யார் இந்த நப்பின்னை?
ஆழ்வார்களில் ஒன்பது ஆழ்வார்கள் நப்பின்னையைப் பற்றிப் பாடியிருக்கிறார்கள். ‘ஒருமகளாயர் மடந்தை ஒருத்தி நிலமகள் மற்றைத் திருமகளோடும்’ என்று திருமங்கை ஆழ்வார் பாடியிருக்கிறார். ‘பூமகள், மண்மகள், ஆய்மகள்’ என்று நம்மாழ்வாரும் பாடியிருக்கிறார். அவர்கள் ஆயர் மடந்தை, ஆய்மகள் என்று சொல்வது நப்பின்னையைத்தான் என்பது தெளிவு.
திருமாலுக்கு திருமகள், பூமகள் போன்றே மூன்றாவது மனைவியாக நப்பின்னை இருக்கிறார். வடமொழி ஹரி வம்சம் நூலில் அவர் நீளாதேவியாக வருகிறார். கண்ணன் ஏழு ஏறுகளை வென்று அவளை மணமகளாக அடைகிறான் என்று ஹரி வம்சம் சொல்கிறது. அவர் நந்தனின் மைத்துனர் கும்பகன் (கும்பக்கோன்) என்பவரின் புதல்வி. ஆனால் இந்தக்கதை தெற்கில் இருக்கும் பிரதிகளில் மட்டுமே இருக்கிறது. வட நாட்டில் நீளா தேவி என்ற பெயரே தெரியாது என்று ஹார்டி தன் Viraha Bhakti என்ற நூலில் கூறுகிறார். ராமானுஜர் தன் சரணாகதி கத்யத்தில் திருவுக்குத் திருவான, திருவின் மணாளனே, ஸ்ரீ வல்லபனே என்று சொல்லி ‘நீ ஒருவனே பூமி, நீளா நாயகனும் ஆவாய்’ என்று ”ஏவம் பூத பூமி நீளா நாயக’ என்கிறார். பராசரபட்டர் ‘நீளாதுங்க ஸ்தன கிரிதடீஸூப்தம் உத்போத்ய க்ருஷ்ணம்’ என்று நீளா தேவியின் கொங்கைகள் மீது தலை வைத்து உறங்குபவனே என்று ‘கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா’ என்ற ஆண்டாளின் சொற்களையே பயன்படுத்துகிறார்.
பண்டைத் தமிழ் இலக்கியத்தில் சிலப்பதிகாரம்” மாயவன்றம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னையொடும்/ கோவலர்தஞ் சிறுமியர்கள் குழற்கோதை புறஞ்சோர” என்று நப்பின்னையைக் குறிப்பிடுகிறது. சீவக சிந்தாமணியில் கோவிந்தையார் இலம்பகத்தில் முருகன் எவ்வாறு வள்ளியை மணந்தானோ, கண்ணன் எவ்வாறு நப்பின்னையை மணந்தானோ அதே போன்று கோவிந்தையாரும் மணக்கப்பட வேண்டும் என்று அவர் தந்தை விரும்பியதாகச் செய்தி வருகிறது.
பின்னை என்றால் பின்னால் வந்தவள், தங்கை, பூமாதேவிக்குத் தங்கை என்று பொருள் கொள்ளலாம். அல்லது அழகிய பின்னலை உடையவள் என்றும் பொருள் கூறலாம். திருவள்ளுவமாலையில் ‘உபகேசி தோள் மணந்தான்’என்று அவள் உபகேசியாக அறியப்படுகிறார்.
இனி பாடல்.
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்!
கந்தங் கமழும் குழலீ! கடை திறவாய்!
வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலியுன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!
வைணவ மரபில் இப்பாடலைப் பற்றி அழகான ஒரு சம்பவம் குறிப்பிடப் படுகிறது.
ராமானுஜர் வைணவத் துறவியாக தினமும் உஞ்ச விருத்தி எடுத்து உண்பது உண்டு. அப்போது திருப்பாவை பாசுரங்களை மனதால் நினைத்தும், வாய்விட்டு பாடியும் வருவார். அப்படிப் பாடிக் கொண்டே, அவரது ஆசார்யனான பெரிய நம்பியின் திருமாளிகைக்கு வந்து சேர்ந்தார். அப்போது உந்து மத களிற்றன் பாசுரம் பாடி, ‘பந்தார் விரலியுன் மைத்துனன் பேர்பாட செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய்!” என்ற வரியை அவர் பாடவும், பெரிய நம்பியின் மகளான அத்துழாய் அம்மை என்ற சிறுமி வாசற் கதவை திறந்து வெளியே வரவும் சரியாக இருந்தது. ராமானுஜர் அத்துழாய் வருகையைக் கண்டதும் மூர்ச்சித்து விழுந்து விட்டார் – நப்பின்னையையே சேவிக்கும் பாக்கியம் கிடைத்தது என்ற மகிழ்ச்சியில். பெரிய நம்பி வெளியே வந்து ராமானுஜருக்கு மூர்ச்சை தெளிய வைத்து, ‘என்ன உந்து மத களிற்றன் பாசுரம் செய்த வேலையா? என்றாராம்.
‘உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன்’ என்று நந்தகோபன் அழைக்கப்படுகிறார். மதயானைகள் ஆயர் குடியில் எவ்வாறு வந்தது என்று கேட்டால், அரச வம்சத்தினரான வசுதேவரிடம் யானைகள் இல்லையா, கண்ணன் இருவருக்கும் சொந்தம் போல, அவரிடம் இருப்பவையெல்லாம் இவருக்கும் சொந்தம் என்று உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். ஓடாத தோள் வலியன் என்றால் பகைவனுக்கு அஞ்சாத வலிமையுடையவன் என்று பொருள் கொள்ளலாம் அல்லது வியாக்கினம் சொல்லுகின்றபடி ‘கம்சன் மாளிகையின் நிழற் கீழே கிருஷ்ணனுக்கு ஒரு தீங்கும் வராமல் வளர்க்கவல்ல மிடுக்கை உடையவர்’ என்றும் பொருள் கொள்ளலாம்.
நப்பின்னை நந்தனின் மருமகள். மைத்துனனை (அத்தை மகனை) மணந்தவள். அதாவது யசோதையின் சகோதரன் கும்பகனின் மகள் அவள். எனவே அத்தை மகனான கண்ணனனை மணந்தவள்.
நப்பின்னாய் என்று அழைத்தும் பதில் சொல்லததால் கந்தம் கமழும் குழலீ என்று அழைக்கிறார்கள். ‘நீ இருக்கிறாய் என்பது எங்களுக்குத் தெரியும். உன் கூந்தலில் மணமே காட்டிக் கொடுத்து விடுகிறதே. நீ பின்னை (கேசி – அடர்ந்த கூந்தலை உடையவள்) அல்லவா?’ என்கிறார்கள். கோழிகள் அழைக்கின்றன. குயில்கள் அழைக்கின்றன. விடிந்து விட்டது. அவன் பெயரைப் பாடக் காத்திருக்கிறோம் என்கிறார்கள்.
உன் கைகள் கண்ணனுடைய கண்களின் வண்ணம் கொண்டன. செந்தாமரை போன்றன. அவனோடு பூப்பந்து விளையாடிய விரல்கள் உன் விரல்கள். நீ கைகளை உயர்த்தினாலே வளைகள் குலுங்கும். நாங்கள் அந்த ஒலிக்காகக் காத்திருக்கிறோம். எங்களைக் காக்க வைக்காதே. கதவைத் திற என்கிறார்கள் சிறுமிகள்.
வியாக்கியானம் மிக அருமையான பொருள் ஒன்றைச் சொல்கிறது. நப்பின்னையைப் புருஷாகாரமாகக் கொள்வது -அதாவது இறைவனிடம் அழைத்து சென்று பரிந்துரை செய்பவராகக் -மிகவும் அவசியம் என்கிறது. அவளை விட்டால் அதோகதிதான் என்கிறது. சூர்ப்பனகை பிராட்டியை விட்டு ராமனைப் பற்றிக் கொள்ள நினைத்தாள். அவள் கதி என்னவாயிற்று என்பது நமக்குத் தெரியும். அதே போன்று ராவணன் ராமனை விட்டு சீதையைப் பற்றிக் கொள்ள நினைத்தான் அவன் கதியும் நமக்குத் தெரியும். வீபிஷணனுக்கு அருள் கிடைத்ததற்குக் காரணம் அவன் இருவரையும் பற்றிக் கொண்டதால்தான்.