தெலுங்கு தமிழிலிருந்து ‘கிளைத்த’ மொழியா? – திரு மகுடேசுவரனுக்குப் பதில்

திரு மகுடேசுவரனின் தமிழ்ப் புலமை மீது எனக்கு என்றும் மதிப்பு உண்டு. ஆனால் தமிழ்ப் புலமையும் மொழியியலில் தேர்ச்சியும் வெவ்வேறானவை. மொழியியலின் அடிப்படைக் கருத்துகள் அறிவியல் சார்ந்தவை. நம்முடைய விருப்புகளையும் வெறுப்புகளையும் சார்ந்தவை அல்ல.

மொழியியல் வல்லுனர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்கு முன்னால் தமிழ் இலக்கியம் தமிழ் பேசப்பட்ட நிலப்பரப்பைப் பற்றிச் செய்திருக்கும் பதிவுகளைப் பார்ப்போம்.

தொல்காப்பியத்தின் சிறப்பு பாயிரம் “வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து” என்று சொல்கிறது. புறநானூறு “தென்குமரி வட பெருங்கல்” என்று அறுதியிடுகிறது. அதையே மதுரைக்காஞ்சியில் மாங்குடி மருதனார் கூறுகிறார்.

“பனிபடு சோலை வேங்கடத்து உம்பர் மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்,” என்று அகநானூறு சொல்கிறது. அதாவது வேங்கடத்திற்கு மேல் இருக்கும் பகுதியில் வேறுமொழி பேசுபவர்கள் இருந்தனர் என்று பொருள்.

இதே போல குறுந்தொகையில் “குல்லைக்கணி வடுகர் முனையது வல்வேல் கட்டி நல்நாட்டு உம்பர் மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்”என்று சொல்லப்படுகிறது. கட்டி என்னும் மன்னன் ஆண்ட பகுதிக்கு வடக்கே வடுகர் வாழ்ந்து வந்தனர் என்று பொருள்.

சிலப்பதிகாரம் “நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ் வரம்பறுத்த தண்புனல்நாடு” என்று அறுதியிட்டுச் சொல்கிறது.

எனவே நம் மிகப் பழமையான இலக்கியங்களும் தமிழ் மொழி வேறு எங்கும் பேசப்பட்டதாகக் கூறவில்லை. விந்தியத்திற்கு தெற்கே திருப்பதிக்கும் வடக்கே தமிழ் பரவலாகப் பேசப்பட்டு வந்தது என்று தமிழ் இலக்கியம் சொல்லவில்லை. இன்றைய ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா பகுதியில் பொது யுகத்திற்கு இரண்டு நூற்றாண்டிற்கு முன் இருந்து நானூறு ஆண்டுகள் சாதவாகன அரசு ஆட்சி புரிந்தது. இந்தியாவின் மிகப்பெரிய பேரரசுகளில் ஒன்று. அது ஆட்சி புரிந்த காலகட்டத்தில் தமிழ் வேங்கடத்திற்கு வடக்குப் பகுதிகளில் இருந்ததாகத் தெரியவில்லை. சாதவாகன நாணயங்கள் சில (பொது யுகம் இரண்டு நூற்றாண்டில் வந்தவை) தமிழ் சொற்களைப் பயன்படுத்துகின்றன என்பது உண்மை. ஆனால் அவை தமிழுக்கு வரி வடிவம் அக்காலகட்டடத்தில் இருந்தன என்பதைச் சொல்கின்றனவே தவிர வேங்கடத்திற்கு வட பகுதியில் தமிழ் பேச்சு மொழியாக இருந்தது என்பதைச் சொல்லவில்லை. இதற்கு முன்பே பட்டிப்ரோலு கல்வெட்டு இருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதில் இருக்கும் வரி வடிவமே பின்னால் வந்த கதம்ப வரி வடிவத்திற்கும் கன்னட தெலுங்கு வரி வடிவத்திற்கும் முன்னோடி என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

இச்செய்திகள் உணர்த்துவது என்ன?
தமிழ் வேங்கடத்திற்கு வடக்கே பேச்சு மொழியாக இருந்திருந்தால் அதன் நினைவுகள் தமிழ்நாட்டிலும் இருந்திருக்க வேண்டும். ஆந்திரப்பகுதிகளிலும் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவை அறவே இன்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முன்வரை இல்லை என்பது வெளிப்படை. அக்காலத்திற்கு இருநூறு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்திருக்கலாம், பின்னால் மறக்கப்பட்டிருக்கலாம் என்ற வாதத்தை வைக்கலாம். ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதுதான் உண்மை. தமிழ் மொழியே இன்றைக்கு 2500 வருடங்களுக்கு முன்னால் ஒரு வளர்ச்சியடைந்த மொழியாக இருந்ததா என்பதே ஒரு கேள்விக்குறி.

இன்னொன்றையும் நாம் வசதியாக மறந்து விடுகிறோம்.

நமக்குக் கிடைத்திருக்கும் தமிழ் பிராமி கல்வெட்டின் மொழிக்கும் சங்ககால மொழிக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது. இன்றைக்கு ஏறத்தாழ 2200 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து 1600 ஆண்டுகள் வரை இடைப்பட்ட காலத்தில் கிடைத்திருக்கும் தமிழ்பிராமி/தமிழி கல்வெட்டுகளின் மொழி தவறுகள் நிறைந்தது. கிட்டத்தட்ட எல்லா கல்வெட்டுகளிலும் பெயர்களே அதிகம் இருக்கின்றன. அதிலும் மிகப் பெரும்பாலானவை பிராகிருதப் பெயர்கள்.

சங்க இலக்கியத்தின் பழமையைப் பற்றி நாம் பெருமையாகப் பேசினாலும் அதை பற்றிய தகவல்கள் பொது யுகம் பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்பே கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக திருவெள்ளறைக் கோவிலில் கல்வெட்டு ஒன்று இருக்கிறது. அது பட்டினப்பாலை அரங்கேற்றிய தகவலைச் சொல்கிறது:

‘வெறியார் துளவத் தொடைச்செய மாறன் வெகுண்டதொன்றும் அறியாத செம்பியன் காவிரி நாட்டில் அரமியத்துப் பறியாத தூணில்லை கண்ணன்செய் பட்டினப் பாலைக்கன்று நெறியால் விடுந்தூண் பதினாறு மேயங்கு நின்றனவே.’ . என்ற இப்பதிவு பாண்டியன் படையெடுப்பில் அவன் அழிக்காமல் விட்ட ஒரே மண்டபம் கடியலூர் உருத்திரங்கண்ணனார் எழுதிய பட்டினப்பாலை அரங்கேற்றப்பட்ட மண்டபம்தான் என்ற தகவலைத் தருகிறது. பாண்டியன் படையெடுத்தது பொது யுகம் 13ம் நூற்றாண்டு! எனவே பட்டினப்பாலை அதற்கு முன்னால் எப்போது வேண்டுமானாலும் அரங்கேற்றம் செய்யப்பட்டிருக்கலாம். பக்தி இலக்கியத்தில் சங்க இலக்கியத்தைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சங்க இலக்கியத்தின் காலத்தை நாம் அகச்சான்றுகளைக் கொண்டே நிறுவுகிறோம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

நமக்கு இருக்கும் ஆதாரங்களே இவ்வளவு வலுவற்றதாக இருக்கும் போது இன்னொரு மொழி தமிழில் என்று கிளைத்தது என்று நாம் சொன்னால் அது எங்கும் எடுபடாது.

அதிகப் பிழையின்றி நமக்குக் கிடைக்கும் முதல் தமிழ் கல்வெட்டு பூலாங்குறிச்சிக் கல்வெட்டு. பொது யுகம் ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்தது.

அதன் மொழியைக் கவனியுங்கள்:

  1. பாண்டங்கருஞ் சேவுக்கரும் (வி)ரும்மாச்சாரிகள்ளுந் தருமிகளுமூ(ர்) காவல் கொண்டா(ரு ஆ) ராஇந்து வைஇக்கப்பட்டாரு அல்லது வழிபடப்
  2. பெறாமையும் மவற்றுட் பச்செறிச்சி(ல்) மலைமேற் செஇவி(த்த தேவகு)லத்துக்குக் குடும்பியராவாரு குழ
  3. (லூ)ருத் துஞ்சிய உடையாரால் வேள்கூருப் பெயப்பட்ட குடும்பி(யர் வழியல்லது வேறொரு) குடும்பாடப் பெறாமையும்
  4. மத் தேவகுலத்துக் குற்றது செய்து வல்லக்குற்றந் தொழில் செய_ _க(ளு)_ _(டஞ்) செயவும் மெழுதி வைக்கென் றருள்ளித்தாரு

இக்கல்வெட்டின் மொழிக்கும் சங்க இலக்கியத்தின் மொழிக்கும் இருக்கும் இடைவெளி மிகப்பெரியது என்று நான் சொல்லத் தேவையில்லை. கொண்டார், பட்டார், ஆவார்,அருளித்தார் போன்ற சொற்கள் கொண்டாரு, பட்டாரு , ஆவாரு, அருள்ளித்தாரு என்று எழுதப்பட்டிருக்கின்றன. அதாவது பேச்சுத்தமிழில்.

இந்திய மொழிகளிலேயே பேசும் மொழிக்கும் எழுதும் மொழிக்கும் அதிக வேறுபாடுகள் இருப்பது தமிழில்தான். இதை ஆங்கிலத்தில் diglossia என்பார்கள். தெலுங்கைப் பொறுத்தவரை பழைய கிரந்தத் தெலுங்கிற்கும் தற்காலத் தெலுங்கிற்கும் இடையே வேறுபாடுகள் இருந்தாலும்(தற்காலத் தமிழுக்கும் சங்ககாலத் தமிழுக்கும் வேறுபாடுகள் இருப்பது போல) தற்காலத் தெலுங்கின் எழுத்து மொழிக்கும் பேச்சு மொழிக்கும் அதிக வேறுபாடுகள் இல்லை.

தமிழில் பேசும் போது ‘இல்’ என்ற சொல்லை ‘இல்லு’ என்றுதான் பெரும்பாலானவர்கள் சொல்வார்கள். ‘இல்லுன்னா என்ன அர்த்தம்?’ என்றுதான் பலர் கேட்பார்கள்.

  1. வேங்கடத்திற்கு வடக்கே தமிழ் பரவலாகப் பேசப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
  2. அது சாதவாகனர் காலத்திற்கு முன்னால் ஆந்திரா, தெலுங்கானா போன்ற இடங்களில் பேசப்பட்டது என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.
  3. தமிழின் பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே இருக்கும் இடைவெளி பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. எனவே பண்டை இலக்கியத்தில் பயன்படுத்தும் ஒரு சொல்லை எடுத்துக் கொண்டு அதை அவ்விலக்கியம் எழுதப்பட்ட காலகட்டத்தில் தமிழ் மக்கள் பரவலாகப் பயன்படுத்தியிருப்பார்கள் என்று சொல்ல முடியாது.
  4. தமிழில் இலக்கியத்திற்காகவே ஒரு மொழி பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து புழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அம்மொழியில் பயன்படுத்தப்படும் சொற்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் வந்திருக்கலாம்.
  5. இவ்விலக்கிய மொழியே முதன்மொழி; அதிலிருந்து பிற திராவிட மொழிகள் கிளைத்தன என்று சொல்வதற்கும் எந்த ஆதாரமும் கிடையாது.

இன்னொன்றும் சொல்லியாக வேண்டும்.

ஒரு மொழி இன்னொரு மொழியிலிருந்து கிளைப்பது என்பது தானாக நடப்பதில்லை. மொழியியல் வல்லுனர்கள் மூன்று முக்கியமான காரணங்களைச் சொல்கிறார்கள். முதலாவது, காலம்; இரண்டாவது, பிரிவு; மூன்றாவது, தொடர்பு. அதாவது ஒரு மொழி பேசுபவர்கள் பல ஆண்டுகள் அம்மொழி பேசும் இடத்திலிருந்து பிரிந்து இருந்தால், அல்லது இன்னொரு மொழியோடு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டால் ஒரு புது மொழி உருவாகலாம்.

Contact with other languages is a very important force: mutual influence leads to borrowing of words and even grammatical structures. If a language’s speakers move en masse into an area where another language is spoken, there may be considerable cross-influence, and one or both languages may simplify grammar because their speakers are learning each other’s languages. Influence from Danish, Norse, and French helped Anglo-Saxon become Chaucer’s English, and French is a descendant of Latin with some influence from Celtic and Germanic languages.

  • BBC Culture. How English gave birth to surprising new languages?

தொல் திராவிட மொழி பேசியவர்கள் புலம் பெயர்ந்த போது அவர்கள் பேசிய மொழியும் அவர்கள் தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட பிற மொழிகளும் ஏற்படுத்திய தாக்கமே தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகள் உருவாகக் காரணமாக இருந்தன. தமிழ் மாறாத மொழியல்ல. அதுவும் மற்றைய மொழிகளைப் போலவே மாற்றமடைந்து வந்திருக்கிறது. தமிழ் மூலமே இல்லாத முதற் கொழுந்து அல்ல. அதற்கும் தொல் மொழி ஒன்று இருக்கிறது என்று மொழியியல் வல்லுனர்கள் சொல்கிறார்கள். அம்மொழி தெலுங்கு போன்ற மொழிகளுக்கும் தொல் மொழி என்று அவர்கள் கருதுகிறார்கள்.

இப்பின்புலத்தில் திரு மகுடேசுவரனின் கேள்விகளை ஆராய்வோம்.

தமிழிலிருந்து ‘கிளைத்த’ என்று சொல்லியிருக்கிறேன். எவ்வோரிடத்திலும் ‘பிறந்தது’ என்று சொல்லவில்லை. கிளைத்த மொழி என்று ஏற்றுக்கொள்வதில் யார்க்கு என்ன தடை ? ஆலமரம் தன் விழுதின்வழி கிளைப்பது புதுமரமாகத்தானே ? அது பிறப்பன்றே, கிளைப்புத்தானே ? ஒரு மொழியின் பெரும்பரவல் ஆலமரப் பரவலுக்கு ஒத்ததுதானே ?

இல்லை. தெலுங்கு தமிழில் இருந்து கிளைத்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. புகழ் பெற்ற வல்லுனரான பத்ரிராஜு கிருஷ்ணமூர்த்தி தன் Dravidian Languages (Cambridge University publication) புத்தகத்தில் திராவிட மொழிகளை இவ்வாறாகப் பிரிக்கிறார்;

அதாவது தமிழ் பிறந்தது Proto South Dravidian I மொழியிலிருந்து. தெலுங்கு பிறந்தது Proto South Dravidian II மொழியிலிருந்து. தமிழுக்கும் தெலுங்கிற்கும் ஒரே பாட்டி, ஆனால் தாய்கள் வேறு என்கிறார்.

பெரும்பரப்பிலான நிலத்தில் ஒரு மொழி முதலில் பரவும். அந்தப் பரவற்செயலில் சிறிது சிறிதாக மாற்றமடைந்தபடியே செல்லும். வரலாற்றுக்கு முந்திய காலத்தில் ஏறத்தாழ தென்னிந்தியப் பரப்பு முழுவதும் ஒற்றுமையான ஒருமொழி இருந்திருக்க வேண்டும். அந்த மொழி தமிழாக இருக்க வேண்டும். அல்லது தமிழைத் தன் ஒலிப்பில் வடமொழியோர் வழங்கியபடி ’திரவிட’மாக இருக்க வேண்டும். உறுதியாக அது மலையாளம் இல்லை, கன்னடம் இல்லை, தெலுங்கும் இல்லை. இந்தக் கருத்து தங்களுக்கு உவப்பு இல்லை எனில் அந்த முன்மொழி என்னவாக இருந்திருக்க வேண்டும் என்று ஒரு மொழியை வரையறுத்துக்காட்ட வேண்டும். எதனோடும் தொடர்பின்றி அழிந்த ஒரு மொழியாக இருக்கமுடியாது அது. காலப்போக்கில் புதுக்கம் பெற்றதும், காலங்கடந்தும் வாழும் தன்மையுடையதுமாய் இருத்தல் வேண்டும். அவ்வியல்பு தமிழ்மொழிக்கே உரியது என்பதனைத் தமிழை ஆழ்ந்து கற்றபோது உணர்ந்திருப்பீர்கள்.

இல்லவே இல்லை என்று மொழி வல்லுனர்கள் கூறுகிறார்கள். தென்னிந்தியப் பரப்பு முழுவதற்கும் ஒற்றுமையான மொழி தமிழ் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மாறாக தமிழ் இலக்கியமே தமிழ் பேசப்பட்ட நிலப்பரப்பைத் தெளிவாக வரையறுக்கிறது என்பதை நான் விளக்கியிருக்கிறேன். ‘திராவிடம்’ என்ற சொல் வசதிக்காக கால்ட்வெல்லால் எடுத்துக் கொள்ளப்பட்டதே தவிர தமிழ் மற்றைய மொழிகளுக்குத் தாய் மொழி என்பதால் அல்ல. கால்ட்வெல் கூறுகிறார்: This term, it is true, has sometimes been used, in almost as restricted a sense as that of Tamil itself, so that though on the whole it is the best term I can find, I admit it is not perfectly free from ambiguity. It is a term which has already been use more or less distinctively by Sanskrit philologists, as a generic appellation for the South Indian people and their languages, and it is the only single term they ever seem to have used in this manner.

முன்மொழி என்ன என்பதை வரையறுத்துக் காட்ட வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. அழிந்த மொழியாக இருக்கக் கூடாது என்ற கட்டாயமும் இல்லை. தமிழ் ஆகாயத்திலிருந்து குதித்த மொழி அல்ல. (சமஸ்கிருதமும் அல்ல.) எல்லா மொழிகளும் காலப்போக்கில் மாறுகின்றன. காலம் கடந்து வாழுமா வாழாதா என்பதை அதைப் பேசும் மக்கள் தொகையே முடிவு செய்யும். தமிழ் காலம் கடந்து வாழும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. தமிழை விட அதிக மக்கள் பேசும் தெலுங்கு வாழும் என்பதிலும் எனக்கு ஐயம் இல்லை.

இன்றைய தமிழும், ஈராயிரத்தாண்டு முந்திய தமிழும் ஒரே சொற்கட்டுகளால் ஆனவை. இன்று வாழ்க்கை என்ற சொல் இருக்கிறது என்றால் ஈராயிரத்தாண்டுகட்கு முன்பு ‘கொங்கு தேர் வாழ்க்கை’ என்றே இருக்கிறது. எல்லா அடிப்படைச் சொற்களும் தொடர்ந்து வருபவை. இம்மொழியின் திரிபு, மருவல், உறழ்ச்சி முதலான இயல்புகளும் பற்பல இலக்கணப் பண்புகளும் இம்மொழியினின்று பிற மொழிகள் கிளைத்து நிலைப்பதை ஊக்குவிக்கின்றன.

இதுவும் மற்றைய மொழிகளுக்கும் பொருந்தும். இல்லையென்றால் தெலுங்கு தெலுங்கு என்று அழைக்கப்படாது. ரிக் வேதத்தில் பயன்படுத்தப்பட்ட சொற்கள் இன்றும் பயன்படுத்தப் படுகின்றன. கிரேக்க மொழியில் லத்தீன் மொழியில் பயன்படுத்தப் பட்ட சொற்கள் இன்றும் பயன்படுத்தப் படுகின்றன. மீண்டும் சொல்கிறேன். தமிழ் ஆகாயத்திலிருந்து குதித்ததல்ல.

தமிழில் ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள். இங்கே தமிழில் ஒரு பொருளில் பெரிதாய் நிலைத்துவிடுவன அவை. பிற பொருள்கள் அருஞ்சொற்பொருள் வேண்டும் பாடலோடு நின்றுவிடுவன. ஆனால், அந்தச் சொல் தமிழில் மறக்கப்பட்ட அரும்பொருளில் தெலுங்கிலோ கன்னடத்திலோ மலையாளத்திலோ பயிலும். அதற்குச் சொன்ன எடுத்துக்காட்டுத்தான் கடை. தெலுங்கில் அக்கடை => அக்கட. தமிழில் இனவல்லின மெல்லின மாற்றீடே போதும். பூனை => பூஞை => பூசை. மலையாளத்தில் இன்றும் பூசை.

இதுவும் மற்றைய மொழிகளுக்குப் பொருந்தும். “அக்கட ராவணற்கு அமைந்த ஆற்றலே” இது கம்பன். இங்கு அக்கட என்பது அதிசயப்படத்தக்கது என்று பொருள். தமிழில் கணக்கற்ற சமஸ்கிருதச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. சமஸ்கிருதத்திலும் ஒரு சொல்லுக்கு பல பொருள்கள். அதனால் தமிழ் சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தது என்று சொல்லி விட முடியுமா?

உகர ஈற்றைப் பற்றி கட்டுரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். இதுவும் பூலாங்குறிச்சி கல்வெட்டில் பயன்படுத்தப் படுகிறது. இது தொல் திராவிட மொழியின் எச்சமாக இருக்கலாம்.

தமிழ் என் தாய்மொழி. நான் மிகவும் நேசிக்கும் மொழி. ஆனால் அது மனிதர்களின் மொழி. எல்லா மனித மொழிகளுக்கும் உள்ள குறைகளும் பெருமைகளும் அதற்கும் இருக்கின்றன. தமிழன் உலகிலேயே மிகச் சிறந்த அறிவாளியல்ல. தமிழுக்கு சிறப்புக் கொம்பு இல்லை என்று நான் திடமாகக் கூறுவேன். தமிழ் கிணற்றிலிருந்து வெளியில் வந்தால் நான் சொல்வது புரியும் என நினைக்கிறேன்.

2 thoughts on “தெலுங்கு தமிழிலிருந்து ‘கிளைத்த’ மொழியா? – திரு மகுடேசுவரனுக்குப் பதில்”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s