காம தேவனை (அல்லது தேவியை) பாடிய கவிஞர்கள் இருக்கிறார்கள். பெண் கவிஞர்களும் இருக்கிறார்கள். ஆண்டாளுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த பெண் கவிஞர் ஸாஃபோ (Sappho). அவர் கிரேக்கக்கடவுளான அஃப்ருடைடியை (Aphrodite)ப் பாடியிருக்கிறார்.
Aphrodite, subtle of soul and deathless,
Daughter of God, weaver of wiles, I pray thee
காதலின் தேவியை, கடவுளின் மகளை வணங்கி, ‘நுண்ணிய மனம் உடையவளே, இறப்பே இல்லாதவளே, பல மாயங்களைச் செய்பவளே’ என்று தன் கவிதையைத் துவங்கி இவ்வாறு முடிக்கிறார்.
Come to me now thus, Goddess, and release me
From distress and pain; and all my distracted
Heart would seek, do thou, once again fulfilling,
Still be my ally!
என்னிடம் வா. என்னைத் துன்பத்திலிருந்தும் வலியிலிருந்தும் விடுதலை செய். அலைபாயும் என் இதயம் வேண்டுவது ஒன்றைத்தான்: முன் போலவே, நிறைவைத் தரும் துணைவியாக என்னுடன் இரு.
ஸாஃபோவின் காதல் தேர்ந்த காதல். ஆண்டாளின் காதல் முதல் காதல்.
இனி பாடல்கள்.
உருவுடையார் இளையார்கள் நல்லார் ஓத்து வல்லார்களைக் கொண்டு வைகல்
தெருவிடை எதிர் கொண்டு பங்குனி நாள் திருந்தவே நோற்கின்றேன் காம தேவா!
கருவுடை முகில்வண்ணன் காயாவண்ணன் கருவிளை போல் வண்ணன் கமல வண்ணத்
திருவுடை முகத்தினில் திருக்கண்களால் திருந்தவே நோக்கெனக்கு அருள் கண்டாய்
காம தேவா! அழகிய இளைஞர்களை, காமநூல்களை நன்கு பயின்றவர்களை பணிந்து, இப்பங்குனி நாளின் காலையில் உன்னை நான் நல்ல தெளிவோடு வணங்குகிறேன். தண்ணீரைச் சூல் கொண்ட மேகம் போல வண்ணமுடையவன், காயாம் பூ மற்றும் காக்கணம் பூ வண்ணம் உடையவன், தன் தாமரையின் ஒளியைக் கொண்ட முகத்தின் அழகிய கண்களால் என்னைக் கூர்ந்து நோக்கச் செய்யுமாறு அருள் புரிவாய்.
நீங்கள் வேத வித்தகர்களாக இருக்கலாம் என்றால் நான் காம வித்தகியாக இருக்கக் கூடாதா என்று ஆண்டாள் கேட்கிறார். எங்கள் ஊர் இளைஞர்கள் காம சூத்திரங்களைக் கரைத்துக் குடித்தவர்கள்; அவர்களை அடிபணிந்தாலே போதும், எனக்கும் அவர்கள் ஞானம் வந்து விடும் என்கிறார்! கண்ணனிடம் செல்லும் போது அறியாச்சிறுமியாக இருப்பேன் என்று நீ நினைக்க வேண்டாம் என்று காமனுக்கு அறிவுறுத்துகிறார்.
மேக வண்ணன், காயாம்பூ வண்ணன், காக்கணம் பூ வண்ணன், தாமரையின் ஒளிவீசும் முகமுடையவன். மேகத்தின் வண்ணம் வேறு. காயாம் பூவின் வண்ணமும், காக்கணம் பூவின் வண்ணமும் சிறிது மாறுபட்டவை. ஆண்டாள் மூன்றையும் சொல்கிறார். ஒவ்வொரு வெளிச்சத்தில் பார்க்கும்போது அவன் ஒவ்வொரு வண்ணத்தில் தெரிகிறான். ஆனால் அவன் முகத்தாமரையின் ஒளி மாறாதது. இருளிலும் ஒளி வீசும்.
காயாம் பூ – Memecylon umbellatum; காக்கணம் பூ (சங்கு புஷ்பம்) -Convolvulus arvensis
காயுடை நெல்லொடு கரும்பமைத்துக் கட்டி அரிசி அவல் அமைத்து
வாயுடை மறையவர் மந்திரத்தால் மன்மதனே! உன்னை வணங்குகின்றேன்
தேச முன்னளந்தவன் திரிவிக்கிரமன் திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்
சாயுடை வயிறும் என் தடமுலையும் தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே
மன்மதனே! பசுங்காய் நெல்லும் கரும்பும், வெல்லமும் அரிசியும், அவலும் உனக்குப் படைத்து, சிறப்பாக ஓதக் கூடிய அந்தணர்களின் மந்திரங்களினால் உன்னை வணங்குகிறேன். முன்னொரு நாளில் உலகை அளந்த திருவிக்கிரமன் தன் திருக்கரங்களால் என்னை தீண்டச் செய். அவனால் தீண்டப்பட்ட (ஒட்டிய) ஒளிவீடும் வயிறும் பெருத்த முலைகளையும் உடையவள் என்று உலகு முழுவதும் அறியச் செய்.
இங்கு உரையாசிரியர்கள் மந்திரம் என்றால் காமசாஸ்திரத்தின் மந்திரங்கள் என்று பொருள் கொள்கிறார்கள். நான் அவ்வாறு நினைக்கவில்லை. அந்தணர் மந்திரங்கள் ஓதுவதைக் கேட்டுக் கேட்டு ஆண்டாளுக்கு மந்திர ஞானம் பிறந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆண்டாள் இங்கு பெண்கள் வேதம் ஓதக் கூடாது என்ற கட்டளையை வெளிப்படையாக மீறுகிறார். ‘என் புகழ் உலகெல்லாம் பரவ வேண்டும். இறைவனால் தீண்டப்பட்ட பேரழகி’ என்று உலகம் சொல்ல வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்துகிறார்.
இது இளைமையின் அழகிய பாடல்.
மாசுடை உடம்பொடு தலை உலறி வாய்ப்புரம் வெளுத்தொரு போதுமுண்டு
தேசுடைத் திறலுடைக் காம தேவா! நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்
பேசுவதொன்று உண்டு இங்கு எம்பெருமான்! பெண்மையைத் தலையுடைத்து ஆக்கும் வண்ணம்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப்பேறு எனக்கருள் கண்டாய்
பிரகாசிப்பவனே! வலிமையுடைய காமதேவனே! எனக்கு(இப்போது) பெருமானானவனே! நான் இங்கு குளிக்காமல் அழுக்கோடு இருக்கிறேன். தலைவிரி கோலமாக. (முன்பு சிவந்திருந்த) வாய் வெளுத்து விட்டது. ஒரு வேளைதான் உண்கிறேன். இந்த நோன்பை நூற்பது எதனால்? ஒன்று சொல்கிறேன் கேள்! என் பெண்மைக்கு உயிர் கொடு! கேசவன் என்ற அந்தப் பேரழகனின் காலைப் பிடிப்பவள் இவள் என்ற பேற்றை நான் பெற அருள் செய்வாய்.
முதலில் குளித்து விட்டு உன்னை வழிபடுகிறேன் என்று சொன்னவர் இப்போது அழுக்காக இருக்கிறேன் என்கிறார்! முந்தைய பாடலில் தன் இளைமையின் திமிர்ந்த தன்மையைப் பேசியவர் இப்பாடலில் நான் அழகை இழக்கும் அபாயத்தில் இருக்க்கிறேன் என்கிறார். காதற் கலக்கத்தில் பிறந்த முரண் வெளிப்படும் அற்புதமான பாடல். முந்தைய பாடலில் மார்பால் அணைப்பேன் என்று சொன்னவர் இப்போது காலை வருடும் வாய்ப்புக் கிடைத்தாலும் தயாராக இருக்கிறேன் என்கிறார்.
தொழுது முப்போதும் உன்னடி வணங்கித் தூமலர் தூய்த் தொழுது ஏத்துகின்றேன்
பழுதின்றிப் பார்க்கடல் வண்ணனுக்கே பணி செய்து வாழப் பெறாவிடில் நான்
அழுதழுது அலமந்து அம்மா வழங்க ஆற்றவும் அது உனக்கு உறைக்கும் கண்டாய்
உழுவதோர் எருத்தினை நுகங்கொடு பாய்ந்து ஊட்டமின்றித் துரந்தால் ஒக்குமே
காம தேவனே! மூன்று வேளைகளும் உன் அடிகளைத் தொழுது வணங்கி, தூய மலர்களை, தூய மனதுடன் தூவி உன்னைத் தொழுது உன் புகழ் பாடுகிறேன். உலகைச் சூழ்ந்திருக்கும் கடல் போல வண்ணமுடையவனுக்கு நான் எந்தக் குறையும் இல்லாமல் பணிவிடை செய்து வாழும் பாக்கியம் எனக்குக் கிட்டாவிட்டால், நான் அழுது அழுது தடுமாறுவேன். அம்மா, அம்மா என்று குரலிட்டுக் கொண்டு அலைவேன். அப்போதுதான் உனக்கும் உரைக்கும். என்னைப் பற்றிய நினைவு வரும். நீ செய்வது உழுது உழுது களைத்த எருதை அது சுமந்து கொண்டிருந்த நுகத்தடியாலே தள்ளி அதற்கு உணவு அளிக்காமல் விரட்டுவதற்கு ஒப்பானது.
கண்ணனை மட்டும் புகழாமல் உன்னைப் புகழ்வது எனக்கு பாரமானது. நுகத்தடி போன்றது. அப்புகழை வாங்கிக் கொண்டு உனக்காக உழைத்த என்னை எனக்குத் தேவையான உணவை அளிக்காமல் விரட்டுகிறாயே இது நியாயமா? என்று ஆண்டாள் கேட்கிறார். என் கோரிக்கையை நிறைவேற்றாமல் புறக்கணித்தால் அதை நான் ஊர் முழுவதும் சொல்வேன். என் பாவமும் ஊரார் உன்னை வசைபாடும் பாவமும் உனக்குக் கிட்டும் என்று காமனைப் பயமுறுத்துகிறார்.
கருப்பு வில் மலர்க் கணைக் காம வேளைக் கழலிணை பணிந்து அங்கோர் கரி அலற
மருப்பினை ஒசித்துப் புள் வாய் பிளந்த மணிவண்ணற்கு என்னை வகுத்திடென்று
பொருப்பன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டுசித்தன் கோதை
விருப்புடை இன்தமிழ் மாலை வல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவரே
கரும்பு வில்லையும் மலர் அம்புகளையும் உடைய காம தேவனின் இருகால்களையும் வணங்கி, குவலயபீடம் என்ற யானையின் கொம்பை அது அலற அலற முறித்த, பறவையின் வாயைப் பிளந்த கரிய மணி போன்ற வண்ணமுடையவனை தான் சேர வேண்டும் என்ற மலைகள் போன்ற மாடங்களால் மிளிரும் திருவில்லிபுத்தூரின் விஷ்ணுசித்தரின் மகளான் கோதையின் ஆசையால் பிறந்த இன்பத் தமிழ் மாலைகளை பாடுபவர்கள் விண்ணவர் தலைவனான திருமாலின் அடிகளை அடைவார்கள்.
பாடல்களைப் படித்தால் கிடைக்கும் பலன்களைப் பேசும் இது போன்ற பாடல்கள், பாடிய கவிஞர்கள் எழுதியதா அல்லது பின்னால் சேர்க்கப்பட்டதா என்ற ஐயம் இருப்பது இயற்கையே.