ஆறாம் திருமொழியின் முதல் பாடலான வாரணமாயிரம் தமிழ் அறிந்தவர்கள் அனைவருக்கும் அறிமுகமான பாடல். ஆண்டாளின் நாச்சியார் திருமொழியே பெருங்கனவு. அக்கனவிற்குள் கண்ட உட்கனவில் பிறந்தவை ஆறாம் திருமொழியின் பாசுரங்கள். வைணவத் திருமணங்களில் தவறாமல் பாடப்படுபவை.
“பகவானுக்கு இடாத அன்னமும், வாரணம் ஆயிரம் பாடப்படாத திருமணமும்” எந்தப் பயனையும் தராது என்று வைணவர்கள் நம்புகிறார்கள். வாரணம் ஆயிரம் பாசுரங்கள் திருமணத்தில் பாடப்படும் நிகழ்ச்சியை “சீர் பாடல்” என்று அவர்கள் அழைக்கிறார்கள். பாடல்கள் பாடப்படும் போது மணமகனும் மணமகளும் எதிர் எதிரே உட்கார்ந்து கொண்டு மஞ்சள் தடவிய தேங்காய்களை உருட்டி விளையாடுவார்கள்.
ஆண்டாள் பாசுரங்களில் சொல்லப்படும் திருமண முறைக்கும் சங்ககாலத் திருமண முறைக்கும் தொடர்பே இல்லை என்று சொல்லலாம். இதற்கு ஒரு காரணம் ஆண்டாள் சொல்லும் திருமண முறை பிராமணர்களிடையே மட்டும் பழக்கத்தில் இருந்ததால் என்று சொல்லலாம். வையாபுரிப் பிள்ளை “பாணிக்கிரகணம், ஓமம் தீவலம் வருதல். சப்தபதி முதலியன சங்ககாலத்தில் நிகழ்ந்தன அல்ல. புரோகிதர்கள் மந்திரம் ஓதுதலும் மணவினையில் இல்லை என்றே கூறலாம். தாலிகட்டும் சடங்கும் காணப்படவில்லை’ என்கிறார். ஆனாலும் மு சண்முகம் பிள்ளை ‘ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்துப் பின் அமை நெடு வீழ் தாழ’ என்ற நெடுநல்வாடை வரிகளுக்கு ‘முன்பு முத்தாற் செய்த கச்சு சுமந்த பருத்த முலையினுடைய மார்பிடத்தே இப்பொழுது குத்துதல் அமைந்த நெடிய தாலி நாண் ஒன்றுமே தூங்க’என்ற் நச்சினார்க்கினியர் உரையைக் குறிப்பிட்டு சங்ககாலத்திலும் தாலி அணியும் மரபு இருந்தது என்று எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்.
சங்ககாலத் திருமணங்களில் நல்ல நாள் பார்த்தல், சோதிடம் பார்த்தல், மணமகளுக்குப் பரிசம் கொடுத்தல், சிலம்பு கழற்றுதல், வீட்டை அலங்கரித்து செம்மண் பூசி மாலைகளைத் தொங்கவிடுதல், புதுமணல் பரப்புதல், விளக்குகளை வைத்தல், இல்லுறை தெய்வங்களுக்குச் சிறப்பு செய்தல், முழவை முழக்கி, சுற்றம் கூட, நீராடி, புத்தாடை அணிந்து திருமணச் சடங்குகளைத் துவக்குதல், உளுந்து கலந்த சோறும் இறைச்சி கலந்த வெண்சோறும் அளித்தல் போன்றவை நடைபெற்றதாக நாம் சங்கப் பாடல்களிலிருந்து அறிகிறோம்.
சிலப்பதிகாரம் ‘மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலஞ் செய்வது காண்பார்கண் நோன்பென்னை’ என்று மரபு வழியில் கண்ணகியின் திருமணம் நடந்ததைப் பேசுகிறது. இடைப்பட்ட காலத்தில் முறைகள் மாறிவிட்டன போலும்.
ஆண்டாள் உண்மையிலேயே கண்ணனோடு சேர்வோம் என்று நினைக்கிறாரா? அல்லது இவையெல்லாம் கனவிலேயே முடிந்து விடும் என்று கருதுகிறாரா? மனித மனம் எளிதில் கிட்டாத ஒன்றைப் பற்றி கனவு காணும் போது அதற்கும் தனக்கும் உள்ள இடைவெளியை நினைப்பதை மறப்பதில்லை.
இந்த அன்னா அக்மதோவாவின் கவிதையைப் படியுங்கள்
In Dream
Black and enduring separation
I share equally with you.
Why weep? Give me your hand,
Promise me you will come again.
You and I are like high
Mountains and we can’t move closer.
Just send me word
At midnight sometime through the stars.
கரிய, தொடரும் பிரிவை
நான் உன்னுடன் சரிபாதியாகப் பகிர்ந்துள்ளேன்.
ஏன் அழ வேண்டும்? கையைக் கொடு
வருவேன் என்ற உறுதிமொழியை அளி.
நீயும் நானும்
பெரிய மலைகள் போன்றவர்கள்.
என்றும் நெருங்க முடியாதவர்கள்
நடு இரவில் நட்சத்திரங்கள்
வழியே உன் செய்தியை அளி.
ஆண்டாளின் கவிதைகள் முழுவதும் நடு இரவில் நட்சத்திரங்களில் வழியே அளிக்கப்பட்ட செய்திகளாக இருக்கின்றன என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் இங்கு இவள் அனுப்புகிறாள். அவன் பதிலளிக்கத் தயங்குகிறான்.
ஆண்டாள் காமனிடம், சின்னக் கண்ணனிடம், இளைய கண்ணனிடம், கூடலிடம் மற்றும் குயிலிடம் பேசிப் பார்த்து விட்டாள். இப்பாசுரங்களில் தோழியிடம் பேசுகிறாள். செய்தி எவ்வாறாவது அவனிடம் சேர வேண்டும்.
இனி பாடல்கள்:
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புரம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ! நான்
தோழீ! எல்லா உயரிய குணங்களையும் நிரம்பப் பெற்றவனான நாராயணன் ஆயிரம் யானைகள் சூழ வலம் வருகிறான். அவனை வரவேற்பதற்க்காக, பொன்னால் ஆன குடங்களை வைத்து ஊர் எங்கும் தோரணங்கள் நாட்டியிருப்பதை என் கனவில் கண்டேன்.
உரையாசிரியர்கள் இறைவனின் பாராமுகத்தை வேறு விதமாகப் பார்க்கிறார்கள். வெளுத்த புடவையில் சிறிது சிறிதாகச் சாயம் ஏற்றுவதைப்போல பக்தியை உவ்வுலகில் ஏற்றினால் பின்னால் பரமபதத்தில் அவனோடு இருப்பது இயல்பாக இருக்கும். அதனால்தான் அவன் நம்மாழ்வாரிடமே உடனே வருவதற்குத் தயக்கம் காட்டினான். ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரம் ஆயிற்றே அவருக்கு ஏன் சாயம் என்றால், மண்ணில் பிறந்து விட்டால் மனிதர்களுக்கு என்ன நியாயமோ அதுதான் அவருக்குமாம். ஆனாலும் பிராட்டி. கனவிலாவது அவருக்கு நம் அனுபவத்தைக் கொடுப்போம் என்று நினைத்தானாம்.
ஆயிரம் யானைகள் ஏன்? ‘தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு வருவான்’ என்று ஆண்டாளின் தந்தையான பெரியாழ்வார் சொன்னார். இப்போது அவர்களும் வளர்ந்து விட்டார்கள். கண்ணனின் பெருமையைப் பறை சாற்றுவதற்காக யானைகள் மீது ஏறி வருகிறார்கள்.
நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு
பாளை கமுகு பரிசுடைப் பந்தற் கீழ்
கோள் அரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ! நான்
தோழீ! மணப் பெண்ணாகிய நான் அவனை மணம் புரியும் நன்னாள் நாளை(என்று பெரியவர்கள் நிச்சயத்திருக்கின்றனர்). பாளைகள் கொண்ட பாக்கு மரங்களால் அலங்கரிக்கப் பட்ட திருமணப் பந்தலின் கீழே நரசிம்மன் என்றும் மாதவன் என்றும் கோவிந்தன் என்றும் பெயர்களைக் கொண்ட இளைஞன் ஒருவன் நுழைவதை நான் கனவில் கண்டேன்.
நாளையே ஏன் என்றால் அடுத்த இரவைக்கூட அவளால் தாங்க முடியாது. பிரகலாதன் தூணிலும் இருப்பான் என்று சொல்லிய உடனே நரசிம்மாக, செங்கட் சீயமாக, தூணில் தோன்றி அவன் வார்த்தையைக் காப்பாற்றினான். ஆனால் நான் இன்று நாளை என்று கனவுதான் கண்டுக் கொண்டிருக்கிறேன் என்று ஆண்டாள் சொல்கிறார் என்று தோன்றுகிறது.
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
வந்திருந்து என்னை மகள் பேசி மந்திரித்து
மந்திரக் கோடி உடுத்தி மண மாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ! நான்
தோழீ! இந்திரன் அடங்கிய தேவர்களின் குழு இங்கே வந்து என்னை மணப் பெண்ணாக ஏற்றக் கொண்டு செய்ய வேண்டியவற்றைப் பற்றி ஆலோசனைகள் செய்தனர். துர்க்காதேவி – என் நாத்தனார் – கூறைப் புடவையை நான் உடுத்தும்படி செய்து, மாலைகளையும் சூட்டி அழகு பார்த்தார் எனக் கனவு கண்டேன்.
அந்தரி என்றால் வானத்தில் பறக்கக் கூடியவள். துர்க்கை. ஆண்டாளுக்குத் திருமணம் செய்யப் பறந்து வந்திருக்கிறாள். இவள் தான் பெண் என்று தீர்மானித்து முதலிலேயே கூறைப்புடவையை அவளே வாங்கி வந்து விட்டாளாம்
நால் திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்தேத்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னை
காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ! நான்
தோழீ! பிராமணோத்தமர்கள் பலர் நான்கு திசைகளிலும் இருந்து புனித நீரைக் கொண்டு வந்து நன்றாகத் தெளித்து உச்சமான குரலில் வாழ்த்துகளைச் சொல்லிப் பூக்களால் நெருக்கமாகக் கட்டப்பட்ட மாலையை அணிந்தவனான தூயவனான கண்ணனோடு என்னை இணைத்து காப்புக் கயிறு கட்டுவதை நான் கனவில் கண்டேன்.
சிட்டர் என்றால் சிரேஷ்டர். உயர்ந்தவர்கள்.
கதிரொளி தீபம் கலசம் உடன் ஏந்தி
சதிர் இளமங்கையர் தாம் வந்தெதிர் கொள்ள
மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு எங்கும்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ! நான்
தோழீ! அழகிய இளநங்கைகள் கதிரவனைப் போல ஒளி வீசும் விளக்குகளையும் பொற்கலசங்களையும் கைகளில் ஏந்திக்கொண்டு, எதிர் கொண்டு அழைக்க, வடமதுரை மன்னனான கண்ணன் பாதுகைகளை அணிந்துகொண்டு பூமி அதிரும்படி வந்ததை நான் கனவில் கண்டேன்.
பரமபதத்தைப் பக்தர்கள் அடையும் போது “நிறை குட விளக்கமும் மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே” என்று நம்மாழ்வார் சொல்கிறார். எனவே கண்ணனுக்கு பூமியில் பரமபத வரவேற்பு போல வரவேற்பு நடக்கிறதாம். ‘மன்னு வடமதுரை மைந்தனை’ என்று ஆண்டாள் திருப்பாவையில் பாடினார். இன்று அவன் வடமதுரையின் மன்னனாக ஆகி விட்டான். பூமி அதிர வேகமாக வந்தானாம். ஆண்டாளைச் சேரும் ஆசையில். அவனுக்கு உண்மையில் என்னை விட ஆசை என்கிறார் ஆண்டாள்.