எட்டாம் திருமொழி -1

இடி போல் அதிரும் வலம்புரிச் சங்கம் ஆண்டாளுக்குப் பதிலளிக்கவில்லை. அதன் மௌனத்தை இன்னும் தாங்க முடியாமல் செய்தது அவர் எதிர்கொண்ட மழைகாலம். மின்னல் அவன் கையில் இருக்கும் சக்கரம் போல் மின்னியது. இப்போது மௌனத்தின் பிடியில் இருக்கும் பாஞ்சஜன்யம் தான் முழக்கமிடும் தருணங்களில் ஏற்படுத்தும் அதிர்வை – இடி நினைவூட்டியது. கூடவே கருமேகங்கள். கண்ணனின் வண்ணம் கொண்டவை. அவனைப் போலவே இருப்பதால் அவை சொல்வதை அவன் கேட்பான் என்ற எண்ணத்தில் ஆண்டாள் பாடுகிறாள்.

உலக இலக்கியத்திலேயே மனிதர்கள் அல்லாதவற்றைத் தூது விடுவதாக அமைந்த பாடல்கள் முதன்முதலில் தமிழில்தான் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.

நம் அகநானுறு சொல்கிறது:

கானலும் கழறாது கழியும் கூறாது,
தேன் இமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியாது
ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே,
இருங்கழி மலர்ந்த கண் போல் நெய்தல்
கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇத், 
தண் தாது ஊதிய வண்டினம் களி சிறந்து
பறைஇய தளரும் துறைவனை, நீயே,
சொல்லல் வேண்டுமால் அலவ பல் கால்
கைதையம் படுசினை எவ்வமொடு அசாஅம்
கடல் சிறு காக்கை காமர் பெடையொடு 
கோட்டு மீன் வழங்கும் வேட்ட மடி பரப்பின்
வெள்ளிறாக் கனவும் நள்ளென் யாமத்து,
நின்னுறு விழுமம் களைந்தோள்
தன்னுறு விழுமம் நீந்துமோ எனவே.

நான் அவனோடு இருந்ததை கடற்கரையில் இருக்கும் சோலையோ, அதன் அருகில் இருக்கும் உப்புநீர் பரப்போ அல்லது தேன் கொண்ட மலர்களைக் கொண்டிருக்கும் புன்னை மரமோ சொல்லாது. ஆகவே நண்டே! நீதான் துணை. கண் போல மலர்ந்திருக்கும் ஆம்பல் மலர்களில் தாதுவை உண்ட வண்டுகள் பறக்க முடியாமல் களிப்பு மயக்கத்தில் இருக்கும் துறைகளைக் கொண்ட தலைவனிடம் சென்று கேள். பசியோடு இருந்த கடற்காக்கைகள் தங்கள் பெட்டைகளோடு தாழை மடல்களில் அமர்ந்து கொண்டு சுறாக்கள் நீந்தும் பெரும் கடலில் இருக்கும் வெள் இறால்கள் குறித்து கனவு கண்டுகொண்டிருக்கும் நள்ளிரவு வேளையில் அவனுடைய துன்பத்தைப் பலமுறைகள் போக்கியவள் ஒரு கேள்வி கேட்கிறாள், இன்று அவள் முன்னால் இருக்கும் துன்பக் கடலை நீந்திக் கடப்பாளா என்று?

மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்

அகநானூறு 170

ஆண்டாள் தமிழ் மரபில் வந்தவர். அவருக்கு நிச்சயம் நம் இலக்கிய வகைகள் தெரிந்திருக்கும். ஆனால் காளிதாசனும் மேகத்தைத் தூது விடுகிறான். அவனுக்கு அந்த உத்தியை அளித்தது மகாராஷ்டிர பிராகிருதி மரபு. அம்மரபுக்கும் தமிழ் மரபிற்கும் தொடர்பு இருக்கிறது என்று காதா சப்தசதி போன்ற நூல்களில் இருந்து மேற்கோள் காட்டி ஜார்ஜ் ஹார்ட் The Relation between Tamil and Classical Sanskrit Literature என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

காளிதாசனின் மேகதூதத்தில் மேகத்தைத் தூது விடும் யக்ஷன் சொல்கிறான்:

O great cloud, as the giver of water you are like a balm

for those burning with love.

Carry a message to my beloved, separated from me

by the Lord of Wealth’s anger

And go to the city of Alaka where servants of the gods

dwell in mansions that glow

with moonlight cast from Shiva’s crown as he roams

the gardens beyond the city.

-Translated by Srinivas Reddy

நீர் தரும் பெரும் மேகமே! பிரிவின் துயரால் எரிந்து கொண்டிருப்பவர்கள் அனைவருக்கும் உன்னைப் போன்றவர்கள்தாம் குளிர வைக்கும் மருந்து. குபேரனின் கோபத்தின் விளைவால் என்னிடமிருந்து பிரிந்திருக்கும் என் மனைவிக்கு ஒரு செய்தியை எடுத்துச் செல். அளகாபுரி நகருக்குச் செல். அங்குதான் கடவுளர்களின் தொண்டர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் வசிக்கும் மாடங்கள் சந்திர ஒளியினால் தகதகக்கின்றன – அருகில் இருக்கும் பூங்காவனங்களில் உலவும் சிவபெருமானின் தலையை அலங்கரித்துக் கொண்டிருக்கும் சந்திரனின் ஒளியினால்.

காளிதாசனின் கவித்திறனில் மயங்கிய் ஜெர்மானியர்களில் ஒருவர் ஷில்லர். அவருடைய மேரி ஸ்டுவர்ட் நாடகத்தில் காளிதாசனின் தாக்கம் தெரிகிறது. அவரே நான் காளிதாசனால் தாக்கமுற்றேன் என்று சொல்லியிருக்கிறார்:’

இது எலிசபெத் அரசியால் சிறையில் அடைக்கப்ட்ட மேரி ஸ்டுவர்ட் கூறுவது:

My eyes are not in prison, they can travel
Along the skyroads, measured by no miles.
Those wind-uplifted mountains far away
Are in my kingdom. Even these close clouds,
Charioteering through the afternoon,
Can see their shadows on the face of France.
Storm-driven vikings of the sky!
What hearts are in your company?
I have no messengers but you,
Carry my kisses to my country!

என் கண்கள் சிறையில் இல்லை. அவை வானப்பாதைகளில் செல்ல முடியும். அளக்கமுடியாத தொலைவுக்கு. காற்றினால் தூக்கி நிமிர்த்தப் பட்ட அந்த மலைகளும் தொலைவில் என் ராஜியத்தில் இருக்கின்றன. இந்த மேகங்கள் கூட மாலையில் தங்கள் வானத்தேர்களில் சென்று தங்கள் நிழல்களை பிரான்சின் படரச் செய்ய முடியும். வானத்தில் இருக்கும் புயல்-வீரர்களே! எந்த இதயங்கள் இன்று உங்களோடு இருக்கின்றன? எனக்கு எந்தத் தூதர்களும் இல்லை. ஆனால் நீங்கள் இருக்கிறீர்கள். என் முத்தங்களை என் நாட்டிற்குக் கொண்டு செல்லுங்கள்.

இலக்கியத்தின் வியக்க வைக்கும் இணைச்சங்கிலிகள் இவை; அகநானூறு- காதா சப்தசதி – காளிதாசன் – ஷில்லர். ஆண்டாள் இன்னொரு இணைச்சங்கிலியில், தமிழ்ச்சங்கிலியில், அகநானூற்றோடு இணைந்திருக்கிறாள்.

விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்!
தெண்ணீர் பாய் வேங்கடத்து என் திருமாலும் போந்தானே?
கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோரச் சோர்வேனை
பெண்ணீர்மை ஈடழிக்கும் இது தமக்கோர் பெருமையே

வானமெங்கும் நீல மேல் விதானத் துணி விரித்தது போல இருக்கும் கருநீல மேகங்களே! தெளிந்த அருவிகள் பொழியும் திருவேங்கடத்தில் உறைபவனான என் நாயகனான திருமாலும் உங்களோடு வந்து தன்னைக் காட்டாமல் மறைந்து இருக்கிறானோ? கண்ணீர் வடிந்து என் மார்பில் படர்ந்து நுனிகளில் இருந்து துளிகளாகச் சொட்டுக்கிறது. என்னுடைய பெண்மை உருவே இல்லாது போகச் செய்யும் இச்செயல் அவனுக்குப் பெருமையாக இருக்கும் என்று கருதுகிறானோ?

ஆண்டாளின் உவமை பாரதியின் பட்டுக் கருநீலப் புடவையை நினைவிற்குக் கொண்டு வருகிறது.

உரையாசிரியர்கள் வைகுண்டத்தில் நாராயணனோடு இருப்பது போல பூமியிலும் அவனோடு வானம் என்ற நீல விதானத்தின் கீழ் இருக்க வேண்டும் என ஆண்டாள் நினைக்கிறார் என்று சொல்கிறார்கள். அவன் திருமகளோடு உங்களிடையே இருக்கிறான். இறங்கி வந்து பூமகளான என்னோடும் சேர்ந்து இருக்க வேண்டும் என்ற வேட்கைதான் அவரை திருமால் என்று இறைவனை அழைக்க வைத்திருக்கிறது.

என் பெண்தன்மை அழிந்து விடும் என்று இறைவனைப் பயமுறுத்துகிறார். இவள் முழுமையான பெண்மைக்கு உதாரணம் என்றால் அவன் ஆண்மைக்கு உதாரணம். பெண் நான் இருப்பதால்தான் நீ ஆணாக அறியப்படுகிறாய் என்கிறார் ஆண்டாள். நானில்லாமல் நீயில்லை என்ற கருத்தும் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது.

மாமுத்த நிதி சொரியும் மாமுகில்காள்! வேங்கடத்துச்
சாமத்தின் நிறம் கொண்ட தாடாளன் வார்த்தை என்னே!
காமத் தீயுள் புகுந்து கதுவப்பட்டு இடைக் கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே

அரிதான பெரிய முத்துக்களையும் பொன்னையும் சொரிகின்ற பெரும் மேகங்களே! வேங்கடத்தில் உறையும் சியாமள வண்ணனின், தாடாளனின் செய்தி ஏதாவது உண்டா? காமத்தீயானது என் உள்ளே புகுந்து என்னைக் கவ்விக் கருக்குகிறது. இடையே இந்த நடு இரவில் தென்றல் அடித்து தீக்கு உதவி செய்கிறது. அதன் இலக்காக நான் இருக்கிறேன்- ஏதும் செய்ய முடியாமல்.

தாடாளன் – – தாளாளன் – பெருமை மிக்கவன், தன்னடியால் மூவுலகையும் அளந்தவன். “ஒரு குறள் ஆய் இரு நிலம் மூவடி மண் வேண்டி  உலகு அனைத்தும் ஈர் அடியால் ஒடுக்கி ஒன்றும் தருக எனா மாவலியைச் சிறையில் வைத்த  தாடாளன் தாள் அணைவீர்” என்று திருமங்கை மன்னனின் பெரிய திருமொழி கூறுகிறது. சீர்காழிப் பெருமாளின் பெயர்.

அவன் உலகை அளந்தவன். இன்று உங்களில் மறைந்து இருப்பதன் காரணம் என்ன?

கடலுக்கு நீரைக் கொடுத்து அதில் முத்துக்களை விளவிப்பது மேகங்கள். அதே போன்று மண்ணைப் பொன் விளையும் பூமியாக ஆக்குவது மேகங்கள் அதானால் தான் ஆண்டாள் “மாமுத்த நிதி சொரியும் மாமுகில்காள்” என்று குறிப்பிடுகிறார். மேலும் கொடுப்பதில் மேகத்திற்கு ஈடு இல்லை. “கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றும் கொல்லோ வுலகு” என்ற வள்ளுவனின் வாக்குப்படி மேகங்கள் எந்த மறு உதவியையும் நம்மிடம் எதிர்பார்ப்பதில்லை. இவ்வளவு உதவிக்கு புகழ் பெற்ற நீங்கள் எனக்கு மட்டும் உதவி செய்ய மறுப்பது என்ன நியாயம் என்று ஆண்டாள் கேட்கிறார்.

காமத்தீ என்னைக் கருக்கக் கருக்க என் நிறமும் உன் நிறமாகி விடும் என்பதைக் குறிக்கத்தான் ஆண்டாள் வேங்கடவனின் கருநிறத்தைக் குறிப்பிடுகிறாள் என்றும் தோன்றுகிறது. தென்றல் பெருங்காற்றல்ல. அது தீயைத் தூண்டி மெதுவாகக் கருக்கச் செய்கிறது. ‘கதுவ’ என்ற சொல்லுக்கு பற்றுதல் என்று பொருள். பாம்பு போன்று பற்றி மெதுவாக விழுங்குதலை அச்சொல் குறிக்கிறது. காமத்தீ எனும் பாம்பு.

உன்னால் தொடப்பட வேண்டியவள் நான். ஆனால் தென்றல் என்னைத் தொடும் கொடுமை நடக்கிறது.

உரையாசிரியர்கள் சொல்கிறார்கள்: தென்றலால் நசிய வேண்டியது இறைவன். சீதையின் பிரிவினால் ராமன் நசிவதைப் போல. நான் நசிவது நியாமல்ல என்று ஆண்டாள் நினைக்கிறார்

எழுதிக் கொண்டே போகலாம். ஆண்டாளின் மேதைமைக்கு இப்பாடலைத் தவிர வேறு சான்று தேவையில்லை.

ஒளிவண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்
எளிமையால் இட்டு என்னை ஈடழியப் போயினவால்
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள்! ஆவி காத்து இருப்பேனே

அருளைத் தயங்காது அளிக்கும் மேகங்களே! என் உடலின் ஒளியும் நிறமும் தெளிவான சிந்தனையும், உறக்கமும் நான் படும் துன்பத்தால் என்னை விட்டு போய் விட்டன. கைவளைகள் என் மெலிவால் கழன்று விழுந்து விட்டன. நான் நிலை குலைந்து போயிருக்கிறேன். ஐயோ! குளிர்ந்த அருவிகளையுடைய வேங்கடத்தில் இருக்கும் என் நாயகனான கோவிந்தன் குணங்களைப் பாடிக் கொண்டே இருந்தால் நான் என் உயிரைக் காத்துக் கொள்ள முடியுமா?

“எல்லாவற்றையும் இழந்து விட்டேன். கண்ணன் பெயரையும் புகழையும் விடாமல் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நான் உயிர் வாழ முடியுமா?’ என்ற கேள்விக்கு நிச்சயம் முடியும் என்று தான் வைணவர்கள் பதில் சொல்வார்கள். அன்று எல்லாவற்றையும் இழந்து இரு கரங்களையும் கூப்பி நின்ற திரௌபதியை அவன் காப்பாற்றவில்லையா?

அதுவும் அவனுக்கு மிகவும் பிடித்தமான கோவிந்தன் பெயரைச் சொல்லும் போது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s