போய்த்தீர்த்தம் ஆடாதே நின்ற புணர் மருதம்
சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே ஏறிக் குடி கொண்டு
சேய்த்தீர்த்தமாய் நின்ற செங்கண்மால் தன்னுடைய
வாய்த்தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம்புரியே!
வலம்புரிச்சங்கே! நெடுந்தூரம் நடந்து கங்கை, காவிரி போன்ற ஆறுகளில் நீராடி புண்ணியம் தேடும் துன்பம் உனக்கில்லை. இரட்டை மருத மரங்களாக நின்றவர்களச் (குபேரனின் சிறுவர்களை) சாய்த்துத் தள்ளிய கண்ணனின் கைத்தலத்தில் நீ இருக்கிறாய். அங்கே நீ என்றும் குடியிருப்பாய். (யாரும் உன்னை வெளியேற்ற முடியாது). நீ குடைந்து நீராடும் தீர்த்தங்கள் வேறு. கருணையின் உருவங்களாக இருக்கும் அவன் சிவந்தகண்களின் ஈரம் உனக்குப் போதும். அதை விட உயர்ந்த தீர்த்தம் எங்கும் கிடையாது. கூடவே இறைவனின் வாயில் சுரக்கும் தீர்த்தத்திலும் நன்றாக மூழ்கி நீராடும் நற்பயன் பெற்றுள்ளாய்.
வைணவ வீடுகளில் எச்சில் என்பது ஏறத்தாழ சயனைடிற்குச் சமானமானது. தண்ணீர் உண்ணும் பாத்திரத்தில் வாய் வைத்துக் குடித்தால் கூட குடித்தவர் கொலை செய்தவரைப் போலப் பார்க்கப்படுவார். ஆண்டாள் மிகவும் கட்டுப்பாடுகள் உள்ள வைணவ குலத்தில் பிறந்தவர். இங்கு இறைவன் வாயின் ஈரம் தீர்த்தங்களை விட உயர்ந்தது என்று தெளிவாகச் சொல்கிறார். பக்தர்கள் எதையும் மீறலாம் என்பது மீற முடியாத விதி.
“தூய்மைகள் அனைத்திலும் சிறந்த தூய்மை கோவிந்தன். புண்ணியங்களில் புண்ணியன். மங்களங்களில் மங்களமானவன்” என்று சொல்லும் வடமொழி சுலோகம் ஒன்றை உரையாசிரியர்கள் மேற்கொள் காட்டுகிறார்கள். எனவே அவனிடம் இருக்கும் எதுவும் ஒதுக்கும்படியாக இருக்காது.
கடலைக் கடைந்து அமுதை எடுக்க தேவர்கள் பெரும்பாடு பட வேண்டியிருந்தது ஆனால் உனக்கோ அது பிறக்கும் இடத்திற்கே சென்று அதை அருந்த முடிகிறது என்று ஆண்டாள் சொல்கிறாராம்.
செங்கமல நாண்மலர் மேல் தேனுகரும் அன்னம் போல்
செங்கட் கருமேனி வாசுதேவனுடைய
அங்கைத் தலம் ஏறி அன்ன வசம் செய்யும்
சங்கரையா! உன் செல்வம் சால அழகியதே
அப்பொழுது அலர்ந்த செந்தாமரைப்பூவில் இருந்து தேனை அருந்தும் அன்னம் போன்று, சிவந்த கண்களையும் கரிய மேனியையும் உடைய வாசுதேவனின் கையில் குடியிருக்கும் சங்குகளின் தலைவா! உன்னுடைய தொண்டுச் செல்வம் மகத்தானது.
சங்கின் வெண்மை அன்னத்தின் நிறம். செந்தாமரை அவன் கண்கள. அவனே கருந்தாமரை.
புள்ளரையன் என்று கருடன் அழைக்கப்படுவது போல சங்கரையன் என்று இங்கு சங்கு அழைக்கப்படுகிறது. இறைவனுக்குத் தொண்டு செய்பவர்கள் அனைவரும் அவர்கள் குழுவிற்குத் தலைவர் ஆகி விடுகிறார்கள்! சடாயுவைப் பற்றிச் சொல்லும் போது கூட கம்பன் “சூழல் யாவையும் கடந்தனர்; கண்டனர் கழுகின் வேந்தையே” என்று கூறுகிறான். கருடன் பறவைகளுக்கு எல்லாம் அரசன். இறைவனைச் சுமப்பவனாக இருப்பதால். சுக்ரீவனையும் குரங்க்குகளின் அரசன் என்று வாலி இருக்கும்போதே ராமன் சொன்னதை உரையாசிரியர்கள் மேற்கோள் காட்டுகிறார்கள்.
அஹமன்னம் அஹமன்னம் அஹமன்னம்/ அஹமன்னாதோ அஹமன்னாதோ அஹமன்னாத: என்று தைத்திரிய உபநிடதம் கூறுகிறது. உணவும் நானே. உண்பவனும் நானே என்று சொல்லும் இறைவனின் வாயமுதத்தை தினமும் உண்ணும் உன்னுடைய செல்வம் மிகவும் மகத்தானது.
ஆண்டாளின் அன்னம் பூவில் தேனுண்ணும் வண்டாக மாறி விடுகிறது!
உண்பது சொல்லில் உலகளந்தான் வாய் அமுதம்
கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே
பெண்படையார் உன் மேல் பெரும் பூசல் சாற்றுகின்றார்
பண்பல செய்கின்றாய் பாஞ்சசன்னியமே!
பாஞ்சஜன்யமே! நீ உண்பது ஈரடியால் மூவுலகையும் அளந்த பெருமானின் வாயில் ஊறும் அமிர்தம். நீ உறங்குவதோ கடல் நிறத்தவனின் கைகளில். இதனால்தான் பெண் குலத்தவர் எல்லோரும் கூக்குரலிடுகின்றனர். சண்டை போடுகின்றனர். ‘நாங்கள் இங்கு தனிமையில் துயரத்தோடு இருக்கும் போது நீ மட்டும் இறைவனால் உண்பவனாகவும் உண்ணப்படுபவனாகவும் இருப்பது நியாயமா’ என்று கேட்கிறார்கள்.
ஆண்டாள் வெண் சங்கை மகிழ்ச்சிப்படுத்துவது போதும் என்ற முடிவிற்கு வந்து விட்டார். இப்போது நியாயம் கேட்கத் துவங்கி விட்டார்.
வெண் சங்கின் உறக்கத்தைப் பற்றிப் பேசும் போது ‘பிரசாதத்தைச் சூடி கைப்புடையில் கிடப்பாரைப் போலே’ என்கிறார் பெரியவாச்சான் பிள்ளை. அதாவது கோவில் பிரசாதங்களை அளவிற்கு மீறி உண்டு, கிடைத்த மாலைகளையெல்லாம் சூடிக் கொண்டு, உண்ட மயக்கத்தில் கோவில் வாசலில் காவல்காரர்கள் இருக்கும் இடத்தில் சரிந்து கிடக்கும் பிராமணர்களைப் போல நீயும் இருக்கிறாயே என்று ஆண்டாள் சொல்கிறாராம். கைப்புடை என்றால் காவலர் இருக்கும் இடம்.
இன்னொன்றும் ஆண்டாள் சொல்கிறார். உண்மையான பக்தன் யாரும் இறைவனைத் தனியாக அன்பவிக்க விரும்ப மாட்டான். நான் கூடியிருந்து குளிர்வதைத் தான் விரும்புவேன். ஆனால் நீயோ தனியாக அவனுடன் எப்போதும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறாய் இது நியாயமா? எல்லா பக்தர்களும் இறைவனிடம் சேர வேண்டும் என்பதுதான் உலகின் விதி.
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மதுவாயில் கொண்டாற்போல் மாதவன் தன் வாய் அமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ உண்டக்கால்
சிதையாரோ உன்னோடு? செல்வப் பெரும் சங்கே!
இறைவனை என்றும் தொட்டுக் கொண்டிருக்கும் பெருஞ்செல்வத்தைப் பெற்றுள்ள சங்கே! பதினாறாயிரம் தேவிமார்கள் கண்ணனின் வாய்ச்சுவையை வேண்டிப் பார்த்திருக்க, அவன் அடியார்கள் எல்லோரும் பகிர்ந்துண்ணவேண்டிய அவ்வமுதை, நீ மட்டும் வண்டு தனியாக பூவின் தேனை உண்பதுபோல் உண்டால் பெண்கள் உன்னுடன் சண்டைக்கு வராமல் வேறு என்ன செய்வார்கள்?
முன் பாட்டில் சிறிது தணிந்த குரலில் சொன்னதை இங்கு உயர்ந்த குரலில் ஆண்டாள் சொல்கிறார்.
இறைவனுக்கு பதினாறாயிரம் தேவிகள் என்று சொல்வதை அவனை அடைய விரும்புபவர்கள் கணக்கற்ற பாகவதர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்.
என் தகப்பனான பெரியாழ்வார் சொன்னது போல ‘கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்’ என்று உன்னை நாங்கள் பாகவதர் குழுவிலிருந்து தள்ளி வைத்து விட்டால் நீ என்ன செய்வாய் என்று ஆண்டாள் கேட்கிறார். பாகவதர் அனுமதியில்லாமல் பகவானை யாரும் அணுக முடியாது, நீ உட்பட என்கிறார்.
உன் செல்வச் செருக்கினால் நீ இப்படிப் பேசாமல் இருக்கிறாய். ஆனால் அவன் செல்வத்திற்கும் மூல காரணம் எங்கள் பக்திச் செல்வம்தான் . நாங்கள் இல்லாமல் அவனும் இல்லை.
பாஞ்சசன்னியத்தைப் பற்பநாபனோடும்
வாய்ந்த பெரும் சுற்றம் ஆக்கிய வண்புதுவை
ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும்
ஆய்ந்தேத்த வல்லார் அவரும் அணுக்கரே
பாஞ்சஜன்யத்தை, தாமரை பிறந்த தொப்புளை உடைய இறைவனோடு மிக நெருங்கிய, பெரிய உறவை உடையதாக ஆக்கியவரும் அழகிய வில்லிபுத்தூரில் பிறந்தவரும் நிறைந்த புகழைக் கொண்டவரும் மற்றும் பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையும் ஆன கோதை இயற்றிய் இத் தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும் பாடி அவனை துதிக்க வல்லவர்கள் அனைவரும் வெண் சங்கைப் போலவே எம்பெருமானுக்கு நெருங்கிய உறவுடையவர்கள் ஆவர்.
பிராட்டி பரிந்துரைக்காமல் பாஞ்சஜன்யம் இறைவ்ன் அருகில் சென்றிருக்க முடியாது என்று கவிதை சொல்கிறது. ஆண்டாள் பூமித்தாயின் வடிவாகப் பார்க்கப்படுகிறார் என்பதை நாம் மறக்கக் கூடாது.