பாடலுக்குள் செல்லும் முன்னர் இன்னொன்றைச் சொல்லியாக வேண்டும். ஆண்டாளின் பாடல்கள் ‘குள்ளக் குளிர்ந்து நீராடச்’ செல்லும் முன் நடந்தவற்றை விவரிக்கின்றனவே, தவிர குளியலைப் பற்றி விவரிக்கவில்லை. தோழியரோடு சேர்ந்து நீராடும் மரபு நிச்சயமாகத் தமிழ் மரபுதான். பரிபாடல் தை நீராடலைப் பற்றிக் குறிப்பிடும் போது இவ்வாறு குளியலைப் பற்றிச் சொல்கிறது:
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவரவர்
தீ எரிப்பாலும் செறி தவம் முன் பற்றியோ
தாய் அருகா நின்று தவத் தைந்நீராடுதல்
”மா இருந் திங்கள் மறு நிறை ஆதிரை” நாளில் தை நீராடல் தொடங்குகிறது. பரிபாடலில் இளம் பெண்கள் கணவர்களுக்காக நீராடுகிறார்கள். தாய்மார்கள் அருகில் இருக்கிறார்கள். ஆண்டாளின் பெண்கள் கண்ணனுக்காக நீராடுகிறார்கள். தாய்மார்கள் கூட இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ஆயர் குடியின் ஐந்து லட்சம் பெண்கள் கண்ணனை நினைத்து நீராடுவதால் தாய்மார்களும் இருக்கலாம்.
தை நீராடல் எவ்வாறு மார்கழி நீராடல் ஆயிற்று? ராகவய்யங்கார் காலக் கணிப்பு முறை சந்திரமானத்திலிருந்து சூரியமானத்திற்கு மாறியதால் நிகழ்ந்திருக்கக் கூடும் என்கிறார். பாகவதபுராணமும் கோபியர்கள் காலையில் எழுந்து குழுவாக யமுனைக்குச் சென்று மணலில் பாவை பிடித்து நோன்பு நோற்பதைக் குறிப்பிடுகிறது. பாகவத புராணம் தமிழகத்தில் எழுதப்பட்டதாக வல்லுனர்கள் கருதுவதால் அதுவும் தமிழ் மரபையே குறிப்பிடுகிறது என்பது வெளிப்படை. ஆண்டாளின் திருப்பாவையே இம்மரபை பாகவதபுராணம் குறிப்பிடுவதற்கு உந்துகோலாக இருந்திருக்கலாம்.
இனி பாடல்
எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில்லென்றழையேன் மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக.
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றானை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலொ ரெம்பாவாய்!
ஆறாம் பாட்டிலிருந்து பதினான்காம் பாட்டு வரையும் கூட எழுப்புபவர்களுக்கும் எழுப்பப்படுபவருக்கும் இடையே உரையாடல்கள் நிகழ்கின்றன, ஆனால் அவை கவிதைகளுக்குள் மறைந்து நிற்கின்றன என்று உரையாசிரியர்கள் கருதுகிறார்கள். இப்பாட்டில் உரையாடல் வெளிப்படையாக நிகழ்கிறது. ‘திருப்பாவை ஆகிறது இப்பாட்டிறே’ என்று அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் குறிப்பிடுகிறார். ஆங்கிலத்தில் இதை dialogue poems என்பார்கள். உதாரணமாக இது அமெரிக்கக் கவிஞன் Shel Silverstein (ஷெல் சில்வர்ஸ்டைன்) எழுதிய The Meehoo with an exactlywatt என்ற கவிதையில் ஒரு பகுதி. What’s what you want to know?/ Me, WHO?/ Yes, exactly!/Exactly what?/ Yes, I have an Exactlywatt on a chain!/Exactly what on a chain?/ Yes!/ Yes what?/ No, Exactlywatt!
எல்லே என்றால் இது என்ன என்று பொருள். இது என்ன, இளங்கிளியே இன்னும் உறங்குகிறாயா என்று தோழியர் கேட்கிறார்கள். இவள் இளங்கிளியென்றால் பாகவத புராணத்தை பரீக்ஷித் அரசனுக்குச் சொல்லும் சுகர் கிழக்கிளி.
‘சும்மா சலம்பிக் கொண்டிருக்காதீர்கள் இதோ வந்து விடுகிறேன்’ என்கிறாள் அவள். இவர்கள் ‘உன்னையும் உன் கதைகட்டும் திறமையும் எங்களுக்குத் தெரியாதா’ என்கிறார்கள். அவள் . ‘நீங்கள்தாம் சாமர்த்தியசாலிகள், நானும் அவ்வாறே இருந்து விட்டுப் போகிறேன்’, என்கிறாள். இதை வைஷ்ணவ லட்சணம் என்று உரையாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். ‘இல்லாத குற்றத்தை சிலர் உண்டென்றால் இல்லை செய்யாமல் இசைகியிறே வைஷ்ணவ லக்ஷணம்’ என்று ஆறாயிரப்படி கூறுகிறது. பிறர் குற்றத்தையும் தன்னுடையது என்று ஏற்றுக் கொள்வது. தோழிகள் இவளுடைய வைஷ்ணவ லக்ஷணத்தைப் பற்றி கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. ‘சீக்கிரம் வா, நீ என்ன ஸ்பெஷலா?’ என்று கேட்கிறார்கள். ‘எல்லோரும் வந்து விட்டார்களா?’ ‘ வந்து விட்டார்கள். சந்தேகம் என்றால் நீயே வந்து எண்ணிப் பார்த்துக்கொள். சீக்கிரம் சென்று கண்ணன் புகழ் பாட வேண்டும்’.
மிகவும் இயல்பாக இளம்பெண்களுக்கு இடையே நிகழும் உரையாடலை இறைவனைச் சென்றடைய விரும்புவர்களுடன் இணைத்து மிக அழகான கவிதையாக ஆண்டாளால் வடிக்க முடிந்திருக்கிறது.
இப்பாடல் திருவெம்பாவையில் வரும் ‘ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ’ என்ற பாடலின் பொருள்நடையை அடியொற்றியிருக்கிறது என்று அண்ணங்கராச்சாரியர் குறிப்பிடுகிறார்.