேசுவரனின் மறுப்புரைக்கு எதிர்வினை

திரு மகுடேசுவரனுக்கு பதில் சொல்வதற்கு முன்னால் சிலவற்றைத் தெளிவு படுத்த விரும்புகிறேன்.

(காலச்சுவடு செப்டம்பர் 2019ல் வெளியான என் கட்டுரையின் சில பகுதிகள் இங்கு இடம் பெறுகின்றன.)

ஹெரோடடஸ் வரலாற்றின் தந்தை என அறியப்படுபவர். பொது நூற்றாண்டு தொடங்குவதற்கு ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் (500 BCE) இருந்தவர். இவர் எழுதிய ‘வரலாறுகள்’ புத்தகம் மிகவும் புகழ் பெற்றது. எந்த இனம் பழைய இனம் என்பதை ஆராய்ச்சி செய்த எகிப்திய ஃபாரோ ஒருவரைப் பற்றிய செய்தியை இவர் இப்புத்தகத்தில் தருகிறார். இரண்டு பிறந்த குழந்தைகளை ஆடு மேய்ப்பவரிடம் கொடுத்து மொழிப் பரிச்சயமே இல்லாமல் ஃபாரோ வளர்க்கச் சொன்னார். அவர் ஒழுங்காக வளர்க்கிறாரா என்பதும் கண்காணிக்கப்பட்டது. இரண்டு வருடங்கள் கழித்து குழந்தைகள் ஒருநாள் ‘பெக்கோஸ்’ என்று சொல்லிக் கொண்டு ஓடி வந்தன. ஃபாரோ ‘பெக்கோஸ்’ என்ற சொல்லுக்கு ஃப்ரீஜியன் மொழியில் ரொட்டி என்று பொருள் என்பதை அறிந்தார். எனவே ஃப்ரீஜியன் இனம் எகிப்திய இனத்தை விட முந்தையது என்ற முடிவிற்கு வந்தார்.
இச்சோதனை அறிவுப்பூர்வமானது என்று சொன்னால் இன்று நம்ப முடியுமா? ஏன் நம்பக் கூடாது? முதலாவது, இது யாரோ சொன்ன கதை. இரண்டாவது, குழந்தைகள் சொன்னது ‘பெக்கோஸ்’தான் என்பதும் மேய்ப்பவர் சொல்லித்தான் தெரிகிறது. இது போன்ற ஆதாரங்களை வைத்துக் கொண்டு எந்த முடிவிற்கும் வர முடியாது என்றுதான் இன்றைய அறிவியலை அறிந்தவர்கள் சொல்வார்கள் ஆனால் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்குப் பின்னரும் ஹெரோடடஸ் பேசுவதைப் போல தமிழில் சில அறிஞர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

மொழி என்றால் என்ன?
நம் எல்லோருக்கும் எழுத்துக்கு முன் பேச்சு வந்து விட்டது என்பது தெரியும். எப்போது மனிதன் பேசத் தொடங்கினான்? சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கும் முன்னால் இருக்கலாம் என வல்லுனர்கள் கருதுகிறார்கள். மனித குலம் ஹோமோ சேபியன்ஸ் என்று அறியப்படும் நிலையை அடைய பல லட்சம் ஆண்டுகள் ஆயின என்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டால். ஒரு லட்சம் ஆண்டுகள் என்பது மிகவும் சமீபத்தியது. மனிதன் எழுதுவதற்கு முன்னால் வரையத் துவங்கி விட்டான். அவன் விட்டுச் சென்ற மகத்தான ஓவியங்களை – நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை – இன்றும் காணலாம். இதற்கு அடுத்தபடியாக அவன் தான் கொன்ற மிருகங்கள் எத்தனை என்பதற்குக் கணக்கு (மரத்திலோ அல்லது எலும்பிலோ செதுக்கி) வைத்துக் கொள்ளத் துவங்கினான். இம்முறை தோன்றி சுமார் முப்பதாயிரம் ஆண்டுகள் ஆகி விட்டன. அடுத்த வளர்ச்சியாக குறியீடுகள் பிறந்தன. களிமண் வடிவங்களால் அவன் குறியீடுகளைச் செய்யத் துவங்கினான். உதாரணமாக பந்து வடிவம் ஆட்டைக் குறிக்கலாம். மூன்று பந்துகள் மூன்று ஆடுகளைக் குறிக்கலாம். இவ்வாறு துவங்கித்தான் எழுத்திற்கும் பேச்சிற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு மொழிகள் வளர்ச்சியடைந்தன. அவை இருபரிமாணங்களில், சுவர் களிமண் சதுரம் போன்ற தளங்களில், எழுதப்படத் துவங்கின. தரப்படுத்தப்பட்ட எழுத்துக்கள் உருவாக பல நூறாண்டுகள் எடுத்திருக்க வேண்டும். உதாரணமாக நான் இங்கு ஆடு என்று தமிழில் எழுதினால் இதைப் படிக்கத் தெரிந்த எல்லோருக்கும் நான் குறிப்பிடுவது ஆடு என்று உடனே புரிந்து விடும். அதை மாடு என்று தவறாக யாரும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறு தரப்படுத்தப்பட்ட எழுத்துக்களைக் கூட்டாகச் சேர்த்து எழுதுவது பிறந்து அதிக ஆண்டுகள் ஆகி விடவில்லை. சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்தான் அவை பிறந்தன.

உலகின் பழைய மொழிகள் யாவை?
தமிழ் முதல்முதலாக எப்போது பேசப்பட்டது என்பதற்கு நம்மிடம் எந்தத் தரவுகளும் இல்லை. நமக்குக் கிடைத்திருக்கும் தமிழின் எழுத்து வடிவங்கள் என்று அறியப்படுபவை சுமார் 2300 ஆண்டுகள் பழமையானவை. எகிப்து மொழி எழுத்துக்கள் கொண்ட கல்லறைகள் அந்நாட்டில் தடுக்கி விழுந்தால் கிடைக்கின்றன். இவை மிகப்பழமையானவை. பல இன்றைக்கு 4700 ஆண்டுகளுக்கு (2700 BCE) முந்தையவை. அதாவது தமிழுக்கு 2200 ஆண்டுகள் பழமையானவை. இந்த 2200 ஆண்டுகளில் உலகெங்கும் சுமார் இருபத்து ஐந்து மொழிகளில் எழுத்துக்கள் கிடைத்திருக்கின்றன. இவற்றில் நமக்குப் பரிச்சயமான பழைய மொழிகளான எகிப்து, சுமேரியன், சீனம், அராமிக், ஹீப்ரூ, ஃபோனிஷியன், ஹிட்டைட், அக்கேடியன், கிரேக்கம் போன்ற மொழிகள் அடங்கும். இவற்றில் எழுதப் பட்டிருப்பவற்றில் பல வரலாற்றுத் தகவல்களைத் தருபவை. அக்கேடியன் மொழியில் 3800 ஆண்டுகளுக்கு முன்னால் பதிக்கப்பட்ட ஹம்முராபியின் சட்டம் (code of Hammurabi) 282 சட்டங்களை எழுத்து வடிவில் தந்திருக்கிறது. எனவே தமிழை உலகின் மிகப் பழைய மொழி என்று சொல்ல முடியாது. இதே போன்று சமஸ்கிருதத்தையும் உலகின் பழமையான மொழி என்று சொல்ல முடியாது.
இந்தியாவில் பேசப்பட்ட மொழிகள் எவை?
மொழிகளைப் பற்றிப் பேசும் முன்னால் நாம் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். பண்டைய வரலாற்றைப் பொறுத்த அளவில் சான்றுகள் என்று நமக்கு அளிக்கப்படுபவற்றில் பல எதையும் ஆணித்தரமாக நிறுவ உதவுவதில்லை. வேறு ஏதும் கிடைக்காததால் இவற்றைக் கட்டி அழ வேண்டியிருக்கிறது. இவற்றைப் போன்ற சான்றுகளை அறிவியற் துறைகளில் தொட்டுக் கூடப் பார்க்க மாட்டார்கள். எனவே சான்றுகள் கிடைத்து விட்டன, தமிழ் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மொழி, சமஸ்கிருதம் உலகிலேயே மூத்த மொழி என்றெல்லாம் சொல்லிக் கொண்டு மேலும் கீழும் குதிப்பது நகைப்பிற்குரியது. பெரும்பாலான சான்றுகள் இப்படி நடந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கலாம் என்று சொல்வதற்கு உதவியாக இருக்கின்றனவே தவிர, இப்படித்தான் நடந்தது என்று அறுதியாக நிறுவுவதற்கு உதவுவதில்லை. உலகம் முழுவதும் இதே கதை என்றாலும் இந்தியாவில் பண்டையக்காலத்தைக் குறித்து கிடைக்கும் சான்றுகள், எல்லோராலும் ஏற்கத்தக்க சான்றுகள் மிகவும் குறைவு. இந்திய வரலாற்றில் குறிப்பாக கால ஆராய்ச்சியும், மொழி ஆராய்ச்சியும், யார் எங்கிருந்து எங்கு சென்றார்கள் என்பது பற்றிய ஆராய்ச்சியும் பெரும்பாலும் ஊகங்களில் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன. அவை துறை வல்லுனர்களால் ஒப்புக்கொள்ளக் கூடிய ஊகங்களாக இருக்கலாம், அல்லது ஆமைகளைத் தொடர்ந்து தமிழன் உலகம் முழுவதும் சென்றான் போன்ற ஊகங்களாக இருக்கலாம்.
அறிவியல் என்ன சொல்கிறது?
தொல் இந்தியர்கள் என்று அறியப்படுபவர்கள் சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்னால் இங்கு சேர்ந்தடைந்தவர்கள். ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பியவர்கள். நம் மரபணுக்களில் ஐம்பதிலிருந்து அறுபது சதவீதம் மரபணுக்கள் தொல் இந்தியர்களைச் சார்ந்தவை என்று சோதனைகள் சொல்கின்றன. நமது பழங்குடி மக்களிடமிருந்து, தாங்கள் மிகவும் சுத்தமான பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வரை இது பொருந்தும்.

அறிவியல் சான்றுகளைக் கொண்டு வல்லுனர்கள் செய்யும் ஊகங்கள் என்ன?
இந்தியாவிற்கு வடமேற்கிலிருந்து வந்தவர்கள் தொல் இந்தியர்களுடன் கலந்து ஹரப்பா நாகரிகத்தை அமைத்தார்கள். இவர்களே தெற்கே வந்து இங்குள்ள தொல் இந்தியர்களுடன் கலந்து இன்று தென்னகத்தில் பரவலாக இருக்கும் தொல் தென்னிந்தியர்களாக (Ancestral South Indian) உருவானார்கள். இதே போன்று வட இந்தியாவிலும் இங்கிருப்பவர்களும் இன்று காகேசியர்கள், ஐரோப்பியர்கள், மத்திய ஆசியர்கள் என்று அழைக்கப்படுப்வர்களும் கலந்ததால் தொல் வட இந்தியர்களாக (Ancestral North Indians) உருவானார்கள். இந்தச் செய்தி முக்கியமான ஒன்றைச் சொல்கிறது. திராவிடர்கள் என்று நாம் இன்று சொல்லிக் கொள்ளும் தொல் தென்னிந்தியர்களும் வந்தேறிகள் பரம்பரைதான். இவர்கள் முன்னால் வந்தார்கள். தொல் வட இந்தியர்கள் பின்னால் வந்தார்கள். அவ்வளவுதான். தொல் இந்தியர்கள் இந்தியாவிலிருந்து மற்ற இடங்களுக்கு பரவியிருக்க முடியாதா? முடியாது என்றுதான் அறிவியற் தரவுகள் சொல்கின்றன. தொல் இந்தியர்களின் மரபணுக் கூறுகள் இந்தியாவிற்கு வெளியே அனேகமாக இல்லை.

இந்தப் பின்புலத்தில் பார்த்தால் இந்திய நிலப்பரப்பில் பல பகுதிகளில் மக்கள் குழுக்களாக வசிக்கத் துவங்கியதைச் சார்ந்து மொழிகள் உருவாயின. அவற்றிலிருந்து வந்தவைதான் இன்று பிழைத்திருக்கும் மொழிகள். எனவே இன்று பிழைத்திருக்கும் மொழிகளில் எந்த மொழியிலிருந்தும் மற்றைய மொழிகள் கிளைத்தன என்று கூறுவதற்கு வலுவான சான்றுகள் தேவை. தமிழை அவ்வாறு கூறுவதற்கு எந்தச் சான்றுகளும் இல்லை என்றுதான் உலக மொழி வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

இனி திரு மகுடேசுவரனின் மறுப்புரைக்கு வருவோம்:

இலக்கியச் சான்றுகளில் உள்ள தொடர்கள்வழியாகத் தமிழ்மொழி நிலைத்த நிலப்பரப்பினை வரையறுக்கிறீர்கள். வடவேங்கடத்திற்கு வடக்கே பேசப்படவில்லை என்பன இலக்கியச் சான்றுகள். இந்த வரையறை இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டு வரம்புக்குள் வந்துவிடுகிறது. அவ்வாறே இருக்கட்டும். பெண்ணையாற்றுக்குத் தெற்கே என்று அதன் வரம்பினைச் சற்றே நிறைவாய் வரையறுக்கலாம். அதற்கும் அப்பாலான பரப்பில் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்குப் பிந்திய நிலையில் தமிழ்மொழி வழங்கப்படவில்லை என்பது உங்கள் தரப்பு. இருக்கட்டும். இந்தியாவின் மாபெரும் பேரரசான சாதவாகனப் பேரரசுக் காலத்தில் தமிழின் வடபுலத்து நிலை என்ன என்பது ஒரு வரையறை. கரும்பெண்ணை (கிருட்டிணை ஆறு) ஆற்றுப் படுகையில் இன்றைய நாகார்ச்சுன சாகர அணைக்கட்டுக்குள் மூழ்கிக் கிடக்கும் சாதவாகன அரசர்களின் தொல்லியல் எச்சங்கள் அணைக்கட்டின் நடுவேயுள்ள அருங்காட்சியகத்தில் காவற்பட்டுள்ளன. சாதவாகனச் சதகர்ணியான ஹாலா என்பவர் இயற்றியது காஹாசப்தசதி என்ற ஏழ்நூறு பாடல்களைக்கொண்ட நூல். அந்நூல் தமிழ்ச்சங்கத்தின் அகப்பாடல்களின் கருப்பொருள்களைக்கொண்டது. சாதவாகனர் நாணயங்களில் தமிழ் எழுத்துரு வகைமைகள் அந்த மொழிச்செல்வாக்கினை உணர்த்துவதாக இல்லையா?

காதா சப்தசதி அல்லது காஹா சத்தசாய் பற்றி வடமொழியிலும் தமிழிலும் புலமை மிக்க George L Hart கூறுவது இது:

This evidence taken together suggests strongly that both Tamil and Sanskrit derived their shared conventions, metres, and techniques from a common source, for it is clear that neither borrowed directly from the other. Tamil did not borrow from Sanskrit because many of the conventions appear first in Tamil, the metre is not native to Sanskrit (but is to Tamil),… And Sanskrit did not borrow from Tamil because clearly the Sanskrit writers were not acquainted with the Tamil tradition and because, again, the resemblance between the two literatures is not close enough to indicate direct borrowing. Moreover, the evidence shows that for the most part the shared elements entered the Indo-Aryan tradition in Maharastri Prakrit, the language of Hala’s Sattasai. It is of great significance that this southernmost of Prakrits was used in an area where Dravidian and Aryan languages came into contact, an area which even today is characterized by a mixture of North and South Indian customs, and in the Satavahana empire, which embraced Maharashtra and Andhra Pradesh, areas of Aryan and Dravidian speech. Archeologically, the area of Maharastri coincides with the northern limit of the Megalithic Civilization, which existed in South India primarily on the Deccan plateau in the first millennium B.C. and was characterized by uniformity over space and time. In other words, the culture of Maharasthra in the first centuries A.D. was a fusion of Aryan and Deccan (orDravidian). The early Tamil culture, on the other hand, was descended directly from the megalithic culture of South India; indeed, the poems even mention some of the burial practices which characterize the megalithic culture. Thus a case is made that the shared elements, or at least most of them, are taken by both Tamil and Sanskrit from the same megalithic culture of the Deccan.

எனவே ஹார்ட் தெளிவாக காதா சப்தசதி எழுதப்பட்ட மகராஷ்ட்ர பிராக்ருத மொழியும் தமிழ் மொழியும் தக்காண பீடபூமியில் இருந்த பெரும்கற்காலக் கலாச்சாரத்திற்கு கடன்பட்டவை என்று சொல்கிறார். அவர் காதசப்தசதி தமிழிலிருந்து கடன் வாங்கியதாகச் சொல்லவில்லை. மாறாக அவர் தமிழில் எழுத்துரு இன்றைக்கு சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றினாலும் மொழி முதிர்ச்சி அடைந்து புலவர்கள் உருவாவதற்கு சில நூற்றாண்டுகள் எடுத்தன என்கிறார்:

Probably in the second or third century B.C., the Brahmi syllabary was introduced into Tamilnad. A few centuries after this practical writing system was adapted for Tamil, there arose a class of people called Pulavans, who wrote poems. Unlike the oral bards, these men were drawn almost exclusively from the higher classes.

சாதவாகன நாணயங்களில் தமிழ் எழுத்துரு இருப்பதற்குக் காரணம் அவர்கள் தமிழகத்தின் வடபகுதிகளில் ஆட்சி செலுத்தியதால் இருக்கலாம். நான் இன்னொரு கேள்வி கேட்கிறேன். சங்கத் தமிழ் அரசர்களின் நாணயங்கள் ஏன் பரவலாகக் கிடைப்பதில்லை? அதை வைத்துக் கொண்டு சங்க இலக்கிய அரசர்கள் உண்மையானவர்கள் இல்லை சொல்ல முடியுமா? தமிழ் மொழியின் தாக்கம் வேங்கடத்திற்கு வடக்கே இருந்திருக்கும் என்றால் அதற்கு உறுதியான சான்றுகள் தேவை.

சாதவாகனர்கட்கு முற்பட்ட காலத்தில், அசோகருக்கு அடுத்து வந்த அரசமரபினராகக் கலிங்கத்தை ஆண்ட மகாமேகவாகன மரபின் மூன்றாவது பேரரசன் காரவேலன் (கிமு193 – கிமு170) எழுதிவைத்துள்ள ஹாத்திகும்பாக் கல்வெட்டில் ‘தமிரதேக சங்காதம்’ என்ற சொற்றொடர் உள்ளது. பேரரசுக்குத் தெற்கின் பதின்மூன்று நூற்றாண்டுகளாக நிலவிய தமிழ் மன்னர்களின் கூட்டணியை முறியடித்தான் என்பது அதன் பொருள். அஃதாவது அசோகராலேயே முறியடிக்கப்படாத தமிழ் மன்னர்களின் கூட்டணி. எனில் அசோகரின் ஆட்சிக்கு முன்பான பதின்மூன்று நூற்றாண்டுகள்வரைக்கும் தமிழ் மன்னர்களின் ஆட்சிப்பெரும்பரப்பு கலிங்கம் வரைக்கும் நீண்டுள்ளது என்ன கொள்ளலாமே. அந்தக் காலகட்டம் தமிழோ தமிழின் வழிப்பட்ட கொடுந்தமிழோ அந்த நிலப்பரப்பில் நீண்டதற்கு வழியில்லையா ?

ஹாதிகும்பா கல்வெட்டை முழுவதும் படித்திருக்கிறீர்களா? இவர் இந்தியா முழுவதும் உள்ள அரசர்களை வென்றதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கல்வெட்டைப் படித்து அதற்கு பலவிதமான விளக்கங்கள் கூறப்பட்டிருக்கின்றன. இவரது காலம் பொது யுகம் முதல் நூற்றாண்டு என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவரை பொது யுகத்தின் முதல் நூற்றாண்டிற்கு முன் இன்றைய வரலாற்று ஆசிரியர்கள் யாரும் கொண்டு செல்லவில்லை. தமிரா என்பதை திராவிர என்று படிக்கக் கூடாது என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக அது 113 ஆண்டுகள் இருந்த கூட்டணியைக் குறிக்கிறதே தவிர 1300 ஆண்டுகள் என்று சொல்லவில்லை. இது கல்வெட்டு சொல்வது: and (he) thoroughly breaks up the confederacy of the T[r]amira countries of one hundred and thirteen years. அவர் சதகர்ணியுடன் போர் புரிந்ததையும் குறிப்பிடுகிறார். சாதவாகனா பேரரசு இருக்கும் போது தமிழர்கள் வேங்கடத்திற்கு வடக்கே எந்தப் பகுதியிலும் ஆண்டதாக எந்தச் சான்றுகளும் இல்லை. மேலும் தமிழ் அரசர்கள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்ததாக எந்தச் சான்றும் தமிழகத்தில் கிடைக்கவில்லை. மாறாக சங்க இலக்கியம் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் செய்து கொண்டிருந்த போர்களைப் பற்றித்தான் பேசுகிறது.

இதற்கிடையே பிற அரசப்பெரும்பரவல்கள் பாலி, பிராகிருதம் என்று வடபுலத்தில் செல்வாக்குற்றதும் ஏற்புடைத்து. அதில் ஒன்றுதான் சாதவாகனப் பேரரசு. அவ்வாறு வடக்குப் பரவல் மிகுந்திருந்த தமிழோடு (அது தொல்தமிழாகவே இருக்கட்டும்) பிறமொழிப் பெயர்ச்சொற்கள் கலந்து கலந்து உருவானதே அந்தந்த நிலத்து இன்றைய மொழிகள். அதாவது தமிழொன்றே மொழிப்பெயர். பிற பெயர்கள் யாவும் அந்தந்த மொழி வழங்கப்பட்ட நிலத்தால் அழைக்கப்படும் மொழிப்பெயர்கள். தமிழ் மொழிக்குடும்பத்தின் (இங்கே தமிழ் என்பது வேண்டா எனில் திராவிட என்று போட்டுக்கொள்ளலாம்) இருபத்து நான்கு மொழிகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம் தவிர்த்த யாவும் மலைநாடுகளில் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற மொழிகள் என்பதையும் மறக்கக் கூடாது. எனில் காரவேலன் காலத்திற்கு முந்திய பதின்மூன்று நூற்றாண்டுகள் கலிங்கம்வரைக்கும் பரவியிருந்தது தமிழ்மன்னர்களின் கூட்டணியாயிற்றே. அசோகர் காலத்தில் தமிழ்மன்னர்கள் தென்புலத்தோடு வரம்புற ஒடுக்கப்பட்டார்கள் என்றே கொள்ளலாமே. பிறகுதானே சதகர்ணிகள் வருகிறார்கள் ? அவர்களுடைய வீழ்ச்சிக்குப் பிறகுதானே களப்பிரர்கள் வருகிறார்கள் ? இங்கே நாம் கருத வேண்டியது தமிழ் என்கின்ற ஒரு மொழியின் பெரும்பரவல் தென்னிந்தியா முழுவதும் பல்கிப் பரவியிருந்தது.

தமிழ் என்பதே (தொல்)மொழிப் பெயர் என்பதற்கு எந்தத் தரவுகளும் கிடையாது. 1300 ஆண்டுகள் என்று சொல்வது நகைக்கத்தக்க கற்பனை. கல்வெட்டு சொல்வது 113 ஆண்டுகள். இது தனித்தமிழ் வட்டங்களில் மட்டுமே செல்லுபடியாகும். தமிழ் என்ற மொழியின் பெரும்பரவல் தென்னிந்தியா முழுவதும் பல்கிக் பரவியிருந்தது என்று நீங்கள் சொன்னால் போதாது. உண்மையான மொழியியல் படித்த வல்லுனர்கள் சொல்ல வேண்டும். இன்று உலகளவில் பொருட்படுத்தத்தக்க எந்த வல்லுனரும் அவ்வாறு கூறவில்லை.

தென்னிந்திய தீபகற்பத்தில் காவிரிக்கு மேலே பார்த்தால் நடுநிலத்தில் (தீபகற்பத்தின் நடுப்பகுதியில்) வாழும் பெருவாழ்வு பெரிதாக இருக்கவில்லை. இன்றைக்கும் அந்த வெற்றுப்பெரும்பரப்பில் உலவினால் நாத்தள்ளிவிடும். அதனால் அரசுகள் கல்வெட்டுகள் இலக்கியங்கள் என்று தேடவேண்டியதுமில்லை. கடற்கரையை ஒட்டிய, ஆற்றங்கரையை ஒட்டிய வளவாழ்வே தொன்மக்களின் வாழ்வு என்பது கண்கூடு. அதற்காக தென்னிந்தியப் பேராறுகளின் நடுப்பகுதியில் வளவாழ்வு எங்கே என்று தேடினாலும் ஒன்றும் கிட்டாது. அவை சமவெளி சேர்ந்து கழிமுகத்தருகில் மென்னடை பழகினால்தான் வாழ்வினை அமைக்க முடியும். அதுதான் நம் அரசுகளின் நிலம். மொழிக்கும் நாகரிகத்திற்கும் வரலாற்றுக்கும் கல்வெட்டுகட்கும் இலக்கியங்களுக்கும் அதுதானே வாழ்நிலம் ? தமிழ்சார்ந்த ஒரு கல்வெட்டு மூவாயிரம் ஆண்டுகட்கு முந்தியதாக நடுப்பாலை நிலத்தில் எப்படிக் கிட்டும் ? இன்றைக்கும் அந்தப் பகுதிகளில் இரண்டு மாவட்டத் தலைநகரங்களுக்கிடையே வேறு ஊர்ப்புறங்களே இல்லாதபடி வெற்றுப்பெரும்பரப்புகளே. இந்தப் புவியியல் அடிப்படைகளைக் கணக்கில்கொள்ளாத வரலாற்றுக் கொள்கைகள் எப்படிச் செல்லுபடியாகும் ? அதனால்தான் எனது பள்ளிக் காலத்தில் வரலாற்றையும் புவியியலையும் ஒரே பாடமாக வைத்தார்கள்.

நடுப்பாலைவனமா? மசூலிப் பட்டினம் நடுப்பாலைவனமா? கிருஷ்ணா, கோதாவரி நதிகள் காவிரியை விட மிகப் பெரியவை. தமிழ் நாட்டோடு வணிகம் செய்ததைக் குறிப்பிடும் The Periplus Maris Erythraei (or ‘Voyage around the Erythraean Sea’) புத்தகம்தான் மசூலிபட்டினத்தையும் அதன் புகழ்பெற்ற மஸ்லின் துணியையும் குறிப்பிடுகிறது: About these places is the region of Masalia stretching a great way along the coast before the inland country; a great quantity of muslins is made there. 

அரிசி பயிரிடுதல் தமிழகத்திற்கு வருவதற்கு முன்னாலேயே கோதாவரி நதி சார்ந்த இடங்களுக்கு வந்திருக்க வேண்டும்.

The primary route that cultivated rice followed to the Indian subcontinent must have been from Assam down the Brahmaputra to the present day Bangladesh and the Indian State of West Bengal and Bihar. Rice must have dispersed further south on the Indian sub-continent, mainly following the eastern seashore. The Godavari valley, in particular, seems to have been suited for rice cultivation from the earliest times – Watabe Tadayo, in his paper on the ‘Origin and Dispersal of Rice in Asia’
(International Symposium on Civilizations Related to Rice Cultivation
in Asian Countries, Kyoto, 1983) quoted by K Narasimhalu in his book ‘Colonialism, Orientalism and the Dravidian Languages’.

எனவே ஆந்திர நிலப்பரப்பு பாலைவனமாக இருந்த போது தமிழகத்தில் பாலும் தேனும் ஓடிக் கொண்டிருந்தது என்று சொல்வது முழுத்தவறு. இவ்விடங்களில் தமிழ் பேசப்பட்டிருந்தால் ஏதாவது ஆதாரம் கிடைத்திருக்கும். ஏதும் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. தமிழ் இலக்கியமும் அவ்வாறு சொல்லவில்லை.

தமிழைத் தோற்றுவித்த தொன்மொழி என்று புரோட்டோ திராவிடக் கற்பனை ஒன்றினைச் சொல்கிறார்கள் பாருங்கள், அது முற்றிலும் தமிழ்மொழி. அந்தத் தமிழ் வடமொழியாளர் மொழியில் திராவிட என்று அழைக்கப்பட்டது. முன்னாள் தமிழ்மொழி என்பது அதன் பொருள். அந்த முன்னாள் தமிழ்மொழியின் செறிந்த வடிவமே தொல்காப்பியம் எழுதப் பயன்பட்ட மொழி. அந்த மொழியே சங்க இலக்கியத்தைத் தோற்றுவித்த மொழி. அதனால்தான் சங்க இலக்கியங்கள் அடிப்படைச் சொற்கள் நிரம்பிய ஆசிரியப்பாக்களாக இருக்கின்றன. ஒரு பாட்டுக்கு இரண்டே அசைகள் நிரம்பிய அடிப்படைச் சொற்கள்தாம் மணிகள். அதற்கு மேல் ஒரு சொல்லை உருவாக்க முடியாது. ‘கூறிக்கொண்டிருந்தபோது’ என்று ஒரு சங்க இலக்கியச் சொல் பயிலாது. கூறல் என்று அடிப்படையாக முடியும். தென்னாடங்கும் பரவியிருந்த அந்தத் தமிழ்மொழி (திராவிடம் மொழி) அந்தந்த நிலத்து வட்டாரப்பெருமொழியாக நிலைத்தது. காலப்போக்கில் அவற்றில் வடமொழிகள் பல கலந்தன. ஒலிப்புமுறைகள் திரிந்தன, மருவின, பிறழ்ந்தன, உறழ்ந்தன, எல்லாம் ஆயின. பிறகு பார்த்தால் வேற்று மொழிவடிவெடுத்து நிற்கின்றன. எழுத்து முறைகள் வளர்ச்சி பெற்ற பிறகு வளைகோடுகளை முதன்மையாகவும் சிறு கீறுகளைப் பின்னாகவும் வைத்து எழுதுகிறார்கள். தொல்காப்பியத்திற்குப் பல நூற்றாண்டுகள் கழித்தே கன்னட, தெலுங்கு இலக்கண நூல்கள் தோன்றுகின்றன. முதல் தெலுங்கு மொழிக்கவிஞர் யார் என்று பாருங்கள். நன்னையா என்ற பெயர். அவரோ பத்தாம் நூற்றாண்டினைச் சேர்ந்தவர். அந்தந்த மொழிகளின் முதல் நூல்கள் எவையெவை என்று பாருங்கள். அவை ஏன் முற்காலத்தனவாக இல்லை ? ஏனென்றால் அவை பிந்திய மொழிகள். முன்னாடி என்னவாக இருந்தன ? தமிழின் ஒரு பிரிவாய்க் கொடுந்தமிழாக இருந்தன. தமிழைத் தோற்றுவித்த பாட்டியிடமிருந்து வந்திருக்க முடியாதா ? அந்தப் பாட்டியும் தமிழ்தான். மொழியுலகில் பாட்டியும் செத்துப்போகமாட்டாள்தானே ? வாழ்வாளே. அப்படிச் செத்துப் போயிருந்தால் அந்தப் பாட்டி மொழியின் பத்தே பத்துச் சொற்களை இனங்காட்ட முடியுமா ? அந்தச் சொற்கள் தமிழ்மொழியில் இருக்கின்றனவா, இல்லையா என்று பார்த்துவிடுவோம். கன்னட, தெலுங்கு மொழிகளின் தலைசிறந்த சொற்களைத் தேர்ந்தெடுத்து வேர்ச்சொல் வரலாறு பார்ப்போமா ? அதற்குத் தமிழோடு தொடர்பிருந்தால் என்ன செய்யலாம் ? தமிழ்மொழியிலுள்ள வினைச்சொற்களின் பட்டியல் எடுப்போம். தெலுங்கு, கன்னட மொழிகளின் வினைச்சொற்களை எடுப்போம். மொழிகளின் உயிராக விளங்குபவை வினைச்சொற்கள். அவற்றின் தமிழ்த்தொடர்பினை, அல்லது தொடர்பின்மையைக் கண்டுபிடிப்போமா ? எதிலிருந்து எது வந்தது என்று கண்டுபிடித்துவிடலாமே. தமிழில் இலக்கியச் சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றனவே. இந்த மொழிகளின் இலக்கண அமைப்பினை ஆராய்ந்தால் ஆயிரம் செய்திகள் வெளிப்பட்டுவிடுமே. ஓர் உயிரினத்தின் மரபணுவை ஆராய்வது போன்ற அந்தந்த மொழிகளின் இலக்கணத்தை ஆராய்வது. இதுநாள்வரையிலான மொழியியலாளர்கள் தாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட மொழிகளின் இலக்கணத்தில் எவ்வளவு திறன்பட்ட பிறகு இதனைச் செய்தார்கள் என்பதும் இன்னொரு கேள்விக்குறி. அதனால் தமிழுக்கு எதிராக எதனையேனும் கருதுகோள்களை இறுக்கிப்பிடித்துக்கொண்டிருக்கலாமே தவிர, அது கொடுங்கனவுகளைத் தவிர்க்க உதவுமே தவிர, நடைமுறையில் துரும்பளவும் ஒத்துவராது. இவ்வளவு வாழ்வு கண்ட தமிழுக்கு ஒரு சிறப்பினைத் தருதவதற்கு ஏனிந்தத் தடுமாற்றம் ? என்னென்ன இடையூறுகளை ஏற்படுத்த முடியுமென்று தவிப்பானேன் ? புதிதாய் ஓர் ஆய்வினைச் செய்யப் புறப்பட்டால் நன்று, கடந்த நூற்றாண்டுக் கருதுகோள்கள் – மேலைத்தேய அணுகுமுறைகள், அவர்களின் கற்பனைக் கொள்கைகள் என்று காட்டும் பற்றுதல்களைத் தமிழின்பால் காட்டலாமே.

புரோட்டோ திராவிட மொழி கற்பனை என்றால் டார்வினின் கொள்கையும் கற்பனைதான். மனிதன் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி உலகம் முழுவதும் பரவினான் என்று சொல்வதும் கற்பனைதான். நான் என் கொள்ளுத்தாத்தாவைப் பார்த்ததில்லை. அவர் படம், அவர் எழுதியது ஏதும் இருந்ததில்லை. அதனால் அவரே இல்லை என்று சொல்லி விட முடியுமா?

முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தொல்காப்பியம் ஏதோ 2500 ஆண்டுகளுக்கு முந்தையது என்று தமிழகத்தில் மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தொல்காப்பியம் பொது யுகம் 4 நூற்றாண்டைச் சார்ந்தது என்று பல அறிஞர்கள் சொல்கிறார்கள். கன்னட அறிஞரான B G L Swamy மற்றைய தமிழ் இலக்கண நூற்கள் எழுதப்பட்ட காலத்திலேயே தொல்காப்பியமும் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்கிறார். தொல்காப்பியத்தின் உரைகள் அனைத்து 12 13 ம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை என்பதை அவர் சுட்டிக் காட்டுகிறார். இதை Sheldon Pollock போன்ற அறிஞர்களும் ஆதரிக்கிறார்கள்.

இது ஐராவதம் மகாதேவன்: Tolkappiam not only describes ‘pulli’ as the natural (Iyarkai) adjunct of the basic consonant and the short vowels ‘e’ and ‘o’ but also uses the expression ‘pulli’ to denote the basic consonant itself by transfer of meaning. It is thus clear that this grammatical work must have been composed after the ‘pulli’ was invented and had become an integral part of Tamil writing. Judging from the available evidence of the earliest occurrences of ‘pulli’ from about the end of the 1st century A.D., Tolkappiam was composed most probably not earlier than the Late Tamil-Brahmi period (ca. 2nd -4th century A.D.).

இதே போல சங்க இலக்கியமும் எட்டாம் நூற்றாண்டில் பிறந்தது என்று டெய்கன் என்ற ஆசிரியர் புத்தகமே எழுதியிருக்கிறார்.

நம் கல்வெட்டுகளின் மொழிக்கும் சங்க இலக்கிய மொழிக்கும் தொடர்பே இல்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். சிறிதும் இலக்கியத்தரம் இல்லாமல் பிழைகள் நிறைந்த கல்வெட்டுகள்தாம் நமக்குக் கிடைத்திருக்கின்றன. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் கல்வெட்டுகளில் மொழி சிறிதளவாவது திறனோடு கையாளப்படுகிறது. எனவே தமிழின் தொன்மையை நாம் வலுவாக உறுதி செய்து கொண்ட பிறகு அதிலிருந்து மற்றைய மொழிகள் கிளைத்தனவா என்பதைப் பார்க்கலாம்.

இது தெலுங்கு மொழியை பற்றி திரு நரசிம்மலு தன் புத்தகத்தில் சொல்வது:

Telugu is one of the ancient languages of India. The structure of its words comprising of two or three letters is simple. Most of the words end with U, I and A vowels.

எனவே தமிழைப் போலவே தெலுங்கும் எளிமையான அடிப்படைச் சொற்கள் கொண்ட மொழிதான்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டால் தமிழ்தான் பழைய மொழி, அதிலிலிருந்துதான் மற்றைய திராவிட மொழிகள் கிளைத்தன என்று கூறுவது தமிழகத்தின் மட்டுமே செல்லுபடியாகும். வேறு யாரும் இதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

கால்ட்வெல் தமிழின் தொன்மையைப் பற்றிப் பேசியதைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். தமிழ் இலக்கியத்தின் தொன்மையைப் பேசிய அவரே தமிழ் இலக்கியத்தின் மிகப் பழமையான இலக்கியம் கூட பொது யுகம் எட்டாம் அல்லது ஒன்பதாம் நூற்றாண்டிற்கு முன்னால் இருக்க முடியாது என்கிறார். கூடவே திராவிட மொழிகளுக்கும் ஸிதியன் (Scythian) மொழிக்கும் தாய் ஒன்றாக இருக்கலாம் என்று சொல்கிறார்.

2 thoughts on “திரு மகுடேசுவரனின் மறுப்புரைக்கு எதிர்வினை”

  1. About 30 human remains from Adichanallur முதுமக்கள்தாழி is being analysed by Harvard genetics team. That is the only substantial genetic analysis of humans from historic India ie for the last 4000 years. Even genetic types like AASI, ASI, ANI not deduced from any Indian population of known history

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s