நான்காம் திருமொழி – 1

நான் என் திருப்பாவை விளக்கத்தில் சொல்லியது போல ஆண்டாளின் உலகம் அவளாக தனக்குள் சமைத்துக் கொண்ட உலகம். அவளுடைய உரையாடல்களில் பல அவ்வுலகத்திள்ளேயே நடக்கின்றன. ஆனாலும் பருண்மை உலகத்தில் அவளுக்குத் தெரிந்தவற்றை வைத்துத்தான் அவளால் உரையாடல்களை நிகழ்த்த முடியும். அவை கவிதைகளாகப் பிறந்து நமக்கும் ஒரு அசாதாரணமான உணர்வை அளிக்கின்றன. அவள் வாழ்ந்த உலகத்திற்கும் அவள் உள்ளத்தில் பிறந்த கனவு உலகத்திற்கும் இடையில் ஏற்படும் முரண்கள் நம்மை வேறு எங்கோ இட்டுச் செல்கின்றன.

நான்காம் திருமொழி கூடலிழைத்தலைப் பற்றிப் பேசுகின்றது. கூடலிழைத்தல் என்றால் என்ன? ஒரு பெரிய வட்டத்தை வரைந்து, அதற்குள் சிறு சிறு வட்டங்களை (சுழிகள்) வேகமாக இட வேண்டும். பின்னால் கூட்டிப் பார்க்கையில் இரட்டைபடை வந்தால் கூடுதல் நடைபெறும். ஒற்றைப்படை என்றால் நடைபெறாது. இதைப் பெண்கள் மட்டும்தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ‘அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண இழைப்பன் திருக் கூடல் கூட’ என்று திருமழிசை ஆழ்வாரே ஏழுமலையானைக் காண்போமா என்று அறிவதற்குக் கூடலிடுகிறார். கலித்தொகையில் கூடலிழைத்தலைப் பற்றிப் பேசப்படுகிறது. திருமங்கை மன்னனும், திரு நாவுக்கரசரும் கூடப் பேசுகிறார்கள். மாணிக்க வாசகர் தன் திருக்கோவையாரில் கூடலிழைத்தலைப் பற்றி சிறிது விரிவாகவே சொல்கிறார்:

ஆழி திருத்தும் புலியூ ருடையொன் அருளின் அளித்து
ஆழி திருத்தும் மணற்குன்றின் நீத்து அகன்றார் வருக என்று
ஆழி திருத்திச் சுழிக்கணக்கு ஓதி நையாமல், ஐய
வாழி, திருத்தித் தரக்கிற்றியோ உள்ளம் வள்ளலையோ

என்று சுழிக் கணக்கைப் பற்றிச் சொல்கிறார்.

யார் கூடலிழைத்தாலும் அதில் ஐம்பது சதவீதம் வெற்றி அடைய வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் மொத்தம் இரட்டைப்படையாகவோ அல்லது ஒற்றைப்படையாகவோத்தான் இருக்க முடியும். உண்மையைப் பேசப் போனால் உலகத்தில் வராதவன் வருவது எப்போதாவது நடக்கும் ஒன்று. அதனால்தானோ என்னவோ உலக இலக்கியம் முழுவதும் காதலன் வருவானா வர மாட்டானா என்ற கேள்வி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து கேட்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அன்று காத்துக் கொண்டிருந்தவர்களைப் பற்றி இன்று பாடப்படுகிறது. ஹோமரின் ஒடிஸியின் காவியத்தலைவியாகிய பெனலோபி ஒடிசியஸுக்காக போர் முடிந்த பின்னர் இருபது வருடங்கள் காத்துக் கொண்டிருந்ததை அமெரிக்கக் கவிஞரான டோரதி பார்க்கர் பாடுவதைக் கேளுங்கள்:

In the pathway of the sun,
In the footsteps of the breeze,
Where the world and sky are one,
He shall ride the silver seas,
He shall cut the glittering wave.
I shall sit at home, and rock;
Rise, to heed a neighbor’s knock;
Brew my tea, and snip my thread;
Bleach the linen for my bed.
They will call him brave.

வருபவன் வீரன். அவனைப் பற்றி ஊர் பேசும். காத்திருப்பவள் சாதாரணர்களுக்கிடையே காணாமல் போவாள். பல காலமாகத் தொடர்வது இந்தக் கதைதான் என்று கவிதை சொல்கிறது.

ஆண்டாள் கொடுத்து வைத்தவள். அவள் காத்திருத்தலைக் கவிதைகளாகத் தந்தாள் அவற்றை நாம் இன்றுவரை பேசுகிறோம். அவளுக்கு நிச்சயம் வருவான் என்று தெரியும். வைணவம் சொல்கிறது:. வரப்போவது உறுதி. 100 சதவீதம். இன்றில்லையென்றால் நாளை. இப்பிறவியில் இல்லையென்றால் அடுத்த பிறவியில்.

ஆண்டாள் ஏன் கூடலிழைக்கிறாள்?

எல்லாவற்றிற்கும் ஊற்றாக இருக்கும் கண்ணனைப் பற்றியவள், இந்த உயிரில்லா வட்டங்களில் இடையே சிக்கித் தவிக்க ஏன் நினைக்கிறாள்?

உரையாசிரியர்கள் சொல்கிறார்கள்: அவனை அடைவோமோ என்ற கலக்கத்தில் எதையும் செய்யத் தயாராக இருக்கிறாள். அவன் மூப்பற்றவன். இவள் விருத்தவதியாக, மூப்படைந்தவளாக ஆகிய பின் அவன் கிட்டினாலும் அது பரவாயில்லை என்று நினைக்கிறாள். பார்க்கப்போனால் ஆண்டவனையும் அடையும் முயற்சியில் இத்துணை வேகத்தோடு கலங்காவிட்டால் அம் முயற்சிக்குச் சிறப்பே இல்லை என்று ஆகி விடும்!

இப்பாடல்களின் அசையாப்பொருளாக இருந்தாலும் கூடலிடமே ஆண்டாள் பேசுகிறாள். கண்ணனை அடைய வேண்டும் என்ற கலக்கத்தில் அவள் இருப்பதால் கூடல் தானாக ஏதும் செய்ய முடியாது என்ற எண்ணமே அவளுக்கு இல்லை. அவன் சொன்னதை மட்டும் செய். நீயாக ஏதாவது செய்து என் காரியத்தைக் கெடுக்காதே என்கிறாள்

இனி பாடல்கள்:

தெள்ளியார் பலர் கை தொழும் தேவனார்
வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடலே!

கூடலே! தெளிந்த ஞானம் கொண்டவர்கள், நித்யசூரிகள், வைகுண்டத்தில் உறைபவர்கள் போன்ற பலர் தொழும் தேவன், அடியார்க்கு அள்ளி வழங்கும் திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளியிருக்கும் வள்ளல் திருவரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் பெருமானின் காலடியில் நான் இருந்து பணி செய்ய வேண்டும் என்பதை நிச்சயம் செய்து விட்டான் என்றால் அதை நடத்திக் கொடு.

நித்யசூரிகள் (பெருமாளுக்குப் பணிவிடை செய்பவர்கள்) வைகுண்டத்தில் உறைபவர்கள் போன்றவர்களைப் பற்றி ஆண்டாள் பேசுவதன் காரணம் அவர்களுக்கு அவன் திருமுக மண்டல தரிசனம் தினமும் கிடைக்குமே எனக்கு கிடைக்கும் பாக்கியம் இன்றுவரை கிட்டவில்லையே என்ற எண்ணத்தில்தான். அவனை எல்லா இடங்களிலும் தேடி திருமாலிருஞ்சோலையில் கண்டு பிடித்து விட்டாள். ஆனால் அங்கு அவனோடு தனியாக இருக்க முடியாது. இரவில் தூங்கும் போது அவன் காலைப் பிடித்துப் பணிவிடை செய்ய ஏற்ற இடம் திருவரங்கம்தான். இன்னொன்றும் உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். பெரும் பணக்காரன் ஒருவன் ஒரு ரூபாய் தொலந்தாலும் அதையே நினைத்து வருத்தப் பட்டுக் கொண்டிருப்பது போல ஒரு பக்தனின் அருகாமையைப் பெற முடியாமல் போனாலும் அதையே அவன் நினைத்துக் கொண்டிருப்பானாம். இங்கு அருகாமையை விரும்புபவள் ஆண்டாள்.

காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர்
வாட்டம் இன்றி மகிழ்ந்துறை வாமனன்
ஓட்டரா வந்து என் கைப் பற்றி தன்னொடும்
கூட்டுமாகில் நீ கூடிடு கூடலே!

கூடலே! காடுகள் சூழ்ந்த திருவேங்கடமலையிலும் அழகியநகரமான திருக்கண்ணபுரத்திலும் எந்த அயர்ச்சியும் இல்லாமல் மிக்க மகிழ்ச்சியோடு இருந்து கொண்டிருக்கும் அந்த வாமன வடிவமெடுத்த என் பிரான் ஓடிவந்து என் கையைப் பிடித்துத் தன் கையோடு சேர்த்துக்கொள்வேன் என்று நிச்சயம் செய்து விட்டான் என்றால் அதை நீ நடத்திக்கொடு.

தன் சிறிய பாதத்தால் அளக்கக் கூடிய சுண்டைக்காய் அளவில் இருக்கும் மண்ணுக்கு மகாபலிச் சக்கரவர்த்தியைத் தேடி அலைந்தவன் இவன். இவனை மிகப் பெரிய செல்வமாகிய ஆண்டாள் அடையக் காத்துக் கொண்டிருக்கிறார். இவன் விட்டு விடுவானா என்ன?

பூமகன் புகழ் வானவர் போற்றுதற்
காமகன் அணி வாணுதல் தேவகி
மாமகன்* மிகு சீர் வசுதேவர் தம்
கோமகன் வரில் கூடிடு கூடலே!

கூடலே! இறைவனின் உந்தியில் பிறந்த பிரமனும் புகழ்பெற்ற தேவர்களும் பாடித் துதிப்பதற்குத் தகுந்த ஆண்களின் முதல்வனாகிய, அழகிய ஒளி படைத்த நெற்றியை உடைய தேவகியின் சிறந்த பிள்ளையான, மிக்க நற்குணங்களை உடைய வசுதேவரின் மகனான கண்ணன் என்னைத் தேடி வர நிச்சயம் செய்து விட்டால் அதை நீ நடத்திக்கொடு.

ஆற்றில் படகில் சென்று கொண்டிருப்பவனை இருகரைகளிலும் இருப்பவர்கள் எங்களைப் படகில் ஏற்றிக்கொள் என்று அழைப்பது போல மண்ணுலகிலும் விண்ணுலகிலும் இருப்பவர்கள் இவனை அழைக்கிறார்களாம்.

ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட
பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து
வாய்த்த காளியன் மேல் நடம் ஆடிய
கூத்தனார் வரில் கூடிடு கூடலே!

ஆய்ச்சியரக்ளும் ஆயர்களும் பயப்படும் போது, பூத்து, நீண்டு வளர்ந்திருக்கும் கடம்ப மரத்தின் மீது ஏறி நீரில் பாய்ந்து அவன் காலடி படும் பாக்கியம் கிடைத்த காளியன் என்ற நாகத்தின் மீது நடனமாடிய அக்கூத்தனார் என்னிடம் வர நிச்சயம் செய்து விட்டால் அதை நடத்திக் கொடு.

மாட மாளிகை சூழ் மதுரைப் பதி
நாடி நன்தெருவின் நடுவே வந்திட்டு
ஓடைமா மத யானை உதைத்தவன்
கூடுமாகில் நீ கூடிடு கூடலே!

மாட மாளிகைகள் சூழ்ந்திருக்கும் வடமதுரை நகரில் நாம் இருக்கும் தெருவை அறிந்து என்னை நாட வேண்டும் என்று நெற்றியில் அணியை உடைய குவலயபீடம் என்ற யானையை உதைத்து அழித்த அவன் நிச்சயம் செய்து விட்டால் அதை நடத்திக் கொடு.

வட மதுரையின் ஒவ்வொரு தெருவிலும் அழகின் இலக்கணமான ஆண்டாளின் வீடு எது என்று கேட்டுத் தெரிந்து கொண்டு கண்ணன் வர வேண்டும் என்று ஆண்டாள் நினைக்கிறாள். அன்பின் மிகுதியினால் மாலை விற்பவர் வீட்டைத் தேடித்தேடி கண்ணனும் பலராமனும் சென்றதை பாகவதம் சொல்கிறது. அவர் குடிசையை அடைந்து அவருக்கு அருள் செய்ததைச் சொல்கிறது. இங்கு காத்துக் கொண்டிருப்பது பூமித்தாய்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s