ஐந்தாம் திருமொழி -1

கண்ணனிடம் சென்று தான் படும் துன்பங்களைக் கூறுமாறு ஆண்டாள் இத்திருமொழியில் குயிலிடம் வேண்டுகிறார.

அழகிய குரல் கொண்ட பறவைகள் கவிஞர்களை அதிகம் ஈர்த்திருக்கின்றன. உதாரணமாக, ஷெல்லியில் To a Skylark உலகப் புகழ் பெற்றது. ஸ்கைலார்க் என்ற பறவையின் குரலைக் கேட்டு மயங்கிய அவர் தன் கவிதையில் சொல்கிறார்:

Hail to thee, blithe Spirit!
Bird thou never wert,
That from Heaven, or near it,
Pourest thy full heart
In profuse strains of unpremeditated art.

கட்ட்டற்ற ஆன்மாவே! உனக்கு வாழ்த்துக்ள்!

நீ என்றும் பறவையாக இருந்ததில்லை

சுவர்க்கத்திலிருந்தோ அதன் அருகாமையிலிருந்தோ

உன முழு இருதயத்தையும் உருக்கித் தருகிறாய்

வளமான இசையில் இயல்பாகவே பிறந்த கலை நயத்துடன்

மேலும் சொல்கிறார்:

Like a Poet hidden
In the light of thought,
Singing hymns unbidden,
Till the world is wrought
To sympathy with hopes and fears it heeded not:

எண்ணத்தின் ஒளியில்

மறைந்திருக்கும் கவிஞன் போல்

தானாகவே பாடல்களை இசைக்கிறாய்

இன்று வரை உன்னைக் கவனிக்காத உலகு

உன் ஆசைகளையும் அச்சங்களையும் அன்போடு பார்க்கும் வரை.

சமஸ்கிருதத்தில் ஹம்ச சந்தேசம் வேதாந்த தேசிகரால் இயற்றப்பட்டது. அது சீதையைப் பிரிந்த ராமன் அன்னம் ஒன்றை தூது விடுவதைக் கூறுகிறது. அதில் அழகிய பாடல் ஒன்று. ராமன் கூறுவது:

அழகியே! விதியின் பிழையால் நீ என்னை விட்டுப் பிரிந்து தொலைவில் இருக்கிறாய். இருந்தாலும் உன்னை மேனியைத் தொட்ட காற்று என்னைத் தொடுகிறது. நான் காணும் சந்திரனைத்தான் நீ பார்க்கின்றாய். நம் பார்வை ஒன்றானது. பேரண்டம் என்ற இந்த பெரிய வீட்டில் நாம் வாழ்கிறோம். பூமி என்ற கட்டிலில்தான் நாம் இருவரும் படுத்திருக்கிறோம். நான் வானில் பார்க்கும் தாரகைகள் நம் கட்டிலின் விதானத்தில் (மேற்கூரை)பதித்திருக்கும் ரத்தினங்கள். இச்சிந்தனைகள்தாம் எனக்கு சிறிது ஆறுதலை அளிக்கின்றன.

சமஸ்கிருதத்தில் கோகில சந்தேசம் (குயிலின் தூது) என்ற நூல் ஒன்றும் இருக்கிறது 15ம் நூற்றாண்டில் கொச்சியில் வசித்த தமிழ் பிராமணர் ஒருவரால் இயற்றப்பட்டது. பெயர் உத்தண்ட சாஸ்திரி. அவர் எழுதிய நூலின் நாயகன் ஒரு நாள் திடீரென்று காஞ்சிபுரத்தில் விழித்தெழுகிறார். கேரளத்தில் சேந்தமங்கலம் என்ற இடத்தில் இருக்கும் தன் மனைவிக்கு குயிலிடம் செய்தி சொல்லுமாறு பணிக்கிறார். சில கவிதைகள் வியக்க வைப்பன.

அன்றொரு நாள்

அழகிய தோட்டத்தில்

இளைய மாமரம்

கிளைகளைக் கைகளாக்கி

கணக்கற்ற கொடிகளை

அணைப்பதைப் பார்த்தாய்

கோபத்தில் முகத்தைத் திருப்பிக் கொண்டாய்

கீழ் உதடு துடிக்க

கண்ணீர் பொங்கும் ஓரக்கண்களால்

என்னை முறைத்தாய்!

புகழேந்திப் புலவரின் நள வெண்பாவில் அன்னமே நளனிடம் தமயந்திதான் உனக்கு ஏற்றவள் என்று சொல்லி இருவருக்கும் இடையே தூது செல்கிறது.

திசைமுகந்த வெண்கவிகைத் தேர்வேந்தே உன்றன்
இசைமுகந்த தோளுக் கிசைவாள் – வசையில்
தமையந்தி என்றோதும் தையலாள் மென்தோள்
அமையந்தி என்றோர் அணங்கு.

உன் தோளுக்கு ஏற்றவள் மென்மையான தோள்களை உடைய மூங்கில் அழகி என்ற பெயர் பெற்ற தமயந்திதான் என்று நளனிடம் சொல்கிறது.

அழகர் கிள்ளை விடு தூது. எழுதியவர் பலபட்டைச் சொக்கநாதப் புலவர்

எவ்வண்ணமாய்ப் பறக்கும் எப்பறவை ஆயினும்உன்
ஐவண்ணத் துள்ளே அடங்குமே – மெய்வண்ணம்

பார்க்கும் பொழுதில்உனைப் பார்ப்பதிஎன்பார் என்றோ
மூக்குச் சிவந்தாய் மொழிந்திடாய்

பார்ப்பதி என்றால் பார்வதி. உனக்கும் பச்சை நாயகிக்கும் இடையே உள்ள வேறுபாடு உன் மூக்குதான். அது சிவந்திருக்கும் என்கிறார் சொக்கநாதர்.

பாரதியின் குயில் பாட்டு தூது இலக்கியம் என்று சொல்ல முடியாது. ஆனாலும் அது காதலைப் போற்றுகிறது, “காதல் காதல் காதல்/காதல் போயின் காதல் போயின்/ சாதல் சாதல் சாதல்” என்பதைத்தான் ஆண்டாளும் சொல்கிறார். என் உயிர் போகாமல் இருப்பதற்குக் காரணமே காதல் என்கிறார்.

ஆண்டாள் குயிலின் பாடலைக் கேட்டிருக்கிறார். ஷெல்லிக்கு ஸ்கைலார்க்கின் குரலே கவிதை. ஆண்டாளின் குயில் அவரை அழியாக் கவிதை பாட வைக்க்கிறது. ஆனால் அவர் குயிலைப் பார்த்திருக்கிறாரா? உரையாசிரியர்கள் பார்த்துக் காலில் விழுகிறார் என்கிறார்கள். எனக்கென்னவோ பார்க்கவே இல்லை என்றுதான் தோன்றுகிறது. மறைந்திருந்து வாழும் குயிலே என்று அவரெ ஒரு பாட்டில் சொல்கிறார். ஒருவேளை அது அவர் உள்ளத்தின் குயிலாக இருக்கலாம். நான் முன்பே கூறியபடி ஆண்டாளின் உலகம் அகவுலகம்.

கூடலிழைத்துப் பார்த்தார். அது அசையாப் பொருள்.அது வருவான் என்று ஒரு தடவை சொன்னது. வரமாட்டான் என்று மற்றொரு தடவை சொன்னது. இப்போது குயிலின் உதவியை நாடுகிறார்.

இனி பாடல்கள்:

மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி வண்ணன் மணிமுடி மைந்தன்
தன்னை உகந்தது காரணமாக என் சங்கிழக்கும் வழக்குண்டே?
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே!
பன்னி எப்போதும் இருந்து விரைந்து என் பவளவாயன் வரக் கூவாய்

சோலையில் – புன்னை, குருக்கத்தி, புலிநகக் கொன்றை, தங்கச் செண்பகம் போன்ற பல தாவரங்கள் நிறைந்த சோலையில் – பொந்து ஒன்றில் வாழும் குயிலே! அவன் இறவாப் பெரும் புகழ் கொண்ட மாதவன், நீல வண்ணன், அழகிய மணிமுடியை அணிந்திருப்பவன். அவன் மீது ஆசைப் பட்டதால் உடல் மெலிந்து என் கைகளின் வளைகள் கழன்று விழுகின்றன. இது போல உலகில் எங்காவது நடக்குமா? பவளம் போல் சிவந்த உதடுகளை உடைய என் தலைவன் என்னிடம் வந்து சேரும்படி எப்பொழுதும் அவன் பெயர்களை இரவு பகல் பாரமல் நீ விடாமல் தொடர்ந்து வேகமாகக் கூவ வேண்டும்.

புன்னையும் (Calophyllum inophyllum) புலிநகக் கொன்றையும் (Cassia Sophera / Senna sophera) மரங்கள். குருக்கத்தி (Hiptage benghalensis) என்பது செடி. செருந்தி ( Ochna squarrosa, Golden champak) என்று அழைக்கப்படும் தங்கச் செண்பகம் புதர் போல நெய்தல் நிலத்தில் வளரும் என்கிறார்கள். வில்லிபுத்தூர் சோலையில் ஆண்டாள் எப்படிப் பார்த்தார் என்பது தெரியவில்லை.

உரையாசிரியர்கள் குயில் என்பது இறைவனிடம் அடைய வழி சொல்லும் ஆசாரியர்களின் உருவகம் என்கிறார்கள்.

அவன் என்னை ஏன் இழக்க வேண்டும் என்று கேட்கிறார் ஆண்டாள். என்னைப் போன்றவளை அடைய அவனுக்கு எல்லாக் குணங்களும் இருக்கின்றனவே? அவன் கூடவே இருக்கும் திருமகள் கூட எந்தத் தடையையும் செய்யமாட்டார். மாறாக எனக்காகப் பரிந்துரைக்கும் பிராட்டி அவர்.

எனக்கே தெரியும் அவன் என்னிடம் வந்து சேருவான் என்று. இருந்தாலும் நான் மெலிகிறேன். கை வளைகள் நழுவுகின்றன. உலகத்தில் இல்லாத வேடிக்கையாக இருக்கிறது. நீ பொந்தின் சுகமான வெப்பத்தில் காலம் தள்ளலாம் என்று நினைக்காதே. எனக்காக இந்த உதவியைச் செய்.

வெள்ளை விளி சங்கு இடங்கையில் கொண்ட விமலன் எனக்கு உருக்காட்டான்
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் ஊயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும்
கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக் களித்திசை பாடும் குயிலே!
மெள்ள இருந்து மிழற்றி  மிழற்றாது என் வேங்கடவன் வரக் கூவாய்

தேனொழுகும் செண்பக மலரின் சக்கையைத் தள்ளி சாரத்தைக் கொண்டு பெருமகிழ்ச்சியோடு பாடும் குயிலே! அடியார்களை அழைக்கும் வெள்ளைச் சங்கை இடது கையில் ஏந்திக்கொண்டிருக்கும் அத்தூயவன் என் முன் வந்து தன் திருமேனியைக் காட்ட மாட்டான். மாறாக என் உள்ளத்தில் வந்து புகுந்து என்னை நைந்து போக வைக்கிறான். கூடவே என் உயிரைக் கொண்டு போகாமல் இங்கேயே வளர்த்து எனக்குத் துன்பம் அளிக்கிறான். என்னைத் தவிக்க விடுகிறான். நீ என் அருகில் இருந்து உன் மழலைச் சொற்களைச் சொல்லி எனக்கு விளையாட்டுக் காட்ட எந்தத் தேவையும் இல்லை. எனக்காகத் திருவேங்கடமலைக்கு சென்று அங்கு நிற்கிற வேங்கடவன் இங்கே வரும்படி கூப்பிடு.

குயில் இப்பாடலில் செண்பக மலருக்குத் (Magnolia champaca) தாவி விடுகிறது. அது செண்பகப் பூவைச் சுவைக்குமா என்று தெரியவில்லை. ஆண்டாள் அதன் சாரமான மணம் இதற்கு வந்து விட்டது என்று சொல்லி அதை மகிழ்விக்கிறாள் என்று சொல்லலாம்.

முக்கோணத்தில் கட்டி அடித்து உயிர் போகும் தருவாயில் இருக்கும் குற்றவாளிகளை உணவும் தண்ணீரும் கொடுத்து உயிர்ப்பித்து மறுபடியும் அடிப்பார்களாம். அது போன்று இருக்கிறது உன் செயல் என்கிறார் ஆண்டாள்.

“நினைதொறும் சொல்லும் தொறும் நெஞ்சிடிந்து உகும்” என்றும் “நினைந்து நைந்து உள்கரைந்து உருகி” என்றும் நம்மாழ்வாரும் சொல்கிறார்.

அயோத்தியிலிருந்து மிதிலைக்குச் சென்று அங்கு ஒரு சோலையில் விசுவாமித்திர முனிவருடன் தங்கியிருந்தான் ராமன். சீதையின் கரம் பிடிப்பதற்காக. அதைப் போலவே பரமபதத்திலிருந்து எழுந்தருளி என் கரம் பிடிப்பதற்காக வேங்கடத்தில் தங்கியிருக்கிறான். எனவே நீ தொலை தூரம் செல்லத் தேவையில்லை என்று குயிலிடம் ஆண்டாள் சொல்கிறார்.

மாதலி தேர் முன்பு கோல் கொள்ள மாயன் இராவணன் மேல் சரமாரி
தாய்தலை அற்றற்று வீழத் தொடுத்த தலைவன் வரவெங்கும் காணேன்
போதலர் காவில் புது மணம் நாறப் பொறிவண்டின் காமரம் கேட்டு உன்
காதலியோடு உடன் வாழ் குயிலே! என் கருமாணிக்கம் வரக் கூவாய்

பூத்துக் குலுங்கி நறுமணம் தூக்கி அடிக்கும் சோலையில் அழகிய வண்டினுடைய காமரம் என்னும் பண்ணைக் கேட்டுக்கொண்டு உன் துணையோடு வாழும் குயிலே! மாதலி கோல் கொண்டு (குதிரைகளை முன்னேற வைத்து) செலுத்திய தேரில் இருந்து மாயவனான ராவணனின் தலைகளை மறுபடியும் மறுபடியும் அறுத்து வீழ்த்திய என் தலைவன் வருவதாகத் தெரியவில்லை. என் கரிய மாணிக்கத்தை உன் கூவலால் வரச்செய்.

மாதலி இந்திரனின் தேரோட்டி. ராமனுக்கு ராவணனுக்கு எதிரான யுத்தத்தில் இந்திரன் தன் தேரையே அனுப்பி வைத்தான்

தும்பிகளும் வண்டுகளும் சீகாமரம் என்றும் அழைக்கப்படும் காமரப் பண்ணில் இசைக்கும் என்பது தமிழ் மரபு. “ஏம இன் துணை தழீஇ இறகு உளர்ந்து காமரு தும்பி காமரம் செப்பும் ” -இது சிறுபாணாற்றுப்படை. சீகாமரம் என்றால் நாதநாமக்கிரியை ராகம் என்றும் சொல்கிறார்கள்

என்புருகி இனவேல் நெடுங்கண்கள் இமை பொருந்தா பல நாளும்
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன்
அன்புடையாரைப் பிரிவுறு நோய் அது நீயும் அறிதி குயிலே!
பொன்புரை மேனிக் கருளக் கொடியுடைப் புண்ணியனை வரக் கூவாய்

குயிலே! என் எலும்புகள் உருகி போய் விட்டன. வேல் போன்று காதளவில் நீண்டு இருக்கும் என் கண்கள் இமைக்காமலேயே பல நாட்களைக் கழித்து விட்டன. துன்பக் கடலில் உழல்கிறேன். எனக்கு வேண்டிய படகு வைகுந்தத்தில் உறைபவன். நம்மிடத்தில் மாறாத அன்புடையவர்களைப் பிரிவதால் ஏற்படும நோயை நீயும் நிச்சயம் அறிவாய். பொன்னை நிகர்க்கும் மேனியை கொண்ட கருடனைக் கொடியாகக் கொண்ட அந்தப் புண்ணியவாளனை வரும்படிக் கூவுவாய்.

ராமன் சீதையைப் பிரிந்து தூங்காமலேயே துடித்தான். அதே போன்று ஆண்டாளும் துடிக்கிறார். என்னிடம் அவனுக்கு அன்பு இருக்கிறது. அருகிலேயே இருக்கிறான். ஆனாலும் வர மாட்டேன் என்கிறான்.

“கதிர்சினம் தவிர்ந்த கையறு மாலையும் இரவரம்பாக நீந்தினமாகின எவன் கொல் தோழி” என்று குறுந்தொகை சொல்கிறது. ஆண்டாளுக்குத் தோழி குயில். நானும் மாலைக் கடல்களை மிகுந்த முயற்சி எடுத்தால் நீந்த முடியும் இரவுக் கடல்களைத் தாண்ட வைகுந்தன் என்ற படகு இருந்தால்தான் முடியும் என்கிறாள்.

மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால் என் பொருகயற் கண்ணிணை துஞ்சா
இன்னடிசிலொடு பால் அமுதூட்டி எடுத்த என் கோலக் கிளியை
உன்னொடு தோழமை கொள்ளுவன் குயிலே! உலகளந்தான் வரக் கூவாய்

குயிலே! மென்னடை போடும் அன்னங்கள் எந்தத் தடையும் இன்றி விளையாடடுவதற்கு உகந்த இடமான திருவில்லிபுத்தூரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுடைய பொன் போன்ற திருவடிகளைக் காண வேண்டும் என்ற ஆசையினால் யார் அதிக அழகு என்று போட்டியிட்டுக் கொண்டே இருக்கும் என் கெண்டை மீன் கண்கள் உறங்க மாட்டோம் என்கின்றன. உலகத்தையே அளந்த எம்பெருமான் இங்கே வரும்படி நீ கூவு. அவ்வாறு செய்தால் அக்கார அடிசிலையும் அமுது போன்ற பாலையும் ஊட்டி வளர்த்துள்ள என்அழகிய கிளியை உன்னோடு நட்புக் கொள்ள வைப்பேன்.

குயிலே! நீ வேங்கடம் வரை கூடச் செல்ல வேண்டாம். இதோ அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்று அங்கு ஆலிலையில் துயில்பவனான வடபத்ரசாயியை எழுப்பினால் போதும். என்னை விட உனக்கு உகந்த நட்பு ஒன்றைப் பெற்றுத் தருவேன். நான் பேசும் மொழி மானுட மொழி. உன் மொழியில், பறவை மொழியில் பேசும் கிளியின் தோழமையை உனக்குப் பெற்றுத் தருவேன் என்கிறார் ஆண்டாள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s