தமிழருக்கும் கண்ணனுக்கும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் தொடர்பு இருக்கிறது.
உதாரணமாக ‘வண் புனல் தொழுநை வார் மணல் அகன்துறை/ அண்டர் மகளிர் தண் கழை உடீஇயர்/ மரம் செல மிதித்த மாஅல் போல’ என்று அகநானூறு பேசுகிறது. யமுனை (தொழுனை)க் கரையில் மரத்தழைகளை ஆய்ச்சியர் கட்டிக் கொள்ள கிளையை வளைத்து கண்ணன் (மாஅல்) கொடுத்தான் என்கிறது. இதே போல, ‘மேவார் விடுத்தந்த கூந்தற் குதிரையை/ வாய் பகுத்து இட்டு புடைத்த ஞான்று இன்னன்கொல்/ மாயோன் என்று; உட்கிற்று என்நெஞ்சு’ என்று கலித்தொகை கம்சன் அனுப்பிய குதிரை வடிவமான கேசி அசுரனைக் கொன்றதைக் குறிக்கிறது. ‘மல்லர் மறம் சாய்த்த மால் போல’ என்றும் குறிப்பிடுகிறது.
சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவை எம். எஸ் குரலில் நமக்குப் பரிச்சயமானது. அதுவும் ‘மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்/ தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து/ சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்’ என்று உலகளந்த கதையையும் இலங்கையை அழித்த கதையையும் பேசுகிறது. இதே போன்று ‘கன்று குணிலா கனி உதிர்த்த மாயவன்’ என்று வத்சாசுரனை அழித்த கதையைக் கூறுகிறது. மணிமேகலையும் ‘மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும்
ஆடிய குரவை’ என்று கண்ணன் பலராமனுடனும் நப்பின்னையுடனும் ஆடிய குரவையைப் பேசுகிறது. ஆண்டாள் இந்தப் பழந்தமிழ் மரபில் வந்தவர்.
இனி பாடல்.
அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி !
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி !
பொன்றச் சகடமுதைத்தாய் புகழ் போற்றி !
கன்று குணிலாவெறிந்தாய் கழல் போற்றி !
குன்று குடையாவெடுத்தாய் குணம் போற்றி !
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி !
என்றென்றும் சேவகமே யேத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்!
கண்ணன் சிம்மாசனத்தை நோக்கிச் செல்லும் போது அவன் வடிவழகைப் பார்த்து சிறுமிகள் அவனைப் போற்றும் பாடல் இது.
அன்று இரண்டடியால் உலகை அளந்தாய். இன்று எங்களுக்காக பல அடிகள் எடுத்து வைத்து நடக்கிறாய். ‘பிராட்டிமார் பூத்தொடுமாபோலே கூசிப் பிடிக்கும் திருவடிகளைக் கொண்டு காடுமோடையையும் அகப்பட என்கை’ என்று மூவாயிரப்படி சொல்கிறது. அதாவது பூப்போன்று பிராட்டியர் அணுகும் கால்களதாம் உலகை அளக்கும் வலிமை வாய்ந்த கால்கள். இதைத்தான் சிலப்பதிகாரமும் மூவுலகும் ஈரடியாய் தாவிய அடிகள்தாம் சிவக்க சிவக்க காட்டிற்கு ராமாவதாரத்தில் நடந்தன என்று சொல்கிறது. ஆண்டாளின் தந்தை பெரியாழ்வார் உன் செவ்வடி செவ்வித் திருக்காப்பு என்று பாடியது போல சிறுமியர் அவன் அடி போற்றுகிறார்கள்.
தென் இலங்கை செற்றாய் என்று பாடுவதை வியாக்கியானம் இவ்வாறு விளக்குகிறது. ‘அழகுக்கு இலக்காகாதவரை அம்பிற்கு இலக்காக்கினபடி’. எல்லோரும் எல்லாமும் அவனுக்கு இலக்குதான். இன்றில்லையெனில் நாளைக்கு.
பொன்றச் சகடம் உதைத்தாய் – அவன் புகழ் என்ன? குழந்தையாக இருக்கும் போதே யார் உதவியும் இல்லாமல் சகடாசுரனை காலால் உதைத்து அழித்தாய். இராமனுக்கு கையில் வில்லால் ஏற்பட்ட தழும்பு என்றால் கண்ணனுக்கு காலில் தழும்பு. இராமனுக்கு வீரத் தழும்பு அவன் பெரியவனான பின்புதான் ஏற்பட்டது. கண்ணனின் தழும்பு அவன் பால்மணம் மாறாத குழந்தையாய் இருக்கும் போதே ஏற்பட்டு விட்டது. அதுதான் அவன் புகழ்.
கன்று குணிலா எறிந்தாய் – விளா மரமாக நின்ற அசுரனை கன்றாக வந்த அசுரனை வைத்து அழித்த செயல். எதிரியை எதிரியால் அழித்தல்.
குன்று குடையாய் எடுத்தாய் – ஆயர், ஆய்ச்சியர், கால்நடைகளை காப்பாற்ற ஏழு நாட்கள் கோவர்த்தன மலையைக் குடையாய்ப் பிடித்து நின்ற செய்கை. ஏன் அவன் குணத்தைப் போற்றுகிறார்கள்? இந்திரனுக்கு படைத்த உணவை தான் உண்ட விளையாட்டுக் குணத்தால் விளைந்தது பேய் மழை. ஆனால் இவனும் கோபப்பட்டிருந்தால் ஒரு நொடியில் இந்திரன் தலையை அறுத்திருக்க முடியும். ஆனால் ‘அவன் பசியினால் செய்த செயல்’ என்று நினைத்து அவனை மன்னித்து பேரருள் காட்டிய குணம்.
பகை கெடுக்கும் வேல் – ராமனுக்கு வில் போல ஆயர்களுக்கு வேல். நந்தகோபனை ஆண்டாள் கூர்வேல் கொடுந்தொழிலன் என்று முதற்பாட்டிலேயே குறிப்ப்பிடுகிறார். ‘வேலைப் பிடித்தென்னைமார்கள்’ என்று நாச்சியார் திருமொழியும் சொல்கிறது. என் தந்தை ‘நின்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி’ என்று சொல்வது முருகப் பெருமானாகவும் அவன்தான் உருவெடுத்திருக்கிறான் என்பதைக் குறியிடுகிறது’ என்பார். பாரதி ‘சுற்றி நில்லாதே போ, பகையே துள்ளி வருகுது வேல்’ என்று சொன்னது ஆண்டாளின் வேலை நினைத்துத்தான் என்றும் சொல்வார்.
அன்று அடியார்களுக்காக உலகை அளந்தாய். இன்று நாங்கள் அந்த அடிகளுக்குத் தொண்டு செய்து பறை பெற வந்திருக்கிறோம் என்கிறார்கள். எப்படிப்பட்ட இன்று? நீ உறங்க, நாங்கள உறங்காத இன்று. ‘பெருமிடுக்கான விருத்தைகளெல்லாம் ( மூதாட்டிகள்) கிடந்துறங்க குளிர் பொறாத பாலைகளான (சிறுமிகளான) நாங்கள் உன்னைத் தேடி வந்த’ இன்று. இன்றாவது இரங்கு என்கிறார்கள். நிச்சயம் இரங்குவான் என்பது அவர்களுக்குத் தெரியும்.
‘அவனுக்கு என் வருகிறதோ என்று எண்ணி மங்களாசாசனம் ( ஆண்டாளின் தந்தை பெரியாழ்வாரைப் போல) பண்ணுகை இவர்களுக்கு ஸ்வரூபம். இத்தலைக்கு இரங்குகை அவனுக்கு ஸ்வரூபம் ‘ என்கிறது ஆறாயிரப்படி.
இந்தப்பாசுரம் எப்போதுமே என்னை “நடந்தகால்கள் நொந்தவோ-வை” நினைவுகொள்ளச் செய்யும்.
பகை-வேல் பாரதியார்-ஆண்டாள் ஒப்புமையை ரசித்தேன்.
அது மருகன் கை வேல். (வெற்றி வேலவன்/..சுற்றி நில்லாதே ..எதுகை)
கண்ணனுக்கு தனியாக அடுத்த stanza பாடியிருக்கார் பாரதியார்.
எப்படியும் மருகன் ‘பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்’ தான் 🙂
LikeLike