ஆழ்வார்கள் காலத்தில் தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் உறவு எவ்வாறு இருந்தது? ஆழ்வார்கள் வடமொழி வேதங்களிலும் உபநிடதங்களிலும் சொல்லப்படும் இறைவன்தான் தமிழ்ப் பாசுரங்களின் இறைவன் என்பதில் மிகத் தெளிவாக இருந்தார்கள்.
நம்மாழ்வார் சொல்கிறார்: ‘இல்லை நுணுக்கங்க ளேயிதனில் பிறிதென்னும்வண்ணம் தொல்லைநன் னூலில் சொன்ன வுருவும் அருவும்நியே’. அதாவது ‘மிகப் பழமையான வேதங்களில் உன்னை விட நுணுக்கமானது வேறு ஏதும் இல்லை என்று சொல்லப்பட்டிருக்கின்றது. அவை சொன்ன உருவமும் அருவமும் நீதான்’.
ஆனால் நம்மாழ்வார் நேதி, நேதி என்று உபநிடங்களில் சொல்லப்படும் கடவுளாக அவனைக் காணவில்லை. அடுத்த இரு வரிகளில் ‘அல்லித் துழாயலங் கலணி மார்ப.என் அச்சுதனே, வல்லதோர் வண்ணம்சொன்னாலதுவேயுனக் காம்வண்ணமே.’ என்கிறார். ‘மார்பில் துளசியையும் தாமரையையும் அணிந்தவனே, நாங்கள் உன்னை எதாகச் சொன்னாலும் நீ அதுதான்’. அவன் மொழிக்கும் மனித எண்ணங்களுக்கும் அப்பாற்பட்டவன் அல்ல. எனவே தமிழ் மொழி அவனுக்கு அன்னியமாக இருக்க வாய்ப்பே இல்லை. எந்த மொழியும் அவனுக்கு அன்னியமானதல்ல.
ஆழ்வார்கள் பாடல்களை பிரபந்தமாக ஒன்று சேர்த்தவர்கள் அவை தமிழ் வேதம் என்பதிலும் தெளிவாக இருந்தார்கள். திராவிட வேதம், திராவிட உபநிடதங்கள் என்று பாசுரங்கள் அழைக்கப்பட்டன. ஆனால் வேதங்களை விட இறைவனுக்கு தமிழ்ப் பாசுரங்களே உகந்தது என்று வைணவர்கள் நம்பினார்கள். ஆழ்வார்கள் சொன்னவற்றை பின்னால் வந்த வைணவப் பெரியார்கள் இவ்வாறு விளக்கினார்கள்: கீதை காட்டிய வழிகளான பக்தி, ஞான, கர்ம மார்க்கங்கள் இறைவனை அடையப் போதுமானதல்ல. பிரபத்திதான் – அதாவது முழு சரணாகதிதான்- முழுமையான, ஒரே வழி. அது ஒன்றுதான் அவனிடம் பக்தர்களைக் கொண்டு சேர்க்கும். அதற்கு நீ உயர்ந்த சாதியில் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. பெரிய படிப்புப் படித்தவனாக இருக்க வேண்டியதில்லை. மாறாக அவை தடையாக இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. கீதையில் சொல்லபடுவது இறைவனுக்கும் அவனை அடைய விரும்புபவனுக்கும் இடையே இருக்கும் ஒருவருக்கு ஒருவர் உறவு. ஆனால் ஆழ்வார்கள் கூட்டமாகவும் அவனைத் தேடலாம் என்கிறார்கள். தொண்டக்குலத்தைக் குறிப்பிடுகிறார்கள். கடல்வண்ணனை வழிபடுபவர்கள் கூட்டத்தை குறிப்பிடுகிறார்கள் ஆண்டாளின் ஆயர் குலச் சிறுமிகள் தனியாக இறைவனை அடைய விரும்பவில்லை. அவர்கள் குழாமாகத்தான் செல்கிறார்கள். அவர்கள் படிக்காதவர்கள். ஆனால் எங்களுடன் மட்டும்தான் அவன் நெருக்கமாக இருப்பான் என்ற முழு நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது.
இனி பாடல்.
கறவைகள் பின்சென்று கானஞ் சேர்ந்துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத் துன்றன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றுமில்லாத கோவிந்தா! உன்றன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினாலுன்றன்னைச்
சிறுபேரழைத்தனவுஞ் சீறியருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பவாய்!
கறவைகள் பின் சென்று கானஞ் சேர்ந்துண்போம் – உயர்சாதியினர்கள் குருக்கள் பின்னால் சென்று அறிவைத் தேடுவார்கள். ஆனால் நாங்கள் பசுக்களின் பின் சென்று அவை தேடி உண்பதைப் போல நாங்களும் தேடி கிடைத்ததை உண்போம். நாங்கள் திருப்பதி, திருவரங்கம் போன்ற கோவில்களுக்குச் செல்வதில்லை. நாங்கள் செல்வது காடு. அங்கே குளிக்க முடியுமா, சுத்தத்துடன் கும்பிட முடியுமா?
அறிவொன்றுமில்லாத – அதாவது எது சரி, எது தவறு என்பதை தேர்ந்தெடுக்கக் கூடிய அறிவு இல்லாதவர்கள். எது பாவம் எது புண்ணியம் என்பதைப் புரிந்து கொள்ளக்கூடிய அறிவு இல்லாதவர்கள். உபாய சூன்யம்தான் எங்கள் சொத்து. வழி என்ன என்பதை அறவே அறியாதவர்கள். இதையே தான் நம்மாழ்வார் ‘நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவுமிலேன்’ என்று சொல்கிறார். அறிவொன்றில்லாமல் இருப்பதே அவனுக்கு உகந்தது.
ஆனால் நாங்கள் செய்த புண்ணியம் எங்கள் குலத்தில் நீ வந்து பிறந்திருக்கிறாய். அது மட்டுமல்ல. நீ பிறந்ததால் எங்கள் குலம் முழுவதும் வீடு பெறும். உய்யும். ‘உய்ய இவ்வாயர் குலத்தினில் தோன்றிய ஒண்சுடர் ஆயர் கொழுந்தே’ என்பது பெரியாழ்வார் வாக்கு. ‘நீ சூக்ருதமாய் நின்று இக்குலத்தை எடுக்கைக்கு ஆண் பெண் சட்டி பானை என்றுண்டோ’ என்கிறது ஆறாயிரப்படி. உன்னுடைய விருப்பம். நீஎங்கள் குலத்தை தேர்ந்தெடுத்தாய்.
குறைவொன்றுமில்லாத கோவிந்தா! – உலகின் எல்லாக் குறைகளும் எங்களிடம் இருக்கின்றன. ஆனால் உலகில் நிறையனைத்தும் உன்னிடம் இருக்கின்றன. குறைக்கு அங்கு இடமேது?
உன்றன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது – பாட்டின் அச்சாணியும் வைணவத் தத்துவத்தின் அச்சாணியும் இதுதான். உனக்கும் எங்களுக்கு இடையே உள்ள உறவை யாராலும் ஒழிக்க முடியாது. எங்களால் முடியாது. உன்னாலும் நிச்சயம் முடியாது. உன்னையும் எங்களையும் கட்டியிருக்கும் கயிறு அறுக்க முடியாதது. ‘நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே! நீ என்னை அன்றி இலை’ என்பது திருமழிசை ஆழ்வார் வாக்கு.
அறிவின்மை, சிறுபிள்ளைத்தனம், அன்புடைமை – இம்மூன்றின் தாக்கத்தால் சொன்னவற்றை நீ பொருட்படுத்தக் கூடாது என்கிறார்கள் சிறுமிகள். ‘பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும் பத்தர் சொன்னவும் பன்னப் பெருபவோ?’என்று கம்பன் சொல்வதைப் போல.
இங்கு சிறுபேர் என்பது நாராயணன் என்ற நாமத்தை. அவனுக்கு கோவிந்தா, கோபாலா என்று அழைத்தால்தான் பிடிக்குமாம். அவைதாம் பெரும் பேர்களாம். பிராமணர்கள் பழக்கத்தில் நாங்கள் உன்னை நாராயணா என்று தவறுதலாக அழைத்து விட்டால் எங்கள் மீது சீற்றம் கொள்ளாதே என்கிறார்கள்!