மேகங்கள் ஏதும் பேசவில்லை. ஆண்டாள் செய்வதறியாது சிறிது நேரம் திகைக்கிறார். சுற்றும் முற்றும் பார்க்கிறார். உலகம் அதன் வழியில் இயங்கிக் கொண்டிருக்கிறது. மனிதர்களை நம்ப முடியாது. ஆனால் ஊர்வன, பறப்பன, அசைவன போன்றவற்றை இன்னும் நம்பலாம். செய்யாமல் போகாவிட்டாலும் செய்வோம் என்று சொல்லி விட்டு ஏமாற்றாது என்று அவர் நினைக்கிறார். அடுத்த இருபது பாடல்களும் ஆண்டாள் காலத்தில் அவரைச் சுற்றியிருந்த இயற்கையின் படைப்புகளுடன் பேசுவதாக அமைந்திருக்கின்றன. தமிழனின் தனிப்படைப்பான அக்கார அடிசிலும் பாட்டில் வருகிறது.
தமிழ் மொழியிலோ வேறு எந்த மொழியிலோ இந்த இருபது பாடல்களின் ஒழுங்கும், கவித்துவமும், உள்ளார்ந்து பிசிரில்லாமல் இயங்கும் இசையும் அமைந்த பாடல்கள் மிகவும் அரிதானவை.
உலக இலக்கியம் முழுவதும், குறிப்பாக ஆசிய இலக்கியங்களில், மனிதகுலத்திற்கும் அதைச் சுற்றி இருக்கும் இயற்கைக்கும் உள்ள உறவு மிகவும் இயல்பாகப் பேசப்படுகின்றது. எந்தத் தயக்கமும் இன்றி. காதலையும் பிரிவையும் பற்றி கவிஞர்கள் பேசும் போது பறவைகளும், மரங்களும், மலர்களுகளும் அவர்களோடு சேர்ந்து பேசுகின்றன. அல்லது பேசுங்கள் என்று கவிஞர்கள் அழைக்கிறார்கள்.
இந்தச் சீனக் கவிதையைக் கேளுங்கள். நண்பர் பயணி மொழிபெயர்த்தது:
குவான்! குவான்! – கூவும் பறவைகள்
ஆற்றின் மத்தியில் மணல் திட்டினிலே.
அவளோ அடக்கமும் அழகும் அமைந்தவள்,
அவனுக்குத் துணையாக ஆகிடச் சிறந்தவள்.
நீண்டும் தாழ்ந்தும் நீரில் மலர்கள்.
இடமும் வலமும் அளைந்திடுவோமே
அவளோ அடக்கமும் அழகும் அமைந்தவள்
நனவிலும் கனவிலும் மனதினில் அவளே
இங்கு ராஜாளிப் பறவைகளில் ஒலி – குவான் குவான் – இணைகளோடு கூடுவதற்காக (mating call) அப்பறவைகள் எழுப்பும் ஒலி என்று பயணி குறிப்பிடுகிறார். நாயகன் கனவில் அவள் வரும்போது ராஜாளிகளின் புணர்ச்சி ஒலிகள் மட்டும் வருவதில்லை. மலர்கள் வருகின்றன. அளைந்து கீரையைப் பறிக்கும் பெண்களும் கூடவே வருகிறார்கள் – அளைந்திடுவோமே என்ற சொல் கீரை பறிக்கும் பெண்களைக் குறிக்கிறது என்று மொழிபெயர்ப்பாளர் சொல்கிறார் . அவர்கள் இவர்கள் இணைவதற்கு துணை போகிறார்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம். அல்லது தடையாக இருக்கிறார்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
இன்னொரு சீனப்பாடல்:
Anxiously chirps the cicada.
Restlessly skips the grasshopper:
Before I saw my lord
My heart was ill at ease.
But now that I have seen him,
Now that I have met him,
My heart is at rest
சுவர்க்கோழி இசைக்கிறது.
வெட்டுக்கிளி பதற்றமாகத் துள்ளுகிறது.
என் தலைவனைப் பார்க்கும் முன்
என் இதயம் தன்னிலையில் இல்லை.
இப்போது அவனைச் சந்தித்த பின்.
இதயம் நிம்மதியை உணர்கிறது’
இங்கு சுவர்க்கோழி மறுபிறப்பையும் நீண்ட ஆயுளையும் குறிக்கிறது. வெட்டுக்கிளி அதிர்ஷ்டத்தையும் வளத்தையும் குறிப்பிடுகிறது. என் வாழ்வில் இனி எந்தத் துன்பங்களும் இருக்காது என்று நாயகி நினைக்கிறார்.
இது ஒரு ஜப்பானியப் பாடல்
The blossom’s tint is washed away
By heavy showers of rain;
My charms, which once I prized so much,
Are also on the wane, –
Both bloomed, alas! in vain.
செர்ரிமலர்களின் பளபளப்பு
பெய்த பெருமழையால் இழுத்துச் செல்லப்பட்டது.
என்னுடைய அழகுகளும் – நான் ஒரு காலத்தில் பொக்கிஷமாய் காத்தவை-
மங்கிக் கொண்டிருக்கின்றன.
இருவரும் மலர்ந்தோம், அந்தோ! வீணாக.
ஆண்டாளைப் போலவே இவரும் பிரிவால் வாடுபவர். ஆனாலும் ஆண்டாளைப் போலவே நம்பிக்கையை விடாதவர். செர்ரிமலர்கள் உதிரவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இனி பாடல்கள்:
சிந்துரச் செம்பொடிப் போல் திருமாலிருஞ்சோலை எங்கும்
இந்திரகோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால்
மந்தரம் நாட்டி அன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட
சுந்தரத் தோள் உடையான் சுழலையில் நின்று உய்துங்கொலோ?
திருமாலிருஞ்சோலையில் எல்லா இடங்களிலும் பட்டுப்பூச்சிகள் என்ற செம்மூதாய்ப் பூச்சிகள் சிவந்த சிந்துரப்பொடிபோல் மேலே பரவிகிடக்கின்றன. மந்தரமலையைப் பாற்கடலில் மத்தாக நட்டு, கடலைக் கடைந்து, சுவைக்குச் சுவை சேர்க்கும் அமுதத்தின் செறிய சாறு போன்ற திருமகளை தனதாக்கிக் கொண்ட அந்த அழகிய தோள்களை உடையவன் விரித்த வலையிலிருந்து எப்படி விடுபடுவது?
பட்டுப் பூச்சி, வெல்வெட் பூச்சி என்று அழைக்கப்படும் செம்மூதாய்ப் பூச்சிகள் தமிழ் இலக்கியத்தில் ஆண்டாளுக்கு முன்னாலேயே படர்ந்திருக்கிறன.
“கடுஞ்செம் மூதாய் கண்டும் கொண்டும் நீ விளை யாடுக சிறிதே” இது நற்றிணை. தலைவன் தலைவியிடம் நீ செம்மூதாய்ப் பூச்சிளை வைத்து விளையாடிக் கொண்டிரு என்று சொல்கிறான்.
சிலந்தி, தேள் வகுப்பில் Trombidiidae குடும்பத்தைச் சேர்ந்த இப்பூச்சியினத்தில் பல வகைகள் இருக்கின்றன. Rain mite, Red velvet mite, , பட்டுப்பூச்சி, தாம்பூலப் பூச்சி இந்திரகோபம் என்றெல்லாம் அழைக்கப் படுகின்றன. நானே தீப்பட்டிகளில் வைத்து சிறுவயதில் விளையாடியிருக்கிறேன். மழைகாலத்தில் எல்லா இடங்களிலும் படர்ந்து பரவும் பூச்சி இது. நான் பார்க்கப் பார்க்க திருநெல்வேலியில் காணாமல் போனப் பூச்சி இது. ஒரு வேளை எனக்கு பூச்சிகளைப் பிடித்து விளையாடும் பருவம் கடந்து போனதால் கவனிக்கவில்லையோ என்னவோ?
இப்போது முதலில் குறிப்பிட்ட சீனப் பாடலை இன்னொரு முறை படியுங்கள். குவான் குவான் என்று அழைக்கும் பறவைகளுக்கும் அடுத்த வரிகளில் சொல்லப்படுவதற்கும் தொடர்பே இல்லாதது போலத் தோன்றுகிறது. ஆனால் சிறிது கவனம் செலுத்திப் படித்தால் ‘என் நிலையும் பறவைகளின் நிலைமைதான், அவற்றைப் போலவே நானும் அவளோடு சேர விரும்புகிறேன், கலவிக்கு அழைப்புதான் என் கவிதை’ என்று அவன் சொல்கிறானோ என நினைக்கத் தோன்றுகிறது.
ஆண்டாளும் தன் கவிதையில் செம்பட்டுப்பூச்சிகள் எல்லாவற்றையும் மறைத்து விட்டன என்று சொல்லி விட்டு சுந்தரத் தோளுடையானுக்குத் தாவுகிறார்.
அவர் என்ன சொல்ல வருகிறார்?
அவனையும் செம்பட்டுப் பூச்சியையும் இணைப்பது எப்படி?
‘திருமாலிருஞ்சோலைக்கு அவனைத் தேடி வந்திருக்கிறேன். ஆனால் இங்கே செம்பட்டுப் பூச்சி ஆக்கிரமிப்பு. தெரிவதெல்லாம் செந்நிறமாக இருந்தால் என்னை அவனால் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியாது என்பது உண்மை. ஆனால் அவன் கடலையே கடைந்து திருமகளை எடுத்துத் தனதாக்கிக் கொண்டவன். திருமகளை அடைய அவன் அன்று விரும்பினான். இன்று நானும் அவன் விருப்ப வலையில் அகப்பட்டு ஓரத்தில் தவித்துக் கொண்டிருக்கிறேன். அவன் என்னை உண்மையாகவே விரும்பினால் பூச்சிகள் எம்மாத்திரம்? என்ன செய்யப் போகிறானோ? வலையில் பிடியில் ஆயுள் முழுவதும் இருக்க வேண்டுமா? செம்ப்பட்டுப் பூச்சிகள் மறைக்கின்றன என்றன் உதாவாக்கரை காரணத்தைப் போல இன்னொரு காரணத்தைக் காட்டி என்னை மீட்க முயற்சி செய்யாமல் இருப்பானா? அல்லது வந்து அணைத்துக் கொள்வானா?’ என்று பொருள் கொள்ளலாம்.
உரையாசிரியர்கள் வேறு விதமாகப் பொருள் கொள்கிறார்கள். ‘அவன் இருக்கும் அழகர் மலையையாவது கண்ணாறக் காணலாம் என்று நினைத்தேன், இந்த இந்திரகோபங்கள் எல்லாவற்றையும் மறைத்து விட்டன’ என்று ஆண்டாள் துயரடைகிறாராம். பூச்சிகளின் சிவந்த நிறம் அவன் உதடுகளை நினைவு படுத்துகிறதாம்.
போர்க் களிறு பொரும் மாலிருஞ்சோலையம் பூம்புறவில்
தார்க்கொடி முல்லைகளும் தவள நகை காட்டுகின்ற
கார்க்கொள் படாக்கள்நின்று கழறிச் சிரிக்கத் தரியேன்
ஆர்க்கிடுகோ? தோழீ! அவன் தார் செய்த பூசலையே
தோழி! போர் யானைகள் மோதி விளையாடும் திருமாலிருஞ்சோலையின் மிகவும் அழகிய மலைச்சரிவில் இருக்கும் முல்லைக் கொடிகளின் அரும்புகள் அழகரின் வெளுத்த புன்னகையை நினைவூட்டுகின்றன. நன்றாகப் பூத்திருக்கும் படா கொடிகள் நிலையாக நின்று “எங்களைத் தாண்டி நீ தப்பிப் பிழைக்க முடியாது” என்று இன்னொரு சிரிப்பு சிரித்துக் கொண்டு மலர்கின்றன. என்னால் நிச்சயம் தாங்க முடியாது. அவன் தோள்கள் தாங்கும் மாலை உண்டாக்கிய மனக் கவலையை யாரிடம் சொல்வது?
கவிதையே பூத்துக் குலுங்குகிறது. முல்லைக் கொடிகளின் அரும்புகள் அவன் புன்னகையை நினைவுறுத்துகின்றன. அவற்றைத் தாண்டினால் படா என்னும் தாவரத்தின் பூக்களின் கொக்கரிப்பு வாட்டுகிறது. பூக்களைப் பார்த்தாலே அவன் தோளில் இருக்கும் மாலையின் நினைவு வருகிறது. அது ஏற்படுத்திய மனக்கவலையை யாரிடம் சொல்வது? தோழியிடம் சொல்லி எந்தப் பயனும் இல்லை. இவளுடைய துயரைக் கண்டு அவள் முதலிலேயே மயங்கி விழுந்து விட்டாள் என்கிறார்கள் உரையாசிரியர்கள்.
படா என்றால் எந்த வகைத் தாவரம்? தேடித் தேடிக் கண்டு பிடித்து விட்டேன். மருக்காரை அல்லது மரக்காரை என்று அழைக்கப்படும் புதர்ச்செடி (Madanphala or Randia dumetorum). இதன் பூ வெள்ளையாக இருக்கும். இதன் கொட்டை வாந்தியை வரவழைக்கும். முல்லைக் கொடிகளைத் தாண்டினால் புதர்கள் அவளை வழி மறிக்கின்றன! எண்ணங்களின் புதர்கள்.
கருவிளை ஒண் மலர்காள்! காயா மலர்காள்! திருமால்
உருவொளி காட்டுகின்றீர் எனக்கு உய்வழக்கொன்று உரையீர்
திருவிளையாடு திண் தோள் திருமாலிருஞ்சோலை நம்பி
வரி வளையில் புகுந்து வந்தி பற்றும் வழக்குளதே
அழகிய கருவிளை மலர்களே! காயாம்பூக்களே! நீங்கள் திருமகள் நாயகனின் உருவத்தின் பளபளப்பை நினைவூட்டுகிறீர்கள். எனக்கு உய்யும் வழியைச் சொல்லுங்கள். திருமகள் விளையாடும் இடமான வலிமையான தோள்களை உடையவனான உடைய திருமாலிருஞ்சோலை அழகன் என் வீட்டினுள் புகுந்து என் அழகிய வளைகளை என் கைகளை முறுக்கிக் கொள்ளை கொண்டு போவது நியாயமா?
கருவிளை – சங்கு புஷ்பம் (.Clitoria ternatea, commonly known as Asian pigeonwings). இப்பூவின் நிறம் நீலம்.
காயாம் பூ – Memecylon umbellatum, commonly known as ironwood, anjani or alli. இதுவும் நீல நிறத்தது.
கண்ணனின் வண்ணத்தின் பளபளப்பை உங்கள் பளபளப்பு ஒத்திருக்கிறது. எனவே அவனுக்கு நெருங்கிய உறவாக இருக்க வேண்டும். உங்களிடம்தான் அவன் செய்த செயலைச் சொல்ல வேண்டும் என்கிறார்.
திருமகள் விளையாடும் தோள் என்பது மிகவும் அழகிய உருவகம். அவன் மார்பில் உறைபவள் வேறு எங்கும் விளையாடச் செல்ல வேண்டாம், அவன் பரந்த தோளே போதும் என்கிறார் ஆண்டாள்.
ஆண்டாள் கண்ணனோடு மிகவும் நெருக்கமாக உடல் உறவு கொள்ள விரும்புகிறார் என்பதை ‘வந்தி பற்றும்’ என்ற சொற்றொடர் தெளிவாகச் சொல்கிறது. அவன் அவரை வலிந்து பற்ற விரும்புகிறார்.
‘திருமாலிருஞ்சோலை நம்பி’ என்பதற்கு பெரியவாச்சான் பிள்ளை ‘ஆர்யர்கள் இகழ்ந்த ம்லேச்ச பூமியிலுள்ளார்க்கு சுலபனானவன்’ என்று விளக்கம் தருகிறார். அதாவது வடவர்கள் தமிழர்கள் இருக்கும் இடத்தை ம்லேச்ச பூமி என்று இகழ்ந்தார்களாம். உங்களுக்கு நான் இருக்கிறேன் என்று அவன் திருமாலிருஞ்சோலைக்கு வந்தானாம்.
இங்கு ஆர்யர்கள் என்பதற்கு வடநாட்டவர் அல்லது வடக்கிலிருந்து வந்தவர் என்றுதான் விளக்கம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் இந்த ‘ம்லேச்ச’ பூமியில்தான் ஆழ்வார்களும் ஆண்டாளும் அவதரித்திருக்கிறார்கள். ஆர்யர்கள் என்பதற்கு பிராமணர்கள் என்ற விளக்கத்தைக் கொடுத்தால் ஆண்டாளே மிலேச்சை ஆகி விடுவார்!
இது வடமொழியில் இருப்பவைதான் உயர்ந்தவை. தமிழில் இருப்பவை ஒரு படி தாழ்ந்தவை என்ற கூற்றை எதிர்க்கும் வகையில் எழுதியிருப்பதாகத் தோன்றுகிறது.
‘அவர்கள் கிடக்கிறார்கள், உங்கள் தமிழ் எனக்குப் போதும்’ என்று அவன் சொல்கிறான் என்றும் எடுத்துக் கொள்ளலாம். உண்மைதான். ஆண்டாளின் தமிழ் நமக்குப் போதும்.