திருநெல்வேலி சந்திப்பு வரதராஜப் பெருமாள் கோவில் கட்டப்பட்டு முன்னூறு வருடங்களுக்குள்தான் இருக்கும். அப்போது கோவிலுக்கு முன்னால் இருந்த சன்னிதித் தெருவில் ராயர்கள்தாம் அதிகம் இருந்தார்கள். ஆனால் ‘தின்னு கெட்டான் திருநெல்வேலி ராயன்’ என்று ஒரு பழமொழி உண்டு. அவர்கள் சாப்பிட்டே தங்கள் சொத்துக்களை அழித்து விட்டார்களாம். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ராயர்கள் வீடுகளை எல்லாம் சுமார்த்த, வைஷ்ணவ பிராமணர்கள் வாங்கி விட்டார்கள். ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் தெரு முழுவதும் வழக்கறிஞர்கள், பிராமண நிலச்சுவான்தார்கள், ஒன்றிரண்டு வீடுகளில் கோவிலில் பெருமாளுக்குச் சேவை செய்யும் அர்ச்சகர்கள். ஆனால் கோவிலில் வேலை செய்பவர்களில் அனைவருக்கும் தெரிந்த பெயர் கோவிந்த ஐயங்கார். அவர் சன்னிதித் தெருவில் இல்லை. கோவிலை ஒட்டிய வீடு ஒன்றில் இருந்தார். அவர்தான் மடப்பள்ளியைக் கவனித்துக் கொண்டிருந்தார். கோவிந்த ஐயங்காருக்கு காது சுத்தமாகக் கேட்காது. அவரை எல்லோரும் செவிட்டு ஐயங்கார் என்று தான் அழைத்தார்கள். ‘கோவிந்த ஐயங்காரின் புளியோதரையும், அக்கார அடிசிலும் வைகுண்டத்தில் பரிமாற வேண்டியது. நம் பாக்கியம் அவர் நமக்குக் கிடைத்து விட்டார்’ என்று என் தந்தை சொல்வார். காது கேட்காததால் உப்பு குறைவு, புளி குறைவு,இனிப்பு குறைவு, நெய் குறைவு என்றெல்லாம் அவரிடம் சொல்வது கடினம். ஆனால் அவர் அவ்வாறு சொல்வதற்கு வாய்ப்பைக் கொடுத்ததாக எனக்குத் தெரியவில்லை. என் மனைவிக்கும் புளியோதரை, அக்கார அடிசில் செய்வதை கற்றுக் கொடுத்தவர் அவர்தான். இன்று வரை என் குடும்பத்தில் ‘கூடாரை வெல்லும் சீர்’ பாட்டு வரும் நாளில் கோவிந்த ஐயங்காரை நினைக்காமல் இருக்க முடியாது. அவருக்கு கூடாரே, எதிரிகளே கிடையாது. வாழ்நாள் முழுவதும் பக்தர்களுக்குத் தொண்டு செய்து காலத்தைக் கழித்த கோவிந்தன் அவர்.
ஆண்டாள் புளியோதரைப் பற்றிப் பேசியிருக்கிறாரா? ‘கண்ணன் என்னும் கருந்தெய்வம்’ (நாச்சியார் திருமொழி) பாடலில் ‘புண்ணில் புளிப்பெய்தார் போல” என்று அவர் சொல்கிறார். ‘நீங்கள் பெருமாள் கோவில் புளியோதரைப் பற்றிப் பேசி என்னை துன்பப்பட வைக்காதீர்கள். அது அவனோடு சேர்ந்து உண்ணக் கூடிய பிரசாதம்.’ என்று பொருள் கொள்ளலாம் என்று என் தந்தை சொல்வார்.
இனி பாடல்!
கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே
தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம்அணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!
முன்னால் வையத்து வாழ்வீர்கள் பாடலில் நெய்யுண்ணோம் பாலுண்ணோம், மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் என்று சிறுமியர்கள் சபதம் எடுத்துக் கொண்டார்கள். இந்தப்பாடலில் அவர்கள் கேட்டவையெல்லாம் கிடைத்து விட்டன என்ற மகிழ்ச்சியில் பாடுகிறார்கள்.
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா – எல்லோரையும் வெல்லுவது குணத்தாலே. கூடுவாரைச் சீலத்தால் வெல்லும். கூடாதாரை சௌரியத்தாலே (வீரத்தாலே) வெல்லும். சௌரியம் அம்பிற்கு இலக்காகும். சீலம் அழகிற்கு இலக்காகும் என்று சொல்லும் ஆறாயிரப்படி ‘அம்பிற்கு இலக்கானார்க்கு மருந்திட்டு ஆற்றலாம்’ என்று சொல்கிறது. எல்லோருக்கும் இறைவன் வழி கொடுப்பான். அவனை எதிரியாகக் கருதுவர்களுக்குக் கூட அருமருந்தாவான் என்று பொருள். கோவிந்தன் பசுக்களைப் பராமரிப்பது போல இறைவன் பக்தர்களைப் பராமரிப்பான். கன்றுகளை அவன் மிகவும் கவனமாக, கூடுதலாகப் பார்த்துக் கொள்வான். அதே போல அவனடிக்கு வரும் அறியாத சிறுமிகளை அவன் எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வான்.
சிறுமியருக்குக் கிடைத்த பரிசு கண்ணன். அவர்களிடம் அவன் வருவான் என்று ஊர் எதிர்பார்க்கவில்லை. இப்போது அவன் முந்தைய பாடலில் சொன்னது போல, அழகிய விளக்கு, அரையர்கள் பாட்டு, கொடி, மேற்கட்டி போன்றவையோடு பறையையும் பரிசாக வழங்கி விட்டான். கூடவே கோவிந்தனாக இருந்து அவர்களைப் பார்த்துக் கொள்கிறான். ஊரே வியப்பில் எங்களைப் புகழ்கிறது என்று அவர்கள் சொல்கிறார்கள்.
சூடகமே, தோள்வளையே, தோடே செவிப் பூவே பாடகமே -அவர்கள் அணிந்து கொள்ளும் நகைகள் இவை. சூடகம் என்றால் கையில் அணியும் வளை. செவிப்பூ என்றால் கர்ணபுஷ்பம் என்று அழைக்கப்படும் ஆபரணம். காதில் இருந்து தொங்குவதாக இருக்கலாம். பாடகம் என்றால் பாத கடகம்- சிலம்பு.
நகைகள் அணிந்த பின்னர் அழகான ஆடை. இவற்றை இவர்களுக்கும் மிகுந்த பரிவோடு அணிவிப்பது கண்ணனும் பிராட்டியான நப்பின்னையும் தான் என்று உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். சிறுமிகள் சரியாக அணியமாட்டார்கள் என்ற கவலையாம் அவர்களுக்கு.
பின்னால் விருந்து. பாற் சோறு, முழுக்க நெய் மிதக்கும் சோறு கையில் எடுத்தால் முழங்கை வரையும் நெய் வழிகிறதாம். இவ்வளவு நெய் இருந்தால் எப்படிச் சாப்பிட முடியும், திகட்டி விடாதா என்று பட்டரிடம் பக்தர் ஒருவர் கேட்டாராம். அதற்கு பட்டர் ‘அவர்கள் சாப்பிட்டார்கள் என்று யார் சொன்னார்கள்?’ என்றாராம். கண்ணனைப் பார்த்த மகிழ்ச்சியில் அவர்கள் தங்களை மறந்து விட்டார்கள். நெய் வழிகிறது கூட அவர்களுக்குத் தெரியவில்லை. மேலும் ஆண்டாள் அவர்கள் ‘உண்டார்கள்’ என்று பாட்டில் எங்கும் சொல்லவில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
கூடாரை முதல் வரியில் சுட்டிக் காட்டும் பாடல் கூடியிருந்து குளிர்ந்தோம் என்ற நிறைவோடு முடிகிறது. கண்ணனை வழிபடுபவர்கள் சேர்ந்து இருந்தாலே பசி இருக்காது. பிரிவின் வெப்பம் இருக்காது.
இன்னொரு விதமாகப் பார்க்கப் போனால், எனக்கு மிகவும் பிடித்த காட்சி பெண் குழந்தைள் சேர்ந்து உணவு உண்பது. உலகெஙகிலும் நான் இந்தக் காட்சியை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். ஏழைகளிடையே, பணக்காரர்களிடையே, பள்ளிப் புல்வெளிகளில் மற்றும் திருமணக் கூடங்களில். கூடியிருந்து உணவு உண்பது அவர்களுக்கு எவ்வளவு மகிச்சியைத் தருகிறது என்ற உணர்வு எப்போதும் தெவிட்டாதது. ஆண்டாளின் தெவிட்டாத பாடலும் அதையே சொல்கிறது என்றும் கொள்ளலாம்.