தமிழ் இலக்கிய மரபின்படி பெண்களின் பருவங்கள் இவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன.
“ஐந்து முதல்ஏழ் ஆண்டும் பேதை; /எட்டு முதல்நான்கு ஆண்டும் பெதும்பை;/ ஆறிரண்டு ஒன்றே ஆகும் மங்கை; /பதினான்கு ஆதிபத் தொன்பான் காறும்/ எதிர்தரும் மடந்தை; மேல் ஆறும் அரிவை. /ஆறுதலை யிட்ட இருபதின் மேல்ஓர்/ ஆறும் தெரிவை; எண் ணைந்துபே ரிளம்பெண் என்று/ ஓரும் பருவத் தோர்க்குஉரைத் தனரே.” என்று இலக்கண விளக்கம் கூறுகிறது.
5-7 பேதை; 8-12 பெதும்பை; 13 மங்கை; 14-19 மடந்தை; 20-26 அரிவை; 27-32 தெரிவை; 33-40 பேரிளம் பெண். சிலப்பதிகாரம் கண்ணகிக்கு திருமணம் ஆகும் போது வயது பன்னீரண்டு (ஈகைவான் கொடியன்னாள் ஈராறாண் டகவையாள்) என்று சொல்கிறது. ஆண்டாள் திருவரங்கனைச் சேர்ந்தபோது அவருக்கு வயது 15 என்று முன்பே சொல்லியிருக்கிறேன். எனவே திருப்பாவையின் சிறுமியர் 13 வயதிற்கு உட்பட்டே இருக்க வேண்டும். நப்பின்னை திருமணம் ஆனவர் என்பதால் அவர் மடந்தைப் பருவத்தில் இருப்பவர் என்று ஊகம் செய்யலாம்.
இனி பாடல்.
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.
ஆயர் சிறுமியர் வீடுகளில் குத்து விளக்கெரியலாம். ஆனால் கோட்டுக்கால் (யானையின் தந்தத்தால் செய்யப்பட்ட கால்) கட்டில் இருந்திருக்க வாய்ப்பில்லை. மெத்தென்ற பஞ்சசயனமும் இருக்க வாய்ப்பில்லை. இங்கு நப்பின்னையின் படுக்கையைப் பார்த்ததும் அவர்களுக்குள்ளே எழும் வியப்பின் வெளிப்பாட்டையே இவ்வரிகள் உணர்த்துகின்றன என்று கொள்ளலாம். இன்னொரு கேள்வியும் நம்முள் எழுகிறது. நப்பின்னை கதவைத் திறந்த பிறகுதான் சிறுமிகள் கண்ணன் உறங்கும் கட்டிற்கு வந்திருக்க வேண்டும். அப்போது எப்படி கண்ணன் நப்பின்னையின் மார்பில் தலை வைத்துப் படுத்துக் கிடந்ததைப் பார்த்திருக்க முடியும்? ‘ அவர்கள் அறைக்குள் வந்ததும் கண்ணன் படுத்துக் கிடந்த நிலையையும் பூக்கள் சிதறிக் கிடப்பதையும் பார்த்து அவன் அப்படித்தான் உறங்கியிருப்பான் என்று யூகித்துப் பாடுகிறார்கள் என்று கொள்ளலாம். ‘கிடந்த’ என்பது நிகழ்காலத்தைக் குறிக்காது.
ஆனால் உரையாசிரியர்கள் கண்ணன் நப்பின்னை கதவைத் திறக்க முற்படும் போது திறக்க விடாமல் அவளை மல்லுக்கு இழுக்கிறான் என்கிறார்கள். ஏன் அவ்வாறு செய்கிறான்? நம்மைப் பற்றியவர்களை இவள் தன்னுடைய அடியார்களாகவே நினைப்பது போல இவளைப் பற்றியவர்களை நாம் நம் அடியார்களாகவே நினைப்போம், நாமே திறக்கலாம் என்று கண்ணன் கருதுகிறானாம். ஆனால் இருவருக்கு இடையே நடந்த இழுப்பில் இருவரும் படுக்கையில் விழ நப்பின்னையின் நெருக்கம் அவனை ஆய்ச்சியர் வந்த காரியத்தை மறக்கச் செய்து விட்டதாம். பிராட்டியாரும் கண்ணனின் அணைப்பை விட்டு விலக விரும்பவில்லையாம். அவளும் செய்ய வேண்டிய காரியத்தை மறந்து விட்டதால் ஆய்ச்சியர் நப்பின்னையை மீண்டும் உணர்த்தும் பாசுரம், அவளை உணர்த்துவதால் கண்ணனையும் உணர்த்தும் பாசுரம் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். இறைவனையும் பிராட்டியையும் சேர்ந்தே பார்க்க வேண்டும். தனித்தனியாகப் பார்ப்பவர்கள் தங்கையும் தமையனும் பட்டபாடு படுவர்கள் என்றும் சொல்கிறார்கள். அதாவது ராவணனும் சூர்ப்பனகையும் பட்டதுபோல.
விடிந்த பிறகு குத்து விளக்கு ஏன் எரிகிறது? கண்ணனை விளக்கொளியில் இரவெல்லாம் கண்ட மகிழ்ச்சியை துறக்க பிராட்டி விரும்பவில்லை. எனவே விடிந்தாலும் அறையை இருட்டாக்கிக் கண்ணனைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். பஞ்சசயனம் என்றால் அழகு, குளிர்ச்சி, மென்மை, வாசனை, வெண்மை என்ற ஐந்து குணங்களைக் கொண்ட படுக்கை.
‘வாய் திறவாய்’ என்பதற்கு “அவன் ஊமத்தங்காய் தின்று கிடக்க (நப்பின்னை தந்த மயக்கத்தில் கிடக்க) இவர்கள் யாரை எழுப்புவது?’ என்று வியாக்கியனம் சொல்கிறது. மார்பை அவளுக்குக் கொடுத்தால் பேச்சை எங்களுக்குத் தந்தால் ஆகாதோ என்றும் சொல்கிறது.
‘எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்’ -அவன் படுக்கையை விட்டு எழுந்தால் அவன் அணைப்பைப் பெற முடியாது என்பதால்தானே நீ அவனை படுக்கையிலேயே இருத்தி வைத்திருக்கிறாய் இது நியாமாகுமா? ‘எத்தனையேனும் பிரிவு ஆற்றகில்லாய்’- நீ பிரிவைத் தாங்கமாட்டாய் என்பதனால் உன்னைப் பிரிய அவன் விரும்பவில்லை. உன்னை பிரிவது பக்தைகளைப் பிரிவதற்கு ஒப்பதென்று அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான். இதுவும் நியாயமா?
‘தத்துவம் அன்று தகவு’ – உனக்கு எங்கள் மீது பரிவு உண்டு என்பது உண்மையல்ல என்றும் பொருள் கொள்ளலாம் அல்லது நாங்கள் சொல்வதை வேடிக்கையாக எடுத்துக் கொண்டு விடாதே நாங்கள் உண்மையைத்தான் சொல்கிறேன் என்றும் பொருள் கொள்ளலாம். ஆறாயிரப்படி ‘இது உன் சொரூபத்திற்கும் உன் சுபாவத்திற்கும் பொருத்தமானதன்று’ என்றும் பொருள் கூறலாம் என்கிறது. அதாவது பரிவின் வடிவு நீ. புருஷாகார பூதை. பரிவுதான் உன்னுடைய முதற்தன்மை. இரண்டுக்கும் நீ இப்போது செய்வது பொருந்தி வராது என்று பொருள்.
இது மிகவும் அடர்த்தியான பாடல். ஆனால் எளிதான தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. எளிமையால் எதையும் சாதிக்கலாம்.