ஆண்டாள் தான் தமிழ்க் கவிஞர் என்பதை மிகத் தெளிவாகச் சொல்கிறார். திருப்பாவையில் சங்கத்தமிழ் என்கிறார். நாச்சியார் திருமொழியில் செந்தமிழ் என்றும் தூய தமிழ் என்றும் பாடுகிறார். எனவே அவருடைய கவிதைகளில் அகமும் புறமும் இணைந்து மிகவும் இயற்கையாக இயங்குகின்றன. ஆனால் திருப்பாவையின் அக உலகம் நாச்சியார் திருமொழியின் அக உலகத்திலிருந்து வேறுபட்டது. திருப்பாவையின் பெண்கள் அப்போதுதான் பருவத்தின் வாசற்படியைத் தாண்டியிருப்பவர்கள். அவர்கள் காணும் உலகம் அவர்களுக்கு வியப்பையும், மகிழ்ச்சியையும், கேள்விகளையும் தருகின்றன. அவர்கள் செல்லுமிடமெல்லாம் சேர்ந்தே செல்கிறார்கள். ‘நான்’ காணவே காணோம் என்று சொல்லி விடலாம். ‘நாம்’ என்ற சொல்தான் எங்கும் ஒலிக்கிறது. ஆனால் நாச்சியார் திருமொழியில் ‘கோழியழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம்’ என்று ஆண்டாள் தோழியரையும் சேர்த்துப் பாடினாலும் அது காதலையும் கலவியையும் பற்றி புரிதல் உள்ளவரின், தன்னுடைய பெண்மையை அறிந்தவரின் பாடல். சேர்க்கைக்காக ஏங்குபவரின் பாடல். தனிப்பெண்ணின் பாடல்.
திருப்பாவையின் அடுத்த ஐந்து பாடல்களும் கண்ணனைச் சுற்றியிருப்பவர்களைப் பற்றிப் பேசுகின்றன. வாயிற்காப்போன், கோவில்காப்போன், யசோதை, நந்தகோபன், பலராமன் போன்றவர்கள். ஆனால் முக்கியமானவர் நப்பின்னைப் பிராட்டிதான். இறைவனிடம் சேர அவரிடம் பரிந்துரைப்பவர். இறைவனின் துணைவியான லட்சுமியின் நிலையைப் பற்றி வடகலையாருக்கும் தென் கலையாருக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. இருவரும் அவர் பக்தர்களுக்காக இறைவனிடம் பரிந்துரை செய்வார் என்பதை ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் வடகலையார் இறைவனுக்கும் தாயாருக்கும் ஒரே இடத்தைத் தருகிறார்கள். இறைவனின் தன்மைகள் அனைத்தும் அவரிடம் இருக்கின்றன. அவரும் பரமாத்மாதான் என்கிறார்கள். தென்கலையார் இறைவனின் பல தன்மைகளை அவர் கொண்டிருந்தாலும் அவர் ஜீவாத்மாதான், அவருக்கு இருக்கும் தன்மைகள் அனைத்தும் -குறிப்பாக பக்தர்களுக்காகப் பரிந்துரைக்கும் தன்மை – இறைவர் அவருக்கு கொடுத்த கொடை என்கிறார்கள்.
இனி பாடல்.
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.
‘நாயகனாய நின்ற’ யார் நாயகன்? நந்தகோபனா, கோவில் காப்போனா? வாயிற் காப்போனா? -இருவரும் ஒருவரா? உரையாசிரியர்கள் பாடுபவர்கள் சிறுமிகள் என்பதனால் எல்லோரும் அவர்களுக்கு நாயகர்களாகத் தோன்றுகிறார்கள் என்று சொல்கிறார்கள். அவர்களும் ‘புருஷாகாரமாக’ இறைவனிடம் பரிந்துரைப்பவர்கள். எனவே அவர்களை நாயகன் என்று சொல்லி சிறுமிகள் உற்சாகப்படுத்துகிறார்கள்.
இது யார் வீடு? கண்ணனுடைய வீடா அல்லது நந்தகோபனுடைய வீடா? அவன் உலகுக்கெல்லாம் உரிமை கொண்டவனாக இருந்தாலும், நந்தகோபனின் காவலில் கிருஷ்ணாவதாரம் எடுத்த காலத்தில் இருக்கிறான். அவனுக்கும் நாயகன் நந்தகோபன்தான் என்றும் கொள்ளலாம். உந்தமடிகள் முனிவர் உன்னை நானென்கையில் கோலால்
நொந்திட மோதவும் கில்லேன் என்று யசோதை கண்ணனிடம் உன்னுடைய சேட்டைகளைக் கேள்விப்பட்டால் உன் தந்தை கோபித்துக் கொள்வார் என்று (பெரியாழ்வார் வாக்கில்) சொல்லவில்லையா? கண்ணனைக் கோபித்துக் கொள்ளும் உரிமை படைத்தவன் கண்ணனுக்கு நாயகனாகத்தானே இருக்க முடியும்?
அவன் மாயன். எங்கள் பக்கம் நின்று கைகால்களைப் பிடித்து பணிவிடை செய்வான். மணிவண்ணன். அருகில் இல்லாவிட்டாலும் நினைவில் வந்து எங்கள் நிலைப்பாட்டைக் குலைக்கும் வடிவழகன்.
நென்னல் என்றால் நேற்று. வள்ளுவர் நெருநல் என்று நேற்றைச் சொல்லியிருக்கிறார். அவன் எங்களுக்குப் பறை தருவோம் என்று நேற்றே வாக்குறுதி கொடுத்து விட்டான் என்று சிறுமியர் சொல்கிறார்கள். தூயோமாய் வந்தோம் என்றும் சொல்கிறார்கள். இவர்கள் நீராடியதாக எந்தப் பாட்டும் சொல்லவில்லையே? இவர்கள் நீராடினார்களா அல்லது கண்ணனைப் பார்க்க வேண்டிய அவசரத்தில் ‘உள்ளபடியே’ வந்து விட்டார்களா? ஆண்டாள் சொல்லாமல் விட்டு விடுகிறார். எப்படி வந்தாலும் அவனுக்கு உகப்புத்தான்.
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே என்றால் நீ மறுத்துச் சொல்லி விடாதே என்று பொருள். நீ உள்ளுக்குள் அவ்வாறு நினைத்தாலும் வாயால் மறுத்துச் சொல்லி எங்கள் நெஞ்சில் நெருப்பைக் கொட்டி விடாதே என்கிறார்கள். ஒரு வாய்ச்சொல்லாலே தண்ணீர்ப் பந்தலே வைக்கலாம். அந்த வாய்ப்பை நீ ஏன் இழக்கிறாய் என்று ஆறாயிரப்படி சொல்கிறது.
‘நேச நிலைக்கதவம்’ ஒன்றொடொன்று சேர்ந்து கொண்டிருக்கும் கதவுகள். அவற்றைப் போலவே நாமும் நேசமாக இருக்கலாம். எங்களை உள்ளே விடாமல் பகை காட்டாதே என்கிறார்கள் சிறுமிகள்.