பெய்யுமா முகில் போல் வண்ணா! உன்தன் பேச்சும் செய்கையும் எங்களை
மையல் ஏற்றி மயக்க உன் முகம் மாய மந்திரம் தான் கொலோ?
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம்
செய்ய தாமரைக் கண்ணினாய்! எங்கள் சிற்றில் வந்து சிதையேலே
பெய்கின்ற கரு முகிலின் வண்ணமுடையவனே! உன் பேச்சும் செயலும் எங்களுக்கு காதலை ஏற்றி மயக்குறச் செய்வதற்குக் காரணம் உன் முகம் செய்யும் மந்திரம்தானோ? உனனைக் குறை சொன்னால் நாங்கள் வலுவில்லாத சிறுமிகள் என்று நீ எங்களைக் கேலி செய்வாய் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால் நாங்கள் வாயைத் திறக்க விரும்பவில்லை. சிவந்த தாமரை போல கண்களை உடையவனே! எங்கள் சிற்றில்களைச் சிதைக்காதே.
வாயைத் திறக்க விரும்பவில்லை என்று சொல்லிக் கொண்டே வாய் ஓயாமல் பேசுகிறார்கள் ஆயர்குலச் சிறுமிகள். பெய்யும் மேகத்திற்கு ஈரம் இருக்கும். உனக்கும அதன் வண்ணம் மட்டும் இருக்கிறதே தவிர நீ ஈரமில்லாதவன். உன் பேச்சும் பிடிக்கவில்லை. செய்கையும் பிடிக்கவில்லை. ஆனால் உன் முகத்தைப் பார்த்தால் மனதில் ஆசை ஏறுகிறது. உன் முகம் செய்யும் மந்திரம் என்ன?
உரையாசிரியர்கள் கண்ணன் ‘அம்மான் பொடி’ (மயக்க வைக்கும் சொக்குப்பொடி) போட்டுவிட்டான் என்கிறார்கள். இந்தப் பொடியின் வளையத்திற்குள் வந்தவர்கள் ‘மாமனே, மாமனே’ என்று கூப்பிட்டு கொண்டு பொடி தூவியவர் பின்னால் செல்வார்களாம்.
கண்ணனை Pied Piper of Hamelin என்கிறார்கள்!
வெள்ளை நுண்மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதி வாய்த்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தியாகிலும் உன்தன் மேல்
உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஒன்றுமிலோம் கண்டாய்
கள்ள மாதவா! கேசவா! உன் முகத்தன கண்கள் அல்லவே
திருடனாகிய மாதவனே! கேசவனே! வெண்மையான பொடிமணலைக் கொண்டு ஊரார் வியக்க, தண்ணீர் தெளித்து தெருவைத் தூய்மையாக்கி நாங்கள் செய்த சிற்றில்களையும் இழைத்த கோலங்களையும் அழிக்கிறாய். இருந்தாலும் உன்னைப் பார்த்தால் உள்ளம் உருகுகிறதே தவிர உன் மீது கோபம் துளி கூட இல்லை என்பதை நீயே பார்க்கிறாய். காரணம் உன் முகத்தில் இருப்பவை. அவை கண்கள அல்ல (வேறு எதுவோ.)
நிலவைப் பரப்பியது போல காலில் குத்தாத, சிறு கற்களைத் தவிர்த்த மணலை கொண்டு நாங்கள் இவற்றை வடித்திருக்கிறோம் என்கிறார்கள் ஆய்ச்சியர். அவற்றை அழித்து நீ பாதகம் செய்தாலும் உன் மீது கோபமே வருவதில்லை. அவன் முகத்தில் இருப்பது என்ன? ஆண்டாளே “கார்த்தண் கமலக் கண்ணென்னும் நெடுங்கயிறு” என்று பின்னால் பாடுகிறார். கண்ணனின் கண்கள் கட்டிப்போடும் கயிறு.
முற்றிலாத பிள்ளைகளோம் முலை போந்திலாதோமை நாள் தொறும்
சிற்றில் மேலிட்டுக் கொண்டு நீ சிறிதுண்டு திண்ணென நாம் அது
கற்றிலோம் கடலை அடைத்து அரக்கர் குலங்களை முற்றவும்
செற்று இலங்கையைப் பூசலாக்கிய சேவகா! எம்மை வாதியேல்
சேதுவில் அணையைக் கட்டி கடலை அடைத்து அரக்கர் குலத்தை அடியோடு அழித்து இலங்கையில் குழப்பம் விளைவித்த, உலகின் காவலனே! நாங்கள் முதிராச் சிறுமிகள். முலைகள் இன்னும் சரியாக எழவில்லை. சிற்றில்களைக் காரணமாக வைத்துக் கொண்டு நீ செய்யும் செயல்களை நாங்கள் இதுவரை கற்றதில்லை. எங்களுக்குத் துன்பம் கொடுக்காதே.
அன்று ஒரு பெண்ணை மீட்பதற்காக கடலைத் தடுத்து அணையைக் கட்டினாய். இன்று பல பெண்கள் மனம் நோகும்படியாக அவர்கள் சிற்றில்களைச் சிதைக்கிறாய். நீ செய்யும் காரியங்களை நாங்கள் வெளியே சொல்ல முடியாது. எங்களாலும் அவற்றை திறனோடு செய்ய முடியாது. உன்னைப் போல நாங்கள் குருகுல வாசம் செய்யவில்லை. அங்கு நீ கற்றது இதுதான் போலிருக்கிறது.
சென்ற பத்தில் இருந்த திமிர்ந்த முலைகள் இப்பத்தில் இல்லாதவையே போல ஆகி விட்டன. இதில் வரும் சிறுமிகள் திருப்பாவையின் சிறுமிகள். திருப்பாவை முடிந்ததும் கண்ணனின் கைவரிசைகளுக்கு இலக்காகித் தவிக்கும் சிறுமிகள்.
பாடல் ஆண் எழுதியது அல்ல. பெண் எழுதியது. அவள் காதல் என்றால் என்ன என்று தெரிந்தபின் எழுதியது. இருந்தாலும் ஆண்டாள் காலத்தில் பெண்களுக்கு பன்னீரண்டு ஆண்டுகளிலேயே திருமணம் நடந்து விடும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
பேதம் நன்கறிவார்களோடு இவை பேசினால் பெரிது இன்சுவை
யாதும் ஒன்றறியாத பிள்ளைகளோமை நீ நலிந்து என் பயன்?
ஓதமா கடல் வண்ணா! உன் மணவாட்டிமாரொடு சூழறும்
சேது பந்தம் திருத்தினாய்! எங்கள் சிற்றில்வந்து சிதையேலே
அலைகள் ஓசை செய்யும் கடல் போன்ற வண்ணம் உடையவனே! சேதுவில் அணை கட்டியவனே! உன் மனைவிமார்கள் மீது ஆணை! எது நல்லது எது கெட்டது என்பதைத் தெரிந்தவர்களுடன் நீ வாதம் செய்தால் அது உனக்கு நல்லது. இங்கு அல்ல. நாங்கள் ஏதும் அறியாத சிறுபிள்ளைகள் எங்களை ஏன் துன்புறுத்துகிறாய்? எங்கள் சிற்றில்களைச் சிதைக்காதே.
மனைவிமார்கள் என்றால் திருமகளையும் மண்மகளையும் என்று எடுத்துக் கொள்ளலாம். அல்லது கண்ணனை வரித்த, அவன் வரிந்த கணக்கற்ற பெண்களை எடுத்துக் கொள்ளலாம். இப்பாடலிலும் சேது வருகிறது. “உன்னைப் போல இல்லை சேதுவை அமைத்த ராமன் . ‘இந்த இப்பிறவிக்கு இருமாதரைச் சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம்’ சீதைக்குக் கொடுத்த செல்வன் அவன்” என்று அவனுக்கு நினைவுறுத்துகிறார்கள்.
வட்டவாய்ச் சிறு தூதையோடு சிறு சுளகும் மணலும் கொண்டு
இட்டமா விளையாடுவோங்களைச் சிற்றில் ஈடழித்து என் பயன்?
தொட்டுதைத்து நலியேல் கண்டாய் சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய்!
கட்டியும் கைத்தால் இன்னாமை அறிதியே கடல் வண்ணனே!
கையில் சுதர்சன சக்கரத்தை ஏந்தியிருப்பவனே! கடலின் நிறமுடையவனே! வட்டமான வாய் கொண்ட சிறிய பானையும், சுளகையும் மணலையும் கொண்டு நாங்கள் எங்களுக்கு விருப்பமான விளையாட்டை விளையாடுகிறோம். நாங்கள் சமைத்த சிற்றில்களை அழிப்பதால் என்ன பயன்? மனம் வருந்தினால் கரும்பும் கசந்து போகும். இப்படி சிற்றில்களை கைகளால் தொட்டும் உதைத்தும் எங்களை நலிய வைக்காதே.
கண்ணன் கையில் இருக்கும் சக்கரம் பகைவர்களுக்கு கொடுக்கும் துன்பத்திற்கும் அவன் இங்கு எங்களுக்கு அளிக்கும் துன்பத்திற்கும் அதிக வேறுபாடில்லை என்கிறார்கள். சிறுமிகள் கண்ணன் வண்ணம் கடல் நிறம் என்கிறார்கள். சுவையும் கடற்சுவையோ என்று சந்தேகப்படுகிறார்கள். அதன் தண்ணீரால் முகத்தைக் கழுவ முடியுமா? அதைக் குடிக்க முடியுமா? உன் சொந்தக் கடல் பாற்கடலாக இருக்கலாம். அதனால் நீ கரும்பாக இனிப்பவனாக ஒருவேளை இருக்கலாம். ஆனாலும் உன் செய்கை எங்களுக்குக் கசப்பைக் கொடுக்கிறது.
சிறுமிகள் சிற்றில் செய்வதற்கு எடுத்துச் சென்றவற்றை ஆண்டாள் இப்பாடலில் சொல்கிறாள். வட்டமான வாயை உடைய சிறிய பானையையும் மணலில் இருந்து கற்களை அகற்ற உதவும் சிறிய முறத்தையும் அவர்கள் கொண்டு செல்கிறார்கள்.
முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டிப் புன்முறுவல் செய்து
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக் கடவையோ? கோவிந்தா!
முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டளந்து கொண்டாய்! எம்மைப்
பற்றி மெய்ப்பிணக்கிட்டக்கால் இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார்?
மண்ணிலிருந்து தாவி விண்ணையும் காலால் நீட்டி அளந்து உன்னதாக்கிக் கொண்டவனே! கோவிந்தா! எங்கள் முற்றத்தில் வந்து உன் முகத்தைக் காட்டி புன்னகை செய்து சிற்றில்களைச் சிதைத்தது மட்டுமல்லால் எங்கள் சிந்தையையும் சிதைக்க கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறாயா? எங்களைப் பிடித்திழுத்து எங்கள் உடல்களைத் தீண்டினால் சுற்றுப்புறத்தில் இருப்பவர்கள் என்ன சொல்வார்கள்?
உலகில் இருக்கும் மண் மட்டுமன்று, விண்ணும் உன்னுடையது. அப்படி இருக்கையில் எங்கள் முற்றம் புகுந்து எங்கள் மண்வீட்டை கலைப்பது நியாயமா? என்று சிறுமிகள் கேட்கிறாகள் கண்ணன் புணர்ச்சியை (சம்லேஷம்)விரும்புகிறான் என்று சிறுமிகள் சொல்லாமல் சொல்கிறார்கள் உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். இது கண்ணன் விரும்பியதில்லை. கண்ணன் விரும்பினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைக்கும் பெண்கள் பாடியது. அவன் மீது கோபம் கொண்டதாக நடித்தாலும் அவனைக் கோவிந்தன் என்று அழைப்பது அவர்களைக் காட்டிக் கொடுத்து விடுகிறது. கோவிந்தனைத் தவிர மற்ற பெயர்கள் எல்லாம் அவனுக்குச் சிறு பெயர்கள் என்று திருப்பாவை சொல்கிறது.
சீதை வாய் அமுதம் உண்டாய்! எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று
வீதி வாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலைச் சொல்லை
வேத வாய்த் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன் தன்
கோதை வாய்த் தமிழ் வல்லவர் குறைவின்றி வைகுந்தம் சேர்வரே
‘சீதையின் வாயமுதத்தை உண்டவனே, எங்கள் சிற்றில்களைச் சிதையாதீர்’ என்று ஆயர்பாடித் தெருவில் விளையாடும் சிறுமிகளின் மழலைச் சொற்களை, வேதங்களை ஓதுவதையே தொழிலாகக் கொண்டவர்கள் வாழும் ஊரான வில்லிபுத்தூர் விஷ்ணுசித்தர் மகள் கோதை தமிழ்ப் பாடல்களாகப் படைத்தாள். அவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் எந்தக்குறையும் இல்லாமல் திரு வைகுண்டம் அடைவார்கள்.
சீதையை திரும்பத் திரும்ப மேற்கோள் காட்டுவது கண்ணன் ராமன் போன்றவன் அல்லன் என்பதைக் குறிக்க. அவனிடம் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று ஆயர்பாடிச் சிறுமிகள் சொல்கிறார்கள். ஆனால் ஆண்டாள் நிச்சயமாக கவனமாக இருக்கத் தயாராக இல்லை.
/ சூழறும்/
என்ற சொல்லுக்கு
.. மீது ஆணை
என்றா பொருள்?
சூளுறும் என்பதன் பாடபேதமா?
LikeLike
அப்படித்தான் அண்ணங்கராச்சாரியர் சொல்கிறார். பெரியவாச்சான் வியாக்கியானமும் அவ்வாறே சொல்கிறது. புத்தூர் சுவாமியும் இப்படித்தான் சொல்கிறார்.
LikeLike
Thank you.
Excuse my digressive hair-splitting:
I was searching the word சூழறும் yesterday and it looks like this is a one-off usage (so, likely an ‘errata’).
Dr.Ethirajan who compiled the sthala puranas of the 108 divya desams into a book has written:
“மாகடல் வண்ணனே நீ உன் தேவிமார்களுடன் வந்து நாங்கள் கட்டிக்கொண்டிருக்கும் இந்த மணல் வீடுகளை மிதித்து ஆடி சிதைக்கமாட்டாயா என்று கேட்கிறார் ”
He seems to take சூழறும் to mean “தேவிமார் புடைசூழ வந்து” . He doesn’t say what his interpretation is based on but it doesn’t square up with “சிற்றில் வந்து சிதையேலே” anyway.
I googled further and landed on an essay Mu.Raghavaiyengar wrote in Senthamizh magazine in 1942 titled: அருளிச்செயற் பாடவமைதி
There he opines that it is likely a பாடபேதம் of சூளறும் (ஆணை அறுதி இடுதல்).
That essay was quite interesting.
I landed on it via the curiosity triggered by your post – Thank You.
LikeLike