ஆண்டாள் தமிழின் முக்கியமான முதல் கவிஞர் அல்லர். சங்க இலக்கியத்தின் பல பெண் கவிஞர்களை – குறிப்பாக மனிதனை ‘எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே’ என்று பாடிய அவ்வையாரை – நமக்குத் தெரியும். பக்தி இலக்கியத்திலும் ஆண்டாளுக்கு முன்னோடியாக காரைக்கால் அம்மையார் இருந்திருக்கிறார். ஆண்டாள் ‘சிற்றம் சிறுகாலே’ பாசுரத்தில் சொல்வதையே ஏறத்தாழ அவரும் சொல்லியிருக்கிறார். ‘அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்/அவர்க்கேநாம் அன்பாவ தல்லால்- பவர்ச்சடைமேல்/ பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்/ காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்’, என்று அவருடைய அற்புதத் திருவந்தாதி பேசுகிறது. பிறவிகளெல்லாம் சிவபெருமானுக்கே ‘உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்’ என்று அற்புதத் திருவந்தாதியும் சொல்கிறது. ஆனால் சிவன் பிறவா யாக்கைப் பெரியோன். அவனுடைய விளையாடல்களெல்லாம் கண்ணனுடைய விளையாடல்களும் ராமனுடைய செயல்களும் ஏற்படுத்தும் நெருக்கத்தைப் போல ஏற்படுத்துவதில்லை என்பது உண்மை. திருமாலின் ராமன் மற்றும் கிருஷ்ண அவதாரக்கதைகளும் மக்களைச் சென்றடைந்ததைப் போல அவை சென்றடையவில்லை. கண்ணன் சிறுவனாக, காதலனாக, ஆசிரியனாக, கூட நின்று போர் புரிபவனாக, நண்பனுக்காகத் தூது செல்பவனாக நமது கதைகளில் காட்டப்படுகிறான். அதே போல இராமனும் மனிதர்களுக்காகவும், மிருகங்களுக்காகவும், மனைவிக்காகவும் போர் புரிகிறான். ஓர் அரசனாக மக்களை வழி நடத்துகிறான்.
ஆண்டாளின் கவிதை மிகவும் உயரியது என்பது அவர் திருப்பாவையை எழுதிய நாள் முதலாகவே தமிழையும் வைணவத்தையும் அறிந்தவர்கள் உணர்ந்து விட்டனர். இன்றும் மார்கழி மாதத்தில் திருப்பதி கோவிலில் சுப்ரபாதத்திற்குப் பதிலாக திருப்பாவைதான் பெருமாளை பள்ளி எழச் செய்யப் பாடப்படுகிறது.
இங்கு நான் என் வாழ்வில் நிகழந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். நான் அதைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன்.
பதினைந்து வருடங்களுக்கு முன்னால் நான் பாலிடானா சென்றிருந்தேன். குஜராத் பாவ்நகர் மாவட்டத்தில் மலை மேல் இருக்கும் ஜைனக் கோவில்களின் தலம். 4000 படிகள் ஏற வேண்டும். ஏறினால் உச்சியில் 800 பெரிய சிறிய கோவில்கள். ஏறும் போதும் கோவிலுக்குள்ளும் உணவோ பச்சைத் தண்ணீரோ குடிக்கக் கூடாது.
என்னை அழைத்துச் சென்றவர் ஒரு அதிகாரி. தமிழ் சுமாராகப் பேசுவார். கூடவே தெலுங்குக்காரர் ஒருவரும் வந்திருந்தார். அதிகம் பேசாதவர். ஆனால் உச்சியை அடைந்ததும் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்.
‘சார், கோதா தெரியுமா?”
“எந்தக் கோதா?”
“ஆமுக்த மால்யதா கோதா.”
“ஓ, ஆண்டாளா? தெரியும்”.
“திருப்பாவை தெரியுமா?”
“தெரியும்.”
“சார், எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். இந்தச் ‘சிற்றம் சிறுகாலே’ பாடலை நான் தினமும் கண்ணன் முன்னால் சொல்லிக் கொண்டிருக்கிறேன். சமஸ்கிருத மந்திரம் சொல்வது மாதிரி. பாட்டின் பொருள் தெரியாது. உங்களுக்குத் தெரியுமா? தெரிந்தால் எனக்குச் சொல்லுங்கள். பெரிய உதவியாக இருக்கும்.”
எனக்குள்ளேயே நான் நினைத்துச் சிரித்துக் கொண்டேன். நம்பிக்கை இல்லாத ஒருவன் தமிழ் பக்திப் பாடலின் பொருளை தமிழ்த் தெரியாத, நம்பிக்கையில் ஊறியிருக்கும் ஒருவருக்கு, ஜைனக் கோவில்களின் மத்தியில் நின்று கொண்டு சொல்வது இந்தியாவில் மட்டுமே நடக்கும்.
பாடலின் பொருளைச் சிறிது நேரம் விளக்கிச் சொன்னேன். ஆண்டாளைப் பற்றியும் சொன்னேன். எதுவும் பேசாமல் கேட்டுக் கொண்டார். கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர்.
இறங்கி வரும் போது, நாங்கள் இருவரும் ஒரு வார்த்தை கூட பரிமாறிக் கொள்ளவில்லை.
இனி பாடல்.
சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்;
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நா மாட்செய்வோம்;
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.
“புலராக்காலையில் உன்னை வந்து தொழுகின்றோம். எங்கள் மத்தியில் பிறந்து நாங்கள் செய்யும் எளிய தொண்டுகளை ஏற்றுக் கொண்டாய். மிகவும் மகிழ்ச்சி. ஆனால் நாங்கள் இதோடு விட்டு விட மாட்டோம். இன்று எடுக்கும் எல்லாப் பிறவிகளிலும் உனக்கு மிகவும் அணுக்கமாக இருப்போம். உன் தொண்டையே செய்து வாழ்வோம். வேறு ஏதும் செய்யாமல் இருக்க நீதான் அருள வேண்டும். “
இப்பாடலுக்கு உரை எழுதுகையில் அண்ணங்கராச்சாரியார் கூறுகிறார்: “ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்றிருக்கு மிருப்பைத் தவிர்ந்து இவ்விடைக்குலத்தில் நீ வந்து பிறந்ததற்கு ஒரு பயன் வேண்டாவோ? எங்களிடத்தில் நீ கைங்கரியம் கொள்ளாதொழிவாயாகில் உன்னுடைய இப்பிறவி பயனற்றதாமான்றோ? “
முந்திய பாடலில் நீ எங்கள் குலத்தில் பிறந்ததால் ‘புண்ணியம் உடையோம்’ என்று சொன்னவள் இந்தப் பாடலில் உனக்கும் இப்பிறவியால் பயன்தான் என்கிறாள்!
பெற்றம் மேய்த்துண்ணும் – இதற்கு ஆறாயிரப்படி தரும் வியாக்கியானம் மகத்தானது. ‘நீ பிறப்பிலியாய் பிறவாதார் நடுவேயிருந்து பிறவியற்றார்க்கு முகம் கொடுத்து நிலத்தில் வந்தோமா? (அதாவது அவன் ஆட்சி நடக்கும் பரமபதத்திற்கு) பிறவிக்கு போரப் பயப்பட்டு உன்னையே கால்கட்டுவாருள்ள விடத்தே வந்தோமா? (அதாவது அவன் அறிதுயில் கொள்ளும் பாற்கடலுக்கு) பிறாவா நிற்க செய்தே ஆசார ப்ராதானர் புகுந்து நியமிக்கும் ராஜ குலத்தில் பிறவியில் வந்தோமா? (அதாவது அரச குலத்தவர் செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்யும் ராஜகுலத்துப் (ராமனின் வம்சம்) பிறவியில் வந்தோமா? வாலால் உழக்குக்குப் பசு மேய்த்து வந்து வயிறு வளர்க்கும் எங்கள் குலத்திலே நீ என் செய்யப்பிறந்தாய் என்று விசாரிக்கலாகாதோ?’
‘வாலால் உழக்கிற்கு’ என்றால் ஆயர்களுக்கு எண்ணத் தெரியாது என்ற பொருள். அவர்கள் ஒரு பசுவை மேய்த்தால் ஒரு உழக்கு கூலி என்று வாங்கிக் கொள்வார்களாம். மொத்தம் எத்தனை பசுக்களை மேய்த்தோம் என்ற கணக்கிடத் தெரியாததால், மேய்ந்த ஒவ்வொரு பசுவின் வாலைப் பிடித்து ஒவ்வொரு ஆழாக்காகக் கூலி வாங்குவார்களாம்.
நாங்கள் பறையென்று சொன்னால் அதன் உட்பொருள் வேறு என்பது உனக்குப் புரியாதா? காதலி காதலன் வீட்டிற்குச் சென்று தண்ணீர் தாகமாக இருக்கிறது என்று கேட்டால் தண்ணீர் கொடுத்து அவன் அனுப்பித்து விடுவானா என்று ஆறாயிரப்படி கேட்கிறது.
பாடலில் பிறவி வேண்டாம் என்று ஆண்டாள் சொல்லவில்லை. ‘மனித்தபிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே’ என்று அப்பர்பிரான் சொன்னதை ஆண்டாளும் சொல்கிறார். மறுபடியும் மறுபடியும் பிறக்க வேண்டும் என்கிறார். ஆனால் எல்லாப் பிறவிகளிலும் உன்னையே நினைத்து உனக்குத் தொண்டு செய்ய வேண்டும். எப்படிப்பட்ட தொண்டு? எளிய தொண்டு. முரட்டுத் தொண்டல்ல. தடித்தடிப் புத்தகங்களைப் படித்து அவற்றிற்கு வியாக்கியானம் செய்யும் தொண்டல்ல. சிறிய தொண்டு. குற்றேவல்.
ஆண்டாள் தனக்கு வித்யா கர்வம் போன்ற படிப்பாளிகளின் கர்வம் வந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். மற்றைக் காமங்கள் எனக்கு மறுபிறவிகளில் வந்தாலும் அதை மாற்றி விடு. என்னை எளிய பக்தையாகவே ஏற்றுக் கொள் என்கிறார்.