முதல் திருமொழி – 1

ஆண்டாள் வைணவத்திற்குக் கிடைத்த அரிய சொத்து என்பதை வைணவ ஆசாரியர்கள் அறிந்திருந்தார்கள். அவரை பத்து ஆழ்வார்களுக்கும் கிடைத்த ஒரே பெண்ணாகத்தான் என்று அவர்கள் கருதினார். ஒரு மகள் தன்னை உடையேன் என்று பெரியாழ்வார் பாடியது எல்லா ஆழ்வார்களையும் கருத்தில் கொண்டுதான் என்றும் நினைத்தனர். உபதேச ரத்தின மாலையில் மணவாளமாமுனிகள் ஆண்டாளைப் பிஞ்சில் பழுத்தவள் என்று அழைக்கிறார். பல்லாண்டுகள் பெருமுயற்சி செய்தும் கிடைக்கப் பெறாத ஞானத்தை அவளுடைய சுடர்மிகும் அறிவு மிக இளவயதிலேயே அடைந்து விட்டது. இங்கு பழுத்தது என்று மாமுனிகள் சொன்னது அவளுடைய படைப்புக்கனியை. அது வெம்பாத பழம். இன்றும், என்றும் தெவிட்டாத சுவையை கொடுக்கும் பழம்.

முதல் பத்துப் பாட்டுகள் அவள் காமதேவனை வணங்குவதை விவரிக்கின்றன.

மறந்தும் புறம் தொழாத வைணவப்பரம்பரையின் அரிய சொத்து பிற தெய்வ வழிபாடு செய்வதா? இதற்கு பெரியவாச்சான் பிள்ளை பல விளக்கங்களை அளிக்கிறார். அயோத்தியின் குடிமக்கள் ராமனுடைய நன்மைக்காக எல்லா தெய்வங்களையும் வழிபடவில்லையா? அனுமன் கடலைக் கடக்கும் போது “நமோஸ்து வாசஸ்பதயே” (வாசஸ்ல்பதியை வணங்குகிறேன்) என்று சொல்லவில்லையா? என்றெல்லாம் கேட்டு விட்டு இதையும் சொல்கிறார்: ‘இவளுடைய திருத்தமப்பனாரான நம்மாழ்வார் ‘தெய்வங்காள்’ என்று தேவதைகள் முன்னிட்டாற்போலவும் இவளும் அயர்த்து கலங்கினபடி’. அதாவது வைணவகுலத் தலைவரான (ஆண்டாளின் தந்தை என்று அறியப்படுபவரான) நம்மாழ்வாரே பிற தெய்வங்களைத் துணைக்கு அழைக்கும்போது வாழ்க்கையில் வாசலில் நுழையக் காத்திருக்கும் ஓர் இளம் பெண் தன் கலக்கத்தில் காமதேவனை அழைக்கக் கூடாதா?

இனி பாடல்கள்.

ஒவ்வொரு பத்திலும் உள்ள எல்லாப் பாடல்களுக்கும் விரிவான விளக்கம் அளிப்பதற்குப் பதிலாக எனக்குப் பிடித்த பாடல்களைப் பற்றி விரிவாகப் பேசி மற்றைய பாடல்களுக்கு பொருள் மட்டும் அளிக்கலாம் என்று இருக்கிறேன்.

தையொரு திங்களும் தரை விளக்கித் தண் மண்டலமிட்டு மாசி முன்னாள்
ஐய நுண்மணற் கொண்டு தெருவணிந்து அழகினுக்கு அலங்கரித்து அனங்க தேவா!
உய்யவுமாங்கொலோ என்று சொல்லி உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே.

அனங்க தேவனே! (காமனே!)தைமாதத்தில் ஒவ்வொரு நாளும் தரையைச் சுத்தமாக்கி அழகிய கோலங்களை இட்டேன். மாசி முதல் நாட்களில் மிருதுவான மணலால் தெருவை அழகாக அலங்கரித்து உன்னையும் உன் தம்பியையும் உய்வு கிடைக்குமா என்ற கருத்தில் தொழுதேன். மிகவும் உக்கிரமாக நெருப்பை உமிழும் சக்கரத்தை கையில் ஏந்திக் கொண்டிருக்கும் வேங்கடமுடையானுக்குத் தொண்டு செய்ய எனக்கு நீதான் வழி சொல்ல வேண்டும்.

மார்கழி மாதத்திற்கு முப்பது பாடல்கள் பாடியவர் தை மாதத்தை பாதி வரியில் கடந்து அடுத்த பாதியில் மாசியின் முதல் நாட்களுக்கு வந்து விடுகிறார்! அவர் காமனை மட்டுமன்று அவன் தம்பியான சாமனையும் தொழுகிறார். காமன் வழிபாடு தமிழகத்தில் சங்க இலக்கிய காலத்திலிருந்தே இருக்கிறது. பரிபாடலும் கலித்தொகையும் காமனைப் பற்றிப் பேசுகின்றன. உதாரணமாக கலித்தொகை “காமவேள் விழவு ஆயின் கலங்குவள் பெரிது என” என்று காமவேளைக் குறிக்கிறது. சிலப்பதிகாரம் பெண்கள காமவேள் கோட்டத்தில் தொழுவதைப் பேசுகிறது. காமன் தம்பியான சாமனைப் பற்றியும் கலித்தொகை குறிப்பிடுகிறது; ‘காமர் நடக்கும் நடை காண் கவர் கணை சாமனார் தம்முன் செலவு காண்’.

நுண்மணல் ஏன்? காமன் மிருதுவானவன். அவன் பாதங்கள் பஞ்சு போன்றவை எனவே அவனுக்கு மிருதுவான மணலைப் பரப்புகிறார் ஆண்டாள். ஆனால் அவருக்குத் தெரியும் காமனுக்கு உடல் கிடையாது, அங்கங்கள் கிடையாது என்று. சிவபெருமானின் நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்டவன் அவன். எனவே அவனை அங்கங்கள் இல்லாதவன் என்று அழைக்கிறார். நுண்மணல் பரப்பியது ஒரு வேளை அவன் அங்கங்கள் கிடைத்து ஊர்வலம் வந்தால் என்ன செய்வது என்ற அச்சத்தில். காதலின் கலக்கம் அவரை முன்னுக்குப்பின் முரணாகச் செயற்பட வைக்கிறது.

சாமனையும் ஏன் சேர்த்து வணங்குகிறாள்? இராமனை வணங்கும்போது இலக்குவனையும் வணங்கவில்லையா? ‘நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மாணாய’ என்று அனுமன் ராமனையும் இலக்குவனையும் வழிபட்டதைச் சொல்லும் பெரியாவாச்சான் பிள்ளை, ஐயோ, இவளுக்கு இந்த நிலைமையா, ‘தோள் அவனையல்லால் தொழா’ என்று உறுதியாக இருக்கும் வைணவக்குடியில் பிறந்த இவளுக்கு இந்த நிலைமையா என்று வருத்தப்படுகிறார்! யார் காலையெல்லாம் பிடிக்க வேண்டிருக்கிறது?

நீ எனக்காக வெகுதூரம் செல்ல வேண்டியது இல்லை. அவனுடைய வைகுண்டம் செல்ல வேண்டும், பாற்கடல் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவன் பக்தர்களுக்காகவும் எனக்காகவும் மிக அருகில், திருமலையில் இருக்கிறான். அவனோடு சேர்த்து வை என்கிறார் ஆண்டாள்.

வெள்ளை நுண்மணல் கொண்டு தெருவணிந்து வெள்வரைப்பதன் முன்னம் துறை படிந்து
முள்ளுமில்லாச் சுள்ளி எரிமடுத்து முயன்று உன்னை நோற்கின்றேன் காம தேவா!
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக் கொண்டு கடல்வண்ணன் என்பதோர் பேர் எழுதி
புள்ளினை வாய் பிளந்தான் என்பதோர் இலக்கினில் புக என்னை எய்கிற்றியே

காமதேவா! விடியும் முன்னரே நதியில் குளித்து விட்டு, வெள்ளையான கோலப்பொடி கொண்டு தெருவை அலங்கரித்து, முள்ளில்லாத சுள்ளிகளைக் கொண்டு, உன்னை பூசிக்கிறேன். உன்னுடைய தேன் வழியும் மலர் அம்பைத் தொடுத்து அதில் கடல் போல நிறம் படைத்த கண்ணனின் பெயரை எழுதி, அன்று பறவையின் வாயைப் பிளந்தவனை இலக்காகக் கொண்டு எய்வாயாக.

பாடலில் ‘என்னை’ என்பதை அம்போடு என்னையும் சேர்த்து எய். நான் அவனை உடனே சேர வேண்டும் என்றும் பொருள் கொள்ளலாம் அல்லது ‘என்னை’ என்ற சொல்லை ‘எனக்காக’ என்ற சொல்லின் உருபு மயக்கமாகக் கருதி எனக்காக உன் அம்பை எய்ய மாட்டாயா என்று ஆண்டாள் வேண்டுகிறார் என்றும் பொருள் கொள்ளலாம்.

மத்தநன் நறுமலர் முருக்கமலர் கொண்டு முப்போதும் உன்னடி வணங்கி
தத்துவமிலி என்று நெஞ்செரிந்து வாசகத்தழித்து உன்னை வைதிடாமே
கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு கோவிந்தன் என்பதோர் பேர் எழுதி
வித்தகன் வேங்கடவாணன் என்னும் விளக்கினில் புக என்னை விதிக்கிற்றியே.

வாசமிக்க ஊமத்தை மலர், முருங்கை மலர் போன்ற மலர்களைக் கொண்டு மூன்று வேளைகளும் உன்னை வணங்குகிறேன். நீ எதற்கும் ஆகாத உதவாக்கரை, பொய்த்தெய்வம் என்று என் நெஞ்சு எரிய வாய்சொற்களால் உன்னை வையாமல் இருக்க வேண்டுமானால் மலர்ந்த கொத்துக்கொத்தான பூக்களால் கணை தொடுத்து கோவிந்தன் பெயரை எழுதி வியப்பை அளிக்கக் கூடிய வேங்கட வாணன் என்ற விளக்கைச் சென்றடையுமாறு எய்வாயாக.

இங்கு ஆண்டாள் சாபம் அளிப்பேன் என்று மன்மதனைப் பயமுறுத்துகிறார். பூமிப் பிராட்டியின் சாபம் என்பதை அவன் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. வேங்கடவனை உலகிற்கே ஒளி தரும் விளக்காக ஆண்டாள் இங்கு உருவகப்படுத்துகிறார். ‘வித்தகன் வேங்கடவாணன் என்னும் விளக்கு’ என்ற சொற்றொடர் நம் மொழியின் அழகிற்கு இலக்கணம்.

சுவரில் புராண! நின்  பேர் எழுதிச்சுறவநற் கொடிக்களும் துரங்கங்களும்
கவரிப் பிணாக்களும் கருப்பு வில்லும்
 காட்டித் தந்தேன் கன்டாய் காம தேவா!
அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
 ஆதரித்து எழுந்த என் தடமுலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
 தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே

புராணங்களில் சொல்லப்பட்டவனே! காமதேவனே! சுவரில் உன் பெயர் எழுதி உன் சுறாமீன் கொடிகள் உன் குதிரைகள், உனக்கு சாமரம் வீசும் பெண்கள் படங்களோடு உன்னுடைய கரும்பு வில்லையும் வரைந்திருக்கிறேன். பிள்ளைப் பிராயத்திலிருந்து (எனக்கு மென் முலைகள் எழுந்த காலத்திலிருந்து) முலைகள் பெத்தம் பெரிதான இன்றுவரை அவற்றின் உரிமையாளன் துவராகையின் நாயகனுக்கே என்று சபதம் எடுத்துக் கொண்டு தொழுது கொண்டிருக்கிறேன். விரைவாக என்னை அவனுக்கு ஆக்க வேண்டும்.

வேங்கடவனும் அவனே கண்ணனும் அவனே என்று ஆண்டாள் திரும்பத் திரும்பச் சொல்கிறார். பெரியவாச்சான் பிள்ளை ஆண்டாள் தொழுவது மன்மதனை அல்ல தன் மார்பகங்களையே என்று பொருள் கொள்கிறார். அவனுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டதை வணங்குவதில் என்ன தவறு? அவனுக்கு சமர்ப்பித்த பூக்களை தலைமேல் ஏற்றுக் கொள்வதில்லையா?

வானிடை வாழும் அவ்வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் திரிவதோர் நரி புகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கென்று உன்னித்து எழுந்த என் தடமுலைகள்
மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே!

காமதேவா! வானத்தில் இருக்கும் தேவர்களுக்கு அந்தணர்கள் வேள்வியில் கொடுத்த படையலை (ஹவிஸ்) காட்டில் திரியும் நரி ஒன்று உள்ளே புகுந்து அருகில் வந்து முகர்ந்து பார்ப்பது போலத்தான் தன் திருமேனியில் (கரங்களில்) சக்கரம் சங்கைத் தரித்திருக்கும் உத்தமருக்க்காகவே திமிர்ந்து எழுந்திருக்கும் என் முலைகள் மனிதர்களில் ஒருவருக்கு என்ற பேச்சு வருவது. அப்படி வந்தால் நான் வாழ மாட்டேன்.

யாருக்கு உரித்தானவை யாருக்கு அளிக்கப்படுகின்றன என்ற கோபம் இலக்கியத்தில் பல தடவைகள் எழுந்திருக்கிறது. ஏசு Do not cast your pearls before swine என்று சொல்வதோடு Do not give dogs what is sacred என்றும் சொல்லியிருக்கிறார். “சிங்கக் குருளைக்கு இடு தீம் சுவை ஊனை, நாயின் வெங் கண் சிறு குட்டனை ஊட்ட விரும்பினாளே!” என்று கம்பனின் இலக்குவன் சீறுகிறான். சிங்கக்குட்டிக் கொடுக்க வேண்டிய இனிய மாமிசத்தை நாயின் குட்டிக்கு வழங்க விரும்புகிறாளே என்று கைகேயியை அவன் கடிந்து கொள்கிறான். ஆண்டாள் இப்பாடலில் பெண்ணின் இயலாமையை சொல்கிறார். பெண்ணாய் பிறந்து விட்டேன். எனக்கு திருமணம் செய்ய வைக்க தந்தை நிச்சயம் முயல்வார். அது நடந்தால் நான் உயிர் வாழ மாட்டேன் என்கிறார். ‘பெண் பிறந்தேன் பட்டபிழை’ என்று சூர்ப்பனகையே கதறுகிறாள் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ‘பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால் மிகப் பீழை இருக்குதடி’ என்று பாரதி பாடவில்லையா?

2 thoughts on “முதல் திருமொழி – 1”

  1. /அதாவது வைணவகுலத் தலைவரான (ஆண்டாளின் தந்தை என்று அறியப்படுபவரான) நம்மாழ்வாரே/

    Typo, sir?

    Like

    1. இல்லை. எல்லா ஆழ்வார்களும் ஆண்டளுக்குத் தந்தைகள். எனவே நம்மாழ்வாரும் தந்தை. அவர் வைணவகுலத் தலைவர்.

      Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s