ஆண்டாளின் காலம் என்ன?
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை ஆண்டாள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ‘ஒரு மகள் தன்னை உடையேன், உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன், செங்கண்மால்தான் கொண்டு போனான்’ என்று பெரியாழ்வாரே பாடுகிறார். பெரியாழ்வார் பாண்டியன் கோச்சடையன் காலத்திற் தொடங்கி சீமாறன் சீவல்லபன் என்று அழைக்கப்படும் பாண்டியன் நெடுஞ்சடையன் காலத்தில் (எட்டாம் நூற்றாண்டு) வாழ்ந்தார் என்று அறிஞர் மு ராகவய்யங்கார் ‘ஆழ்வார்கள் காலநிலை’ புத்தகத்தில் குறிப்பிடுகிறார். ஆண்டாள் காலநிலையை இப்பாடலில் வரும் வரியான ‘வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’ என்ற வரியின் மூலம் கணக்கிடுகிறார்.
வெள்ளி தோன்றும் நேரத்தை புறநானூறும் சொல்கிறது. ‘வெள்ளி தோன்ற புள்ளுக்குரலியம்ப, புலரி விடியல் பகடு பல வாழ்த்தி’ என்பது புறநானூறு. இப்பாடலில் வெள்ளியும் புள்ளும் வருகின்றன. வெள்ளி எழுவதைப் பார்த்து விட்டு நீராடுவது தமிழர் வழக்கம். ஆனால் ஆண்டாள் வியாழம் உறங்கிற்று என்றும் பாடுகிறார். ‘அறிஞர், கணித வல்லுனர் லூயிஸ் டொமினிக் சுவாமிக்கண்ணுப் பிள்ளை வெள்ளி எழுச்சியும் வியாழன் அஸ்தமனமும் ஒரே சமயத்தில் எட்டாம் நூற்றாண்டில் நிகழ்ந்த நாள் டிசம்பர் 18, 731 என்று சொல்கிறார். எனவே ஆண்டாள் எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்திருக்க வேண்டும்’ என்று மு ராகவய்யங்கார் கணக்கிடுகிறார். சுவாமிக்கண்ணுப் பிள்ளையைப் பற்றித் தனியாக எழுத வேண்டும்.
இனி பாடல்.
புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந்தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்!
பகாசுரன் என்ற கொக்கு வடிவத்தில் வந்த அரக்கன் வாயைக் கிழித்து அழித்தவன் அவன் என்றால் சென்ற அவதாரத்தில் பத்துதலை கொண்ட இராவணனை, ‘பூச்சிபட்ட இலைகளைக் கிள்ளிப் போடுமாப் போலே’ எளிதாகக் கிள்ளி எறிந்தவன் அவன். அரக்கனை ‘பொல்லா’ என்று ஏன் குறிப்பிடுகிறார் என்றால் தாயையும் தந்தையையும் பிரித்த கொடியவன் அவன் என்பதால் என்று உரையாசிரியர்கள் சொல்கிறார்கள்.
‘பாவைக்களம்’ என்பது மிகவும் அழகிய சொல்லாடல். பெண்கள் கூடும் இடம் என்பது மட்டுமின்றி, கண்ணனுக்காக போட்டிப் போடும் களம் என்றும் பொருள் கொள்ளலாம். பிள்ளைகள் என்று ஆண்டாள் பெண்களை விளிக்கிறார். பருவம் அடைந்தும் குழந்தைத்தன்மை மாறாத வயது. ஆண்டாளும் குழந்தைதான். ‘திருவரங்கச் செல்வரான அழகிய மணவாளன் அப்பிராட்டியை அங்கீகரித்து அருளிய காலத்தே 15 திரு நட்சத்திரத்திற்கு அவர் மேற்படவில்லை என்று நாம் ஒருவாறு அறியக் கூடிதாகிறது’ என்று மு ராகவய்யங்கார் சொல்கிறார். நம்மாலும் முதுமை அடைந்த ஆண்டாளைக் கற்பனை செய்து கூடப்பார்க்கமுடியவில்லை. பெரியாழ்வார் ‘செங்கண்மால்தான் கொண்டு போனான்” என்று சொல்வதும் ஆண்டாள் இளவயதிலேயே மறைந்து போனார் என்பதைத்தான் காட்டுகிறது. உலகப் பெருங்கவிஞர்களில் பலரும் இளவயதில் மறைந்தவர்கள்.
‘புள்ளும் சிலம்பின காண்’ என்ற சொற்களோடு ஆறாம் பாட்டு துவங்குவதைப் பார்த்தோம். அப்போது அவை கூடுகளின் நின்று ஓசையிட்டனவாம். இப்போது இரை தேடச் செல்லும் இடங்களில் உணவிற்காகச் செய்யும் ஓசையாம்.
இப்பாடலில் எனக்கு மிகவும் பிடித்த வரி ‘குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே’. திருநெல்வேலி தாமிரபரணி நதியில் மார்கழி மாதம் அதிகாலையில் நீராடியவர்களுக்கு ஆண்டாள் சொல்வது புரியும். தண்ணீரில் தலை மூழ்கியதும், உடலே ஒடுங்குவது போல ஏற்படும் குளிரையே அவர் ‘குள்ளக் குளிர’ குறிப்பிடுகிறார். ஆனால் குளிர் பழக்கப்பட்டதும் தண்ணீருக்குள்ளேயே தலையை எடுக்காமல் நீந்தத் தோன்றும்.அதைத்தான் அவர் குடைந்து என்று சொல்கிறார்.
இவ்வளவு அழகான காலையில் படுக்கையில் கிடக்கின்றாயே. உன் உறக்கம் கள்ள உறக்கம். கண்ணனை நீ மட்டும்தாம் அனுபவிக்க வேண்டும் என்ற பேராசையால் விளைந்த உறக்கம். அதைத் தவிர்த்து எங்களோடு கலக்க வேண்டும். கூடியிருந்து குளிர வேண்டும் என்று ஆண்டாள் சொல்கிறார். உன்னதமான கவிதை.
/பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை ஆண்டாள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ‘ஒரு மகள் தன்னை உடையேன், உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன், செங்கண்மால்தான் கொண்டு போனான்’ என்று பெரியாழ்வாரே பாடுகிறார்./
அவ்வளவு உறுதியாக சொல்லிவிடமுடியுமா?
இந்தப் பாடல் இடம்பெறும் திருமொழி எல்லாம் நற்றாய் கூற்று. அத भाவத்தில் எழுதப்படதை வைத்து சொல்லமுடியாது அல்லவா.
LikeLike
எல்லாக் கேள்விகளுக்கும் தொடரை முடித்தப் பிறகு பதில் சொல்வேன். பின்னால் மொத்தமாகக் கேட்கவும்.
LikeLike