மூன்றாம் திருமொழி – 2

காதலனை எத்தனை விதமாகக் காதலிப்பது? எலிசபெத் பேரட் ப்ரௌணிங்க் ஏன்ற பத்த்தொன்பதாம் நூற்றாண்டு கவிஞர் சொல்கிறார்:

How do I love thee? Let me count the ways.
I love thee to the depth and breadth and height
My soul can reach, when feeling out of sight
For the ends of being and ideal grace.
I love thee to the level of every day’s
Most quiet need, by sun and candle-light.
I love thee freely, as men strive for right.
I love thee purely, as they turn from praise.
I love thee with the passion put to use
In my old griefs, and with my childhood’s faith.
I love thee with a love I seemed to lose
With my lost saints. I love thee with the breath,
Smiles, tears, of all my life; and, if God choose,
I shall but love thee better after death.

இக்கவிதையில் சொல்வதெல்லாம் ஆண்டாளுக்கும் அனேகமாகப் பொருந்தும். அவள் கண்ணனை எத்தனை விதங்களில் காதலிக்க முடியுமோ அத்தனை விதங்களில் காதலிக்கிறாள். இக்கவிதையில் I love thee freely, as men strive for right. I love thee purely as they turn from praise. அதாவது மனிதன் இயற்கையாகவே எது சரியோ அதைச் செய்ய விரும்புகிறான். அதே போலத்தான் இவருடைய காதல். இரண்டாம் வரி எந்தப் பலனையும் எதிர்பார்க்காத தூய்மையான காதலைக் குறிக்கிறது. ஆண்டாள் புகழுக்குப் பாடவில்லை. இறைவன் மீது ஏற்பட்ட மாறாக்காதலினால் பாடினாள்.

இனி பாடல்கள்.

தடத்தவிழ் தாமரைப் பொய்கைத் தாள்கள் எம் காலைக் கதுவ
விடத்தேள் எறிந்தாலே போல வேதனை ஆற்றவும் பட்டோம்
குடத்தை எடுத்தேற விட்டுக் கூத்தாட வல்ல எம் கோவே!
படிற்றை  எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டைப் பணித்தருளாயே

அவிழ்கின்ற பரந்த தாமரை மலர்களைக் கொண்ட பொய்கையில் உள்ள தாமரைத் தண்டுகள் காலைக் கடிக்கின்றன. நஞ்சுடைய தேள் கொட்டியது போலப் படும் வேதனையைத் தாங்க முடியவில்லை. குடங்களை உயரத்தில் எறிந்து கூத்தாடும் திறமை படைத்த என் ராசாவே! நீ செய்யும் சேட்டைகளையெல்லம் துறந்துவிட்டு எங்கள் ஆடைகளைத் திரும்பத் தரவேண்டும்.

தாமரைத் தண்டுகள் கடிக்குமா? நிற்க வேண்டாம் என்று நினைக்கும் இடத்தில் நின்றால் மென்மையானது கூட காலைக் கடிக்கும் தேளாக மாறிவிடும். ‘அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்’ என்று வள்ளுவர் சொல்லவில்லையா? தாமரைத் தண்டுகள் பூக்களைப் போலவும் அன்னத்த்தின் இறகுகளைப் போலவும் மெல்லியது அல்லவே. எனவே அவை தேள் கொடுக்குகளாக மாறி விடுகின்றன.

பிராமணனுக்கு செல்வம் வந்தால் யாகம் செய்வது போல ஆயர்களுக்குச் செல்வம் வந்தால் தெருத்தெருவாகச் சென்றுகுடக்கூத்து ஆடுவார்களாம். தலையில் அடுக்குக் குடங்கள் இருதோள்களிலும் இரண்டு குடங்கள். கைகளிலும் குடங்கள். அவற்றை வானத்தில் எறிந்து பிடித்து ஆடுவதே குடக்கூத்து என்கிறார் அண்ணங்கராச்சாரியர். “இதனைப் பதினோராடலி லொன்று என்றும், அறுவகைக் கூத்தில் ஒன்று என்றுங்கூறி, “குடத்தாடல் குன்றெடுத்தோனாடல் அதனுக், கடைக்குபவைந்துறுப்பாய்ந்து” என்று மேற்கோளுங் காட்டினர்; சிலப்பதிகார வுரையில் அடியார்க்கு நல்லார்’ என்றும் அவர் சொல்கிறார்.

நீரிலே நின்று அயர்க்கின்றோம் நீதி அல்லாதன செய்தாய்
ஊரகம் சாலவும் சேய்த்தால் ஊழி எல்லாம் உணர்வானே!
ஆர்வம் உனக்கே உடையோம் அம்மனைமார் காணில் ஒட்டார்
போர விடாய் எங்கள் பட்டைப் பூங்குருந்து ஏறி இராதே

எல்லாம் அழிந்து ஒன்றுமேயில்லாத ஊழிக் காலத்திலேயே (வரப்போகும்) எல்லோரையும் காக்கும் சிந்தனையில் இருப்பவனே, நாங்கள் நீரில் நின்று அயர்ச்சியோடு இருக்கிறோம். எங்களுக்கு அநீதி இழைக்கிறாய். உன்னிடமிருந்து தப்பவும் முடியாது. எங்கள் ஊரும் வீடுகளும் தொலைவில் உள்ளன. ஆனாலும் ஒன்று சொல்ல விரும்புகிறோம். எங்களிடம் இருக்கும் அன்பு அனைத்தும் உனக்குத்தான். உன்னோடு சேர்ந்திருப்பதை எங்கள் தாய்மார்கள் அனுமதிக்க மாட்டார்கள். எங்கள் ஆடையைத் தா. பூத்திருக்கும் குருந்த மரத்தில் ஏறி விளையாட்டுக் காட்டாதே.

ஊழிக்காலத்திற் கூட எங்களையே சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்று பெருமை பேசிக் கொள்கிறாய். இங்கு நாங்கள் உன் முன்னால் உயிரோடு நிற்கிறோம். நீ செய்வது நியாயமா என்று அவர்கள் கேட்கிறார்கள்.

மாமிமார் மக்களே அல்லோம் மற்றும் இங்கு எல்லாரும் போந்தார்
தூமலர்க் கண்கள் வளரத் தொல்லையிராத் துயில்வானே!
சேமமேல் அன்றிது சாலச் சிக்கென நாம் இது சொன்னோம்
கோமள ஆயர் கொழுந்தே! குருந்திடைக் கூறை பணியாய்!

(முன்பெல்லாம்) இரவில் நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அழகிய மலர்களைப் போலக் கண்களை உடையவனே! இங்கு இருப்பவர்கள் உன் முறைப்பெண்களான மாமன் மக்கள் மட்டுமல்லர். மற்றைய உறவினரும் இருக்கிறார்கள். அவர்களோடு உறவாட விரும்புவது தகாத செயல். நாங்கள் சொல்வது முழுவதும் உண்மை. ஆயர் குலத்தின் அழகியக் கொழுந்தே! குருந்த மரத்தில் வைத்திருக்கும் உடைகளைத் தந்தருள்வாய்!

முதலில் ஆடைகளை இழந்தவர்கள் இருவர் மட்டுமே. இப்போது பெருங்கூட்டமே ஆடையிழந்து நிற்கிறது! இதில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று தெரியுமா? கூடுவதற்கும் தர்மம் வேண்டாமா? முன்பெல்லாம் பகலில் உன் விளையாடடை நடத்தி விட்டு இரவில் அயர்ந்து தூங்குவாய். இன்று நீ இரவிலும் விழித்திருந்து கூடுகிறாய், காலையிலும் பெண்கள் வரவை எதிர்பார்த்து கண் விழித்துக் காத்திருக்கிறாய்.

கஞ்சன் வலை வைத்த அன்று காரிருள் எல்லில் பிழைத்து
நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய் நின்ற இக்கன்னியரோமை
அஞ்ச உரப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும்
வஞ்சகப் பேய்ச்சி பால் உண்ட மசிமையிலீ!  கூறை தாராய்

கம்சன் உன்னை அழிக்க நினைத்த காலத்தில் கன்னங்கரிய இரவிலும் பிழைத்தவன் நீ! இன்று கன்னிமார்களான, வேறு உதவியின்றி நின்று கொண்டிருக்க்கும் எங்கள் நெஞ்சங்களுக்குத் துக்கத்தை அளிக்கப் புறப்பட்டிருக்கிறாய். உன்னை ஒரு சுடுசொல் சொல்லக் கூட யசோதை அஞ்சுவாள். வஞ்சனை உடைய பூதனையின் பாலை உண்டு அவள் உயிரை உறுஞ்சியவனே! எந்த வெட்கமும் இல்லாதவனே! எங்கள் ஆடைகளைக் கொடுத்து விடு.

அன்று கம்சனின் வஞ்ச வலையிலிருந்து நீ தப்பிப் பிழைத்தது எங்களைப் பாதுகாக்க என்று நினைத்தோம். ஆனால் நீயே இன்று எங்களுக்குப் பெருந்துன்பத்தை அளிக்கிறாய். யசோதையிடம் சொல்ல முடியாது. ‘முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும்  முகிழ் இளஞ் சிறுத் தாமரைக் கையும் எழில்கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு- நிலையும் வெண் தயிர் தோய்ந்த செவ்வாயும் அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும்  அணிகொள் செஞ் சிறுவாய் நெளிப்பதுவும் தொழுகையும் இவை கண்ட அசோதை  தொல்லை-இன்பத்து இறுதி கண்டாளே’ என்று உன்னைக் கண்டு இன்பம் கிடைத்த அந்நாளையே நினைத்துக் கொண்டிருக்கிறாள். நீ இன்னும் பால் மணம் மாறாத பிள்ளை இல்லை என்பது அவளுக்குத் தெரியவில்லை.

பாண்டவர்களுக்குத் துதி பாடியதால் ஆதரித்தான். சிசுபாலனுக்கு வைததால்   மோட்சத்தை அளித்தான். இவனைத் துதித்துப் பார்த்தோம் காரியம் நடக்கவில்லை. வசை பாடினால் ஒரு வேளை நடக்கலாம் என்று ஆயர் பெண்கள் கருதுகிறார்கள்.

கன்னியரோடு எங்கள் நம்பி கரிய பிரான் விளையாட்டை
பொன்னியல் மாடங்கள் சூழ்ந்த புதுவையர் கோன் பட்டன் கோதை
இன்னிசையால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய்
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கு இருப்பாரே

கன்னிகளோடு எங்கள் கரிய அழகனான கண்ணன் செய்த விளையாட்டை தன் இனிய கவிதைகளில் பொன் போன்ற் மாடங்கள் சூழ்ந்த திருவில்லிபுத்தூர் தலைமைப் பட்டரின் புதல்வியான கோதை சொன்னாள். இப்பத்துப் பாட்டுக்களையும் படிப்ப்பவர்கள் மாதவன் என்று அழைக்கப்படும் நாராயணனோடு வைகுண்டத்தில் இருப்பார்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s