புத்தாண்டு வாழ்த்துகள்!
ஆடை, நீர், உணவு இவை மூன்றும் உலக மக்கள் அனைவருக்கும் தடையின்றி, குறையின்றிக் கிடைக்க வேண்டும் என்ற அறத்தை தூக்கிப் பிடிப்பவன் நான். ஆண்டாளும் அதைத்தான் சொல்கிறார். மக்கள் உடையின்றி, தண்ணீருக்காகத் தவித்துக் கொண்டு, உணவில்லாமல் இருந்தால் இறைவனைத் தேட மாட்டார்கள். இவற்றைத்தான் தேடிக் கொண்டிருப்பார்கள். சிறுமி ஆண்டாளின் உலகத்தில் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்கிறது. செந்நெல் ஓங்குகிறது. கண்ணனைத் தேட அவகாசம் கிடைக்கிறது. இங்கு இன்னொன்றும் சொல்லியாக வேண்டும். இதே ஆண்டாள் நாச்சியார் திருமொழியில் கூறுகிறார்: ‘மாசுடை யுடம்போடு தலை யுலறி வாய்ப்புறம் வெளுத்து ஒரு போதும் உண்டு/தேசுடைத் திறலுடைக் காமதேவா நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்’ என்று. அவள் கண்ணனை நினைத்து நோன்பு நோற்கும் போது தூய்மையை பற்றிக் கவலைப்படுவதில்லை. அவள் உலகம் தெரிந்தவள். கலவியின் கந்தங்களைத் தெரிந்தவள். ஆனால் திருப்பாவையின் ஆண்டாள் உண்மையான உலகில் நுழையும் பருவத்தில் இருப்பவள். நம்மை அவள் வசப்படுத்துவதற்கு முக்கியமான காரணம் நம்மில் பலரும் அவளைப் போன்று சிறுமியர்/சிறுவர்களின் உலகத்திற்குத் திரும்பச் செல்ல மாட்டோமா என்று ஏங்குவதால்தான். உரையாசிரியர்கள் கணக்கற்ற உள்ளடக்கங்களைப் பாடல்களில் கண்டு பிடித்தாலும், நம்மை உடனடியாகக் கவர்வது ஆண்டாள் படைத்த தமிழ்ச் சொற்களின் நேரடியான பொருட்களே.
இனி பாடல்.
அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபால எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே, குலவிளக்கே
எம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கோலோர் எம்பாவாய்
நேச நிலைக்கதவம் நீக்க வாயில் காப்போன் சம்மத்திருக்க வேண்டும். சிறுமியர் வீட்டிற்குள்ளே வந்து முதற்கட்டில் இருக்கும் நந்தகோபனை எழுப்புகிறார்கள்.
அம்பரம் என்றால் தூய புதிய ஆடை போல என்றுமே பிரகாசமாக இருக்கும் இறைவனின் திருமுக மண்டலத்தின் மலர்ச்சி. அதைக் கண்டுணர மனதில் பிறந்த இறைத்தேடற் குழந்தை முதிர்ச்சி பெற அதற்கு அளிக்கும் தண்ணீர் அடியாரின் மனநிலை. சோறு மற்றைய அடியார்களுக்குச் செய்யும் தொண்டு. இம் மூன்றையும் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்கு வழியைக் காட்டுபவன் ஆசாரியன். அவன்தான் நந்தகோபன். நம்மாழ்வார் அருளிச் செய்தது போல ‘உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையெல்லாம் கண்ணன்’ என்று எங்களுக்குக் காடிக் கொடுத்த வழிகாட்டி நந்தகோபனாகிய நீதான். நீ முதலில் எழுந்திருந்து எங்களை கண்ணனிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று சிறுமியர் கூறுகின்றனர். ஆறாயிரப்படி சொல்கிறது நாட்டில் பெண்களுக்குத் தானம் கொடுப்பாரில்லை என்று. அதாவது தானம் கொடுத்தால் அதை அவர்களால் தனியாக அனுபவிக்க முடியாதாம். கணவனோடுதான் அனுபவிக்க வேண்டுமாம். எனவே நீ அறம் செய்ய வேண்டுமென்றால் எங்களுக்கு முதலில் கண்ணனைக் கொடு. அப்போதுதான் உன் தானத்தை நாங்கள் அனுபவிக்க முடியும் என்கிறர்கள்
அடுத்த கட்டில் யசோதை படுத்திருக்கிறாள். அவர் அழகிலும், அறிவிலும் அன்பிலும் பெண்களிலேயே தலையாயவள். கொம்பனார்க்கெல்லாம் கொழுந்து. ஏனென்றால் கண்ணனை வளர்க்கும் பேறு பெற்றவள். அவள் கணவனுடன் ஒரே கட்டிலில் படுத்திருக்கவில்லை. தனியாகப் படுத்திருக்கிறாள். பர்த்தாவினுடைய படுக்கையையும் ப்ரஜையுனுடைய தொட்டிலையும் விடாத மாதாவைப் போல என்றும் நந்தகோபனையும், ஸ்ரீகிருஷ்ணனையும் விடாத யசோதைப் பிராட்டியைப் போல என்றும் முமுக்ஷூ ப்படி சொல்கிறது என்று அண்ணங்கராச்சாரியர் எழுதியிருக்கிறார். நந்தகோபனின் படுக்கைத்தலையையும் விடாள். பிள்ளைகள் தொட்டில் காற்கடையையும் விடாள் (அலட்சியம் செய்ய மாட்டாள்) என்று ஆறாயிரப்படி சொல்கிறது. இருவரும் வளர்ந்த பிள்ளைகள். ஆனாலும் தாய்க்கு தொட்டிலில் இருக்கும் குழந்தைகள் போலதான். அவன் அணி விளக்கு. கோல விளக்கு. யசோதைப் பிராட்டி குல விளக்கு.
“இருவிசும்பினூடு போய் எழுந்து மேலைத்/ தண் மதியும் கதிரவனும் தவிரவோடி/தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு/ மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை/மலர் புரையும் திருவடி” என்று மங்கை மன்னனின் திருநெடுந்தாண்டகம் பெருமான் உலகங்களை அளந்ததைக் கூறுகிறது. ஆண்டாளும் அம்பரம் ஊடறத்து ஓங்கி உலகளந்த இறைவனைக் கூறுகிறார். இங்கு அம்பரம் என்றால் ஆகாயம். உறங்குகின்ற குழந்தைகளின் தாயைப் போல நீ உன அடியார்களுக்காக உலகத்திற்காக உறங்காது இருப்பவன். இங்கு மனித வடிவம் கொண்டதால் நித்திரை செய்ய வேண்டிய கட்டாயம். ஆனால் இப்போது காலை வந்து விட்டது. அக்கட்டாயமும் இல்லை. நீ உறங்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை என்று சிறுமிகள் சொல்கிறார்கள்.
செம்பொற் கழலடிச் செல்வா என்று கண்ணனின் தமையனான பலதேவனை அவர்கள் அழைக்கிறார்கள். ஆதி சேஷனின் அவதாரமாகக் கருதப்படுபவன் அவன். ராமாவதாரத்தில் தம்பி லட்சுமணனாக வந்து சேவை செய்தான். இப்போது அண்ணனாக வந்து கண்ணனுக்கு ஊறு ஏதும் நேராமல் பார்த்துக் கொள்கிறான். அவனிடம் அவர்கள் சொல்கிறார்கள்: ‘நீ லட்சுமணனாக இருந்தபோது உறங்காவில்லி என்ற பெயரைக் கொண்டவன். உறங்காமல், பிராட்டியையும் பெருமானையும் காத்தவன். இப்பிறவியில் உனக்கு உறக்கம் தேவையா? “சென்றால் குடையாம் இருந்தால் சிங் காசனமாம்,/நின்றால் மரவடியாம் நீள்கடலுள், – என்றும்/ புணையாம் மணிவிளக் காம் பூம்பட்டாம் புல்கும்/அணையாம், திருமாற் கரவு” என்று ஆழ்வார் சொன்னபடி நீயே புணை. படுக்கை. படுக்கைக்குப் படுக்கை அவசியமா? உனக்கு உறக்கம் எதற்கு?’