கண்ணன் கோபிகளின் ஆடைகளை மறைத்து விளையாடும் கதை வடமொழியில் முதன்முதலாக பாகவத புராணத்தில்தான் வருகிறது என்று நினைக்கிறேன். ஆனால் பாகவத புராணம் ஆழ்வார்கள் காலத்திற்குப் பின்னால் எழுதப்பட்டது. எனவே இக்கதை முதலில் தமிழ் வட்டங்களில்தான் எழுந்தது என்று சொன்னால் அது தவறாகாது. மேலும் பாகவத புராணமே தமிழகத்தில்தான் எழுதப்பட்டது என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.
அகநானுறு ‘வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை அண்டர் மகளிர் தண் தழை உடீ இயர்மரம் செல மிதித்த மா அல் போல’ என்று பேசுகிறது. இதற்கு ஆயர் மகளிர் தழை உடைகளை அணிவதற்கு வசதியாக மரக்கிளையை வளைத்துக் கொடுத்தவன் என்றுதான் பொருள் கொள்ள முடியும். பாட்டில் கண்ணன் ஆடைகளைக் கவர்ந்த செய்தி வரவில்லை. இதே போல சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவை ‘கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன் எல்லைநம் ஆனுள் வருமேல் அவன்வாயில் முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ” என்று சொல்கிறது. “இறுமென் சாயல் நுடங்க நுடங்கி அறுவை யொளித்தான் வடிவென் கோயாம் அறுவை யொளித்தான் அயர அயரும நறுமென் சாயல் முகமென் கோயாம்” என்று கண்ணன் ஆடையை ஒளித்து வைத்து நப்பின்னையை வெட்கத்தால் நலியச் செய்ததையும் பற்றிப் பேசுகிறது.
ஆண்டாளின் தந்தையான பெரியாழ்வார் “ஆற்றிலிருந்து விளையாடு வோங்களை
சேற்றால் எறிந்து வளை, துகில் கைக்கொண்டு காற்றில் கடியனாய் ஓடி அகம் புக்கு
மாற்றமும் தாரான்” என்று கோபியர் யசோதையிடம் முறையிடுவதைச் சொல்கிறார்.
‘துகில் கைக்கொண்டு’ என்ற சொற்களை விரிவாக்கி ஆண்டாள் இங்கு அழகிய காட்சி ஒன்றைப் படைக்கிறார். ஆடைகளை இழந்த ஆய்ச்சியர் கண்ணனிடம் அவற்றைத் தருமாறு பல விதங்களில் கேட்பதை இப்பாடல்களில்சொல்கிறார்.
இங்கு ஆடைகளை இழத்தல் என்பது கண்ணனோடு நட்பு ஏற்படுவதற்கு முன்னால் இருந்த மற்றைய எண்ணங்களை அடியோடு களைவது. ஆடை பெறுதல் என்பது கண்ணன் எவற்றைத் தருகிறானோ அவற்றைக் கட்டிக் கொள்வது. இடையில் ஏற்படும் ஆடையின்மைதான் நம்மில் பலரின் கண்களை உறுத்துகிறது. Shed old clothes – பழைய துணிகளைக் களைவது என்பது எல்லா மதங்களிலும் சொல்லப்படுவது.
மேலும் ஆடையின்மை என்பது அவ்வளவு வெறுக்கத்தக்கதா என்ன?
கலில் கிப்ரான் சொல்கிறார்:
Your clothes conceal much of your beauty, yet they hide not the unbeautiful.
And though you seek in garments the freedom of privacy you may find in them a harness and a chain.
Would that you could meet the sun and the wind with more of your skin and less of your raiment,
For the breath of life is in the sunlight and the hand of life is in the wind.
Forget not that modesty is for a shield against the eye of the unclean.
And when the unclean shall be no more, what were modesty but a fetter and a fouling of the mind?
And forget not that the earth delights to feel your bare feet and the winds long to play with your hair.
ஆடை என்பது தூய்மையில்லாதவர்களுக்கு எதிரான கேடயம். இறைவன் தூயவன். தூயவன் முன்னால் ஆடை எதற்கு? அவன் படைத்தவன் தானே நாம் எல்லோரும்?
உரையாசிரியர்கள் இவ்வாறு சொல்கிறார்கள்:
கண்ணனுக்கும் ஆயர்குலப் பெண்களுக்கும் உண்டான நெருக்கத்தைக் கண்ட பெற்றோர்கள் இவர்களை இப்படியே பழக விட்டால் அழிவுதான் நேரும் என்று நினைத்தார்கள். எனவே அவர்களை நிலவறைகளிலே அடைத்து விட்டனர். அங்கு அவர்கள் வாட்டத்தைக் கண்டு நொந்த பெற்றோர்கள் ‘இவர்கள் தனிமையில் இறந்து விடுவார்கள். கண்ணனும் வாடுகிறான் சிறிதளவாவது நெருக்கம் ஏற்படட்டும்’ என்ற எண்ணத்தில் பொய்கையில் குளிக்க அனுமதித்தார்கள். கண்ணன் பெண்களை நிச்சயம் அங்கு சந்திப்பான் என்றும் அவர்கள் நினைத்தார்கள். நினைத்தபடியே கண்ணன் அவர்கள் பின்னால் சென்றான். சென்று, குளித்துக் கொண்டிருந்தவர் விட்டுச் சென்ற ஆடைகளைக் கவர்ந்தான்.
எனக்கு இந்த விளக்கம் பொருத்தமாகப் படவில்லை. ஆய்க்குலப் பெண்கள் விட்டு விடுதலையாகி நிற்பவர்கள், அவர்கள் கண்ணனிடம் செல்வதை யாராலும் தடை செய்ய முடியாது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஆடை கவர்தல் நாடகம் அவர்கள் விரும்பும் நாடகம். விரும்பாதது போல் அவர்கள் நடிக்கும் நாடகம்.
இனி பாடல்கள்.
கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம்
ஆழியஞ் செல்வன் எழுந்தான் அரவணை மேல் பள்ளி கொண்டாய்!
ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம்
தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்தருளாயே
கோழி கூவுவதற்கு முன்பேயே நாங்கள் எழுந்து இங்கு நன்றாக மூழ்கி நீராட வந்தோம். இப்போது அழகிய வட்டமாகக் காட்சிதரும் செல்வனான சூரியனும் எழுந்து விட்டான். பாம்பின் மீது பள்ளி கொண்டவனே! எங்களுக்கு உன்னோடு போட்டி போடும் அளவிற்குத் திறமை இல்லை. நாங்கள் இனி என்றும் இப்பொய்கைக்கு வரமாட்டோம். நானும் என் தோழியும் உன்னை வணங்கிக் கேட்கிறோம். எங்கள் துணிகளைக் கொடுத்து விடு.
நீ ஏற்கனவே பாம்புப் படுக்கையில் தூக்கத்தை விரும்புபவன். மேலும் இரவெல்லாம் பல பெண்களோடு கலவி செய்து களைத்திருப்பாய், விடியற்காலைக்கு முன்னமே எழுந்திருக்க வாய்ப்பே இல்லை என்ற எண்ணத்தில் நாங்கள் குளிக்க வந்தோம் என்கிறார்கள் பெண்கள். இங்கு தொழுதோம் என்பது இரு கரங்களையும் கூப்பித் தொழுதல். மொத்தம் நான்கு கரங்கள். முதலில் ஒரு கையால் உடலை மறைத்துக் கொண்டு தொழுதார்கள். ஆனால் கண்ணன் நான்கு கரங்களாலும் தொழ வேண்டும் என்றான் என்று உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். தன்னைத் தன்னால் என்றும் காத்துக் கொள்ளமுடியாது என்ற எண்ணம் இறைவனை அடைய விரும்புபவர்களுக்கு முதலில் ஏற்பட வேண்டும்.
இதுவென் புகுந்தது ! இங்கந்தோ! இப்பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்?
மதுவின் துழாய் முடி மாலே! மாயனே! எங்கள் அமுதே!
விதியின்மையால் அது மாட்டோம் வித்தகப் பிள்ளாய்! விரையேல்
குதிகொண்டு அரவில் நடித்தாய்! குருந்திடைக் கூறை பணியாய்
தேன் சொட்டும் திருத்துழாய் அணிந்த முடியை உடைய திருமாலே! மாயவனே! எங்களுக்கு அமுதம் போன்றவனே! வியப்பூட்டும் செயல்களைச் செய்யக் கூடியவனே! பாம்பின் மீது குதித்து நாட்டியம் ஆடியவனே! இது எவ்வாறு நிழந்தது? அய்யய்யோ! இப்பொய்கையை நீ எப்படிக் கண்டுபிடித்து வந்தாய்? உன்னோடு கூடுவதற்கு நாங்கள் கொடுத்து வைக்கவில்லை. அப்படியே இருந்தாலும் அவசரப்படாதே! குருந்தமரத்தில் வைத்திருக்கும் எங்கள் உடைகளைக் கொடுத்து விடு.
அவனைக் குளிர்விக்க பல பெயர்களைச் சொல்லி அழைக்கிறார்கள். நீ கூப்பிட்ட குரலுக்கு வருபவன்மட்டும் என்று நாங்கள் நினைத்தோம். அன்று கஜேந்திரனுக்கு வந்தது போல ஆனால் நீ கூப்பிடாவிட்டாலும் வருவாய் என்பது எங்களுக்குத் தெரியாது என்கிறார்கள் (வராதாய் போல் வருவாயே – நம்மாழ்வார்). அவசரப்படாதே என்று அவர்கள் சொல்வது அவர்கள் உள்ளத்தில் இருப்பதைக் காட்டுகிறது. நீ அருள் தந்தாலும் அது நாங்கள் எப்போது வேண்டுமோ அப்போதுதான் ஏற்றுக் கொள்வோம் என்கிறார்கள்.
எல்லே! ஈதென்ன இளமை? எம்மனைமார் காணில் ஒட்டார்
பொல்லாங்கு ஈதென்று கருதாய் பூங்குருந்து ஏறி இருத்தி
வில்லால் இலங்கை அழித்தாய்! நீ வேண்டியதெல்லாம் தருவோம்
பல்லாரும் காணாமே போவோம் பட்டைப் பணித்தருளாயே
என்ன விளையாட்டு இது! வில்லால் இலங்கையை அழித்தவனே! இது என்ன! எங்கள் தாய்மார்கள் எங்களின் இந்தக் கோலத்தைக் கண்டால் வீட்டில் சேர்க்க மாட்டார்கள்! இது எவ்வளவு பிரச்சினைகளை எங்களுக்குத் தரும் என்பதைக் கருத்தில் கொள்ளாமல் பூக்கள் நிரம்பிய குருந்தமரத்தின் மீது ஏறி நிற்கிறாய். நீ கேட்பதை எல்லோரும் பார்க்கத் தரமுடியுமா? தனியிடத்திற்குச் செல்லலாம். வேண்டியதைத் தருவோம். ஆனால் இப்படியே செல்ல முடியுமா?எங்கள் ஆடைகளைத் தந்தருள்வாய்.
பெண்களும் கூடலுக்குத் தயார் என்கிறார்கள். ஆனால் எங்களுக்கு வெட்கம் என்று ஒன்று இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். நீ எதை நினைக்கிறாயோ அதைச் செய்யக் கூடியவன். எங்களால் அவ்வாறு செய்ய முடியாது.
பரக்க விழித்து எங்கும் நோக்கிப் பலர் குடைந்தாடும் சுனையில்
அரக்க நில்லா கண்ண நீர்கள் அலமருகின்றவா பாராய்
இரக்கமேல் ஒன்றும் இலாதாய்! இலங்கை அழித்த பிரானே!
குரக்கரசு ஆவதறிந்தோம் குருந்திடைக் கூறை பணியாய்
இலங்கையை அழித்த பெருமானே! நீ கண்களை எல்லாப்புறமும் விழித்துப் பார்ப்பதால், சுனையில் நீராட வருபவர்களின் வருகை சீக்கிரம் அதிகரிக்கப்போகிறது என்பது தெரிகிறது. ஆனால் எங்கள் கண்களிலிருந்து அடக்கினாலும் நில்லாமல் கண்ணீர் கொட்டுகிறதைப் பார்க்க மாட்டாய். இரக்கம் என்பது கொஞ்சம் கூட இல்லாதவனே! நீ குரங்குகளுக்குத் தலைவன் என்பது எங்களுக்குத் தெரியும். குருந்த மரத்தில் இருக்கும் ஆடைகளை எங்களுக்குத் தா.
குரங்குகளுக்குத் தலைவனான சுக்ரீவனுக்கும் இவன்தான் தலைவன். தலைவனுக்கும் தலைவன் என்பதால் மரத்தில் குரங்குகள் செய்யும் குறும்புகளை விட அதிகக் குறும்புகளை செய்கிறான். அழுதாலும் பிடிவாதம் பிடித்தாலும் அவன் கவலைப்பட மாட்டான். தான் செய்ய நினைத்ததைச் செய்தே தீருவான்.
காலைக் கதுவிடுகின்ற கயலொடு வாளை விரவி
வேலைப் பிடித்து என்னைமார்களோட்டில் என்ன விளையாட்டோ?
கோலச் சிற்றாடை பலவும் கொண்டு நீ ஏறி இராதே
கோலம் கரிய பிரானே! குருந்திடைக் கூறை பணியாய்
கரிய திருமேனியை உடைய பிரானே! கயல் மீன்களும் வாளை மீன்களும் சேர்ந்து எங்கள் கால்களைக் கடிக்கின்றன. நீ இப்படி எங்கள வாட்டுவது தெரிந்து எங்கள் அண்ணன்மார்கள் வேல்களோடு இங்கு வந்து உன்னை விரட்டி விட்டால், அது விபரீத விளையாட்டாக முடிந்து விடும் அல்லவா? நீ அழகிய சிற்றாடைகளை அணிந்துகொண்டு மரத்தின் மேல் ஏறிக்கொண்டு ஏதும் செய்யாமல் இருக்காதே , குருந்த மரத்தில் உள்ள எங்கள் ஆடைகளைக் க் கொடுத்தருள்வாய்.
அன்று முதலை கடித்த யானையைக் காப்பாற்ற ஓடோடி வந்தாய். ஆனால் எங்கள் கால்களை எது கடித்தாலும் அது பற்றி உனக்கு எந்தக் கவலையும் இல்லை. எங்கள் அண்ணன்மார்கள் உன்னை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்கள் என்று பயமுறுத்தவும் செய்கிறார்கள்- கண்ணனை வெல்ல யாராலும் முடியாது என்பது தெரிந்திருந்தும்.