மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ! நான்
தோழீ! மத்தளங்கள் கொட்ட, கோடுகளை உடைய சங்குகள் விடாமல் ஊத, என்னை மணம் புரியும் அத்தை மகன், குறையில்லாத முழுமையின் இலக்கணமான மதுசூதனன், முத்துக்களால் நிறைந்த மாலைகள் தொங்கும் பந்தலின் கீழே வந்து என் கையைப் பற்றியதாகக் கனவு கண்டேன்.
அத்தை மகனையும் மாமன் மகனையும் மணம் செய்வது தமிழர் வழக்கம். ஆண்டாள் நப்பின்னையைப் போலவே தன்னையும் ஆச்சியர்களில் ஒருவராக, கண்ணனுக்கு முறை கொண்டாடுபவராக மாற்றிக் கொண்டு விட்டார்.
உரையாசிரியர்களுக்கு சந்தேகம். ஆண்டாள் பட்டர் பிரான் மகள். அவளுக்கு வேதம் ஒலிக்க மணம் செய்ய வேண்டியது தானே முறை? இங்கு வாத்தியங்களின் ஓசை கேட்கிறதே ஒழிய, வேதத்தின் பேச்சையே காணோமே? வேதமனைத்திற்கும் வித்து அவள் இல்லையா? அவனும் சந்தீப முனிவரிடம் வேதங்கள் அனைத்தையும் கற்றவன். அவன் ஏன் வேத ஒலி வேண்டும் என்று வலியுறுத்தவில்லை?
சந்தேகத்தை அவர்களே தீர்த்துக் கொள்கிறார்கள். ஆண்டாள் இங்கு ஆயர் சிறுமியாக நினைத்துக் கொள்கிறார். கண்ணன் மாடு பேய்ப்பவன். அவன் ஆசிரமம் சென்று பெரிய ஆளாக ஆகும் முன்னால் இந்தத் திருமணம் நடந்ததாம்!
பாணிக்கிரகணம் என்ற மணப்பெண்ணின் கையைப் பற்றும் சடங்கை கம்பனின் சீதையும் குறிப்பிடுகிறார். ‘வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய், இந்த, இப் பிறவிக்கு இரு மாதரைச் சிந்தையாலும் தொடேன் என்ற, செவ் வரம் தந்த வார்த்தை திருச் செவி சாற்றுவாய்,’ என்பது கம்பனின் வாக்கு.
வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து
காய்சினமா களிறு அன்னான் என் கைப் பற்றி
தீ வலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீ! நான்
தோழீ! கற்றறிந்த வேதியர்கள் உயரிய வேத மந்திரங்களை உச்சரிப்புகளில் பிழை இல்லாமல் இசைக்க, பசுமையான இலைகளுடன் கூடிய நாணற்களைப் பரப்பி வைத்து சுள்ளிகளை இட்டு, பெருஞ்சினம் கொண்ட யானையின் மிடுக்கை உடைய கண்ணன் என் கையைப் பிடித்துக்கொண்டு தீ வலம் வந்ததை நான் கனவில் கண்டேன்.
அடுத்த பாடலிலேயே வேதம் வந்து விடுகிறது! அதைப் பற்றிப் பேசாத உரையாசிரியர்கள் ‘நல்ல மறை’ என்ற சொற்களைப் பிடித்துக் கொண்டுவிடுகிறார்கள். அது என்ன நல்ல மறை, கெட்ட மறை? வேதங்களின் முற்பகுதி இந்திரன் போன்ற தேவர்களையும் யாகங்களையும் பற்றிப் பேசுகின்றதாம். பிற்பகுதியில்தான் இறைவனைப் பற்றிய செய்தி வருகிறதாம் – புருஷ சூக்தம் போன்ற சுலோகங்களில். பிற்பகுதிதான் நல்ல மறை என்கிறார்கள்.
அக்கினியை வேகமாக வலம் வரக்கூடாதாம். யானை நடப்பது போல நிதானமாக சப்தபதி மந்திரத்தைச் சொல்லிக் கொண்டு வலம் வர வேண்டுமாம். அதனாலேயே பாடலில் கண்ணன் யானைக்கு ஒப்பிடப் படுகிறான்.
இப்பாடலின் கண்ணன் சந்தீப முனிவரிடம் வேதங்களைக் கற்றுத் தேர்ந்த கண்ணன்!
இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மை உடையவன் நாராயணன் நம்பி
செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ! நான்
தோழீ! இந்தப் பிறவிக்கும் இனி எடுக்கக் கூடிய எண்ணற்ற பிறவிகளுக்கும் நாம் இறுக்கமாகப் பிடித்துக் கொள்பவனான நம் தலைவன், நிறைகுணத்தவன், நாராயணன், கண்ணன் தன் சிறப்புவாய்ந்த திருக்கையால் என் காலைப் பிடித்து அம்மியின் மேல் எடுத்துவைப்பதை நான் கனவில் கண்டேன்.
திருப்பாவையில் இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் என்று சொன்னதையே இங்கு சொல்கிறார். மண்ணில் பல பிறவிகள் பிறந்து அவனையே மணாளனாக அடைய வேண்டும் என்பது ஆண்டாளின் ஆசை. ‘மாமேகம் சரணம் வ்ரஜ’ என்று கீதையில் தன் காலைப் பிடிக்குமாறு சொன்னவன் அவனிடம் சேர்ந்ததும் பக்தர்கள் கால்களை பிடிக்க ஆர்வம் காட்டுவான். பக்தர்களின் கால்களைப் பிடிக்கக் கூட தயங்காதவன் அவன். பிராட்டியின் காலைப் பிடிக்க மாட்டானா?
யாகங்களைச் செய்து கொண்டிருந்தால் ஒரு தடவை மழை பெய்து நின்று விடுவது போல பலன்கள் நீடிக்காதாம். ஆனால் அவன் பெயரைச் சொல்லிக் கொண்டிருந்தால் கணக்கற்ற பிறவிகளுக்குப் பலங்களைப் பெறலாம்.
வரிசிலை வாள் முகத்து என்னைமார் தாம் வந்திட்டு
எரி முகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரி முகன் அச்சுதன் கைம்மேல் என் கை வைத்து
பொரி முகந்து அட்டக் கனாக் கண்டேன் தோழீ! நான்
தோழீ! வில்லினை ஒத்த புருவங்களையும் மிளிரும் முகங்களையும் கொண்டவர்களான என் தமையனார்கள் வந்து கொழுந்து விட்டு எரியும்படி வளர்த்த தீயின் முன் என்னை நிறுத்தி சிங்கம் போன்ற கம்பீரமான முகத்தைக் கொண்ட அச்சுதன் தன திருக்கையின் மேலே என்னுடைய கையை வைத்து பொரிகளை அள்ளி நெருப்பில் படைப்பதாக நான் கனவில் கண்டேன்.
இது லாஜஹோமம் என்ற ஓமச் சடங்குகளைக் குறிக்கிறது. அரிசிப் பொரிகளைத் தீயில் இடுதல். அவன் கையை இவர் கையின் மீது வைப்பது அவளை என்றும் விட மாட்டேன் என்று உறுதியளிப்பதைக் குறிக்கிறது.
குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம்மட்டித்து
மங்கல வீதி வலம் செய்து மண நீர்
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனை மேல்
மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ! நான்
தோழீ! குங்குமத்தை உடம்பெல்லாம் பூசிக் கொண்டு குளிர்ந்த சந்தனத்தையும் நன்றாகத் தடவிக் கொண்டு, கண்ணனுடன் அலங்கரிக்கப்பட்ட வீதிகளிலே யானை மீது ஊர்வலம் வந்து பின்னால் நாங்கள் நீராட்டப்படுவதாக நான் கனவில் கண்டேன்.
ஆயிரம் யானை சூழ வந்தவன், இவளோடு ஒரு யானை போதும் என்று வருகிறான். நீராட்டப் படுவது இருவரும் கூடிய பிறகு நடக்கிறது என்று உரையாசிரியர்கள் சொல்கிறார்கள்.
ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயு நன்மக்களைப் பெற்று மகிழ்வரே
அந்தணர்களால் புகழப்பட்ட வில்லிபுத்தூர்க்குத் தலைவரான பெரியாழ்வாருடைய மகளாகிய ஆண்டாள் தான் கண்ணனை மணம் செய்து கொண்ட கனவினைப் பற்றிப் பேசும் தூய்மையான இப்பத்துத் தமிழ் பாட்ல்களை நன்றாகச் சொல்ல வல்லவர்கள் நல்ல குணங்கள் கொண்ட பிள்ளைகளைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள்.