உலகம் அழகியது. பெரியது. அது தரும் இன்பங்கள் அளவிறந்தாக இருக்கலாம். ஆனால் தனியாக ஒருவர் எவ்வளவு அனுபவித்தாலும், எவ்வளவுதான் தனக்காகச் சேர்ந்தாலும் கடைசியில் தன்னை அறிவதுதான் வாழ்க்கையின் குறிக்கோளை அடைவது. ஆண்டாளின் ‘அங்கண்மா ஞாலத்து’ தன்னை அறிந்து அகங்காரத்தை அழிப்பது பற்றிய பாடல் என்பார் என் தந்தை.
தன்னை எப்படி அறிவது? நம்மாழ்வார் சொல்கிறார்: யானே என்னை அறியகிலாதே,/ யானே என் தனதே என்று இருந்தேன்,/யானே நீ என் உடைமையும் நீயே,/ வானே ஏத்தும் எம் வானவர் ஏறே.
யானே நீ என்றால் அஹம் ப்ரம்மாஸ்மி என்று பொருள் கொள்ளக் கூடாது என்பார். ‘ஒரு பாட்டை உருவி எடுத்துப் படிப்பவர்கள் மட்டுமே அவ்வாறு பொருள் கொள்ளுவார்கள். யானே நீ என்றால் நான் உனக்கு முழு அடிமை. என்னுடையது எல்லாம் உன்னுடையது. நீ என்னுள் இருக்கிறாய். அதனால் நீ எனக்கு உடைமை என்று பொருள் கொள்ள வேண்டும்.’
‘இறையடி அடைவது மட்டும்தான் தன்னையறிதலா? மக்களுக்குத் தொண்டு செய்வது தன்னை அறிதல் இல்லையா? காந்தி தன்னையறிந்தவர் இல்லையா?’
‘நிச்சயம்’, என்பார் என் தந்தை. ‘கடல் வண்ணன் பூதங்கள்’ அனைத்தும் ஒருநாள் தங்களை அறிவார்கள். அது அவனுடைய விருப்பம். ‘என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை இன் கவி பாடிய ஈசன்’ என்று நம்மாழ்வார் சொன்னபடி அவருள் இருந்து அவரையே தன்னை பாட வைத்தவன் இறைவன். அவனே காந்தியுள்ளும் இருந்து அவரை மக்களுக்காகத் தொண்டு செய்வதே இறைவன் தொண்டு என்று சொல்ல வைத்தான்.’
‘கொலை செய்யுங்கள் என்று சொல்பவன் உள்ளும் அவன் இருக்கிறானா?’ என்று கேட்டால் நிச்சயம் இருக்கிறான் என்று சொல்வார் என்பது எனக்குத் தெரியும். எனவே அக் கேள்வியைக் கேட்கவில்லை.
இனி பாடல்:
அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்,
எங்கள் மேல் சாபம் இழிந்து — ஏலோர் எம்பாவாய்!
சென்ற பாடலில் மாற்றான் வலிமையைத் தொலைத்தான். இப்பாடலில் அவர்களை தன் பள்ளிக் கட்டிற் கீழ் வரவழைக்கிறான். ‘தேவரீர் அங்கீகாரம் பெற்றிலேனாகிலும் விட்டுப் போந்தவிடத்திற்கு ஆகாதபடி வந்தேன் என்று விபீஷணன் விண்ணப்பம் செய்தாற்போலே, பிறந்தகத்திற்கு ஆகாதபடி வந்தோம்’ என்று அரசர்கள் சொல்கிறார்களாம். இன்னொரு விதமாகப் பார்த்தால் நாங்கள் ஆட்சி செய்த இடங்களெல்லாம் உன்னுடையது. திரும்பச் சென்றாலும் பரதன் ஆண்டது போலத்தான் நாங்கள் ஆள்வோம் என்று சிலரும், லட்சுமணனைப் போல உன்னைப் பிரியாமல் இருப்போம் என்று சிலரும் சொல்கிறார்களாம். அகந்தை அழிவது பல்வேறு வழிகளில் நடக்கலாம்.
இங்கு இன்னொன்றும் சொல்லியாக வேண்டும். பெண்மை என்றால் அடிபணிதல், ஆணுக்கு அணுக்கமாக இருத்தல் சுதந்திரம் இல்லாமல் இருத்தல் என்ற பொருள்களிலேயே வியாக்கியானங்கள் பேசுகின்றன. சுவாமித்துவம் இருக்கும் இடத்தில் சுதந்திரம் கிடையாது. அது பெண்ணுக்கு தாடி முளைப்பது போல அல்லது ஆணுக்கு மார்பகங்கள் எழுவது போல என்று ஆறாயிரப்படி சொல்கிறது.
பள்ளிக்கட்டிற் கீழ் என்பதை அவன் படுக்கை அருகே என்றும் கொள்ளலாம். அல்லது அவனுடைய அரசு கட்டிலில் கீழ் அல்லது சிங்காசனத்தின் கீழ் என்றும் கொள்ளலாம்.
‘சங்கம் இருப்பார் போல்’ என்றால் கூட்டம் கூட்டமாக வருவது. ‘தலைப்பெய்தோம்’ என்றால் உனக்கு மிக அருகில் வந்து விட்டோம் என்று பொருள். அருகில் இருப்பதால் தான் அவனுடைய கண்களை மிகவும் கூர்ந்து பார்க்க முடிகிறது.
கிண்கிணி என்றால் அரைச் சதங்கை. அது பாதி மூடியும் பாதி திறந்தும் இருக்கும். பாதி மலர்ந்தும் மலராமலும் இருக்கின்ற தாமரை அதை ஒத்திருக்கிறது. இறைவனுடைய கண்கள் தாமரையை ஒத்திருக்கின்றன். கண்களை முழுவதும் திறந்து விடாதே என்கிறார்கள். சிறிது சிறதாகத் திறந்தால் போதும். முழுப் பார்வை தாங்க முடியாது. குளப்படியில் கடலை மடுக்கவொண்ணதிறே என்று ஆறாயிரப்படி சொல்கிறது. அதாவது குளத்திற்குள் கடலைச் செலுத்த முடியாதாம். ஆனால் உன் பார்வை எங்களுக்கு நிச்சயம் தேவை. அது ‘கோடையோடின பயிரில் ஒரு பாட்டம் மழை வர்ஷியாதோ (பொழியாதோ) என்னுமாப் போலே’.
இரு விழிகள் சூரிய சந்திரர்கள். சுடர் விடும் சூரியன் அவன் பெருமையைக் குறிக்கும். சந்திரனின் தண்மை அவன் கருணையைக் குறிக்கும். இன்னொரு விதமாகச் சொல்லப் போனால் இரணியன் மீது சீற்றம் கொண்டு ஒரு கண் நோக்கினால், பிரகலாதன் மீது மிகுந்த அன்போடு இன்னொரு கண் நோக்கியது போல இறைவனின் கண்கள் இருக்கின்றன. ஆனாலும் இறைவன் அருளுக்கு சந்திரனின் தண்மை ஒப்பல்ல, அவன் சீற்றத்திற்கு சூரியனின் வெப்பம் ஒப்பல்ல என்று கூறுவாரும் இருக்கிறார்கள்.
எங்கள் மீது சாபம் இழிந்து என்பதற்கு பிரிவுத் துயர் கழிந்து போகும்படி என்று பொருள் கொள்கிறார்கள். ஆனால் அது அவ்வளவு எளிதாகக் கழிந்து போய் விடுமா? மற்றவர்க்கு உன் கண் பார்வை பட்டாலே போதும். ஆனால் எங்களுக்கு அது போதாது என்று சிறுமியர்கள் சொல்கிறார்கள். ஆறாயிரப்படி நாச்சியார் திருமொழியை மேற்கோள் காட்டுகிறது: வேர்த்து நின்று விளையாடக் காண வேண்டும். பொடித்தான் கொண்டு பூச வேண்டும். திருப்பாவையில் சொல்லியிருக்கிறபடியே இப்போதே எம்மை நீராட்ட வேண்டும்.