நேற்று தமிழ் இலக்கியத்தில் கண்ணன் எவ்வாறு பேசப்படுகிறான் என்பதைப் பார்த்தோம். இன்று சமஸ்கிருத நூல்களில் கண்ணனைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
முதன்முதலாக கிருஷ்ணனின் பெயர் சாந்தோக்கிய உபநிஷதத்தில் வருகிறது. அவன் தேவகியின் புதல்வன் என்று குறிப்பிடப்படுகிறான். பாணினியின் அஷ்டத்யாயி வாசுதேவனும் கிருஷ்ணனும் வழிபடப்படுவதைச் சொல்கிறது. பதஞ்சலி தன்னுடைய அஷ்டத்யாயி உரையில் கம்சனைக் கண்ணன் கொன்ற கதையைக் குறிப்பிடுகிறார். மகாபாரதத்தின் கண்ணனையும், கீதை உபதேசம் செய்த கிருஷ்ணனையும் நமக்கு நன்றாகத் தெரியும். மகாபாரத்திற்குப் பின்னால் எழுதப்பட்ட விஷ்ணு புராணம் போன்ற புராணங்களில் கண்ணனின் கதைகள பேசப்படுகின்றன.
பழங்குடி மக்களின் கடவுளான கிருஷ்ணன் இந்துக்கள் அனைவரும் வழிபடும் கிருஷ்ணனாக, விஷ்ணுவின் அவதாரமாக மாறினான் என்று சில வல்லுனர்கள் கருதுகிறார்கள். நாம் அந்த விவாதத்திற்குள் போக வேண்டாம். என்னைப் பொறுத்தவரை உலகில் இன்று வழிபடப்படும் எல்லாக் கடவுள்களும் ஒருகாலத்தில் பழங்குடி மக்களால் வழிபட்டவர்களாக்த்தான் இருந்திருக்கிறர்கள்.
கண்ணன் கோபிகளோடு ராசக்கிரீடை செய்வதும் சமஸ்கிருத இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றன. மகாபாரதத்தின் இணை நூலாக அறியப்படும ஹரி வம்சத்தில் கண்ணன் கோபிகளோடு விளையாடியது சொல்லப்படுகிறது. பாசன் எழுதிய பாலசரித நாடகம் கண்ணன்-கோபிகள் விளையாட்டைப் பேசுகிறது. இளங்கோ அடிகள் மிகத் தெளிவாக பால சரிதத்தில் சொல்லப்பட்ட குரவையை ஆய்ச்சியர்கள் ஆடிக் காட்டுவதாகக் குறிப்பிடுகிறார்: ஆயர் பாடியில், எரு மன்றத்து,/மாயவனுடன் தம்முன் ஆடிய/ வால சரிதை நாடகங்களில்,/வேல் நெடுங் கண் பிஞ்ஞையோடு ஆடிய/ குரவை ஆடுதும் யாம்’ என்றாள்”
இனி பாடல்.
ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலானாகித் தான்தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!
நீ எத்தனை தடைகளையும் துன்பங்களையும் தாண்டி வந்தவன். எங்களுக்குப் பறை தருவது உனக்கு எளிதாக செயல். எங்கள் துன்பமும் பெரிய துன்பமல்ல. எளிதாக மகிழ்வாக மாறக் கூடிய துன்பம் என்று சிறுமியர்கள் சொல்கிறார்கள்.
பன்னீரண்டு மாதம் தேவகியில் வயிற்றில் இருந்தவனுக்கு (பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட – பெரியாழ்வார் திருமொழி) ஓர் இரவு கூட கம்சனின் சிறையில் இருக்க விருப்பமில்லை. நாய் வயிற்றில் நெய் சோறு தங்குமோ என்று வியாக்கியானம் கேட்கிறது. ஓர் இரவு என்றால் அது ஒப்பில்லாத இரவு. அது போன்ற இரவு முன்பும் இருந்ததில்லை பின்பும் இருந்ததில்லை. ஊழி முதல்வனைப் பெற்றதால் அவள் தனி ஒருத்தி. அவனை கம்சன் கண்படாமல் ஒளித்து வளர்த்ததால் மற்றவளும் தனி ஒருத்தி.
‘மடந்தாழும் நெஞ்சத்து கஞ்சனார் வஞ்சம் கடந்தானை’ என்று ஆய்ச்சியர் குரவையில் சொல்வதைத்தான் ஆண்டாளும் சொல்கிறார். கம்சன் அடியார்களின் வயிற்றில் நெருப்பை வைத்தவன். கண்ணனை அவன் என்ன செய்துவிடுவான என்ற நெருப்பைக் கட்டிக் கொண்டு ஆயர்பாடியில் அனைவரும் இருந்தார்கள். ஆனால் அவன் மாறாக கம்சன் வயிற்றில் நெருப்பாக மாறினான். கெடுவான் கேடு நினைப்பான் என்பது பழமொழி அல்ல. யார் அவ்வாறு மாறியவன்? நெடுமால்! விசுவ ரூபம் எடுத்தவன். உலகை அளந்தவன்.
உன்னையே யாசிக்கிறோம் (அருத்தித்து வந்தோம்) என்கிறார்கள் சிறுமிகள். எங்களுக்கு சினிமா காட்டாதே என்கிறார்கள் அவர்கள். ‘எங்களுக்கு பிறந்து காட்டவும் வேண்டா, வளர்ந்து காட்டவும் வேண்டா, கொன்று காட்டவும் வேண்டா, உன்னைக் காட்டவமையும், உன் பக்கலிலே ஒன்று வேண்டி வந்தேமல்லோம். உன்னை வேண்டி வந்தோம்’ என்று ஆறாயிரப்படி சொல்கிறது. இதையே நம்மாழ்வாரும் ‘என்னையாக்கி கொண்டனெக்க தன்னைத் தந்த’ என்று சொல்கிறார்.
நீ பெருஞ்செல்வன். திருமகளுக்குத் தகுதியான செல்வன். ஸ்ரீயப்பதியாக இருப்பதால்தான், திருமகள் கணவனான இருப்பதால்தான் நீ செல்வன் என்று அறியப்படுகிறாய் என்றும் பொருள் கொள்ளலாம். அதிகாலையில் குளிரில் சிறுமிகளான நாங்கள் வந்தோம். உன் அருள் கிடைத்தால் எங்கள் வருத்தம் தீரும். காலைக் குளிர் என்பது ஒன்றுமே இல்லை. எல்லா வருத்தங்களையும் தீர்க்க வல்லது உனக்குத் தொண்டு செய்வது.