எத்திசையும் அமரர் பணிந்து ஏத்தும் இருடீகேசன் வலி செய்ய
முத்தன்ன வெண்முறுவல் செய்ய வாயும் முலையும் அழகழிந்தேன் நான்
கொத்தலர் காவில் மணித்தடம் கண்படை கொள்ளும் இளங்குயிலே! என்
தத்துவனை வரக் கூகிற்றியாகில் தலை அல்லால் கைம்மாறிலேனே
பூக்கள் கொத்துக் கொத்தாக மலரும் சோலையில் உனக்கு உகந்த இடம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அங்கு சுகமாக உறங்குகின்ற இளங்க்குயிலே! எத்திசையிலும் இருக்கும் தேவர்கள் வணங்கிப் போற்றும் பெருமை பெற்ற இருடிகேசன் – எல்லா உலகங்களிலும் இருப்பவர்களின் எல்லா அவயவங்களையும் காக்கும் தலைவன் – என் முன்னால் வரமாட்டேன் என்ற மிடுக்கோடு இருந்து எனக்கு மிகுந்த வலியை அளிக்கிறான். என் முத்துக்கள் அனைய முறுவல் காணாமல் போய் விட்டது. சிவந்த வாய் சாம்பலுற்று விட்டது. என மார்பகங்கள் அவற்றின் ஈர்ப்பை இழந்து விட்டன. மொத்தத்தில் நான் அழகழிந்து போய் விட்டேன். ஆனாலும் உயிரோடு இருக்கிறேன் – அவனுக்காக. அவ்வெம்பெருமானை இங்கே வரும்படி நீ கூவு. உன் கூவலைக் கேட்டு அவன் வந்தான் என்றால், என் தலை உன் கால்களில் எப்போதும் பணிந்து இருக்கும் . இதை விடப் பெரிய கைம்மாறு என்னிடம் இல்லை.
அவனுக்காகவே அழகாகப் பிறந்தேன். அவனே வராமல் அழகை அழிக்கிறான். எல்லாவற்றையும் காப்பவன் என்று அவனுக்குப் பெயர் இருப்பது அதிசயம்தான். தத்துவன் என்று ஆண்டாள் சொல்வது அவருடைய ஸத்தைக்குக் காரணாமானவன் என்று உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். அதாவது அவளுடைய இருத்தலுக்குக் காரணமானவன்.
நீ இருக்கும் வரை நான் இருப்பேன். அவ்வளவு சீக்கிரம் தோற்றுவிடுவேன் என்று நினைக்காதே என்றும் ஆண்டாள் சொல்லாமல் சொல்கிறார். சீதைக்கு முன்னால் ராமனைப் போன்ற தோற்றத்தை ராவணன் மாயையினால் சமைத்து அதைக் கொன்றான. சீதை கதறினாரே தவிர உயிரை விடவில்லை. காரணம் அவன் இல்லையென்றால் தன் உயிர் இருக்காது என்ற உறுதி.
பூமிதனில் யார்க்கும் அடிமை செய்யோம் பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம் என்று பாரதி பாடினார். இங்கு ஆண்டாள் பரிபூரணனுக்காக ஒரு குயிலுக்கே அடிமை செய்யத் தயாராக இருக்கிறார்!
பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து ஆவியை ஆகுலம் செய்யும்
அங்குயிலே! உனக்கென்ன மறைந்துறைவு? ஆழியும் சங்கும் ஒண்தண்டும்
தங்கிய கையவனை வரக் கூவில் நீ சாலத் தருமம் பெறுதி
அழகே உருவான குயிலே! நீ மறைந்து, குரல் மட்டும் இடுவதால் என்ன பயன்? அலை மிகுந்த திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவனோடு கூட வேண்டும் என்ற ஆசையால் எனது முலைகள் உயிர் பெற்றுப் பருத்து இன்பமுறுகின்றன. ஆனால் உயிரை உருக்கி என்னைக் கலங்கச் செய்கின்றன. சங்கையும் சக்கரத்தையும் கதையையும் தாங்கிக் கொண்டிருக்கின்ற கைகளை உடைய எம்பெருமான் இங்கே வரும்படி நீ கூவு. அவ்வாறு செய்தால் உன்னை விடத் தருமம் செய்தவர்கள் உலகத்திலேயே யாரும் இருக்க மாட்டார்கள்.
சென்ற பாடலில் தளர்ந்த மார்பகங்களைப் பற்றிச் சொன்னவர் இப்பாடலில் திமிர்ந்தெழுந்த மார்பகங்களைப் பற்றிப் பேசுகிறார்! ‘பெருங்காதல் இருந்தாலும் பெண்களுக்கு அடக்கம் வேண்டும்’ என்று பெரியவர்கள் சொன்னது எனக்குத் தெரியும் ஆனால் என் மார்பகங்களுக்குத் தெரியவில்லையே’ என்று ஆண்டாள் சொல்கிறாராம்.
அன்று சீதை சொன்னார்:
பாழிய பணைத் தோள் வீர ! துணை இலேன் பரிவு
தீர்த்த
வாழிய வள்ளலே !யான் மறு இலா மனத்தேன்
என்னின்,
ஊழி ஓர் பகலாய்ஓதும் யாண்டு எலாம், உலகம்
ஏழும்
ஏழும் வீவுற்றஞான்றும், இன்று என இருத்தி’
என்றாள்.’
தன் துன்பத்தைப் போக்கிய அனுமனுக்கு அழியா வாழ்க்கையைக் கொடுத்தார். அதே போல குயிலிடமும் ஆண்டாள் நீ செய்த தருமம் உன்னை நீடுழி வாழ வைக்கும் என்கிறார்.
ஆண்டாள் கவிதைகள் இருக்கும் வரை குயிலும் இருக்கும். இரண்டும் நீடூழி வாழும் என்பது உறுதி.
சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் பொருத்தம் உடையன்
நாங்கள் எம்மிலிருந்து ஒட்டியகச்சங்கம் நானும் அவனும் அறிதும்
தேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும் சிறு குயிலே! திருமாலை
ஆங்கு விரைந்து ஒல்லை கூகிற்றியாகில் அவனை நான் செய்வன காணே
தேன் போன்று சுவைக்கும் பழங்களையுடைய மாமரத்தின் சிவந்த தளிர்களை அலகால் கொத்துகின்ற சிறுயிலே! சார்ங்கம் என்னும் வில்லை வளைத்து இயக்கும் திறன் படைத்த கைகளை உடைய அந்தச் சாதுரியம் மிக்கவன் காதலிலும் கில்லாடி. அவனும் நானும் சேர்ந்திருக்கும் சமயத்தில் எங்களுக்குள் யாருக்கும் தெரியாமல் செய்துகொண்ட உறுதிமொழியை நாங்கள் இருவருமே அறிவோம். தொலைவில் இருக்கும் திருமாலை விரைவாக நீ கூவி அழைக்கவில்லை என்றால் அவனை நான் என்னபாடு படுத்தப்போகிறேன் என்பதை நீயே பார்ப்பாய்.
உண்மையிலேயே கூவுதல் வருதல் தொலைவில் வில்லிபுத்தூர் வடபத்ரசாயியாக இருந்தவன் இப்போது தொலைவில் போய் விட்டான். அது அவன் செய்யும் மாயம்.
கச்சங்கம் என்றால் ஒப்பந்தம். கச்சு பிணைப்பது போலப் பிணைப்பது. இங்கு ஆண்டாள் தன்னை சீதையாகக் கருதிக் கொள்கிறார். அனுமனிடம் சீதை சொன்னது போல இருவருக்கும் இடையே நிகழ்ந்ததைக் குயிலிடம் சொல்கிறார். ‘அவன் வராமல் போக மாட்டான். பல நாட்கள் கழித்து வந்தான் என்றால் நான் முகம் கூடக் காட்ட மாட்டேன். பசியில் வருபவன் முன் சோற்றை வைத்து அதை உண்ணக் கூடாது என்று சொன்னால் அவன் படும் பாட்டை விட இவன் படும் பாடு அதிகம் இருக்கும்’ என்கிறார்.
பைங்கிளி வண்ணன் சிரீதரன் என்பதோர் பாசத்து அகப்பட்டிருந்தேன்
பொங்கொளி வண்டிரைக்கும் பொழில் வாழ் குயிலே! குறிக்கொண்டு இது நீ கேள்
சங்கொடு சக்கரத்தான் வரக் கூவுதல் பொன்வளை கொண்டு தருதல்
இங்குள்ள காவினில் வாழக் கருதில் இரண்டத்தொன்றேல் திண்ணம் வேண்ட
பேரொளி வீசும் வண்டுகள் இசை பாடும் சோலையில் வாழும் குயிலே! நான் சொல்லுவதை நீ கவனத்தோடு கேள். பச்சைக்கிளி போன்ற நிறத்தையுடையவனான ஸ்ரீதரன் (திருமகள் கணவன்) என்ற மீளா வலையிலே சிக்கித் தவிக்கிறேன். இச் சோலையில் நீ இருக்க வேண்டும் என்று நினைத்தாயென்றால் ஆழியும் சங்கும் உடைய அவன் இங்கே வரும்படி அழைக்கக் கூவு. இல்லையேல் நான் இழந்த பொன் வளையல்களை மீட்டுத்தா. இவை இரண்டுள் ஏதாவது ஒன்றை நீ செய்தே ஆக வேண்டும்.
இங்கு ஆண்டாள் சொல்வது கவித்துவத்தின் உச்சம்.
அவர் பொன்வளைகளை ஏன் இழந்தார்? பிரிவினால். அவர் கைகள் மெலிந்ததால். வராவிட்டால் மெலிதல் கூடுமே தவிர குறையாது. எனவே வளைகள் தங்காது. கைகள் அவன் வந்தால் பூரிப்பு அடையும். வளைகள் தங்கும்! எனவே ஆண்டாள் குயிலுக்கு இரண்டுள் ஒன்று என்று ஏதும் தரவில்லை. ஒன்றையே இரண்டாகக் கூறுகிறார். அவனைக் கூட்டி வருவதைத் தவிர உனக்கு வேறு வழியில்லை என்கிறார்.
பத்தாம் பாசுரம். எம்பெருமான் இங்கே வரும்படி நீ கூவாமல் இருந்தால் உனக்கு தண்டனை கொடுப்பேன் என்கிறாள்.
அன்றுலகம் அளந்தானை உகந்து அடிமைக்கண் அவன் வலி செய்ய
தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும் முறைமை அறியேன்
என்றும் இக்காவில் இருந்திருந்து என்னைத் ததைத்தாதே நீயும் குயிலே!
இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன்
குயிலே! நான் சொல்வதைக் கேட்காமல் சோலையில் இருக்கிறேன் என்பதை கூவி அறிவித்துக் கொண்டு என்னைத் துன்பம் அடையச் செய்கிறாய். அன்று இவ்வுலகை அளந்தானுக்கு இன்று தொண்டு செய்ய நான் ஆவலாக இருக்கிறேன். அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டு என்னைத் துன்புறுத்துகிறான். இப்போது தென்றலும் வானில் ஒளிரும் முழுமதியும் அவனோடு சேர்ந்து கொண்டு துன்புறுத்துகின்றன. துன்பமோ துன்பம் தவிர வேறு ஏதும் அறிந்திலேன். இன்று நாரயணனை இங்கே வரும்படி நீ கூவாமல் இருந்தால், சோலையில் இருந்தே உன்னை விரட்டிவிடுவேன்.
ஆண்டாள் எல்லாம் சொல்லிப் பார்த்தார். குயில் மசிவதாகத் தெரியவில்லை. கடைசியாக உன்னையே விரட்டி விடுவேன் என்கிறார். ‘அவன் தரும் துன்பத்தையும் தென்றல் மற்றும் திங்கள் தரும் துன்பத்தையும் போக்கும் திறன் என்னிடம் இல்லை. ஆனால் நீ இங்கிருந்து கூவுவதால் ஏற்படும் துன்பத்தை நிச்சயம் போக்க முடியும். மூன்றில் ஒன்றாவது குறையும்’ என்கிறார்.
விண்ணுற நீண்டு அடி தாவிய மைந்தனை வேற்கண் மடந்தை விரும்பி
கண்ணுற என் கடல் வண்ணனைக் கூவு கருங்குயிலே! என்ற மாற்றம்
பண்ணுறு நான்மறையோர் புதுவை மன்னன் பட்டர்பிரான் கோதை சொன்ன
நண்ணுறு வாசக மாலை வல்லார் நமோ நாராயணாய என்பாரே
‘கரிய குயிலே! விண்ணையும் தொடும் அளவிற்கு காலை நீட்டி அளந்த கடல் வண்ணனாகிய கண்ணனை நான் விரும்பிப் பார்க்கும்படிக் கூவுவாயாக’ என்று வேல் போன்று நீண்ட கண்களை உடைய ஆண்டாள் பாடினார். அவர் இசையோடு வேதங்களைப் பாடக் கூடிய அந்தணர் வாழும் வில்லிபுத்தூர் பட்டர் பிரானின் புதல்வி கோதை. அவர் சொன்ன பாடல்களைப் பாட வல்லார்கள் என்றும் நமோ நாராயணாய என்று வைகுந்தத்தில் பல்லாண்டு பாடும் பேற்றைப் பெறுவார்கள்.