நம் வாழ்க்கையில் தினமும் புழங்கும் கண்ணாடி, நம்மை நாமே பார்த்து மகிழ்ந்து கொள்ளும் (அல்லது கவலைப்படும்) கண்ணாடி மனித வாழ்வில் எப்போது வந்தது? மனிதன் தன்னுடைய உருவத்தைத் தண்ணீரில் பார்த்துக் கொள்வது லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னலேயே நிகழ்ந்திருக்க வேண்டும். உலோகங்களை அவன் பயன்படுத்த துவங்கிய காலத்திலேயே நன்றாக சுத்தம் செய்யப் பட்ட உலோகங்களில் அவன் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். உலோகக் கண்ணாடி 6000 ஆண்டுகளுக்கு முன்னாலேயே துருக்கியில் இருந்தது என்று வல்லுனர்கள் சொல்கிறார்கள். நன்றாகப் பிரதிபலிக்கும் உலோகக் கலவைகள் 4000 ஆண்டுகளுக்கு முன்பேயே பயனில் இருந்திருக்கின்றன. கண்ணாடியின் ஒருபக்கம் உலோகக் கலவையைத் தடவி அதை பிரதிபலிக்க வைக்கும் முறை நமக்கு 1700 ஆண்டுகளாகத் தெரியும். ஆனால் எளிய மக்களும் பயன்படுத்தக் கூடிய கண்ணாடி கண்டுபிடிக்கப் பட்டது 1835ம் ஆண்டுதான். லைபிக் என்ற ஜெர்மனியின் வேதியல் அறிஞர் ஒரு பக்கம் சில்வர் நைட்ரேட் தடவிய கண்ணாடியை அறிமுகப்படுத்தினார். அதுதான் நாம் இன்று பயன்படுத்தும் கண்ணாடியின் முன்னோடி என்று சொல்லலாம். ஆண்டாளின் சிறுமியர் கேட்பது தட்டொளி. உலோகக் கண்ணாடி.
இனி பாடல்.
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே, துயில்எழாய்
செப்பமுடையாய், திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா, துயில்எழாய்
செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பினை நங்காய், திருவே, துயில்எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்!
முப்பத்து மூவர் – மனிதர்களில் பிரிவு இருப்பது போல தேவர்களிலும் பிரிவுகள் இருக்கின்றன. எட்டு வசுக்கள், பதினொன்று ருத்திரர்கள், பன்னீரண்டு ஆதித்தியர்கள் வானுலக மருத்துவர்களான அசுவினி தேவர்கள் என்ற பிரிவுகள். ஒவ்வொருவருக்கும் ஒரு கோடி தேவர்கள் பின்னால் இருக்கிறார்கள். எனவேதான் தேவர்களின் எண்ணிக்கை 33 கோடி என்று சொல்லப்படுகிறது. ‘நீ யாருக்காக உதவுகிறாய்?’ என்று சிறுமியர் கேட்கிறார்கள். ‘அதுவும் துன்பம் வருமுன்னே நீ முன்னே சென்று அவர்களின் (கப்பம்)நடுக்கத்தைப் போக்குகிறாய். (அல்லது) அவர்கள் அசுரர்களிடம் அடிபணிவதைத் தவிர்க்கிறாய். இவர்களுக்கு உன்னுடைய உதவி எதற்குத் தேவை? இவர்கள் அழிக்க முடியாதவர்கள். அமுதத்தை உண்டவர்கள். நோய்களை அறியாதவர்கள். எங்களைப் பார். எங்களை விட நலிந்தவர்களைப் பார்க்க முடியுமா? நலிந்தவர்களுக்கு உதவுவதுதானே உன்னுடைய அடையாளம்? அதை நீ விட முடியுமா?’ என்று கேட்கிறார்கள்.
கலி என்றால் சர்வாதிகன் -மிகையாக உதவுபவன் – என்று உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். அண்ணங்கராச்சாரியர் ‘தவிர்க்க வல்ல வலிமையை உடையவன் என்று பொருள் சொல்கிறார்.
அவன் செப்பமுடையவன். எனக்கு இதன் பொருள் பரிபூர்ணமானவன் என்று தோன்றுகிறது. சுந்தர பரிபூரணன். அழகிய நம்பி. ஆனால் உரையாசிரியர்கள் இதை தன்னையே காத்துக் கொள்ளும் குணம் உடையவன் என்றும் ஆர்ச்சவ குணம் (பக்தர்களுக்கு ஒத்த குணம்) உடையவன் என்று பொருள் கொள்கிறார்கள். எதிரிகளுக்கு பயத்தீயின் சூட்டை அளிக்கும் விமலன் அவன். அழுக்கே இல்லாதவன். அவனை எழுப்புகிறார்கள் சிறுமியர்.
கூடவே பேரழகியான நப்பின்னையையும் துயில் எழுப்புகிறார்கள். சென்ற பாட்டில் அவளைத் தத்துவமன்று தகவு என்று கடிந்து கொண்டவர்கள் இவர்கள். ஆனால் அவளுக்கு இவர்கள் மீது சிறிதளவு கூடக் கோபம் இல்லை. இவர்களுக்காக கண்ணனிடம் பரிந்துரை செய்யும் சமயத்தை நோக்கிப் பள்ளிக் கொண்டிருக்கிறாளாம். எனக்கு மிகவும் பிடித்தது திருவே என்ற சொல்லுக்கு உரையாசிரியர்கள் சொல்லும் விளக்கம்தான். திரு என்பது சிறையிருந்த செல்வியான சீதாப் பிராட்டியைக் குறிக்கிறது என்று அவர்கள் சொல்கிறார்கள். உலக நாயகியான அவள் அடியார்களுக்காக சிறையிருக்கவில்லையா? நாங்கள் உன்னைச் சிறையிருக்கச் சொல்லவில்லை. ஒரு வார்த்தை அவனிடம் சொல் என்றுதான் வேண்டுகிறோம் என்கிறார்களாம் சிறுமிகள்.
உக்கமும் தட்டொளியும் – விசிறியும் கண்ணாடியும் பாவை நோன்பிற்குத் தேவையானவை. இறைவன் உருவத்திற்கு விசிறிகொண்டு வீசுவது போல கண்ணாடி காட்டுவது போல, பாவையின் பதுமைக்கும் சிறுமிகள் இவ்வாறு செய்வார்கள் போலும்.
இப்பாடலில் அவர்கள் கண்ணனையும் நீராட அழைக்கிறார்கள். தூயோமாய் வந்தோம் என்று திரும்பத் திரும்ப முந்தையப் பாடல்களில் சொல்கிறார்கள் என்பதும் அதிகாலையிலேயே நீராடி விட்டோம் என்றும் சொல்கிறார்கள் என்பதும் நமக்குத் தெரியும். இப்போது கண்ணனோடு திரும்ப நீராடுவார்களா? நிச்சயம் என்றுதான் சொல்ல வேண்டும். முந்தைய நீராடல்கள் உடலுக்கான நீராடல்கள். இது இறைவனின் கருணையில் திளைக்கும் உயிரின் நீராடல். அவர்கள் திளைக்கும் போது அவனும் சேர்ந்து திளைப்பான்.