தமிழ் இலக்கியப் படைப்பாளிகளை புலியை விட சிங்கம்தான் அதிகம் கவர்ந்திருக்கிறது. ஆண்டாள் விதிவிலக்கல்ல. அவள் இவ்வொப்பற்ற பாடலில் சிங்கத்திற்காக நாலரை அடிகளை ஒதுக்கியிருக்கிறார்.
ஆண்டாள் சிங்கத்தைப் பார்த்திருக்க முடியுமா?
அவள் வாழ்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி சமீபத்தில் மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அடர்ந்த காடுகள் இருந்த/இருக்கின்ற மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சிங்கம் இருந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் புலிகளும் சிங்கங்களும் ஒரே பரப்பில் இருக்கவே முடியாது என்றும் கூறி விடலாம். சிங்கஙகளுக்கு புல்வெளிகள், ஒரு சில மரங்களே உள்ள சமவெளிகள் தேவை. புலிகள் எங்கும் சமாளிக்கும் திறன் வாய்ந்தவை என்று வல்லுனர்கள் சொல்கிறார்கள். ரஜினிகாந்த் சிங்கம் சிங்கிளாகத்தான் வரும் என்று சொன்னாலும், அது பெரும்பாலும் குழுவாகத்தான் வரும். வேட்டையாடும். புலிதான் தனிமையில் வேட்டையாடும். தனியாகத்தான் அலையும்.
2013ல் வால்மீக் தாபர், ரொமிலா தாபர் மற்றும் யூசப் அன்சாரி The exotic Aliens என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதினார்கள். அதில் சிங்கமும் சீட்டாவும் இந்தியாவைச் சேர்ந்ததே அல்ல. அலெக்சாண்டர் வருவதற்கு சிறிது முன்னால் அவை மன்னர்களின் வளர்ப்புப் பிராணிகளாக அறிமுகப்படுத்தப் பட்டன என்று சொல்லியிருந்தார்கள்! நாம் அந்த விவாதத்திற்குள் போக வேண்டாம். ஆனால் ஆண்டாள் சிங்கத்தை அது இயற்கையாக வாழும் இடத்தில் பார்த்திருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. சிங்கத்தினால் வேட்டையாடாமல் பல நாட்கள் வாழ முடியாது. எனவே மழைகாலத்தில் அது தூங்கும் என்று சொல்வதும் அறிவியலுக்குப் பொருந்தாது என்றுதான் சொல்ல வேண்டும். Lions do not hibernate.
இனி பாடல்!
மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரிமயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமாப் போலே நீ பூவைப்பூவண்ணா! உன்
கோயில் நின்றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியமா ராய்ந்தருளேலோ ரெம்பாவாய்!
மலைக்குகையில் பெண் சிங்கத்துடன் ஒட்டி உறங்கிக் கொண்டிருந்த சிங்கம் உணர்வு பெற்று கண்களில் நெருப்புப் பொங்க விழிக்கிறது. பிடரி மயிர்கள் சிலிர்த்துக் கொண்டு எழுகின்றன. நாற்புறங்களுக்கும் சென்று உடலை உதறிக் கொண்டு, சோம்பல் முறித்துக் கொண்டு, நிமிர்ந்து, கர்ஜனை புரிந்து குகையிலிருந்து வெளியே வருகிறது. ‘வர்ஷா காலம் ராஜாக்கள் படைவீடு விட்டுப் புறப்படாதாப்போலே ஸிம்ஹமும் வர்ஷாகாலம் முழைஞ்சு விட்டுப் புறப்படாது,’ என்று வியாக்கியானம் சொல்கிறது.
கண்ணனை ‘யசோதை இளஞ்சிங்கம்’ என்று ஆண்டாள் முன்னமே குறிப்பிட்டிருக்கிறார். இங்கு அவன் மிருகராஜன் மட்டுமல்ல. அரசர்களுக்கெல்லாம் அரசன். அவன் கட்டிலுக்குக் கீழ் உலகின் அரசர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஆண்டாள் முந்தையப் பாட்டில் சொல்லியிருக்கிறார். உரையாசிரியர்கள் கண்ணனுடைய நடையை காளை போன்ற, யானை போன்ற, புலி போன்ற, சிங்கம் போன்ற “சதுர்க்கதி” (நான்கு விதமான) நடை என்று சொல்கிறார்கள்.
‘நான் எவ்வாறு புறப்பட வேண்டும்? சீதையின் கணவனான ராகவ சிம்மம் போலவா அல்லது பிரகலாதனுக்கு அருள் புரிந்த நரசிம்மம் போலவா’ என்று கண்ணன் கேட்டானாம். அதற்குப் பதிலாக இவர்கள் ‘உன்னுடைய கம்பீரத்தைக் குறிக்கும் விதமாக உன்னைச் சிங்கம் என்று அழைத்தோம். எங்களுக்கு நீ பூப்போல மென்மையானவன். உன் வண்ணம் பளபளக்கும் கருநீலக் காயாம் பூ (பூவைப்பூ) போன்றதல்லவா, சிங்கத்தின் அழுக்கான பழுப்பிற்கும் உனக்கும் என்ன தொடர்பு?’ என்கிறார்களாம்.
‘கடற்கரையில் வார்த்தை’ என்று ராமன் சொன்னதையும் ‘தேர்தட்டில் வார்த்தை என்று கிருஷ்ணன் சொன்னதையும் சொல்வார்கள். இங்கு சிம்மாசன வார்த்தை. நீ படுக்கையில் என்ன வேண்டுமானாலும் சொல்வாய். அவற்றையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள முடியாது. உன்னை நம்ப முடியாது. நீ அரசன் போல உன் சிம்மாசனத்தில் அமர்ந்து கொடுக்கும் வார்த்தை உலகறிந்ததாக இருக்கும். உன்னாலேயே மாற்ற முடியாது’ என்று சிறுமியர்கள் சொல்கிறார்கள். அது கோப்புடைய சீரிய சிம்மாசனம். பரமபதத்தில் உன் இருக்கைக்கு ஒப்பானது. பரமபத சிம்மாசனம் எட்டு கால்கள் கொண்டதாக விவரிக்கப்படுகிறது. தர்மம், அதர்மம், ஞானம், அஞ்ஞானம், வைராக்கியம், வைராக்கியமின்மை, பொருள், பொருளின்மை என்ற எட்டுகால்களைக் கொண்ட தர்மாதிபீடம்.
அங்கு உட்கார்ந்து நாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என்பதை ஆராய்ந்து எங்களுக்கு அருள்தர வேண்டும் என்கிறார்கள். கண்ணன் ஏன் ஆராய வேண்டும்? அருள்தருவான் என்பது அவர்களுக்குத் தெரியாதா? சொன்ன சொல்லைக் காப்பாற்ற மாட்டானோ என்ற அடிப்படையற்ற அச்சம்தான் அவர்களை இவ்வாறு கேட்க வைக்கிறது. சிறுமியர்தானே.
இப்பாடலை நாம் தமிழ் மொழியின் வடிவாகவும் உருவகிக்கலாம். தமிழ் மொழியின் அழகையும் மிடுக்கையும் இக்கவிதை காட்டுவது போல மிகச் சில கவிதைகளே காட்டியிருக்கின்றன.
இது தமிழ்ச் சிங்கம்.