திருப்பாவையில் பாவை நோன்பு நோற்பதாக சில ஆய்க்குலத்துச் சிறுமியர் உறுதி கொண்டு இறைவனை முதலில் வணங்கி அவன் புகழ் பாடுகிறார்கள். பின்னால் கூட்டமாகச் சேர்ந்து தோழிகளை எழுப்புகிறார்கள். தோழிகளுடன் நந்தகோபன், யசோதை, நப்பின்னை போன்றவர்களை எழுப்புகிறார்கள். அவர்கள் எழுந்தபின் கண்ணனை எழுப்புகிறார்கள். எழுந்த கண்ணனிடம் எங்களுக்கு பறை கொடு மற்றைய சன்மானங்களைக் கொடு என்கிறார்கள். அவன் கொடுத்ததும் (அல்லது கொடுக்கத் துவங்கியதும்) எங்களுக்கு பறை மட்டும் போதாது. உன்னோடு எப்போது உறவு கொண்டிருக்க வேண்டும், உனக்கு எந்த கவனச்சிதறலும் இல்லாமல் சேவை செய்ய வேண்டும், உனக்கும் எங்கள் உறவு இல்லாமல் இருக்க முடியாது என்பதும் எங்களுக்குத் தெரியும் என்கிறார்கள். கடைசி பாட்டு இக் கிருஷ்ண நாடகத்தை படித்தும், கேட்டும், பாடியும் மகிழ்பவர்களுக்கு கிடைக்கும் பலன்களைக் குறிப்பிடும் பாடல் – பலசுருதிப் பாடல். இது ஆண்டாளின் மற்றும் பெரியாழ்வாரின் திருநாமங்களைத் தெரிவிப்பதால் இதற்கு திருநாமப் பாடல் என்று பெயர்.
இனி பாடல்.
வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை, அணி புதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய்.
வங்கக் கடல் என்பதை கடல் கடையும் போது தோன்றிய மந்திர மலை வங்கம் போல, அதாவது மரக்கலம் (கப்பல்) போலத் தெரிகிறதாம். அவன் மாதவன். ஏன்? கடல் கடைந்த போது அமுதோடு பிறந்த லட்சுமியை அடைந்தவன். ‘அமுதில் வரும் பெண்ணமுது’ என்பது ஆழ்வார் வாக்கு. கேசவன். பெரிய பிராட்டியான லட்சுமி பெருங்காதல் கொள்ளும்படியாக அடர்ந்த கேசம் கலைந்து முகத்தில் அலையாகப் பரவ இறைவன் கடல் கடைந்ததனால் அவன் கேசவன்.
இவர்களுக்குத் ‘திங்கட் திருமுகம்’. அவன் கதிர்மதியம் போல் முகத்தான். அக்கதிர் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கும் பேறு கிடைத்ததால் அவன் முகத்தின் ஒளி இவர்கள் முகங்களிலும் பிரதிபலிக்கிறது. சூரியனால் சந்திரன் ஒளி பெறுவது போல.
இவர்கள் இறைவனிடம் இறைஞ்சி பறை பெற்ற கதையை ஆண்டாள் நமக்கு சொல்கிறாள். அவள் கோதை. திருவில்லிப்புத்தூரின் தாமரை மலர்கள் மாலை தரித்திருக்கும் பட்டர்பிரான் என்று அழைக்கப்படும் பெரியாழ்வாரின் திருமகள்.
அவளுடைய தமிழ்மாலை மலர்மாலை அல்ல. அது மணி மாலை. ஈடற்ற கவிதை வைரங்களால், ஈடில்லா மொழியான தமிழில் இறைவனுக்குப் படைக்கப்பட்டிருக்கும் மாலை. சங்கத் தமிழ் என்றால் ஆண்டாளின் தமிழ் தனியாக அனுபவிக்க வேண்டிய தமிழ் அல்ல. சங்கமாக, கூட்டமாக சேர்ந்து ஒருவரை ஒருவர் கலந்து வியந்து அனுபவிக்க வேண்டிய தமிழ். அவள் பாடிய பாடலைப் பாடினால், குறிப்பாக மார்கழி மாதம் தவறாமல் பாடியவர்கள் நான்கு மலைகளைப் போன்ற தோள்களை உடைய, உலகின் எல்லாச் செல்வங்களுக்கு அதிபதியான சிவந்த கண்களை உடைய திருமாலை அருளைப் பெற்று இன்பமாக இருப்பார்கள்.
ஆண்டாளின் அழகிய பாடல்களில் கண்ணனின் பெயரை எடுத்து விட்டு இந்தியாவின் பெயரைப் போடுங்கள். தேசத்தை நேசிப்பவர்கள் தேசத்தின் புகழ் பாடுகிறார்கள். தூங்குபவர்களை தூங்காதே வேலை இருக்கிறது என்று எழுப்புகிறார்கள். நாட்டின் தலைவர்களை எழுப்புகிறார்கள். நாட்டிடம் எங்களுக்கு தாற்காலிக நன்மை போதாது. உனக்கும் எங்களுக்கும் இடையே இருக்கும் உறவு பிரிக்க முடியாதது, அதே போன்று மக்களாகிய நாங்கள் இல்லையென்றால் நீ இல்லை என்கிறார்கள். உன்னிடம் குறையில்லை என்று எங்களுக்குத் தெரியும். உன் செல்வங்களை எங்களுக்கும் எத்தடையும் இல்லாமல் தா என்று வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
இந்தியாவிற்குப் பதிலாக, மனிதகுலம், இயற்கை, உலகம், சுற்றுச்சூழல் போன்ற எந்தக் கருத்திற்கும் உருவம் அளித்து கண்ணனுக்குப் பதிலாகப் பொருத்திப் பாருங்கள். ஆண்டாளின் பாசுரங்களில் உள்ள பேரண்டங்களையும் அரவணைக்கும் தன்மை (universality) புரியும். எதோடும் யாரோடும் உறவு கொள்ள நினைத்தாலும் அவ்வுறவு ஒன்றுக்கொன்று இயைந்து இயங்கினால்தான் அது அடுத்த நிலையை அடையும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன் என்பதை ஆண்டாளின் பாடல்கள் மிகத் திறமையாக ஒரு கவிஞனின் பரந்துபட்ட பார்வையோடு சொல்கின்றன. ஆண்டாள் மறுபடியும் மறுபடியும் பிறவி எடுக்க நினைக்கிறாள். அவன் இருக்குமிடமெல்லாம் பிறந்து அவனுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்துகிறாள். மனிதகுலத்திற்கும், இயற்கைக்கும், உலகத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் தொண்டு செய்ய நினைப்பவர்களுக்கு ஆண்டாளுக்கு இறைவன் மீது இருந்த பிரியமுடியாத பிடிப்பு அவர்கள் உறவு கொள்ள நினைப்பற்றின் மீது இருந்தால் போதும்.